vignesநடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவின்றி தான் நடுநிலை வகிக்கப் போவதாக தெரிவித்துள்ளார் வட மாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் ஒரு பகுதி கீழே.

 

என்னைக் கூட்டமைப்பினர் வடமாகாண முதலமைச்சராகத் தேர்ந்தெடுத்திருப்பினும் அவர்களின் தேர்தல் களங்களில் பக்கச் சார்பாக இறங்கி அக்கட்சி அபேட்சகர்களுக்காக ஆதரித்துப் பேசுவது எனக்கழகல்ல என்பதே எனது கருத்து.

 

என்னைப் பொறுத்தவரையில் மக்கள் யார் யாரைத் தேர்ந்தெடுக்கின்றார்களோ அவர்கள் யாராக இருப்பினும் அவர்களுடன் சேர்ந்து அன்னியோன்யமாக இயங்குவது எனக்கு ஒரு பிரச்சினையல்ல. ஆனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மக்கள் நலனுக்காக அர்ப்பணிப்புடனும் ஐக்கியத்துடனும் கடமையாற்றக் கூடியவர்களாக இருக்க வேண்டும். கட்சிகளின் நலனைவிட எமது மக்களின் நலனும் நலவுரித்துக்களுமே முதன்மை பெறவேண்டும் என்பது எனது கருத்து.

 

“மக்களுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றுபவர்களை எதிர்வரும் பொதுத்தேர்தலில் எம்நாட்டில் வாழும் எமது மக்கள் தெரிவுசெய்ய வேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு. தமிழ்ப் பிரதிநிதிகளைப் பொறுத்தவரையில் வள்ளுவன் வாக்கிற்கிணங்க, நேர்மையான அரசியல், கொள்கையில் உறுதி, மக்களுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றக்கூடிய மனோபாவம், தூர நோக்குப் பார்வை, எந்தக் கட்டத்திலும் எந்தக் காரணத்திற்காகவும் விலைபோகாத மனோதிடம் கொண்ட அரசியல்வாதிகளே எமக்குத் தேவைப்படுகின்றார்கள்.

 

அத்துடன், தமிழர்களின் தனித்துவத்தை உறுதிப்படுத்தி, அவர்களின் சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்தி, எமது மக்களுக்கான உரிமையையும் நீதியையும் பெற்றுக் கொள்ளக் கூடியவர்களே எமது மண்ணுக்கும் மக்களுக்குமாக இன்றைய காலத்தில் தேவையாக இருக்கின்றார்கள். அதனை உணர்ந்து அவர்கள் தமக்குள்ள வரலாற்றுப் பொறுப்பை, தார்மீகக் கடமையைச் சரிவரச் செய்வதற்கு நான் துணையாக நிற்பேன்”.