நந்திக்கடல் பேசுகிறது” ஆவண நூல்மீது திட்டமிட்டுச் சேறுபூசி, விசமப்பிரச்சாரங்களை மேற்கொள்ளும் க(ல்)லாநிதிகள்…

0
1193

“நந்திக்கடல் பேசுகிறது” ஆவண நூல்மீது திட்டமிட்டுச் சேறுபூசி, விசமப்பிரச்சாரங்களை மேற்கொள்ளும் க(ல்)லாநிதிகள்… சங்கதி 24 என்று பெயரிடப்பட்ட எண்ணிமத்தளமானது, கடந்த சிலநாட்களாக தமிழீழவிடுதலைச் செயற்பாட்டாளர்கள்/ எழுத்தாளர்கள் / கோட்பாட்டாளர்கள் மீது அவதூறு மற்றும் சேறடிப்பை நடாத்திவருகிறது. இந்த ஒவ்வாநிலைக்கு காரணம் என்ன என்பதை சில வரிகளுக்குள் அடக்கிவிட முடியாது.

தமிழீழ விடுதலைக்கான செயற்பாட்டு ஆதரவுத்தளமாக தம்மை அடையாளம் காட்டும் பல தளங்கள் ஆரம்பிக்கப்படும் போது, தமிழர்களுக்கான ´´NewYork Times´´ என்ற அலப்பறையோடு ஆரம்பித்து, இறுதியாக ´´தமிழினத்தின் மரண அறிவித்தல்´´ தளமாக மாற்றப்படுவதை நீண்டகாலமாக நாம் கண்டிருக்கிறோம். இது ஒன்றும் எமக்குப் புதிதல்ல. ஆனால்; மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போட்டு, ´´திடுக்கிடும் ஆதாரங்கள்´´ என்ற பெயரில் ஒட்டுக்குழு ஜாம்பவான்களின் முகநூல் பதிவுகளை மேற்கோள் காட்டுமளவிற்கு, வறண்டு போய் நிற்கும் சங்கதியின் ஊடக தர்மத்திற்குப் பெரும்பங்காற்றி, தமிழீழ விடுதலைச் செயற்பாட்டாளர்கள் மீது சேறடிப்பை மேற்கொள்ளும் ´´க(ல்)லாநிதி அறிவுசீவிகள்´´ பற்றி மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டிய கடமை யும் அவசியமும் நமக்கிருக்கிறது.

எப்போது ஓர் ஊடகம்; எவ்விதப்பின்புலமுமற்ற சாதாரண மனிதர்கள்/அறிவுசீவிகள் மீது காரணமின்றிச் சேற்றை இறைக்கிறதோ, அப்போதிருந்து அந்த ஊடகம் தனது இயங்குதிறனை இழந்துநிற்கிறது என்பதே பொருள். அவ்வாறே; எவ்விதப் பின்புலமுமற்றுத் தனித்தியங்கும் சாதாரண விடுதலைச்செயற்பாட்டாளர்கள்மீது சங்கதி 24 என்ற தளம் சேறுபூச விழைகிறது. நந்திக்கடல் பேசுகிறது நூலைத் தொகுத்தவர் ஊடகவியலாளர் ஜெரா.

மிகுந்த பொருளாதாரச் சிக்கலோடும், அச்சறுத்தலுக்கு மத்தியிலும் அதனை வெளிக்கொணர்ந்த பெருமைக்குரியவர் அவரே. அதனை அச்சுப்பதித்து வெளிநாடுகளில் வெளியிடும் முயற்சிகளில் மட்டுமே நாம் ஈடுபட்டோம். இன அழிப்பின் சகல பரிமாணங்களையும் வெளிக்கொணர்ந்து, வெளியிட்ட நாள் தொடக்கம் இன்றுவரையான காலத்திற்குள் இரண்டாயிரம் பிரதிகளுக்கு மேல் விற்பனையாகிவிட்ட அந்நூலில், தமிழ்நெற் இயக்குநர் திரு.ஜெயா அண்ணை ´´ தமிழர் கடல்´´ என்றொரு கட்டுரையையும், நந்திக்கடல் கோட்பாட்டாளர் பரணி அண்ணை தனது கட்டுரைகளாக, போருக்குப்பின்னதான பெண்களின் நிலை பற்றியும், நந்திக்கடல் கோட்பாடுகள் – ஓர் அறிமுகம் என்ற தலைப்பிலும் எழுதியிருந்தார்கள்.

