சின்னண்ணை. (சொந்தப் பெயர், சிவபுண்ணியம்) இந்தப் பெயரை வன்னியில் வாழ்ந்தவர்கள் அவ்வளவு இலகுவாக மறந்திருக்கமாட்டார்கள். அதுவும் விவசாயிகள் சிறப்பாக, வயல்செய்பவர்கள் மத்தியில் பிரபலமாக இருந்த போராளி ஒருவரின் பெயர்தான் சின்னண்ணை.

 

 

Sinnannai2விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த போராளிகளுள் ஒருவர். பொதுவுடமை எண்ணமுடையவர். அதனால்தான் என்னவோ, விடுதலைப் புலிகளின் பொதுசன நிர்வாகத்துக்குள் வரும் பொருண்மிய மேம்பாட்டுப் பிரிவின் பொறுப்பாளராக சின்னண்ணை செயற்பட்டு வந்தார்.

 

 

வன்னி மீது பொருளாதாரத் தடை நடைமுறையில் இருந்த காலத்தில் புதிய வகை இயற்கை உரங்களைக் கண்டுபிடிப்பதிலும், காலம் குறைவான நெல்லினங்களை அறிமுகம் செய்வதிலும், நெற்செய்கையோடு சிறுதானிய விதைப்புக்களை ஊக்கப்படுத்துவதிலும், விவசாயிகளுக்கான கடன் உதவிகளை வழங்குவதிலும் சின்னண்ணை எடுத்துக்கொண்ட சிரத்தை வன்னியின் விவசாயிகள் மனதில் இப்போதும் நினைவில் இருக்கும்.

 

 

போர் முடிந்த கையுடன், விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகள், பொறுப்பாளர்கள் அனைவர் பற்றியும் மக்கள் விசாரித்தனர். ஆனால் பொருளாதாரத்தின் முக்கிய கர்த்தாவாகவே செயற்பட்ட சின்னண்ணையை யாரும் தேடினீர்களா?

 

புலிகளின் முக்கியஸ்தர்கள் எல்லோரும் போலவே, சின்னண்ணையும் சரணடைந்து காணாமல் போய்விட்டார்.

 

“மே, 14 ஆம் திகதி, ஒரு வெள்ளிக்கிழம எண்டு நினைக்கிறன், செரியாக நினைவில்லை. இவர் வந்து அழுதவர். என்ர வாழ்நாளில இவர் அப்பிடிக் கலங்கி நிண்டத காணேல்ல. என்ன எண்டு கேட்டன்.

 

பிள்ளையள கவனமா பார். நீ ஆமியிட்ட போ. நான் வரேல்ல எண்டார். நாங்கள் எல்லாரும் பங்கருக்குள்ள இருந்து அழுதம். அவர் பங்கருக்கு வெளியால போய், பக்கத்து வீட்டு அண்ணையோட ஏதோ கதைச்சவர்.

 

நடேசண்ணை, புலித்தேவண்ணையாக்கள் உள்ள போயிற்றினமாம். சுட்டாச்சாம் எண்டு அந்த அண்ணை எங்களிட்ட வந்து சொன்னார்.

 

திருப்பி கொஞ்ச நேரத்தால இவர் (சின்னண்ணை) எங்களிட்ட வந்தார். நீங்கள் இனி எனக்காகக் காத்திருக்க வேண்டாம். வெளிக்கிடுங்கோ எண்டார்.

 

நான் போகமாட்டன் எண்டிட்டன். பிள்ளையளும் அப்பாவ விட்டுப் போக மாட்டம் எண்டிட்டுதுகள்.

 

இவ்வள சனம் செத்திட்டு. எங்கள நம்பி வந்த போராளிகள் இவ்வள பேர் செத்திட்டாங்கள். நான் வரேல்ல. நீ பிள்ளையக் கூட்டிக்கொண்டு போ.

 

திரும்ப திரும்ப இதையேதான் எல்லாக் கதைக்கும் சொன்னார். 14 ஆம் திகதி முழுவதும் இப்பிடியே முடிஞ்சிது. பிறகு பக்கத்து பங்கர் அண்ணையும் வந்து இவருக்கு (சின்னண்ணைக்கு அட்வைஸ் பண்ணினார்) நாலும் சின்னப் பிள்ளையள். அவா தனிய கொண்டு போய் வாழுறது எவ்வள கஸ்ரம். விசாரிச்சிற்று விட்டிடுவாங்கள். இனியென்ன, எல்லாம் முடிஞ்சுது அண்ண, வெளிக்கிடுங்கோ, உங்களுக்காக இ;ல்லாட்டியும், பிள்ளைகளுக்காக..சத்தியமா வாங்கோ’ பிள்ளைகளுக்காகத்தான் சரணடைஞ்சவர் – பிள்ளைகளுக்காகத்தான் சரணடைஞ்சவர்” – குரல் வறள சொல்கிறார் சின்னண்ணையின் மனைவி.

 

“பிறகு, மே மாசம் 15 ஆம் திகதி காலம 7 மணியிருக்கும் சரணடைய வந்தம். வட்டுவாகலில் லைன்ல நிண்டு வரேக்க கறுப்புத் துணியால கண் கட்டினபடி ஒரு பெடியன் தமிழில இவரக் காட்டிக் கூப்பிட்டான். 5 நிமிசம் கதைச்சிற்றுப் போகலாம் வாங்கோ எண்டான். சுத்திவர ஆமி நிண்டது. இவர் எங்கள அங்கயே நிக்கச் சொல்லீற்றுப் போனார். போகாதையுங்கோ, நான் உடன வாறன் எண்டார்.

