ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, நரேந்திர மோடியின் பதவிப் பிரமாண வைபவத்திற்கு அழைக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, மதிமுகவின் பொதுச் செயலாளர் கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவை பின்வருமாறு,

அன்புள்ள திரு நரேந்திர மோடி அவர்களுக்கு, வணக்கம்.

உங்கள் மகத்தான தலைமையின்கீழ், நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி பிரமிக்கத்தக்க வெற்றி பெற்றதற்கு என் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்.

இந்திய ஜனநாயகத்தின் ஒளிக்கதிர்கள் உலகெங்கும் பரவி உள்ளன. இந்த வேளையில் ஒவ்வொரு நிமிடமும் உங்களுக்குப் பொன்னானது. எனினும், உங்களுடைய விலைமதிக்க முடியாத நேரத்தை, கனத்த இருதயத்தோடு நான் எழுதி உள்ள கீழ்காணும் வரிகளைப் படிப்பதற்கு ஒதுக்கிட வேண்டுகிறேன்.

vaiko-book-release
தலைசிறந்த நாவலாசிரியர் சார்லஸ் டிக்கன்ஸ் “இரு நகரங்களின் கதை” என்ற நாவலில் எழுதிய வரிகளே நினைவுக்கு வருகின்றன.

இதுவே உன்னதமான நேரம்
இதுவே மோசமான நேரம்!
இதுவே வெளிச்சத்தின் காலம்,
இதுவே இருட்டின் காலம்!
இதுவே நம்பிக்கையின் வசந்தம்
இதுவே விரக்தியின் உறைபனி!
எல்லாம் நமக்கு முன்னால் இருக்கிறது
எதுவுமே நமக்கு முன்பு இல்லை!

உங்கள் பதவிப் பிரமாண விழாவுக்கு இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச அழைக்கப்பட்டதாக அறிந்தவுடன், என் தலையில் இடி விழுந்ததுபோல் வேதனையுற்றேன்.

இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களை, ஆயுதம் ஏந்தாத அப்பாவிகளை, குழந்தைகள், பெண்கள், மூத்தோர் உள்ளிட்ட தமிழ் மக்களைக் கொன்று குவித்த மன்னிக்க முடியாத இனப்படுகொலையை நடத்தியவன்தான் மகிந்த ராஜபக்ச ஆவான்.

இந்த உண்மை, அசைக்க முடியாத சாட்சியங்களோடு நிரூபிக்கப்பட்டு விட்டது. ஜெர்மனியில் கூடிய மக்கள் தீர்ப்பு ஆயத்தில் வெளிச்சத்திற்கு வந்தது.

சிங்கள இராணுவத்தினர் நடத்திய கோரமான படுகொலைகளை, ஐக்கிய நாடுகள் சபையின் மூன்று உறுப்பினர் குழு அறிக்கையாகத் தந்தது. எங்கள் தாய்மார்கள், சகோதரிகள், சிங்கள இராணுவக் கூட்டத்தினரால் கற்பழிக்கப்பட்டு, வெட்டிக் கொல்லப்பட்ட காட்சிகளை, இலண்டனில் சனல் 4 தொலைக்காட்சி ஆதாரங்களோடு காணொளிகளாக வெளியிட்டது.

அமெரிக்காவிலும், பிரிட்டனிலும் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள், அந்தக் காணொளிக் காட்சிகளைப் பார்த்துக் கலங்கி அழுதார்கள்.

ஈழத்தமிழ் இனப்படுகொலையைச் சிங்கள அரசு நடத்துவதற்கு, சோனியா காந்தி இயக்கிய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, முப்படை ஆயுதங்களைத் தந்து உதவியது. இந்தியக் கடற்படை, இலங்கைக் கடற்படையோடு ஒப்பந்தம் போட்டுக்கொண்டு, பின்னால் இருந்து போரை இயக்கியது.

