கேப்பாபுலவு நிலங்களை விடுவிப்பதாக இனஅழிப்பு அரசு அறிவித்திருக்கிறது. இதை ஒரு சாரார் மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்றும் மறுசாரார் சிங்களம் ஜெனிவாவில் தனது நன்மதிப்பை உயர்த்த செய்யும் சதி என்றும் வாதிடுவதை காணக்கூடியதாக இருக்கிறது.

 

அது எப்படியும் இருந்து விட்டுப்போகட்டும். எமக்கு தேவை நிலம். அதுவும் தொடரும் இனஅழிப்புக்கு எதிர்வினையாற்றுவதென்றால் எமது மக்களுக்கு அவர்களது சொந்த நிலம் வேண்டும்.

 

இந்த ‘விடுவிப்பை’ ஒரு நவீன போராட்ட யுக்தியை வகுத்து மக்கள் தமது நிலத்தை மீட்டிருப்பதாகவே நாம் கருத வேண்டும்.

 

இதை நில மீட்பிற்கான ஒரு ஒத்திகை போராட்டமாகவே கருத வேண்டியுள்ளது.

 

ஜெனிவாவில் இனஅழிப்பு அரசை காக்க எமது சிவில் சமூகத்தினர் மற்றும் தமிழ் அரசியல்வாதிகள் முண்டியடித்துக் கொண்டிருக்கும் ஒரு சூழலில் சிங்களத்திற்கு இந்த நிலத்தை விட்டுக் கொடுத்துத்தான் தன்னை நிறுவ வேண்டும் என்ற ஒரு நிலை இல்லை.

 

எதிரியைத் தேடிப்போய் அவன் காலடிக்குள் ஒரு போரரங்கைத் திறந்து வைத்த ‘கேப்பாபுலவு’ மக்களின் பேராட்டம் எதிரியை நிறையவே சிந்திக்க வைத்ததன் விளைவுதான் இந்த விடுவிப்பு.

 

இதே போல் எதிரிகளால் ஆக்கிரமிக்கப்படடிருக்கும் ஒவ்வொரு ‘தமிழர் நிலமும்’ சமகாலத்தில் ஒன்றாக அணிதிரண்டு எதிரியைத் தேடிப்போய் அவன் காலடிக்குள் வாழ்வும் பேராட்டமும் கலந்த இந்த நவீன உத்தியை பிரயோகித்தால் எதிரிக்கு மண்டியிடுவது அல்லது தப்பியோடுவதைத்தவிர வேறு தெரிவுகள் இருக்கப் போவதில்லை.

 

அதுதான் பரவிப்பாஞ்சான் மக்கள் இதே யுக்தி போராட்டத்தை கையிலெடுத்தவுடன் அடுத்த நாளே அதை விடுவிக்க இனஅழிப்பு அரசு முடிவு செய்தது. பல வருடங்களாகப் போராடிய பரவிப்பாஞ்சான் மக்களின் போராட்டத்திற்கு ‘கேப்பாபுலவிற்கு’ பிறகே சிங்களம் செவிசாய்த்ததை நாம் குறைந்தளவிலேனும் கணக்கிலெடுக்க வேண்டும்.

 

கேப்பாபுலவு மண்ணின் போராட்டத்தின் உக்கிரம் தாங்காமலேயே இன்று அதை விடுவிக்கிறது இனஅழிப்பு அரசு. அதுதான் உண்மை.

 

இதை விடுவிப்பதனூடாக மக்கள் போராட்டத்திற்கு ஒரு தற்காலிக முடிவுரையை இனஅழிப்பு அரசு எழுதியுள்ளது. ஜெனிவாவில் கிடைக்கப்போகும் வெற்றியை விட மக்கள் போராட்டங்களை முடக்குவதனூடாகவே இனஅழிப்பு அரசு தனது வெற்றியை தக்க வைத்துக் கொள்ள முடியும்.

 

எனென்றால் சிங்களத்தை ஜெனிவாவில் காக்க பிராந்திய – பூகோள சக்திகளும் அவர்கள் வகுத்து வைத்த உலக ஒழுங்கும் தயாராகவே இருக்கிறது. ஆனால் போர்க்குணத்துடன் உக்கிரமாக வெடிக்கும் மக்கள் பேராட்டத்தை காக்க எந்த பொறிமுறையும் எதிரிகளிடம் இல்லை.

 

அதுவும் ‘பிரபாகரனியத்தை’ உடசெரித்த ஒரு இனம் ஒன்றுபட்டு தம்மோடு பொருதுவதை அவர்களால் என்றுமே தடுக்கும் வல்லமை கிடையாது.

 

இந்த விடுவிப்பின் அரசியலை நாம் இப்படித்தான் கருத வேண்டும்.

 

ஆனால் மறுவளமாக நாம் இந்த வெற்றியை தக்க வைத்துக்கொண்டு நமது ஒவ்வொரு நிலமும் ‘கேப்பாபுலவு’ வகுத்து தந்த நவீன யுக்தியை ஒரு முன்னுதாரணமாகக் கொண்டு எதிரியின் காலடிக்குள் ஒரு போரரங்கைத் திறக்க வேண்டும்.

 

அப்போது எதிரிக்கு நிலங்களை விடுவிப்பதைத் தவிர வேறு வழி இருக்கப்போவதில்லை.

 

ஏனென்றால் நிலங்களை மீட்பதில்தான் நமது இருப்பும், அடையாளமும் தங்கியுள்ளது. தொடரும் இனஅழிப்பின் மையமாக இருப்பதே ‘நிலம்’தான்.

 

நிலம் பறிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை சுரண்டுவதனூடாகவே தனது கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பை சிங்களம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

 

எனவே எமது ஒவ்வொரு நிலமும் மீள எமக்கு கிடைப்பதில்தான் நமது அடுத்த கட்ட அரசியலே தங்கியிருக்கிறது.

 

கேப்பாபுலவு மக்கள் அதை சாதித்து காட்டியிருக்கிறார்கள்.

 

‘நந்திக்கடல்’ கோட்பாடுகளின் பெருமிதம் ‘கேப்பாபுலவு’.