நான் மருத்துவமனையில் சேர்கிறேன் என்று இணையத்தில் செய்தி வெளியிட்டுவிட்டு
ராகவா லாரன்ஸ் வெளியேறுகிறார்..

 

முதல்வருக்கு நன்றி என்று கடிதம் கொடுத்துவிட்டு ஆர்.ஜே.பாலாஜி வெளியேறுகிறார்..

 

கொடிய மிதிக்கறாங்க, கோக்கைத் திட்டறாங்க என்று திகிலடைந்து ஆதி வெளியேறுகிறார்

 

எல்லாம் நல்லபடியா முடிஞ்சுது.. மூணு மாசம் தள்ளி வைப்போம் என்று
அந்தப் பெரிய மனிதர்களும் வெளியேறுகிறார்கள்..

 

எல்லாம் நேற்று மாலை ஓரிரு மணி நேரத்தில் நடக்கிறது..

 

உள்ளே இருந்த தன் பிள்ளைகளை வெளியேற்றிய அரசு இன்று நம் பிள்ளைகளை அடிக்கிறது..

 

இவர்கள் சொல்கிறார்கள்
‘மாணவர்களுக்குள் அந்நியர்கள் ஊடுருவிவிட்டார்கள்..அதனால் வெளியேறினோம்…’

 

ஆறு நாட்கள் மாணவர்களின் போராட்டக்களத்தில்
உள்ளே இருந்த இந்த சமரச சன்மார்க்கவாதிகள் எந்தக்கல்லூரிகளில் படிக்கிறார்கள்…

 

மாணவர்களைத் தீவீரவாதிகளாக்க உங்கள் எஜமானர்கள் சொல்லிக் கொடுத்த கதைகளைச் சொல்லும் நல்லவர்களே..

 

‘அடிக்கப்போறாங்க ஓடிருங்க.. ‘என்று உங்களுக்குத் தெரிந்த அந்த உண்மையை
ஆறு நாட்கள் உங்களோடு உண்டு உறங்கிய

 

எங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லியிருக்கலாமே..

 

நன்றி: கவிஞர் அறிவுமதி


 

போராட்டத்தின் முக்கிய நோக்கமான அவசரச்சட்டம் நிறைவேறி விட்டது. இந்த கணத்தில் இதை நிகழ்த்தி விட்டு போராட்டம் செய்தவர்களிடம் முதல்வரோ, அமைச்சர்களோ பேசியிருந்தால் அவர்கள் அமைதியாக கலைந்திருப்பார்கள். அந்தப் போராட்டத்தின் வெற்றியை அவர்கள் கொண்டாடி இருப்பார்கள். ஆனால் அதை செய்யவிடாது அரசு திட்டம் போட்டு தடுத்து விட்டது.

 

ரஜினிகாந்த், ஆர்.ஜே.பாலாஜி வகையறாக்கள் சொல்வது போல… மக்கள் போலிசை தாக்கவில்லை. போலீஸ் தான் மக்களை வெறிகொண்டு தாக்கினார்கள். ‘’அடி வாங்குறவனை பார்த்தா மாணவன் மாதிரியே இல்ல. பாட்டி எல்லாம் காலேஜ்ல சேர்ந்துட்டாங்களா?’’ என்கிற நக்கலை பார்த்து கொலைவெறி ஆனேன். கடந்த ஒரு வாரமாக போராட்ட களத்தில் இருந்தது மாணவர்கள் மட்டும் இல்லை. குடும்பம், குடும்பமாக குழந்தைகள், பெண்கள், வயதானவர்கள் எல்லோரும் தானே இருந்தார்கள்.

 

இன்று காலை போலீஸால் மெரினாவில் இருந்து வெளியேற்றப்பட்ட பெண் தன் தோளில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தைக்கு தேசியக் கொடியை போர்த்தி விட்டிருந்தார், போலீஸ் லத்தியில் இருந்து தப்பிக்க… இங்கிருப்பவர்கள் குறிப்பிட்ட கட்சிக்காரர்கள், விஷமிகள் எல்லாம் இப்படி வந்து உட்கார்ந்திருக்க மாட்டார்கள்.

