tna-98சிறீலங்காவின் நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் மாதம் 17 ஆம் நாள் நடைபெறவுள்ளது. இந்த தேர்தல் தொடர்பில் தென்னிலங்கையில் என்றுமில்லாதவாறு கட்சிகளிடம் பிளவுகள் அதிகரித்துள்ளன. தென்னிலங்கையின் மிகப்பெரும் அரசியல் கட்சியான ஆளும் சுதந்திரக்கட்சிக்குள் பாரிய பிளவு ஏற்பட்டுள்ளது.

 

தற்போதைய அரச தலைவர் மைத்திரிபால சிறீசேனா தலைiமையில் ஒரு அணியும், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சா தலைமையிலான அணியும் ஒரு கட்சிக்குள் இருந்து இரு வேறு நோக்கங்களுக்காக அல்லது இரு வேறு பூகோள அரசியல் சக்திகளின் நோக்கங்களுக்காக போட்டியிடுகின்றனர்.

 

மகிந்த ராஜபக்சா அணியானது பலமடைந்தால் அது தென்னிலங்கையின் அரசியலையும், பூகோள அரசியல் காய்நகர்த்தல்களில் ஈடுபட்டுவரும், உலக வல்லரசு மற்றும் பிராந்திய வல்லரசுகளின் தற்போதைய நகர்வுகள் அனைத்தையும் மறுசீரமைக்கவேண்டிய கட்டத்திற்குள் தள்ளிவிடும்.

 

சுருக்கமாகக் கூறுவதானால், மகிந்தாவை போர்க்குற்றவாளியாக்க மேற்குலகமும், அதனைத் தடுப்பதற்கு சீனாவும், இந்தியாவும் கடுமையாக போராட வேண்டிய நிலை ஒன்று எற்படும். தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள இந்த முறுகல்நிலையைத் தொடர்ந்து முன்னாள் அதிபர் சந்திரிக்கா பாண்டாரநாயக்க குமாரணதுங்காவும் பிரித்தானியாவுக்கு தப்பியோடியுள்ளார்.

 

மேற்குலகத்தின் இந்த எதிர்கால நகர்வை கட்டியம் கூறுவது போலவே ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவரின் இன்iறைய கருத்து அமைந்துள்ளது.

 

ஈழத் தமிழர்களை பாதுகாக்க ஐக்கிய நாடுகள் சபை தவறிவிட்டதாக மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் செயிட் அல் ஹசைன் தெரிவித்துள்ளார்.

 

ஐக்கியநாடுகளின் பாதுகாப்பு சபையில் இடம்பெற்ற பொஸ்னிய இனப்படுகொலை தொடர்பான விவாதத்தின் போது அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

 

Ananthi_sasitharan_elilan_CIஎனவே கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்ற அரச தலைவருக்கான தேர்தலின் போது தமிழ் மக்களின் வாக்கு பலத்தால் தென்னிலகையில் ஏற்படுத்தப்பட்ட மாற்றம் என்பது அங்கு ஒரு கொதிநிலையையே எப்போதும் வைத்திருக்கும் என்பது தெளிவானது. தேர்தலின் பின்னரும் அது தொடரும் அது தொடர்பான தகவல்களை அடுத்த பத்தியில் நாம் விரிவாகப் பார்ப்போம்.

 

தற்போது இந்த தேர்தலில் தமிழ் மக்களின் நகர்வு என்னவாக இருக்க வேண்டும் என்பதைப் பார்ப்போம். சிறீலங்காவின் அரசியல் யாப்புக்குள் எம்மைக் கொண்டுசெல்லும் அரசியல் இது. எனவே இந்த தேர்தல் என்பது எமக்கான விடுதலையை பெற்றுத்தரமாட்டாது என்றபோதும், தமிழ் மக்களின் பிரதிநிதிகள், ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்ற அனைத்துலகத்தின் கூச்சல்களை புறம்தள்ளி அவர்களின் வழியில் சென்று எமது பிரச்சனையை அனைத்துலக மட்டத்திற்கு சொல்லும் ஒரு தளமாக இந்த தேர்தலை தமிழ் மக்கள் பயன்படுத்த முடியும்.