நந்திக்கடல் கோட்பாடுகளினதும், நீரின் குணவியல்புகள் பற்றிய அடிப்படை உண்மைகளையும் அறிந்தபின்பே, ஆவண நூலிற்கு ´´நந்திக்கடல் பேசுகிறது´´ என்று பெயரிட்டோம். ஆவண நூல் பல இடங்களில் வெளியிடப்பட்டு, நோய்த்தொற்றுக் காரணமாக சில இடங்களில் வெளியீடு நிறுத்தப்பட்டும் இருக்கிறது. இந்நூலில் விமர்சனங்கள் இருப்பின், தொகுப்பாசிரியர் ஜெராவுடன் அல்லது என்னுடன் தொடர்புகொண்டிருக்கவேண்டும்.

ஆனால் இதுவரை எம்மோடு தொடர்புகொண்ட எவரும், நூல்விமர்சனம் தொடர்பாக பொதுவெளியில் சேறடிப்பினையோ அவதூறினையோ மேற்கொண்டதில்லை., இது இவ்வாறிருக்க; தமிழ்நெற் இயக்குநர் ஜெயா அண்ணையும், பரணி அண்ணையும் இணைந்தே இந்த ஆவணநூலைத் தொகுத்து வெளியிட்டார்கள் என்று முழுப்பொய்யான செய்தியையும், இவர்கள் இருவரும் தமிழ்த் தேசியத்தைச் சிதைக்கும் விதமாக நந்திக்கடல் பேசுகிறது ஆவண நூலில் எழுதியிருப்பதாக பொய்யான தகவலையும் சங்கதி24 இணையம் பரப்பிவருகிறது.

பேராசிரியர் சேரன் அவர்களது கட்டுரையொன்றில் (உலகின் பார்வையில்) ´´ போர்க்குற்றம் தொடர்பாக இருதரப்புகள் மீதும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது´´ என்று அவர் குறிப்பிட்டதை அப்படியே எடுத்து, ஜெயா அண்ணையினதும் பரணி அண்ணையினதும் கருத்தாக அதனைத்திரித்து எழுதியிருக்கும் சங்கதி 24 இன் புலனாய்வாளர்; அந்தக் கட்டுரையாளரின் பெயரை வாசிக்கும் அளவிற்கு மொழியறிவற்றவராக இருக்கமாட்டார் என்பது எனது ஊகம். பேராசிரியர் சேரன் தனது கருத்தாக அதனைச்சொல்லவில்லை.

“குற்றம்சாட்டப்பட்டிருந்தது” என்பதற்கும், நான் குற்றம்சாட்டுகிறேன் என்பதற்குமான வித்தியாசத்தையும் கூப்பிட்டுவைத்துக் கற்பிக்கவா முடியும்…? இது ஒருபுறமிருக்க; நந்திக்கடல் கோட்பாடுகளை எழுதிய திரு. பரணி அவர்களது தொலைபேசியை ஊடறுத்து, அவரது குரல்பதிவை எடுத்து, தமக்கு ஏற்ற வகையில் வெட்டியும் கொத்தியும் பொருத்தங்கள் செய்து, தேசத்தின் குரல் பாலசிங்கம் அவர்களை பரணி அவர்கள் துரோகி என்று சொல்லிவிட்டார் என்று அலப்பறை செய்யும் வகையில் சங்கதி 24 தளமானது கடந்தவாரம் செய்தியொன்றைப் பரப்பியிருந்தது.

