நல்லெண்ணத்திற்கான நேரமல்ல இது.. மகிந்தரின் அழைப்பை கூட்டமைப்பு நிராகரிக்க வேண்டும்.

0
735

2014-ம் ஆண்டின் வரவுசெலவுத் திட்ட வாக்கெடுப்பை முன்னிட்டு சிறீலங்கா நாடாளுமன்றத்தில் மகிந்தராஜபக்ச உரையாற்றியபோது “நல்லிணக்க – நல்லெண்ண அடிப்படையில் தீர்வொன்றை எட்டுவதற்கு வருமாறு” கூட்டமைப்பிற்கு அழைப்பு விடுத்திருந்தார்.

samp-mahi
அதில் குறிப்பாக அனைத்துலக பொறிமுறையை நிராகரிக்குமாறும் அழைப்பு விடுத்திருக்கிறார். இந்த வஞ்சகம் நமக்கு புரியாததல்ல. ஆனால் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்ற போர்வையில் “அரசியல்’ செய்யும் கூட்டமைப்பு இதை எப்படி எதிர்கொள்ளப்போகிறது என்பதுதான் இங்கு பிரச்சினையே..!

மகிந்த ராஜபக்ச தற்போது அழைப்பது நாடாளுமன்ற தெரிவுக்குழுவை மையப்படுத்திய இழுத்தடிப்பு நாடகத்திற்குள்தான்.

ஆனால்இ அப்படியான நாடாளுமன்றத் தெரிவுக்குழு மூலமான பேச்சுவார்த்தைகள் மூலம் நம்பகமான தீர்வுத்திட்டம் கிடைக்கவாய்ப்பில்லை என்று கடந்த கால அனுபவங்களை சுட்டிக்காட்டி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அந்தக் குழுவில் இடம்பெற மறுத்துவருகின்றமையை நாம் அறிவோம்.

இது கூட்டமைப்பின் முடிவு அல்ல. தமிழ்த்தரப்பிலிருந்து வந்த பல நெருக்கடிகளின் காரணமாக கூட்டமைப்பு இந்த முடிவை எடுக்க தள்ளப்பட்டது என்பதே உண்மை.

நேற்று சம்பந்தர் மகிந்தரின் அழைப்பு தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ளார்.

“‘ஜனாதிபதியின் அழைப்பை கவனமாக பரிசீலிப்போம். உள்ளூரிலேயே இந்தப் பிரச்சனையை தீர்ப்பதற்கு ஆக்கபூர்வமாகவும் விசுவாசமாகவும் நாங்கள் செயற்பட்டு வந்திருக்கிறோம். இலங்கையில் 13-வது அரசியலமைப்புத் திருத்தத்தின் வரையறைக்குள் மட்டும் குறுகிநிற்காமல்இ அதனையும் தாண்டிய அரசியல் தீர்வுத் திட்டம் பற்றி ஆராய்வதற்காக நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கப்பட்டால் அதில் பங்கெடுப்பது பற்றி நிச்சயமாக பரிசீலிக்கப்படும்” என்று கூறியிருக்கிறார்.

மேலதிகமாக நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் பற்றியும் பேசியிருக்கிறார்.

இந்த 13 வது திருத்தச்சட்டம் மற்றும் எல்எல்ஆர்சி பரிந்துரைகளை தமிழ் மக்கள் தமது பிரச்சினைக்கு தீர்வாக ஏற்கவில்லை. அதை முழுமையாக நிராகரித்திருக்கிறார்கள் என்பதே உண்மை.

ஆனால் கூட்டமைப்பு மீண்டும் மீண்டும் அதைச்சுற்றியே வட்டமடிப்பதும் அதற்கு அப்பால் நகர மறுப்பதும் வருத்தத்திற்குரியது. அதை விட அபத்தம் நடாளுமன்ற தெரிவுக்குழுவிற்குள் மீண்டும் போவதாக சொல்வது.!

பிரதம நீதியரசர் பதவிநீக்கம் செய்யப்பட்ட விவகாரம் பூதாகரமாக வெடித்தபோதும் இத்தகைய நாடாளுமன்ற தெரிவுக்குழு யோசனை முன்வைக்கப்பட்டபோது “நடாளுமன்றத் தெரிவுக்குழுவில் எனக்கு நம்பிக்கையில்லை” என்று முன்னாள் நீதியரசர் சிரானி பண்டாரநாயக்க வெளியேறினார்.

இதை அமெரிக்கா உட்பட பல மேற்குலக நாடுகளும் அம்னெஸ்டி மற்றும் மனித உரிமைகள் காப்பகம் உட்பட பல மனித உரிமைகளும் வரவேற்றன. அது கூட முக்கியமல்ல, அதிகாரங்களை தன்வசம் குவித்து வைத்திருக்கும் மகிந்த அரசிடமிருந்து இந்த விடயத்தில் நீதியை பெறமுடியாது என்பதை சுட்டிக்காட்டியதுதான் இங்கு நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான கருப்பொருள்.

ஆனால் அனைத்துலக தலையீட்டை தடுத்து தமிழர்களுக்கான தீர்வை இழுத்தடிக்கும் நோக்குடன் மீண்டும் சிங்களம் விரிக்கும் வலைக்குள், அனைத்தும் தெரிந்திருந்தும் தாம் போகும் சாத்தியம் குறித்து சம்பந்தர் கூறுவது கண்டிக்கத்தக்கது. முற்றாக நிராகரிக்கப்பட வேண்டிய பொறிமுறை இது.