 

இன்றைக்கு போராட்ட களத்தில் போலீஸ் அட்டூழியம் நடக்கிறது என்று அறிந்ததுமே.. மக்கள் தன்னெழுச்சியாக போராட்டங்களில் ஈடுபட்டார்கள். கோடம்பாக்கத்தீல் இருந்து கடற்கரை நோக்கி செல்ல முயன்று, எங்கும் டிராஃபிக் ஜாம் ஆகி எங்கெங்கோ சுற்றித் திரிந்தோம். பேருந்துகளை மறித்து சாலைகளில் உட்கார்ந்து போலீஸ் அராஜகத்திற்கு நியாயம் கேட்டு உட்கார்ந்த இளைஞர்கள், பெண்கள் என அனைவருமே ஆங்காங்கே உள்ள சேரிப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தான்… கடந்த ஒருவாரமாக போராட்ட களத்தில் நிற்கிறேன் என ஃபேஸ்புக்கில் செல்ஃபி போட்டவர்கள் அல்ல.. கம்ப்யூட்டர் முன்னால் மட்டுமே உட்கார்ந்திருப்பவர்களுக்கு.. நீங்கள் நினைப்பதை விட சென்னை இப்போது மிக மோசமாய் இருக்கிறது. யாரும், எங்கும் செல்ல முடியாது. மொத்த சென்னையும் அப்படியே ஜாம் ஆகி நிற்கிறது.

 

இன்றைக்கும் போராட்டம் தொடருமானால், நிலைமை இப்படித்தான் இருக்கும் என்பது நேற்றே ஊகிக்க முடிந்தது தான். அரசு வாக்குறுதி அளித்தபோதே மகிழ்ச்சியாக கலைந்து சென்றிருக்கலாம். ‘’டெல்லியை அலறவிடு, மோடியை விடாத, பன்னீரை விடாத’’ என்று சொன்னவர்கள் இன்று அடிவாங்கவில்லை. அவர்களை நம்பிய அப்பாவிகள் தான் அடிவாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

 

’’ஜல்லிக்கட்டு நடக்க வேண்டும்’’ என்ற கோரிக்கையோடு உட்கார்ந்தவர்கள், அது நிறைவேறப்போகும் பட்சத்தில் எழுந்து செல்வதே முறை. ஒரு போராட்டத்தில் தன் இன அரசியலை, உலக அரசியலை கற்றுக் கொள்ளலாம், ஆனால் எல்லா வரலாற்றையும் நான்கே நாட்களில் திருத்தி எழுதுவேன் என உட்கார்ந்தால் அது சரியானதாக இருக்க முடியாது.

 

ஜல்லிக்கட்டு விஷயத்தில் இப்போதைக்கு இதுதான் சாத்தியம் என சம்பந்தப்பட்டவர்கள், நீதி அரசர்கள் சொன்ன பிறகு அதை ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும். கார்த்திகேய சேனாபதி ஒரு கைக்கூலி என ஒரே நிமிடத்தில் எப்படி கொச்சைப்படுத்த முடிந்தது? போராட்டத்தை இதற்கு மேல் தொடரத் தேவையில்லை என சொன்ன இளங்கோ கல்லாணையை மோடி கைக்கூலி என்று சொன்ன கொடுமையை எல்லாம் வாசித்தேன். அவரது டைம்லைனை கொஞ்சம் பின்னுக்குத் தள்ளினாலே பி.ஜே.பி.க்கு எதிரான அவரது பதிவுகளை பார்க்க முடியும்.

