அன்ரனிற்றா ஒரு சமூகப் பணியாளர். வலைஞர்மடம் முள்ளிவாய்க்காலைச் சேர்ந்தவர். சுனாமி ஏற்பட்ட போதும் முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் போதும் இவர் காட்டிய அர்ப்பணிப்பான சேவை மனங்கொள்ள வைக்கிறது.

முள்ளிவாய்க்காலில் இவருக்கு தலையில் சன்னம் துளைத்துச் சென்றது. இருப்பினும் அதிட்டவசமாக உயிர் தப்பினார். இவருக்கு காயம் ஏற்பட்ட அதிர்ச்சினால் கணவர் நாயகசீலன் மனம் பாதிக்கப்பட்டுள்ளார். நாயகசீலன் முல்லைத்தீவு தெங்கு பனை அபிவிருத்திச் சங்கத்தில் வேலைக்குச் செல்கிறார்.

வேலை நிரந்தரம் இல்லை. ரூ.7300 வருமானம் கிடைக்கிறது. அன்ரனிற்றா 2007 இலிருந்து இன்றுவரை புதுக்குடியிருப்பு வைத்தியசாலை சமூக உளநலப் பிரிவில் சமூக ஆதரவுப் பணியாளராக கடமையாற்றுகிறார்.

antanita
நிரந்தர வேலை இல்லை. மாதம் ரூ. 8000 கிடைக்கிறது. இரண்டு பெண் குழந்தைகள். மூத்த மகள் பிறைசிகா 10 ஆம் தரமும் இளையமகள் திவ்விகா 6 ஆம் தரமும் கற்கின்றனர். இவர்கள் பொக்கணை அ.த.க.வித்தியாலயத்தில் கல்வி கற்கின்றனர். நாயகசீலனின் தயாரும் இவர்களுடனே வாழ்கின்றார்.

3 மாதத்திலே நாயகசீலன் தந்தை இழந்தார். நாயகசீலனுக்கு உறவினர்கள் யாரும் இல்லை. அன்ரனிற்றாவின் தாயாரரும் தம்பியும் யுத்தத்தால் இறந்து போயினர். இன்னொரு தம்பி 2009 இல் காணமல் போய்விட்டார். காணமல் போன தம்பியைத் தேட எந்த வழியும் அறியாமல் தவிக்கின்றார்.

நேற்று – 15.08.2014 பிள்ளைகளின் உணவுக்காக வழிதெரியாது தவித்தார்கள். இவர்களது வருமானம் போதாது. இன்று அன்ரனிற்றா கடன்பட்டு அரசி வாங்கி சமைத்துள்ளார்.

அன்ரனிற்றா பிள்ளைகளின் கல்வி குறித்தே அதிகம் கவலை கொண்டுள்ளார். பிள்ளைகள் கணிதம்‚ ஆங்கிலம்‚ விஞ்ஞானத்தில் குறைந்த புள்ளிகள் பெறுவது குறித்து கவலை கொண்டுள்ளார். பாடசாலையில் போதிய ஆசிரியர்கள் இல்லை. தனியார் கல்வி நிலையத்துக்கு அனுப்ப வசதியில்லை. அன்ரனிற்றா மட்டுமல்ல இப்பிரதேச பிள்ளைகள் அனைவரின் எதிர்காலமும் கல்வியிலேயே தங்கியுள்ளது.

வலைஞர் மடத்தில் உள்ள பிள்ளைகள் புதுக்குடியிருப்புக்குச் சென்று கல்வி கற்க போக்குவரத்து வசதியில்லை. பிள்ளைகளைத் தனியாக வெளியே அனுப்புவது பாதுகாப்பில்லை.

வலைஞர் மடத்திலுள்ள பிள்ளைகளின் கல்விக்காக தன்னார்வ அமைப்புக்கள் உதவினால் இப்பிள்ளைகளின் எதிர்காலம் நம்பிக்கை உடையதாகும். இக்கிராமத்துப் பிள்ளைகளக்கு வாரத்தில் ஒருநாளாவது வகுப்புக்கள் எடுக்க ஆசிரியர்களை ஒழுங்குபடுத்தினால் தன்னால் முடிந்த உதவி செய்வதாகக் கூறுகிறார் அன்ரனிற்றா. இவர் வலைஞன் மட மாதர் சங்கப் பொருளாளர்.

கணவனது தாயாரின் உதவியுடன் வீட்டிலே விவசாயம் செய்வதற்காக அன்ரனிற்றா ரூபா 65000 கடன்பட்டு கிணறு ஒன்று வெட்டியுள்ளார். இன்று இக்கடனை அடைப்பதற்கான வழிதெரியாது தவிக்கின்றார்.

இக்குடும்பத்திற்கு நீர் இறைக்கும் இயந்தரம் ஒன்று கிடைக்குமெனில் மரக்கறி பயிரிட்டு வாழ்கையை கொண்டு நடத்துவதற்கு உதவியாக இருக்கும். இவ்வளவு நாள்களும் வயோதிகத் தாய் – அன்ரனிற்றாவின் மாமி தொலைவில் உள்ள கிணற்றிலிருந்து குடத்திலே தண்ணீர் சுமந்து பயிர்களுக்கு ஊற்றி வந்தார்.
விவசாயத்துக்கு உதவுவதன் மூலம் இக்குடும்பம் தலைநிமிர்ந்து வாழும்.

தமது உதவிகளை மேற்கொள்ள விரும்புவோர் பின்வரும் மின்னஞ்சல் மூலம் தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்: eelamenews@yahoo.com
16.8.14