வசதிக்கேற்றாற்போல் இந்தியாவினதும் அமெரிக்காவினதும் நிகழ்ச்சிநிரலை காவும் சம்பந்தர் இந்த தடவை மகிந்தவின் நிகழ்ச்சிநிரலை காவமுற்படுவதுபோல் தெரிகிறது.

நாடாளுமன்ற தெரிவுக்குழுவை நிராகரிக்க பிரதம நீதியரசர் விவகாரமே எமக்கு போதும்.

நீதியரசர் சிரானி பண்டாரநாயக்காவிற்கு ஒரு நியாயமும் தமிழர்களுக்கு வேறு ஒரு நியாயமும் இந்த உலகம் கற்பிக்க முடியாது.

அடுத்து நல்லிணக்க அடிப்படையில் பேச வருமாறு அழைக்கும் சிங்களம் மே18 இன அழிப்பிற்கு பிறகு என்ன நல்லெண்ணத்தையும் நல்லிணக்கத்தையும் காட்டியிருக்கிறது? மாறாக கூட்டமைப்புத்தான் நல்;லெண்ணம், நல்லிணக்கம் என்று கூறி தமிழர்களின் அரசியல் இருப்பையே நிர்மூலமாக்கிவருகிறது.

அழித்தவர்கள் பக்கமிமிருந்துதான் நல்லிணக்கம் ஆரம்பமாக வேண்டும். அழிக்கப்பட்டவர்கள் பக்கமிருந்து அல்ல. கூட்டமைப்பு இதை முதலில் உணர வேண்டும்.

கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பிற்குள் சிக்கி தாயகத்தில் மக்கள் படும் அல்லலும் அவலமும் கூட்டமைப்புக்கு தெரியாததல்ல. இந்தக் கணம் வரை இதற்கு எந்த தீர்வும் இல்லை. அவ்வளவு ஏன், இறந்தவர்களை நினைத்து அழக்கூட அனுமதிக்காத சிங்களத்திடம் என்ன நல்லிணக்க அடிப்படையில் பேச முடியும்.?

அண்மையில் ஒரு சர்வதேச ஊடகத்தில் சுமந்திரன் அவர்கள் தாம் நல்லெண்ண அடிப்படையில் இணங்கி செயற்படுகிறோம் என்று கூறியிருந்தார். அதற்கு உதாரணமாக , வடமாகாண முதலைச்சரை மகிந்தர் முன்னிலையில் பதவியேற்க வைத்ததாக உளறிக்கொட்டினார்.

மக்களின் ஆணைக்கு மதிப்பளித்தும் அவர்களின் எண்ணப்பிரதிபலிப்பை உணர்ந்தும் ஒரு எதிர்ப்பு அரசியலின் தொடக்க புள்ளியாகவும் அந்த பதிவியேற்பை வேறு வழிமுறையில் செய்திருக்க வேண்டும். ஆனால் இங்கு எந்த நல்லிணக்கத்தையும் நல்லெண்ணத்தையும் காட்டாத சிங்களத்தின் புதைகுழிக்குள் ஒரு இனத்தை புதைப்பதற்கு இவர் சொல்லும் வியாக்கியானம்; மெய்சிலிர்க்க வைக்கிறது.

நாம் அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு இனம். எம்மை அழித்துக்கொண்டிருப்பவனுடன் பேசி தீர்வெடுப்பதென்பது சாத்தியமானதல்ல. ஒரு வெளித்தரப்பின் தலையீடே இங்கு அவசியம். அதுவும் எமக்கு சாத்தியமான முறையில் அந்த வெளித்தலையீடு இருக்குமாறு பேணுவதும் இங்கு பிரதானம்.

நிலைமை இவ்வாறிருக்க நல்லிணக்கம், நல்லெண்ணம் குறித்து எதிரி பேசுவதை நாம் கணக்கெடுப்பது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்.

நல்லெண்ணரீதியான தீர்வு இங்கு முக்கியமல்ல. களச்சூழலுக்கு அமைவான நிரந்தரதீர்வை நோக்கிய அரசியல்புரிதலுடன் பேச்சு மேசையை பகிர்ந்து கொள்வதே அவசியம்.

“நல்லெண்ணமும் நல்லிணக்கமும் பல தருணங்களில்களில் நரகத்துக்கு வழி வகுக்கிறது” என்றார் லெனின்.

கட்டமைக்கப்பட்ட இன அழிப்பிற்குள் சிக்கியுள்ள நாம் தற்போது புரிந்துகொள்ள வேண்டிய அரசியல் அடிப்படை இதுதான்.

எனவே கூட்டமைப்பு மகிந்தரின் நாடாளுமன்ற தெரிவுக்குழுவை முற்றாக நிராகரிக்க வேண்டும். அனைத்துலக விசாரணைக்கு நல்லெண்ணரீதியில் பணியுமாறு சிங்களத்திற்கு அறைகூவல் விடுக்கவேண்டும். ஏனென்றால் நல்லெண்ணத்தை அழிந்துகொண்டிருக்கும் நாம் காட்ட வேண்டிய தருணமல்ல இது. அழித்தவர்கள் காட்ட வேண்டிய தருணம் இது.

ஈழம்ஈநியூஸ்.