 

இனி எப்போதும் இதேபோல் மாணவர்கள் ஒன்று சேரக்கூடாது என்பதில் அரசு மிகத் தெளிவாக இருக்கிறது. நேற்றே இந்த போராட்டம் முடிவுக்கு வந்திருந்தால் இத்தனை ரத்தக்களறி இல்லை. ஏனெனில் ஒருவாரமாக நடந்தது மற்றவர் பொறாமைப்படும் மகத்தான, அமைதியான போராட்டம். பெற்றோர் தங்கள் பிள்ளைகளை போராட்டத்திற்கு அனுப்பிவிட்டு வீட்டில் நிம்மதியாக இருந்தார்கள். பெண்கள் தங்கள் வரலாற்றில் முதல்முறையாக பொது இடங்களில் தங்கினார்கள். சதிநாளான இன்று அத்தனை பெருமைகளையும் அரசு ஒரேநாளில் துடைத்தெறிந்தது. இனி இப்படி ஒரு போராட்டத்திற்கு பிள்ளைகளை அனுப்ப பெற்றோர் தயங்குவார்கள். இதைத்தான் அரசு எதிர்பார்த்தது.

 

ஆயினும்.. இது மாணவர்களுக்கு மகத்தான வெற்றிதான். தங்களால் போராடி வெல்ல முடியும் என அவர்கள் அறிந்திருக்கிறார்கள். கூடவே அரசின் சூழ்ச்சி எப்படி இருக்கும் என்பதையும்… இனிவரும் காலங்களில் அந்த சூழ்ச்சியை வென்றெடுக்கும் சக்தியை அவர்களது வாசிப்பு, தேடல் அவர்களுக்கு அளிக்கட்டும். உணர்ச்சிவசப்பட்டு உசுப்பேற்றி விட்டவர்கள் தங்களை இன்று தனித்து விட்ட வரலாற்றை அவர்கள் மறக்காதிருக்கட்டும். தங்களது அடிகளை வாங்கி காத்து நின்ற மீனவ மக்களை, தங்களுக்காக நகர் எங்கும் குரல் கொடுத்த சேரி மக்களை இன்னும் நெருக்கமாய் புரிந்து கொள்ளட்டும். நிஜமான அரசியல் அங்கே ஆரம்பிக்கட்டும்…. மீண்டும் ஒருமுறை வாழ்த்துகளும், நன்றிகளும்!

 

பிரியா தம்பி

—-

 

இது ஜல்லிக்கட்டுக்காக மட்டும் நடந்த போராட்டம் அல்ல… இதுவரை கால அடக்குமுறைகளுக்கும் புறக்கணிப்புக்களுக்கும் வஞ்சனைகளுக்கும் எதிரான ஒரு பொறியாக ஜல்லிக்கட்டை மாணவர்களும்-
மக்களும் பற்றிக் கொண்டதே உண்மை.

 

இப்போது அற வழியில் பேராடியவர்கள் மீது மீண்டும் அதே அடக்குமுறையையும் வஞ்சனையையும் கருவிகளாக்குகிறது இந்தியம். அவர்கள் இன்று கலைந்து போகலாம்.

 

ஆனால் வரலாறு மீண்டும் திரும்பும். இந்த கோபமும், வன்மமும், பழியும் ஒரு கூட்டு உளவியலாக திரண்டு பிறிதொரு நாளில் தற்போதையும் விட பன்மடங்கு வீரியத்துடன் ஒரு பூகம்பமாக வெடிக்கும். அப்போது அடக்குமுறையபளர்களின் ஆயுதங்கள் செயலிழந்துபோகும் அல்லது அந்த ஆயுதங்கள் மக்களின் கைகளில் இருக்கும்.

 

வரலாற்றின் இயங்கியல் பொய்த்ததாக இதுவரை எந்த தடயமும் இல்லை.

 

அடக்குமுறையாளர்களின் வழக்கொழிந்து போன இந்த வழிமுறைகளை எதிர்கொள்வது குறித்த ‘நந்த்திக்கடல் கோட்பாடுகள்’ ஏற்கனவே இந்த இனத்திற்கு அறிமுகம் செய்யபப்ட்டுவிட்டது.