இதன் உண்மைத் தன்மையை அறிய விரும்புபவர்கள்; பாலா அண்ணையின் கடந்த வருட நினைவு நாளில், எனது முகநூலில் பகிர்ந்த பதிவினை இன்றும் காணமுடியும். பாலா அண்ணை தனது இறுதிக் காலப்பகுதியில், தனது ஆளுமைத்திறனுக்குட்பட்டிருந்த சில முக்கிய தருணங்களை கையாளாமல் தவறவிட்டிருந்த நிலையைச் சுட்டிக்காட்டி, அதற்காக ´´தேசத்தின் குரல் பாலசிங்கம் அவர்கள் துரோகி அல்ல´´ என்றும், அவர் தேசத்தின் குரலாக என்றென்றும் நினைவு கூரப்படுவார் என்றும் பரணி அவர்கள் உரையாடியிருந்த தொலைபேசிப் பதிவிலிருந்து, ´´துரோகி இல்லை´´ என்ற பகுதியில் ´´இல்லை´´ என்ற சொல்லின் ஒலியை முடக்கி (Mute) அந்த உரையாடலை ´´ திடுக்கிடும் ஆதாரங்கள்´´ என்று பெயரிட்டு, ஜேம்ஸ்பொண்ட் 007 திரைப்படம் போல சங்கதி 24 இன் க(ல்)லாநிதிகள் வெளியிட்டு வைத்திருந்தார்கள்.

இதில் நகைப்புக்குரிய விடயம் என்னவென்றால், தேசத்தின் குரல் பாலசிங்கம் அவர்களின் இவ்விடயத்தை கடந்த வருடமே நாம் முகநூலில் பகிர்ந்திருந்தது, சங்கதி 24 புலனாய்வாளர்களின் மாலைக்கண்ணுக்கு ஏன் தென்படாமல் போனது என்பதுவே.

இது முற்றுமுழுதாக பரணி என்ற எவ்விதப் பின்புலமுமற்ற தனிமனிதரைவிடவும், அவரால் எழுதப்பட்டு இன்று உலகளாவிய இளையோரால் நவீன போராட்டக் கற்பிதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் ´´நந்திக்கடல் கோட்பாடுகள்´´. மீது சேறடித்து, தமது நீண்ட நாள் வன்மத்தைத் தீர்க்கும் செயலின் முனைப்பேயன்றி வேறொன்றில்லை. அதைவிடவும் சங்கதி 24 புலனாய்வாளரின் திடுக்கிடும் ஆதார மூலங்களின் தலைமை இயக்குநர் யாரென்று பார்த்தால்; சட்டம்பி கௌரிபால் சாத்திரி என்பவரது முகநூல் பதிவும், அதனோடிணைத்து அடையாளப்படுத்தப்பட்டிருக்கும், அரசபடைப் புலனாய்வாளர்களாகவும் EPDP ஒட்டுக்குழுவின் பிரமுகர்களாகவும் செயற்படும் முகநூல் வரலாற்றாசிரியர்களின் சீர்த்துவத்தையும் பார்க்கும்போதே எங்குவரை இவர்களது வலையமைப்பு நீள்கிறது என்பதை இலகுவாகக் கண்டுகொள்ள இயலும்.

தேசத்தின் குரல் பற்றிய விடயத்திற்கு வருவோம். தேசத்தின் குரல் பாலசிங்கம் அவர்களது தலைமையிலான பேச்சுவார்த்தைகள் பற்றி பேராசிரியர் முருகர் குணசிங்கம் தனது நூலில் இவ்வாறு சுட்டுகிறார். ஒஸ்லோ உதவி வழங்கும் நாடுகளின் மாநாட்டில்; அமெரிக்க இராஜாங்க அமைச்சர் ரிச்சர்ட் ஆர்மிரேஜ் அவர்கள் ´´ தனி அரசை அமைப்பதற்கான ஆயுதப் போராட்டங்களைக் கைவிட்டுள்ளதாக சிறிலங்கா மக்களிற்கும், சர்வதேச சமூகத்திற்கும் விடுதலைப்புலிகள் தெளிவாக எடுத்துக்காட்ட வேண்டும்´´ என்று அதிகாரத்தொனியில் உரையாற்றிய போது, அங்கிருந்த திரு.அன்ரன் பாலசிங்கம் அவர்கள் உரியமுறையில் தெளிவாகப் பதில்கொடுத்திருக்க வேண்டும்.

