cow-pongalமீன் பிடிக்க வேண்டும் என்றால் குளத்திலோ ஏரியிலோ தான் தூண்டில் போடவேண்டும். மாறாக மாட்டுக்கு தவுடு, புண்ணாக்கு போடும் குளுதாடியில் அல்ல. அது போல பொங்கலைப் பற்றி அறிய கட்டாயமாக கிராமத்தை நோக்கிதான் செல்ல வேண்டும்.

 
பொங்கல் ஏன் கொண்டாடப்படுகிறது. அது சொல்லும் செய்திதான் என்ன? பொதுவாக பொங்கல் என்பது மருதம் நிலம் சார்ந்த விழா. நாம் வாழக்கூடிய தமிழ்நாட்டின் பெரும்பாங்கான பகுதி மருத நிலம் தான். பொங்கல் திருநாட்களில் என்ன சாராம்சத்தை நாம் பெற்றுக் கொள்ளலாம்? பொங்கலில் இருந்து மொத்தத்தில் மூன்றை நாம் பெற்றுக் கொள்ளக் கூடியதாய் இருக்கும்.

 

 

நன்றியறிதல், வீரம், காதல். இந்த மூன்று தான் பொங்கல் திருவிழா சொல்லும் செய்தியின் சாராம்சம். .

 
இதில் வொவ்வொன்றையும் சுறுக்கமாக பார்க்கலாம். முதல் ஒன்று நன்றியறிதல். இந்த நன்றியறிதலில் என்பதில் யார் யாருக்கெல்லாம் மக்கள் நன்றியினை செலுத்துகிறார்கள் என்றால் முதலில் கடந்த சென்ற வருடத்திற்கு செலுத்துகிறார்கள். கடந்த வருடத்தை நன்றியோடு வழியனுப்பி வைத்து விட்டு புதுவருடத்தை மகிழ்ச்சியோடு வரவேற்கிறார்கள்.(தை ஒன்றே வருடப்பிறப்பு) அதற்கு அடையாளமாய் வருடப் பிறப்பின் முந்தைய நாள் ஆவாரம்பூ, மாவிலை தோரணங்களை தங்களது வீட்டு வாசலில் கட்டி தொங்கவிட்டு புதுவருடத்தை வரவேற்கிறார்கள். இதை காப்புக் கட்டுதல் என்று சொல்லுவார்கள்.

 
இரண்டாவது நன்றி என்பது சூரியனுக்கு. சூரியனால் தான் விடிவு ஏற்படுகிறது. அதுபோல தங்களது வாழ்விற்கும் விடிவு ஏற்பட வேண்டும் என்று சூரியனை வரவேற்று பொங்கலிடுகிறார்கள். அதிகாலை எழுந்து குளித்துவிட்டு, வாசலில் உலக்கையை படுக்க வைத்து அதன் மேல் அரிசி மாவை வைத்து தட்டி விடுவார்கள்.

 

 

அப்படி தட்டிவிட்டதும் அந்த உலக்கையின் இரு பக்கமும் மாவும் சீராக கோடாக தரையில் விழும். இப்படி நாளு பக்கம் போட்டு கோலத்தில் சூரியனுக்கு வீடு கட்டுவார்கள். அதன் கிழக்கு பக்கத்தில் சூரியனின் வரவிற்காய் வாசலமைப்பார்கள். வாசலில் போட்ட அந்த கோல வீட்டின் நடுவில் சூரியனுக்கு பொங்கலிடுவார்கள். சரியாக சூரியன் உதிக்கும் நேரத்தில் இது பொங்க வேண்டும். இது சூரியப் பொங்கல்.

 
அன்று மதியமே ஒரு காலத்தில் வாழ்ந்து இறந்து தெய்வமாகிப் போன நாட்டார் தெய்வத்திற்கு முன் கூடி பொங்கலிடுவார்கள். மாலை நேர அளவில் தங்களது முன்னோர்களை புதைத்த சமாதியில் பொங்கலிட்டு படையலிட்டு வணக்கத்தை செலுத்துவார்கள்.

 

 

இது சமாதிப் பொங்கல். தாங்கள் ஒன்றாக சேர்ந்து வாழும் சாட்சியமாய் ஊர் மண்டுக்கல்லில் பழம் வைப்பார்கள்.