ஈழத்தமிழ் இனப் படுகொலையின் கூட்டுக்குற்றவாளிதான் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆகும்.

ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் கூட்டம் அண்மையில் நடந்தது. அதில், அமெரிக்காவும், பிரிட்டனும் மற்றும் மூன்று நாடுகளும் தீர்மானம் கொண்டு வந்து, சிங்கள இராணுவம் நடத்திய படுகொலைகள் குறித்து, சுதந்திரமான சர்வதேச அனைத்துலக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கின்றது.

ஆனால், அந்தத் தீர்மானத்தை எதிர்த்து, பாகிஸ்தானோடும், சீனாவோடும் சேர்ந்து கொண்டு இந்திய அரசு, வாக்கு அளித்துத் தமிழர்களுக்குத்துரோகம் செய்தது.

இந்திய வெளி விவகாரத்துறையில் கடந்த பத்து ஆண்டுகளாக இருந்துகொண்டு, ஈழத்தமிழர் பிரச்சினையில் துரோகம் இழைத்த அதே அதிகாரிகள்தான், வரப்போகின்ற உங்கள் அரசுக்கும் தவறான ஆலோசனைகளைத் தந்து, ராஜபக்சவை பதவி ஏற்பு விழாவுக்கு அழைக்கச் செய்து உள்ளனர்.

நியாயப்படுத்த முடியாத ஒரு விவாதத்தைச் சிலர் முன்வைக்கிறார்கள். இலங்கை அரசோடு உறவு ஏற்படுத்திக் கொள்ளாமல், எப்படி ஈழத்தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும்

இது முட்டாள்தனமான வாதம் ஆகும். இந்தியக் குடிமக்களான தமிழக மீனவர்கள் 578 பேர், சிங்களக் கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளனர்.

லண்டன் மாநகரில், லிபியத் தூதரகத்தின் பாதுகாப்புப் படையினர், தவறுதலாகச் சுட்டதில் ஒரு பிரிட்டிஷ் பொலிஸ் பெண்மணி கொல்லப்பட்டதற்காக, சில மணி நேரத்திற்கு உள்ளாக, லிபியாவுடன் தூதரக உறவுகளை இங்கிலாந்து பிரதமர் மார்கரெட் தாட்சர் துண்டித்தார்.

பாகிஸ்தான் பிரச்சினையோடு இலங்கைப் பிரச்சினையை இணைத்துச் சிலர் பேசுகிறார்கள். இதுவும் தவறானது. இரண்டு பிரச்சினைகளும் முற்றிலும் வேறுபட்டவை. நான்கு யுத்தங்களில் பாகிஸ்தானோடு நாம் மோதி இருக்கின்றோம்.

பாகிஸ்தானில் இருந்து ஏவப்பட்ட தீவிரவாதத்தால், இந்தியாவில் பலர் கொல்லப்பட்டனர். ஆனால், பாகிஸ்தான் கடல் பகுதிக்குள் அத்துமீறிச் சென்ற இந்திய மீனவர்கள் ஒருவரைக்கூட பாகிஸ்தான் படையினர் சுட்டுக் கொன்றது இல்லை.

இந்திய மக்களோடு தொப்புள் கொடி உறவு உள்ள, பாகிஸ்தானில் வாழும் மக்களை ஐம்பதுகளுக்குப் பின்னர் பாகிஸ்தான் இராணுவத்தினர் சுட்டுக்கொன்றது இல்லை.

ஆனால், தமிழகத்தின் தொப்புள்கொடி உறவுகளான இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களை, சிங்கள அரசு ஈவு இரக்கம் இல்லாமல் படுகொலை செய்தது. தமிழ் இனத்தையே அழிப்பது என்ற கொலைவெறியுடன் இராணுவத்தை ஏவிப் படுகொலை செய்தது.

