thiruchci2016திருச்சி முகாமில் உண்ணாவிரதம் இருந்த உறவுகளை மண்டல தனித்துணை ஆட்சியாளர், DSP, “Q” பிராஞ்ச் அதிகாரி, IS இன்ஸ்பெக்டர் ஆகியோர் நேரில் சென்று சிறப்பு முகாம் (சிறை ?) வாழ்வாளர்களை உண்ணா விரதத்தை தேர்தல் வரையில் கை விடுமாறும் தேர்தல் காலத்தில் விடுதலை பற்றி முடிவெடுக்கும் சிக்கல்கள் உள்ளன என்றும் தேர்தல் ஆணையமே அனைத்து முடிவுகளையும் எடுப்பதால் தற்காலிகமாக கைவிடுமாறும் அவர்கள் உறவுகள் வந்து பார்க்கும் சில வசதிகளை செய்து தருவதாகவும் பேசி போராட்டத்தை இடை நிறுத்தி இருக்கின்றார்கள்.

 

சோறு தண்ணீர் இல்லாவிட்டாலும் உறவுகளைப் பார்க்கக் கிடக்கிறதே என ஆர்வமாக சிறப்பு முகாம் உறவுகளும் தற்போதைய தமிழக சூழலில் போராட்டம் பயனில்லை என்ற நிலையில் கைவிட்டு விட்டார்கள்.

 

தேர்தலின் பின் விடுதலைக்கான தமது உண்ணா நோன்பு போராட்டம் தொடரும் என சிறப்பு முகாம் வாழ்வாளர்கள் உறுதி கூறி உள்ளார்கள்.

 

அதிகாரிகள் அவர்களை வந்து சந்தித்தமைக்கு தமக்காக குரல் கொடுத்த மக்களே காரணம் என நன்றியோடு கூறிக் கொள்ளும் உறவுகள் தேர்தலின் பின் தொடர இருக்கும் தொடர் போராட்டங்களுக்கும் அனைவரையும் உறுதுணையாக இருங்கள் என வேண்டி இருக்கின்றார்கள்.

 

ஆதரவு தந்த அனைத்து மக்களுக்கும் ஊடகங்களுக்கும் நன்றிகளை பகிர்ந்து கொள்கின்றார்கள்.

 

உறுதுணையாக என்றுமே வழக்கறிஞராக நேரில் வந்து பார்த்து போகும் தமிழ்தேச மக்கள் கட்சி தலைவர் புகழேந்தி அவர்களுக்கு நன்றிகளை கூறி கொள்ளும் இவர்கள் பல விழிப்புணர்வு போராட்டங்களை பாலன் தோழர் எழுதிய “சிறப்பு முகாம் என்னும் சித்திரவதை முகாம்” என்ற நூல் அறிமுகத்தோடு ஊர் ஊராக நடத்தி வரும் தமிழ்தேச மக்கள் கட்சி தோழமைகளையும் நன்றியோடு நினைவில் கொள்வார்கள் என நம்புகின்றேன்.

 

இவர்கள் தவிர தேர்தல் அறிக்கையில் சிறப்பு முகாமை மூடுவதை சேர்த்துக் கொண்ட சீமான் அவர்களையும் தொடர்ச்சியாக சிறப்பு முகாமுக்காக குரல் கொடுக்கும் தமிழ் இன உணர்வாளர் வேல்முருகன், மற்றும் குளத்தூர் மணி ஐயா, அண்மையிலும் குரல் கொடுத்த தியாகு ஐயா ஆகியோரையும் நன்றியோடு நினைவு கூர்ந்தார்கள்.

 

இன உணர்வாளர்கள் அண்மையில் கூடி சென்னையில் நடந்த ஈழத் தமிழர்க்கான ஊடகவியலாளர்கள் சந்திப்பில் சிறப்பு முகாம்களை மூட தமது குரல் ஒலிக்கும் என உறுதி மொழிந்த அத்தனை இன உணர்வு கொண்ட உறவுகளுக்கும் நன்றிகளை கூறுவதோடு சிறப்பு முகாம்கள் முற்றிலும் மூடப்படும் வரை தமக்கு துணை நிற்குமாறும் வேண்டிக் கொள்கின்றார்கள்.

 

கடல் கடந்து தமக்காக குரல் கொடுத்த கனடியத் தமிழ் வானொலிக்கும் ஊடகவியலார்களுக்கும் இன்னமும் முக நூல் தளத்தில் வலிமையாக குரல் கொடுத்த அத்தனை ஊடக உறவுகளுக்கும் நன்றிகளை கூறுகிறார்கள்.

 

சிறப்பு முகாமின் கொடுமைகளை 8 ஆண்டுகள் உள்ளே இருந்து அனுபவித்த பாலன் தோழர் எழுதிய ஆவண நூல் இந்த சிறப்பு முகாமில் இருந்து வெளியே சென்று அகதிகளாக வேறு நாடுகளில் தஞ்சம் புகுகின்ற உறவுகளுக்கு அவர்களின் அகதி கோரிக்கை வழக்குகளுக்கு வலுச் சேர்க்கும் எனவும் சிறப்புமுகாம் வாசிகளால் உறுதியாக பார்க்கபடுகின்றது. பகிரவும் படுகின்றது.

 

அந்த வகையில் கை கொடுத்து எம் உறவுகளுக்காக குரல் எழுப்பிய அத்தனை உறவுகளுக்கும் எனது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவிக்கின்றேன்.

 

தொடர்ந்தும் அநீதிகளுக்கு எதிரான எம் மக்கள் போராட்டங்கள் தொடரட்டும்..

 

செந்தமிழினி பிரபாகரன்.