 
சர்க்கரை என்பது மகிழ்ச்சியின் குறியீடாக இருக்கிறது. யாரேனும் மகிழ்ச்சியான செய்தியை கூறினால் “அவேன் வாயில சர்க்கரைய போடுடா” என்பதை நாம் கேட்கலாம். முதல் நாளில் வைக்ககூடிய இந்த மூன்று பொங்கலில், அதாவது மேற்கூறிய சூரியப் பொங்கல், நாட்டார் பொங்கல், சமாதி பொங்கல் ஆகியவற்றை எடுத்துக் கொண்டால் சூரியப் பொங்கலுக்கு மட்டுமே சர்க்கரை சேர்த்து பொங்கலிடுவார்கள். ஏனைய இரு பொங்கலும் தங்களது முன்னோர்களின் இறப்பின் துக்கத்தை வெளிப்படுத்த சர்க்கரை தவிர்த்து விடுகிறார்கள். நாட்டார் தெய்வ பொங்கலும், சமாதி பொங்கலும் வெண்பொங்கல் தான் வைப்பார்கள்.

 
கடைசி நாளில் தங்களோடு வயலோடு சேர்ந்து உழைத்த மாடுகளை குளிப்பாட்டி, வண்ணப் பொட்டு வைத்து அலங்காரம் செய்து அதற்கு பொங்கலிட்டு வாயில் ஊட்டி விடுவார்கள். இதன் போது மாட்டை சுற்றி வந்து வணங்குகிறார்கள்.

 
மஞ்ச குளி மாடே! மஞ்ச குளி! (மாட்டின் மீது மஞ்சள் நீர் தெளித்து குளிக்கச் சொல்கிறார்கள்)

 
நீர்! வெலகு மாடே நீர் வெலகு! (குளத்தவுடன் சாம்பிரானி புகை ஈரத்தை உலர்த்தச் சொல்கிறார்கள். அதான் நீர்வெலகு, நீர் விலகு) சோறு தின்னு மாடே! சோறு தின்னு! ( குளித்து முடித்ததும் சோறு தின்னச் சொல்லி பொங்கல் ஊட்டுகிறார்கள்) திட்டி கழி மாடே! திட்டு கழி! ( யாரும் கண்ணுவைக்காமல் இருக்க திட்டி கழிக்கிறார்கள்)
கடைசியில் பட்டி பெருக! பால் பான பொங்க! பொங்கலோ பொங்கல் என்று முடிக்கிறார்கள். இது மாட்டுப் பொங்கல்.

 

இந்த மாட்டுப்பொங்கல் என்பது வெறும் பொங்கல் வைப்பதோடு மட்டும் முடிந்து விடுவதில்லை. வயல் தான் கதர்களை விளைவித்தது. அந்த வயலில் மனிதனும் வேலை செய்தான். மாடும் வேலை செய்தது. அந்த கதிரின் அடி காட்டுக்கு. நடு மாட்டுக்கு. நுனி வீட்டுக்கு என்று விவசாயி பாகம் பிரிக்கிறான். நெல்லின் வரும் அரிசியை எடுத்துக் கொண்டு தவிட்டை மாட்டுக்கு கொடுக்கிறான்.

 

மேற்சொன்ன இதன் சுருக்கத்தில் நன்றியறிதலை யார் யாருக்கு உழைத்து வாழும் உழவர்கள் செலுத்துகிறார்கள் என்று நாம் அறிந்து கொள்ளலாம்.

 

அடுத்தது வீரம். இந்த பொங்கல் திருநாளில் திமிறி வளர்ந்த காளையின் தும்முலை பிடித்து அடக்குவதும் (அதைப் பிடித்து தொங்கிக் கொண்டு போவது) வட்டக்கல்லை தூக்குவதும் ஆண்மகன் தன் உடல் பலத்தை காட்டக்கூடியதாகவும், தன் வருங்கால மனைவியைப் பெறக்கூடிய கவரக்கூடிய போட்டியாகவும் இருந்து இருக்கிறது.

 

பின்பு இது சல்லிக்கட்டு போன்ற விளையாட்டாக மாறி இருக்கிறது. சல்லிக்கட்டு பற்றியும், சல்லிக்கட்டு காளை வளர்ப்பு பற்றி தனியாக பேசக்கூடிய ஒன்று.

