Nisha-300x225ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் போர்க்குற்ற விசாரணை அறிக்கை வெளியாவதற்கு முன்னதாக இலங்கை அரச தலைவர்கள் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் பேச்சு நடத்துவதற்காக தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் இருநாள் உத்தியோகபூர்வமாக இன்று காலை கொழும்பு வருகின்றார்.

 

இவர் வந்த கையுடன் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவைச் சந்தித்து பேச்சு நடத்துவார். இந்தச் சந்திப்பு இன்று காலை 10.30 மணிக்கு வெளிவிவகார அமைச்சில் நடைபெறவுள்ளது.

 

நிஷா பிஸ்வாலின் பயணத்துக்கு முன்னதாக, மீண்டும் வெளிவிவகார அமைச்சராக மங்கள சமரவீர நேற்றுப் பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மங்கள சமரவீரவுடனான சந்திப்பைத் தொடர்ந்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் நிஷா பிஸ்வால் இன்று சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.

 

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சருடனான இன்றைய முத்தரப்பு சந்திப்பின்போது ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணை அறிக்கை தொடர்பில் விரிவான பேச்சுக்களை நிஷா பிஸ்வால் நடத்துவார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

 

இந்த முத்தரப்பு சந்திப்பைத் தொடர்ந்து இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் நாளை புதன்கிழமை காலை நிஷா பிஸ்வால் முக்கிய பேச்சு நடத்தவுள்ளார்.

 

நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றியீட்டிய பின்னர் இடம்பெறவுள்ள முதலாவது இராஜதந்திரச் சந்திப்பு இதுவாகும். ‘

 

வடக்கு, கிழக்கில் பெரு வெற்றியீட்டி, தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக மீண்டும் அங்கீகரிக்கப்பட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் நாளை காலை 8.30 மணிக்கு சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார் என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நேற்று ‘சுடர் ஒளி’யிடம் தெரிவித்தார்.

 

இந்தச் சந்திப்பு கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுவரின் வதிவிடத்தில் நடைபெறவுள்ளது என்றும் அவர் கூறினார்.
இதன்போது ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தால் செப்டெம்பர் மாதம் வெளியிடப்படவுள்ள இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணை அறிக்கை மற்றும் புதிய அரசு தொடர்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு, தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வு உள்ளிட்ட முக்கிய பல விடயங்கள் தொடர்பில் பேசப்படும் என்று கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மேலும் தெரிவித்தார்.

 

நிஷா பிஸ்வாலின் கொழும்புப் பயணம், சிலவாரங்களுக்கு முன்னரே திட்டமிடப்பட்டிருந்ததாயினும் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றதால் அது பிற்போடப்பட்டிருந்தது.

 

ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் போர்க்குற்ற விசாரணை அறிக்கை வெளியிடப்படவுள்ள நிலையில், நிஷா பிஸ்வாலின் இந்தப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகக் கருதப்படுகின்றது.

 

அதேவேளை, நிஷா பிஸ்வாலின் இந்தப் பயணம், அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரியின் பயணத்தின் தொடர்ச்சியான ஒன்று என அரச உயர்மட்டத் தகவல்கள் தெரிவித்துள்ளன. கடந்த மே மாதம், ஜோன் கெரியுடன் நிஷா பிஸ்வாலும் கொழும்பு வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அதேவேளை, கடந்த புதன்கிழமையே தனது பணியைப் பொறுப்பேற்பதற்காக கொழும்பு வந்திருந்த அமெரிக்காவின் புதிய தூதுவர் அதுல் கேஷாப், கடந்த வெள்ளிக்கிழமை, தனது நியமனப் பத்திரங்களை ஜனாதிபதியிடம் கையளித்திருந்தார். வழக்கத்துக்கு மாறாக, அமெரிக்கத் தூதுவரின் நியமனப் பத்திரங்கள் மிக விரைவாக ஜனாதிபதியால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

 

நிஷா பிஸ்வாலின் பயணத்துக்கு முன்னதாக, புதிய அமெரிக்கத் தூதுவர் பதவியேற்கவேண்டும் என்று அமெரிக்கா விரும்பியதாலேயே விரைவாக இந்த நகர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, நிஷா பிஸ்வாலுடன், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் மூத்த அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்றும் இன்று கொழும்பு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

 

(‘சுடர் ஒளி’ – 25.08.2015 – செவ்வாய்க்கிழமை)