 

அதை இனி உலகின் ஒடுக்கப்பட்ட இனங்கள் எல்லாம் கைப்பற்றி கொள்ளும்.

 

பிரபாகரனியத்தை உட்செரித்த ஒரு இனத்தின் வரலாற்று கோபத்தை எதிர்கொள்ள ஆடக்குமுறையாளர்கள் தற்போதே தம்மை தயார் செய்வது நலல்து. – அலல்து தற்போதே மக்களிடம் சரணடைந்து விடுங்கள்.

 

தமிழினம் தன் சொநத வரலாற்றை தானே எழுதும்.. அதற்கான சாட்சியம்தான் கடந்த 5 நாட்கள்.

 

ஆய்வாளரும் அரசியற் செயற்பாட்டாளருமான பரணி கிருஸ்ணரஜனி.

———–

 

நன்றி மீனவ காவல் தெய்வங்களே…

 

இன்று மெரினாவில் போராடுபவர்களுக்கு ஆதரவாக எக்ஸ்பிரஸ் அவன்யூ அருகில் மக்களை திரட்டி போராடிக்கொண்டிருந்தோம். அங்கே போராட்டம் கலைக்கப்பட்டதும். அங்கிருந்து பல தடைகளை தாண்டி சாந்தோம் அருகே கடற்கரையை அடைந்தேன். அங்கேயும் காவல்துறையினர் வழியை மறித்து உள்ளே செல்லவிடாமல் தடுத்தனர். அங்கிருந்த மீனவர் ஒருவர் த்தா எம் புள்ள என் வீட்டுக்கு வந்திருக்கான் நீ யாரு தடுக்குறதுக்கு என் கைய பிடிச்சி உள்ள கூட்டி வந்தாரு.

 

போராட்டக்காரர்கள் தாக்கப்படுவதை தொலைக்காட்சியில் பார்த்துவிட்டு மீனவ கிராமங்களை சேர்ந்த பெண்கள். சாரை சாரையாக போராட்ட இடத்திற்கு வந்த பின்னே தான் காவல்துறையின் அடக்குமுறை குறைந்தது என்றால் மிகையாகாது.

 

அடுத்தது போராட்டம் நடைபெற்ற இடம் ஏவல் துறையினரால் முடக்கப்பட்டிருந்த போது. கடல் வழியாக தொடர்ச்சியாக உயிரை பணயம் வைத்து உணவுப்பொருட்களை கொண்டுவந்துக்கொண்டே இருந்தனர். இன்று கடல் அலை வேறு மிக மோசமாக இருந்த நிலையிலும் சளைக்காமல் வந்துகொண்டே இருந்தனர்.

 

உணவு இந்த வழியாக வருவதை தடுக்க கடலோர காவல் படையினரின் படகுகள் ரோந்து வந்து மீனவர்களின் படகுகளை வழிமறித்தனர். ஆனாலும் மீனவர்கள் எதற்கும் அஞ்சவில்லை.

 

இன்றைய போராட்டம் அவர்களிலாமல் சாத்தியமே இல்லை. இந்த போராட்டத்தின் வெற்றியில் அவர்களது பங்களிப்பு அளப்பரியது.

 

நன்றி மீனவ காவல் தெய்வங்களே…

 

கார்த்திக் கணேசன்.


 

தமிழகத்தில் இன்றைக்கு ஏற்பட்டுள்ள மாபெரும் புரட்சி, மோடி அரசுக்கு மாத்திரமல்ல, இலங்கை அரசுக்கும் அச்சம் ஊட்டும் புரட்சிதான். ஏனெனில் தமிழக மக்கள் போராடுவது ஜல்லிகட்டுக்காக மாத்திரமல்ல. அவர்கள் தங்கள் பண்பாட்டு உரிமைக்காக, இன மரபு உரிமைக்காக, சுய மரியாதைக்காக போராடுகின்றனர்.

