fast-senkalசெங்கல்பட்டில் உள்ள சிறப்பு முகாமில் பல ஆண்டுகளாக அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களை திறந்த வெளி முகாமிற்கு மாற்றுமாறு கோரி ஈழத்தமிழ் அகதிகள் 10 பேர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

செங்கல்பட்டில் உள்ள சிறப்பு முகாமில் பல ஆண்டுகளாக ஈழத் தமிழர்கள் அடைத்து வைக்கப்படுள்ளனர். இதில் பலர் மீது வழக்குகள் கூட இல்லை. இருந்தும் இங்குள்ள தமிழர்களை திறந்த வெளி முகாமிற்கு மாற்றாமல் வெளிநாட்டு வாழ் அகதிகள் சட்டத்திற்கு புறம்பாக இவர்கள் சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சுமார் 5 நபர்களை விடுதலை செய்யவதாகக் கூறி, மேலும் 10 நபர்களை இங்கு கொண்டு சிறை வைக்கிறது கியூ பிரிவு காவல்துறை. இதனால் இங்கு இருக்கும் ஈழத் தமிழர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகிறது.

தற்போது உள்ள 52 அகதிகளில் பலர் ஏற்கனவே பல முறை உண்ணா நிலை போராட்டம் செய்துள்ளனர். சிலருக்கு விடுதலை உத்தரவும் வந்துள்ளது. இருந்தும் காவல்துறை இவர்களை விடுவிக்காமல் அலைக்கழித்துக் கொண்டிருக்கிறது. அதனால் இம்முறை முகாம்வாசிகள் முடிவாக ஒரு சாகும் வரை பட்டினிப் போராட்டம் செய்வதாக அறிவித்து போராட்டத்தில் குதித்து உள்ளனர். தங்களை திறந்த வெளி முகாமிற்கு மாற்றும் படி கோரிக்கை வைத்துள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முகம்வாசிகளின் பெயர்கள் வருமாறு,

காந்தி மோகன், காண்டீபன், பரமேஸ்வரன், ஜான்சன், சுமன், ரமேஷ், சசிதரன், ஈஸ்வரன், பாலகுமார், காளிதாஸ் ஆகியோர்கள் நேற்று (21.08.2013) காலை முதல் போராட்டத்தை தொடங்கினர். நாளை முதல் மேலும் பலரும் இப்போராட்டத்தில் இணையவுள்ளதாக தெரிவித்தனர்.

முகாம்களில் வாழும் ஈழத் தமிழர்களின் துயரம் முடிவில்லாமல் தொடர் கதையாக இருக்கிறது. எத்தனையோ மனித உரிமை ஆர்வலர்கள், கட்சிகள், அமைப்புகள் இவர்களுக்காக குரல் கொடுத்தாலும், அரசு மட்டும் இவர்களின் துன்பத்தை கண்டும் காணாது போல் உள்ளது. இந்த முறையேனும் அரசு இவர்களின் குரலுக்கு செவி சாய்க்க வேண்டும் என மனித உரிமை ஆர்வலர்கள் கருதுகின்றனர். வெல்லும் வரை செல்வோம்.