ஈழத்தமிழர் படுகொலையில் சிங்கள அரசுக்கு இந்தியா உதவக்கூடாது என்பதற்காக, தமிழ்நாட்டில் 19 தமிழ் இளைஞர்கள் தீக்குளித்து மரண நெருப்பை அணைத்து மடிந்தனர். உயிர்த்தியாகம் செய்தனர்.

மத்தியப் பிரதேசத்தில் புத்தர் விழாவுக்கு மகிந்த ராஜபக்ச வந்தபோது, அதனை எதிர்ப்பதற்காக நானும் என் சகாக்களும் தோழர்களும் சாஞ்சிக்கே அணிவகுத்துச் சென்று போராடினோம் என்பதை நினைவுபடுத்துகிறேன்.

ராஜபக்ச டெல்லிக்கு வரப்போவதாக அறிவிப்பு வந்தவுடன் தில்லியில் பிரதமர் வீட்டை முற்றுகையிட என் தலைமையில் போராடிக் கைது செய்யப்பட்டோம்.

திருப்பதிக்கு ராஜபக்ச வந்தபோது அதை எதிர்த்துத் தமிழர்கள் போராடிக் கைதாயினர். லண்டனுக்கு ராஜபக்ச வந்தபோது அங்குள்ள தமிழர்கள் போராடி விரட்டி அடித்தனர்.

கொமன்வெல்த் அமைப்பில் செயலாளராக இருக்கின்ற கமலேஷ் சர்மா என்பவரைப் பயன்படுத்தி இந்திய அரசு, ஒரு சதித்திட்டம் வகுத்து, இலங்கை அதிபர் ராஜபக்சவை கொமன்வெல்த் நாடுகளின் அரசுகள் கூட்டமைப்புக்குத் தலைவன் ஆக்கியது.

ஆனால், கொழும்பில் நடைபெற்ற கொமன்வெல்த் மாநாட்டுக்குத் தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளித்து, இங்கிலாந்து மகாராணி எலிசபெத் செல்லவில்லை. தமிழகத்தில் மாணவர்களும், கட்சி எல்லைகளைக் கடந்து தமிழ் மக்களும், எதிர்ப்புக் காட்டியதன் விளைவாக, இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் அவர்களும் கொழும்பு மாநாட்டுக்குச் செல்லவில்லை.

மிக முக்கியமான ஒன்றை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.

1998 ஆம் ஆண்டிலும், 1999 ஆம் ஆண்டிலும், வாஜ்பாய் அவர்கள் பதவி ஏற்பு விழாவிற்கு சிங்கள அதிபர் அழைக்கப்படவில்லை.

2004 ஆம் ஆண்டிலும், 2009 ஆம் ஆண்டிலும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பதவி ஏற்பு விழாவுக்கும் ராஜபக்ச அழைக்கப்படவில்லை.

உலகெங்கும் உள்ள தமிழர்களின் வேதனைக் கூக்குரலும், எங்கள் தமிழ்த் தாய்மார்கள், சகோதரிகளின் அழுகையும், விம்மலும், உங்களிடம் மன்றாடிக் கேட்க என்னைத் தூண்டுகிறது. எங்கள் தமிழர்களின் மனக்காயங்களுக்கு மருந்து போடுகின்ற வகையில், உங்கள் பதவி ஏற்பு விழாவில் மகிந்த ராஜபக்சே பங்கு ஏற்க அனுமதிக்காதீர்கள்.

பொங்கி வரும் கண்ணீரோடு, கும்பிட்ட கரங்களோடு உங்களை வேண்டுகிறேன்.

பதவி ஏற்பு விழாவில் ராஜபக்ச பங்கு ஏற்க விடாமல் தடுத்து, தமிழர்களுக்கு ஆறுதலான நம்பிக்கையைத் தாருங்கள் என்று தரணியெங்கும் உள்ள தமிழர்கள் சார்பில் எனது பணிவான வேண்டுகோளை உங்கள் முன் வைக்கிறேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.