castroபிடல் கஸ்ரோ மறைவையடுத்து தமிழர்கள் பலர் தமிழின அழிப்பின் போது அவரது மவுனத்திற்காகவும் தொடர்ந்து ஐநா மனித உரிமை தீர்மானங்களின் போது இனஅழிப்பு அரசை கியூபா காப்பாற்ற முற்பட்டதற்காகவும்; திட்டி தீர்க்கிறார்கள். இதில் நியாயமில்லாமில்லை. இருந்தாலும் அதையும்தாண்டி ஒரு போராடும் இனமாக கஸ்ரோ தொடர்பாக நாம் அணுக வேண்டிய- சிந்திக்க வேண்டிய பல புள்ளிகள் இருக்கின்றன.

 

அதை பல தளங்களில் ஆதரித்தும் எதிர்த்தும் பல பரிமாணங்களாக விளக்க முடியும். அவை முழுவதையும் இங்கு எழுத தொடங்கினால் நாள் முழுக்க எழுதிக் கொண்டேயிருக்கலாம். அதனால் ஒரு கருத்தியலை மட்டும் இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.

 

கியூப விடுதலைப் போராட்டம்தான் தமிழீழ விடுதலைப் போராட்டம் உட்பட சமகால விடுதலைப் போராட்டங்கள் பலவற்றிற்கு முன்னதாரணமாகவும் எடுத்துக்காட்டாகவும் இருந்ததென்றால் அது மிகையல்ல. அத்தோடு தொடர்ந்து சர்வதேசிய கருத்தியலை கஸ்ரோ உருவாக்கியதையும் நாம் மறந்துவிடக் கூடாது.

 

அதே போல கஸ்ரோவின் ஏகாதிபத்திய எதிர்ப்பு என்ற உள் மடிந்த கருத்தியல் சிறிய அரசுகளை காப்பாற்றுகிறோம் என்ற போர்வையில் போராடும் இனங்களுக்கு எதிரான ஒரு கருத்தியலாக உருத்திரண்டு அரச பயங்கரவாதத்திற்கு ஊன்று கோலாக மாறிய அவலமும் நடந்தேறியது. தமிழீழம் அதற்கான சமகால சாட்சி.

 

இங்கேதான் நாம் மிக முக்கியமான புள்ளியை வந்தடைகிறோம். கஸ்ரோவின் ( கஸ்ரோ மட்டுமல்ல போராடும் இனங்கள் தொடர்பான பல உலகளாவிய தத்துவங்கள்) கொள்கை – கோட்பாட்டு சரிவு நந்திக்கடலில் வைத்து ‘பிரபாகரளியம்’ எனும் ஒரு நவீன விடுதலைக் கோட்பாட்டிற்கான வெளியை திறந்து வைக்கிறது.

 

‘நந்திக்கடல்” கஸ்ரோயிசத்தை மறுபரிசீலனைக்குட்படுத்துகிறது. மார்க்சிசம், கொம்னியுசம் தொடங்கி மக்களுக்கான கருத்தியல் அனைத்தையும் இன அழிப்பு பின்புலத்தில் வைத்து கேள்விக்குட்படுத்துகிறது.

 

உலக ஒழுங்கு மற்றும் சர்வதேச உறவுகள் என்ற நவீன அரசுகளின் பூகோள அரசியலை ஒரு புறமாகவும் போராடி விடுதலையடைந்த நாடுகளின் கருத்தாங்கங்களையும் அதன்வழி உருவான தத்துவங்களையும் மறுபுறமாகவும் வைத்து ‘நந்திக்கடல்’ பல கேள்விகளை உற்பத்தி செய்வதுடன் இவை தொடர்பான ஒரு மறு விசாரணையையும் கோருகிறது.

 

இதுவே ‘பிரபாகரனியம்’ என்னும் நவீன விடுதலைக் கோட்பாடாக நம் முன் விரிகிறது.

 

எனவே தொடர்ந்து ‘பிரபாகரனியத்தை’ கற்போம்.. இதன்வழி எமது விடுதலையை மட்டுமல்ல உலாகளாவிய தேசிய இனங்களின் விடுதலையை உறுதிப்படுத்தி ஒடுக்கப்பட்ட மக்கள் சார்ந்த ஒரு புதிய உலக ஒழுங்கை நிறுவுவோம்.

 

‘பிரபாகரனியம்’ அதை வழி நடத்தும்.