இங்க நான் சாட்சியம் அளிக்க வரவில்லை. எனது ஆதங்கத்தை வெளிப்படுத்தவே வந்தேன் என மன்னார் ஆயர் இராயப்பு ஜோசெப் தெரிவித்தார்.

காணாமல் போனவர்களை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சியப்பதிவுகள் மன்னார் மாவட்டத்தில் கடந்த 8ஆம் திகதி ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

Rajappu-commition
அதன்படி இன்று மன்னார் பிரதேச செயலகத்தில் நடைபெற்று வருகின்றது. இன்றைய அமர்வில் ஆயர் சமுகமளித்து 14 விடயங்கள் தொடர்பில் ஆணைக்குழுவிற்கு தெரியப்படுத்தியதுடன் ஜனாதிபதிக்கும் மகஜர் ஒன்றினையும் ஆணைக்குழுவிடம் கையளித்தார்.

இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த ஆயர், மன்னார் மாவட்டத்தில் கடந்த 8ஆம் திகதியில் இருந்து 11 ஆம் திகதி வரை இங்கு விசாரணையினை மேற்கொள்வதற்கு ஆணைக்குழுவிற்கு நன்றி தெரிவிக்கின்றேன்.

ஆனால் நான் ஆணைக்குழுவிற்கு எந்தவிதத்திலும் ஆதரவு வழங்க தயார் இல்லை. இவ்வாறான ஆணைக்குழு மூலம் தமிழர்களுக்கு எந்தவிதமான தீர்வுகளும் கிடைக்கப் போவதில்லை.

இருப்பினும் மக்கள் வருகின்றார்கள். இதனால் எதுவும் நடைபெறாது என்று மக்களுக்கும் தெரியும் எனினும் சொல்லுவோம் சொல்லிபார்ப்போம் என்று தான் தெரிவித்துச் செல்கின்றனர்.

அதுபோலவே நானும் கூறுகின்றேன் இங்கே நான் சாட்சியம் அளித்து எனது நேரத்தை செலவழிக்க விரும்பவில்லை நானும் எனது ஆதங்கத்தை மட்டுமே வெளிப்படுத்த வந்திருந்தேன். அத்துடன் ஜனாதிபதிக்கும் மகஜர் ஒன்றினையும் வழங்கியுள்ளேன்.

மேலும் இந்த ஆணைக்குழுவின் விசாரணை மீது நம்பிக்கையில்லை. எனது கவலைகளையும் இவர்களிடம் கூற நான் வரவில்லை. இவ்வாறு உருவாக்கப்பட்ட ஆணைக்குழுக்களின் முயற்சிகள் தமிழர்கள் மீது ஏற்படுத்தப்பட்ட மிகவும் அநீதியாக செயற்பாடுகளில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.

அனைத்து முயற்சிகளும் தோல்வியிலேயே முடிவடைந்துள்ளன. எனவே இவ்வாறானதொரு ஆணைக்குழு முன்னால் சாட்சியம் அளித்து எனது நேரத்தை வீணாக்க நான் விரும்பவில்லை.

இங்கு உள்ள பிரச்சினைகள் குறித்து வரிசைப்படுத்தி தருமாறு ரஞ்சித் ஆண்டகையூடாக ஜனாதிபதி என்னிடம் கோரியிருந்தார். 2வருடத்திற்கு முன்னர் அதற்கான பதிவுகளை நான் வழங்கியிருந்தேன். அத்துடன் 2 தடவைகள் கூட்டம் நடைபெற்றது. எனினும் அங்கு இன்னொரு முறை ஆராய்வதாகவே கூட்ட முடிவில் கூறி அனுப்பப்பட்டது.

எனினும் 2வருடம் ஆகியும் எதுவித தீர்வும் கிடைக்கவில்லை. தீர்வு கிடைக்கும் என நான் நம்பவும் இல்லை. அத்துடன் என்னால் வழங்கப்பட்ட விபரங்கள் தொடர்பில் புள்ளிவிபரங்களை தருமாறும் என்னிடம் கேட்கப்பட்டது. எனினும் அதனை நான் எவ்வாறு மக்களிடம் கேட்பது. அவ்வாறு கேட்கும் போது சீ.ஐ.டி என்னை துரத்தும் .

அத்துடன் விபரம் வழங்கிய மக்களும் காணாமல் போகும் நிலையிலும் இருக்கின்றது. இதனால் நான் மக்களையும் துன்பப்படுத்த விரும்பவில்லை நீங்கள் நினைத்தால் அந்த விபரங்களை அதிகாரிகள் மூலம் பெற்றுக் கொள்ளலாம் தானே. எனவே இவ்வாறு ஒரு நிலையில் தான் நாடு உள்ளது. அரசு எந்தவிதத்திலும் நீதியான நல்லிணக்கத்தை ஏற்படுத்த விரும்பவில்லை. தந்திரமான முறையில் சில இடங்களை கையாளுகின்றது.

உண்மை நீதி இவை இரண்டும் இணைந்தது தான் நல்லிணக்கம் ஆகும். உண்மையான நல்லிணக்கம் ஆனது தீமை செய்தவனை பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு முன்னால் கூட்டி வந்து அழுது குழறி உண்மையினை நிரூபிப்பதே உண்மையான நல்லிணக்கம் ஆகும்.

அவ்வாறான சூழ்நிலையே நல்லதொரு சமாதான நிலைக்கு இட்டுச் செல்லுமே தவிர இவ்வாறான விசாரணைகள் அனைத்தும் இதுவரை தோல்வியிலேயே முடிவடைந்துள்ளன.

இவ்வாறான செயற்பாடுகள் வெற்றியளிக்க வேண்டும் என நாங்களும் முயன்று கொண்டு இருக்கின்றோம். உண்மையும் நீதியும் தான் நிரந்தர தீர்வுக்கு இட்டுச் செல்லும்.

அரசினாலும் அவர்களுடன் இணைந்து செயற்படுபம் அரசியல் சார்ந்தவர்களும் இந்த முயற்சிகளை நல்லொரு நோக்கத்திற்காக பயன்படுத்தாது வேறு ஒரு திசைக்கு கொண்டு போய் தமது அரசியல் நோக்கத்திற்கு மட்டுமே பயன்படுத்துகின்றனர்.

எனினும் மக்களினது உண்மையான ஆதங்கங்களையும் கவலைகளையும் கண்டறிந்து அதற்கு உரிய தீர்வுகளை பெற்றுக் கொடுக்கக்கூடிய நிலையில் அவர்கள் செயற்படவில்லை நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம் என அவர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.

நன்றி: உதயன்.