 

நானும் பிள்ளையளும் அதிலயே நிண்டம். அவர கூட்டிக்கொண்டு போய் ஒரு மரத்துக்குக் கீழ வச்சி பேர் பதிஞ்சவ. அந்த இடத்தில 5, 6 சீரீபி பஸ் நிண்டது. அதுக்குள்ள எழிலன், அரசண்ணா, புதுவையண்ண எல்லாரும் இருந்தவ. பிறகு இவரையும் பக்கத்தில நிண்ட பஸ்ஸில ஏத்திப் போட்டினம். இவர் எங்கள ஒருக்கா திரும்பிப் பாத்திற்று பஸ் ஏறினார்.

 

நானும், பிள்ளையளும் ஒப்பாரி வச்சி அழுதம்.

 

இவருக்கு முன்னால ஒரு பாதரையும் (கிறிஸ்தவ பாதிரியார்) பஸ்ஸில ஏத்திச்சினம். நாங்கள் கனநேரம் நிண்டம். அவர் பஸ்ஸால இறங்கி வரேல்ல. ஆமிக்காரர் வந்து, எங்கள அதில நிக்கவேண்டாம், போங்கோ எண்டு சொல்லீற்றினம். நானும் கெஞ்சிப் பார்த்தன். அழுதன். எதுவும் நடக்கேல்ல”

 

பிறகு?

 

“பிறகு வவுனியா முகாமுக்குப் போயிற்றம். படாதபாடு பட்டம். 4 ஆம் மாடி, வவுனியா புனர்வாழ்வு முகாம், மட்டக்களப்பு எண்டு எல்லா இடமும் தேடினன். ஒரு இடமும் ஆள் இல்ல.

 

கொஞ்சநாள் கழிய ஒரு கடிதத் துண்டோட சிலபேர் வந்திச்சினம். ஆள் இருக்கிறார், காசு தந்தால் வெளியில எடுக்கலாம் எண்டுச்சினம். என்னட்ட காசிருக்கேல்ல. நான் அவையள நம்பவுமில்லை. பிறகு காணாமல் போனாக்களின்ர விசாரணையளுக்கு அலைஞ்சன். ஒரு பயனும் இல்ல.

 

இவர் உயிரோட இருந்தால் எப்பையெண்டாலும் வருவார், எண்டு மனச கல்லாக்கிற்று வாழுறம்.

 

அவர் ஊருக்கு நிறையச் செய்தவர். ஆனால் ஊர் எங்களுக்கு ஒண்டும் செய்யேல்ல. என்னையும் 4 பிள்ளையளையும் நடுத்தெருவில விட்டிட்டு ஊர்”.

 

இயலாமை, வெறுப்பு, விரக்தி என அனைத்து வலியுணர்வையும் ஒன்றாகக் கலந்து இந்த வசனத்தைச் சொன்னார் சின்னண்ணையின் மனைவி. சின்னண்ணை போராளியாக இருந்த காலத்தில் -1995 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இப்போது சின்னண்ணையின் மனைவி வாழும் காணிக்கு குடியிருக்க வந்துவிட்டனர். பின்னர் போர் முடியும் வரை அங்கேயேதான் வாழ்ந்தனர். காணி முழுவதும் தென்னையும், பயன்தரு மரங்களும் நாட்டி வளர்த்தார் சின்னண்ணை.

 

“நான் இல்லாட்டியும் இது உங்களுக்கு உதவும்’ என்று சொல்லிச்சொல்லியே கன்றுகளுக்கு நீரூற்றினாராம். அவர் சொன்னதுபோலவே அந்த மரங்களில் இருந்து கிடைக்கும் வருமானத்தில் தான் சின்னண்ணையின் குடும்பம் வாழ்கிறது.

 

“4 பிள்ளைகளின் படிப்புச் செலவு, குடும்பச் செலவுக்குப் படாதபாடு படுறன். காணியையும் பள்ளிக்கூடத்துக்கு எடுக்க வேணும் எண்டு வருகினம். பல முறை அளக்க வந்திட்டினம். இதை விட்டு நான் எங்க போறது. இப்பிடிப் பிரச்சினை இருக்கிறதால வீட்டுத்திட்டமோ, வாழ்வாதாரமோ, கறண்ட் வசதியோ எங்களுக்கு கிடைக்கேல்ல. நீங்களே பாருங்கோ எங்கட வீட்ட’

 

பல இடங்களிலுமிருந்து பொறுக்கிச் சேகரிக்கப்பட்ட துண்டுத் தகரங்களினால் வேயப்ட்ட கூரை, பழைய சுவரின் மேல் பொறுத்தப்பட்டிருக்கிறது. கதவுகளும், ஜன்னல்களும் உடைந்தே கிடக்கின்றன. அருகில் இருக்கும் பாடசாலையின் கழிப்பறையைத்தான் இவர்களும் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

 

“இவர் இருந்திருந்தா இப்பிடி இருந்திருப்பமா?”

 

ஏக்கம் மட்டும் எஞ்சியிருக்கிறது சின்னண்ணையின் மனைவியிடம். மிகவும் கொடியதொரு காலத்தில், பட்டினிப் போரிலிலிருந்து தமிழர்களைக் காக்க இரவும் – பகலும் போரிட்ட ஒரு போராளியின் குடும்பமும் தமிழர்களால் கைவிடப்பட்டிருக்கிறது என்பதை வரலாறு நினைவு வைத்துக்கொள்ளட்டும்.

 

கொழும்பு மிரருக்காக ஜெரா