 

ஆனால் தற்போதுள்ள நிலையில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு தனக்கு சார்பானவர்களை களமிறக்கி கடந்த ஐந்து வருடங்களாக முடக்க நிலையில் வைத்திருந்த தமிழீழ அரசியலை தொடர்ந்து தக்கவைக்க முற்பட்டுள்ளது.

 

2010 ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலின்போதே இந்தியாவின் நிகழ்ச்சி நிரலின் கீழ் தொழிற்படும் தமிழத் தேசியக் கூட்டமைப்பு புறக்கணிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை நாம் வலுவாக முன்வைத்திருந்தோம்.

 

அன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் ஓரங்கட்டப்பட்ட தமிழ் தேசியத்திற்கு ஆதரவானவர்களை நோக்கி நாம் கை காண்பித்திருந்தோம். யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பில் புலம்பெயர் தமிழ் சமூகம் இரு அணியாக பிளவுற்றிருந்தது.

 

தமிழ் தேசியக்கூட்டமைப்பை அன்று புறக்கணிப்பதன் மூலம் இந்தியாவின் அபிலாசைகளை முற்றாக முறியடிப்பதற்காக தாயகத்தில் உள்ள உங்களின் உறவுகளுடன் பேசுங்கள், புலம்பெயர் நாட்டில் உள்ள தமிழ் மக்களில் ஒருவர் தாயகத்தில் உள்ள ஐந்து உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு நிலமையை விளக்குவாராக இருந்தால் நாம் அடுத்த கட்டத்திற்கு நகரமுடியும் என்பதே அன்று எனது வாதமாக இருந்தது.

 

david-cameron-300x225அதனைத்தான் பிரித்தானியாவின் பிரதமர் டேவிட் கமரனும் கடந்த வருடம் தெரிவித்திருந்தார். ஸ்கொட்லாந்து மேற்கொண்ட தனிநாட்டுக்கான வாக்கெடுப்பை முறியடிப்பதற்காக ஒவ்வொரு ஆங்கிலேய குடிமகனும் ஸ்கொட்லாந்தில் உள்ள தமது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பேசவேண்டும் என அவர் அன்று கூறிய கருத்து வெற்றி பெற்றிருந்தது.

 

எனினும் 2010 ஆம் ஆண்டு நாம் தோல்வி கண்டிருந்தோம். 2010 ஆம் ஆண்டு தேர்தல் மூலம் தெரிவான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 14 உறுப்பினர்களும், தேசியப்பட்டியல் உறுப்பினரும் கடந்த ஐந்து வருடங்களில் எமது விடுதலைக்கு ஆற்றிய பங்களிப்பு என்ன என்பதை நாம் ஒவ்வொருவரும் சிந்நதித்துப் பார்க்க வேண்டும்.

 

சிங்களக் குடியேற்றமாக இருந்தாலும் சரி, நில அபகரிப்பாக இருந்தாலும் சரி, இராணுவப்பிரசன்னமாக இருந்தாலும் சரி எல்லாம் சிங்களத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்பவே இடம்பெற்று வருகின்றன. அதனைத் தடுக்கவோ அல்லது அது தொடர்பில் அனைத்துலக இராஜதந்திரிகளுடன் பேசுவதற்கோ கூட்டமைப்புக்கு நேரமில்லை.

 

எனவே கடந்த ஐந்து வருடங்கள் என்பது எமது விடுதலைப்போராட்ட காலத்தில் தாயகத்தில் வீணடிக்கப்பட்ட காலமாகவே கருதப்படவேண்டும். இது மேலும் ஐந்து வருடங்களுக்கு தொடரப்படவேண்டுமா என்பதே தற்போதைய கேள்வி.