 

கவிஞர் தீபச்செல்வன்


 

ஒரு கோடி பீரங்கிகள் முன்னின்றாலும் அஞ்சாமல் போராடும் தாயவர்கள் ஒவ்வொருவரும் ஓராயிரம் அணு குண்டுகளுக்கு சமம்!

 

ஒவ்வொரு தாயும் ஒரு தீப்பந்தம்.

 

அத்தனை அன்னையரும் பொங்கி எழுந்தால் இந்தியாவின் மொத்த காவல்துறையையும் குவித்தாலும் தாங்க மாட்டார்கள்.

 

அன்று அன்னை பூபதியால் முகத்தில் சேறு பூசப்பட்ட இந்திய இராணுவத்தின் அவமானம் மறந்து போயிற்றா?

 

இன்றளவும் இந்தியாவுக்கு அகிம்சை வழியில் போராடி இந்தியா ஏறெடுத்துப் பாராமல் உயிர் நீத்த அன்னை பூபதியின் வீர மரணம் ஒரு வரலாற்று அழுக்கு.

 

அன்று ஈழத்து தாயிடம் தோற்றார்கள் இன்று தமிழகத்தின் தாய்மாரிடம் அந்நியப்படுகிறது இந்தியா.

செந்தமிழினி பிரபாகரன்

———–

 

இப்ப எங்கையா தமிழ் நாட்டு அரசியல் வாதிகள்? இன உணவாளர்கள்?கண்களுக்கு முன்னால அநியாயம் நடக்கிறது அதை தட்டிக் கேட்க எவருக்கும் துணிவு இல்லையா? இதுவா ஜனநாய நாடு ?இங்க சுத்த வீரம் உள்ளவர்கள் யாரவது இருக்கின்றீகளா? வாயால் வீரம் பேசினால் மட்டும் போதாது. எம்மினத்தவனே பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காவ(லிகள்)ல்துறையே பெண்ணின் மானத்தை விற்கிறான். எங்கே போச்சு தமிழன் மானம் வீரம்? எத்தனை பாடங்களைக் கற்றாலும் கற்றுக் கொடுத்தாலும்

 

எங்கே திருந்துவது? இந்த ரஜனிக்கும், விஜய்க்கும், அஜித்துக்கும்திரிசா, நயந்தார,அனுஸ்கா போன்றகூத்தாடிகளுக்கு போய் கூச்சலிட்டு கைதட்டுங்கள்.ஏனெனில் தளபதியும் தலைவர்களும் அவர்கள்தானே. படத்தில்தானே அவர்கள் தைரியம். சண்டைகள். அதைப் பார்த்து விசில் அடிக்கவும்,கத்தவும்தான் பழக்கப்பட்டாச்சு.என்னத்த சொல்வது? கொதிக்கிறது மனசு. கொஞ்சமாவது சிந்தியுங்கள். சுயபுத்தியோடு செயல்படுங்கள்.வந்தவனெல்லாரையும் வாழ வைத்தீர்கள் அதில் எவராவது

 

நன்றிக் கடனுடன் எதாவது செய்திருக்கின்றார்களா? நல்ல முடிவெடுங்கள் சிந்தித்து.! (எழுதுவதற்க்கு நிறைய இருக்கு மனசு வரல்ல)

 

-சந்திரிகா-
23-01-17

 

ஈழத்தில் ஏன் விடுதலைப்புலிகள் உருவாகினார்கள் என்ற உங்கள் கேள்விகளுக்கு இன்று இந்திய அரசு பதில் சொல்லி உள்ளது. படங்களை பாருங்கள் இதற்காகத்தான்.

 

உரிமையை அமைதி வழியில் கேட்டோம் சிங்களவனிடம் இப்படி தான் எமக்கும் செய்தார்கள்.

 

இன்று தமிழக மக்களுக்கு இந்தியன் செய்திருக்கின்றான் விரைவில் விதைத்ததை அறுவடை செய்வார்கள் என்று நான் நினைக்கின்றேன்.