எமது உரிமையை அடித்துக்கூறி, அன்று ஏன் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் இந்த அரியசந்தர்ப்பத்தைப் பாவிக்க முடியாமல் போனது என்று அறிவியல் பூர்வமாகச் சிந்திக்கும் ஒருவர் சிந்திப்பதில் எந்தத் தவறும் இருக்கமுடியாது….( தமிழீழ விடுதலைப்போராட்டம், அரச பயங்கரவாதமும் இன அழிப்பும் – பக்கம் 281 ) இதைவிடவும்; மாமனிதர் சிவராம் அவர்கள் “ஒஸ்லோ பிரகடனம் கிழித்தெறியப்படவேண்டியது” எனத்தலைப்பிட்டு எழுதிய கட்டுரையின் பின்புலம் ஆழத்தன்மையும் பலருக்குப் புரிந்திருக்க வாய்ப்பில்லை.

பேச்சுவார்த்தையின் போக்கினைச் சரியாகக் கணித்து, அது எந்த இடத்தில் அச்சைவிட்டு விலகிச்செல்ல வாய்ப்பிருக்கிறது எனத் தீர்க்கதரிசனமாக எடுத்துரைத்த மாமனிதர் சிவராம் அவர்களது சிறப்பினையும் இந்தக் க(ல்)லாநிதிகள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. மாமனிதர் என்ற மேன்மைதங்கிய மதிப்பைத் தலைவர் அவர்கள் சிவராமிற்கு வழங்கியதன் அடிப்படை இதுவேயாகும். இது ஏலவே உலகறிந்த விடயம். மக்கித் துகள்களாகிப்போன சிதைவுகளைக் கூட்டி அள்ளிவந்து, இதோ “திடுக்கிடும் ஆதாரம்” என்று சிரிப்புக்காட்டும் சங்கதி 24 இன் புலனாய்வாளர்கள் அநேகமாக கும்பகர்ணன் வாரிசுகளாகவும் இருக்க வாய்ப்புண்டு.

இன்று உலகெங்கும் அனைவராலும் மேற்கோள்காட்டப்படுகின்ற ஒரேயொரு சர்வதேச ஊடகமாக தமிழ்நெற் மட்டுமே இருக்கிறது. தேசியம் மற்றும் தமிழீழ விடுதலைப்பாதை ஆகியன தொடர்பில் எள்ளளவும் நீதி வழுவாமலும், எவரது கைப்பொம்மையாக இல்லாமலும் நேர்த்தியாக இயங்கும் அவ்வூடகத்தின் பெரும்பணியைத் தலைமேற் சுமந்து, இயங்கும் ஜெயா அண்ணையையும் இவர்கள் விட்டுவைக்கவில்லை. காரணம் பெரிதொன்றூமில்லை.

“நந்திக்கடல் பேசுகிறது” ஆவண நூலின் வெளியீட்டினை நோர்வேயில் மிகச்சிறப்பாக ஜெயா அண்ணை நடாத்தியதும், தனக்குச் சரியெனத்தோன்றியதை நேர்த்தியாகச் செய்யும் அவரது திறனுமே அவர்மீது இவர்கள் சேறுபூசக் காரணமாகும். ஆகமொத்தத்தில்; தமிழின அழிப்பையும், தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் நீதியையும் உலகெங்கும் பறைசாற்றியபடி ஒரே நேர்கோட்டில் நகரும் தமிழ்நெற் ஜெயா அண்ணை மற்றும் பரணிஅண்ணை ஆகியோரோடு நாம் கைகோர்த்தோம். நந்திக்கடல் பேசுகிறது நூலில் வருகின்ற “தமிழர்கடல்” கட்டுரையும், “நந்திக்கடல் கோட்பாடுகள்” கட்டுரையும் இன்று உலகெங்கும் வியப்புக்குரிய பேசுபொருளாகி நிற்கும் நிலையில், இவ்வாறான கொசுத்தொல்லைகளையும் நாம் சந்தித்தே ஆகவேண்டியிருக்கிறது.