 

அடுத்தது காதல். இதில் தலைவன் எப்போது தலைவியை தேர்ந்தெடுக்கிறான். தலைவி எப்போது தலைவனை தேர்ந்தெடுக்கிறாள் என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும். கிராமத்துச் சூழல் என்பது மிகவும் இறுக்கமானது. இருகாதலர்கள் சந்தித்து பேசவோ, தங்களது காதல் காதலை பரிமாறிக் கொள்ளவோ யாதொரு சூழலும் சரியாக அமைவதில்லை. ஆனால் பொங்கல் நாட்களின் போது அப்படியில்லை.

 

காணும் பொங்கல். என்ன காணும் பொங்கல்? எதை காணும் பொங்கல்? யாரைக் காணும் பொங்கல்? தலைவியை தலைவன் காணும் பொங்கல். ஊரிலுள்ள இளம்பெண்கள் வெளியூரில் இருந்து பொங்கலுக்கு வந்த இளம்பெண்கள் எல்லோரும் கூடி ஊர் மந்தையில் கன்னிப்பொங்கலிடுவார்கள். அப்போது பார்த்து பிடித்துப் போன முறைப்பெண்ணை தலைவன் கேலி செய்கிறான். அவளை மணமுடிக்க, தன் வீட்டில் உள்ள பெற்றோரிடம் சொல்லி பெண் வீட்டில் பேசச் சொல்கிறான். இது தலைவன் தலைவியை தேர்ந்தெடுக்கும் முறை.

 

மஞ்சள் நீர் ஊற்றுவதை தென்மாவட்டங்களில் நீங்கள் பார்க்கலாம். இது திருவிழாவிற்கு மட்டுமல்லை. பொங்கலுக்கும் ஊற்றுவார்கள்.அதாவது கடைசி நாள் மாட்டுப் பொங்கல் அன்று. காதல் தலைவியானவள் தனக்கு பிடித்து முறைப்பையன் மீது மஞ்சள் நீரை ஊற்றி தன் காதலின் விருப்பத்தை தெரிவிக்கிறாள்.

 

அவனிடத்தில் உரிமை பாராட்டும் விதமாய் வளையல், பாசி போன்ற ஆபரணங்களை வாங்கித் தருமாறு உரிமையோடு கேட்கிறாள். இது தலைவி தலைவனை தேர்தெடுக்கும் முறை. இதில் குறிப்பிட்டு பார்க்க வேண்டியது என்னவென்றால் பெண்கள் தான் ஆண்களின் மீது மஞ்சள் நீர் ஊற்றுகிறார்கள்.ஆண்கள் பெண்களின் மீது அல்ல.

 

அதுபோல பெண்கள் சகோர உறவைச் சார்ந்த எந்த ஆண்மகனின் மீதும் மஞ்சள் நீரை ஊற்றுவதில்லை.
மஞ்சள் நீர் என்னும் போது இந்த இடத்தில் நீங்கள் இன்னொன்றையும் உற்று நோக்கலாம். தமிழர்களின் வாழ்விலில் நீர் முக்கியப் பங்காற்றுகிறது.

 

அவனது சடங்குகளில் எல்லாம் அக்னியை விட நீரே முதன்மை படுத்தப் படுகிறது. ஒரு குழந்தை பிறப்பது, ஒரு பெண் பருவமடைவது, திருமணம், பெண் தாயாவது, கடைசியில் இறப்பது வரை அவனது சடங்கில் நீரே முதன்மைப் படுத்தப்படுகிறது. மஞ்சள் நீராட்டு, பூப்புனித நீராட்டு, நீர் மாலை என்று விரிவாக பேசக்கூடிய ஒன்று. இந்த நீரியல் சடங்கு தொ.ப வின் நூல்களில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்

 
இப்படி பொங்கல் என்பது நன்றியறிதல், வீரம், காதல் ஆகியவற்றை சொல்லக் கூடியதாக இருக்கிறது. இதில் முக்கியமாக கூர்ந்து கவனக்கப்பட வேண்டியது என்னவென்றால் இது எந்த ஒரு மதம் சார்ந்த விழா அல்ல என்பதே.
அனைவருக்கும் இனிய பொங்கல் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.