 

தமிழ்த் தேசியத்திற்கு ஆதரவானவர்களுக்கு இடமளிக்க கூட்டமைப்பு முன்வரவில்லை, அதனை இந்தியாவும் விடாது. எனவே 15 இற்கு மேற்பட்ட நாடாளுமன்றக் கதிரைகளில் உணர்வற்ற உடலங்களை இருத்துவதை தவிர்ப்பதே எமக்கு நல்லது.

 

புலம்பெயர் சமூகமும் அதனைத்தான் விரும்புகின்றது. ஓரு மாற்றம் வேண்டும் அதற்காகவே தமிழத் தேசியக் கூட்டமைப்பை ஒரு கட்சியாக பதிவு செய்து அதற்குள் தேசிய நலன்சார்ந்த புதியவர்களை உள்வாங்கும் முயற்சிகளை முன்னர் முன்வைத்திருந்தோம். ஆனால் தமிழரசுக்கட்சியினர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற நாமத்தையும் துறக்க முன்வரைவில்லை.

 

ஏனெனில் விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்ட இந்த அமைப்புக்கு என்றும் தமிழ் மக்களின் ஆதரவு உண்டு என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள். கடந்த முறையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற நாம் தான் அவர்களுக்கு வாக்குபலத்தை வாரி வழங்கியிருந்தது. இதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டு பின்னர் சிங்கள அரசின் பக்கம் தாவிய பியசேனாவும் தெரிவித்திருந்தார்.

 

LTTE-Intervஅவர் கூறியது ஒன்று தான் அதாவது தமிழரசுக்கட்சியினர் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற நாமத்தை விடுத்து அதற்கு வெளியில் நின்று போட்டியிட்டு வெற்றியீட்டிக் காட்டுவார்களா என கேள்வி எழுப்பியிருந்தார்.

 

ஆனால் ஐந்து வருடம் சென்றும் அவர்கள் அதனை கைவிட முன்வரவில்லை, விடுதலைப்புலிகளுக்கு ஆதரவானவர்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இடமில்லை என கூறும் இவர்கள் விடுதலைப் புலிகளால் இடப்பட்ட நாமத்தை கைவிட மட்டும் விரும்பவில்லை. இது தான் அரசியல்.

 

சரி தற்போது தமிழ் மக்களின் முன் உள்ள தெரிவுகள் என்ன?

 

தமிழத் தேசியக் கூட்டமைப்பில் இடமில்லை என்றால் தமிழ்த் தேசியத்திற்கு ஆதரவானவர்கள் சுயேட்சையாக களமிறங்க வேண்டும். தேர்தலில் வெற்றியீட்டிய பின்னர் அவர்கள் தமக்கான கூட்டணியை அமைத்துக்கொள்ளலாம்.

 

இந்தியாவின் நிகழ்ச்சி நிரல் முறியடிக்கப்படவேண்டும்.

 

சிறீலங்கா அரசின் ஒட்டுக்குழுக்கள் முற்றாக அரசியல் அனாதைகளாக்கப்பட வேண்டும். குறிப்பாக தீவகத்தில் ஒரு மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும்.

 

தென்னில்கையின் அரசியல் மிகவும் குழப்பமான நிலையில் உள்ள இந்த நிலையில் தான் தமிழ் மக்களின் அரசியல் அடித்தளம் உறுதியாக அமைக்கப்பட வேண்டும்.

 

இது தொடர்பான தீர்க்கமான முடிவுகளை புலம்பெயர் தமிழ் சமூகம் தாயகத்தின் தமது உறவுகளுடன் இணைந்து விரைவாக எடுக்கவேண்டிய காலமிது.

 

ஈழம் ஈ நியூஸ் இற்காக படைத்துறை மற்றும் அரசியல் ஆய்வாளர் திரு அருஷ் .