Singala-settபுதிய அரசாங்கம் நாட்டில் நிரந்தர நல்லிணக்கத்தை ஏற்படுத்த மேற்கொண்டுள்ள அர்ப்பணிப்பை பாராட்ட வேண்டும் என சமந்தா பவர் அறிக்கை வாசித்துள்ளார்.

 

மகிந்த அரசுக்கு எந்தவகையிலும் சளைத்ததல்ல மைத்ரி அரசு என்பதை நாம் தினமும் பார்த்துகொண்டுதான் இருக்கிறோம்.

 

ஆனால் அதை சொல்ல வேண்டிய தமிழ் தலைவர்கள் மவுனமாக இருந்தால் இப்படித்தான் தமது நிகழ்ச்சிநிரலை நடத்திவிட்டு போய்க்கொண்டிருப்பார்கள் மேற்குலக இராஜதந்திரிகள்..

 

மைத்ரி அரசின் நல்லிணக்க லட்சணத்தை பட்டியலிட தொடங்கினால் இந்த வருசம் முழுக்க பட்டியலிட்டுக்கொண்டேயிருக்கலாம்.

 

அதனால் கனக்க வேண்டாம். சமந்தா பவர் இலங்கைக்குள் நுழையும்போது நடந்த ஒரு சம்பவத்தை மட்டும் பார்ப்போம்.

 

வவுனியா என்பது முழுக்க முழுக்க தமிழர்களின் பூர்வீக நிலம். அதை ஆக்கிரமித்து சிங்கள குடியேற்றங்களால் நிரப்பிய பிற்பாடும் இன்னும் அது தமிழ் மக்கள் அதிகளவில் வாழும் ஒரு பிரதேசமாகவே இருக்கிறது.

 

மகிந்த ஆட்சியில் வவுனியா மாவட்ட அரச அதிபராக சிங்களவர் ஒருவர் நியமிக்கப்பட்டார். ( மன்னார் மாவட்டத்திற்கும் அதுதான் நடந்தது)

 

பந்துல ஹரிச்சந்திர என்ற அந்த சிங்கள அதிகாரி கடந்த நான்கு வருடங்களாக வுனியா மாவட்டத்தில் காடுகளை அழித்து சிங்களக் குடியேற்றங்களை அமைக்க அரும்பாடுபட்டார்.

 

விளைவாக தமிழ் மக்களின் தொடர் பேராட்டத்தையடுத்து வடமாகாணசபையின் தொடர் தலையீட்டால் அவரை மாற்றவேண்டிய நிலை ஏற்பட்டது.

 

ஆனால் என்ன பிரயோசனம்? மைத்ரி அரசும் மீளவும் ஒரு சிங்களவரையே புதிய அரச அதிபராக நியமித்திருக்கிறது.

 

தமிழ்ப் பரம்பலை குறைத்து சிங்கள குடியேற்றங்களை நிறுவி தமிழின அழிப்பை மேற்கொள்ளும் நுட்பமான சதி இது.

 

அரசியல் காரணங்களை விடுவோம்.தமிழர்கள் பெரும்பாலானவர்கள் வாழும் ஒரு பகுதிக்கு தமிழர் ஒருவரை நியமிப்பதுதானே அடிப்படையில் சரியானது.

 

சமந்தா பவர் கொழும்பில் கால் பதிக்கிறார். அடுத்த பக்கம் இது தொடர்பான வர்த்தமானி அறிக்கை வெளியாகிறது.

 

இதுதான் சமந்தா பவர் பாராட்டும் நல்லிணக்கமா? இதற்கு பெயர் இனஅழிப்பு..

 

மேற்குலக கனவான்களுக்கு பம்மி பயப்படாமல் பேரம் பேசும் வல்லமையை வளர்த்து எதிர்ப்பு அரசியலை தமிழ் தலைவர்கள் செய்யப் புகாதவரை இனஅழிப்பை ‘நல்லிணக்கம்’ என்று பாராட்டிவிட்டு தமது நிகழ்ச்சி நிரலை நடத்தி முடித்துவிட்டு மேற்குலக இராஜதந்திரிகள் போகத்தான் செய்வார்கள்..

 

தவறு அவர்களிடம் இல்லை.. எம்மிடம்தான்.. தமிழ் அரசியல்வாதிகள் இதற்கான முழுப்பொறுப்பையும் எடுக்க வேண்டும்.

 

அல்லது மக்களுக்கு உண்மையை சொல்ல வேண்டும்.. மக்கள் தமது விடுதலையை தாமே தீர்மானிப்பார்கள்.

 

“மக்களுக்கு உண்மையை சொல்லுங்கள். வெற்றியை அவர்கள் பெற்றுத்தருவார்கள்” என்பது மக்கள் போராட்டம் குறித்த எளிய பால பாடம்..

 

மாவீரர்களை நினைவு கொள்ளும் இந்த கனத்த நாட்களிலாவது இந்த உண்மை உணரப்படுமா?
ஈழம்ஈநியூஸ்.