பெரும்பணச்செலவில் பரணி அண்ணையின் தொலைபேசியை ஊடறுக்கும் செயலை, இவர்கள் செய்யும் அளவிற்கு அவர் எந்தவொரு நாட்டினதும் இராஜாங்க அமைச்சரல்ல. தமிழீழ விடுதலைப்போரின் அடுத்த படிநிலைக்கான பாய்ச்சலை, உத்வேகத்தை இளையோரிடம் உண்டாக்கக்கூடிய பேரெழுச்சியை அவரது எழுத்து உண்டாக்கிவருகிறது. நவீனத்துவங்களின் மாயாஜாலங்களை நொருக்கியெறியும் விதமாக அவர் எழுதும் கட்டுரைகள் உலகின் வல்லாதிக்கச்சுழற்சியை இலகுவில் அடையாளம் காட்டுகின்றன.

இதனால் தமிழீழ விடுதலையைச் சிதைக்கும் “குறிசொல்லிகள்” கிலிகொண்டு கையிலெடுத்திருக்கும் ஆயுதமே வெட்டியொட்டப்பட்ட ஒலிப்பதிவும், சம்பந்தமற்ற சேறுபூசலுமாகும். உலகெங்கும் பரந்துவாழ்கின்ற தமிமீழத்தேசியச் செயற்பாட்டாளர்களை இலக்கு வைத்து பெரும் செலவில் மேற்கொள்ளப்படுகின்ற தொலைபேசி ஊடறுப்புக்களுக்கான அவசியம் என்ன..? இதைச்செய்வதற்கான நிதிமூலம் எங்கிருந்து வருகிறது..? என்பது போன்ற கேள்விகளூடு, தமிழீழத் தேசியச் செயற்பாட்டாளர்கள் அனைவரும் உங்களது தொடர்பாடல்களைப் தகுந்த பாதுகாப்புடன் மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறேன்.

“நந்திக்கடல் பேசுகிறது” ஆவணநூலை உலகெங்கும் வெளியிடப்பட்ட தருணங்களில் நாம் எதிர்கொண்ட சிக்கல்கள், சேறடிப்புகள், நெருக்கடிகள் கொஞ்சநஞ்சமல்ல.

ஆனால் நந்திக்கடல் பேசுகின்ற மௌனமொழியின் கட்டளை எமதுகாதுகளிற்குத் தெளிவாகப் புரியும்படி செய்தவர்களுள் தமிழ்நெற் ஜெயா, பரணிஅண்ணை ஆகியோர் முக்கியமானவர்கள். இதைவிடவும் இந்நூலிற்கு முகவுரை வழங்கிய பேராசிரியர் யூட்லால், நூல் வெளியீடுகளில் முன்வந்து சிறப்புரையாற்றிய பிறேமன் மனித உரிமைகள் அமைப்பின் விராஜ் மென்டிஸ், ஊடகவியலாளர் பாஷண ஆகியோர் நந்திக்கடல் பேசியதைக் கிரகித்துக்கொண்ட அளவிற்குக் கூட, தமிழ் எண்ணிமத்தளமான சங்கதி24 கிரகிக்க முயலவில்லையா என்பது பெரும் திகைப்பாக இருக்கிறது. நெருக்கடிகளின் மறுவடிவமாகவே புதிய முயற்சிகள் உருவம்பெற்று எழுகின்றன. அவ்வாறே “நந்திக்கடலின் முடிவிலா ஆட்டமான” – “பிரபாகரன் சட்டகம்” மூலம் மீண்டும் அனைவரையும் சந்திப்போம்…!

“நந்திக்கடல் பேசுகிறது” ஆவண நூல் குழுமம் சார்பாக -தேவன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here