நீதிக்காய் அனைவரும் ஒன்றிணைவோம்! – யாழ் பல்கலைக்கழக மாணவரொன்றியம் அழைப்பு

0
640

uni_jaffna_teachersஇறுதிப் போரிலே எம் இனத்தின்மீது இலங்கை அரசாங்கம் அதன் இராணுவ இயந்திரத்தைக்கொண்டு ஈவிரக்கமின்றி நிகழ்த்தப்பட்ட மனிதப் பேரவலங்களுக்கு ஆறு வருடங்களை எட்டிய நிலையிலும் எமக்கு நீதி கிடைக்கவில்லை.

 

இருப்பினும் ஒவ்வோர் ஆண்டும் நம்பிக்கையூட்டும் வகையில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையிலே இது தொடர்பான பிரேரணைகள் சர்வதேச நாடுகளின் பேராதரவுடன் நிறைவேற்றப்பட்டு வந்தன. ஆனால் அதற்கெல்லாம் கடுகளவும் அசையா நிலையிலேயே இலங்கை அரசாங்கம் இருந்து வந்துள்ளது.

 

இந்நிலையிலேயே இவ்வருட மார்ச் மாதமளவில் இலங்கை தொடர்பான விசாரணை அறிக்கை திட்டமிட்டபடி சமர்ப்பிக்கப்படவிருந்தது. எனினும் இலங்கையின் புதிய அரசாங்கம் விடுத்த வேண்டுகோளிற்கு இணங்க விசாரணை அறிக்கையை செப்டெம்பர் மாதம் ஒத்திவைப்பதற்கு எடுத்த தீர்மானமானது ஈழத்தமிழர்களாகிய எமக்கு வெந்த புண்ணிலே வேலைப் பாய்ச்சியதைப் போன்ற மிகப்பெரிய வேதனையுடனான ஏமாற்றத்தினை அளித்துள்ளது.

 
இலங்கையில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டாலும் இராணுவக் கட்டமைப்பிலே எவ்வித மாற்றங்களும் ஏற்படுத்தப்படவில்லை. இராணுவத்தினரின் தலையீடுகள் தமிழர் பிரதேசமெங்கணும் தொடரந்தவண்ணமே உள்ளன. அச்சுறுத்தல்கள், பின்தொடரல்கள், கண்காணிப்புகளென இன்னமும் தொடர்ந்துகொண்டிருக்கும் இச்சூழ்நிலையை சர்வதேசம் பாராமுகப்படுத்துவதாகவே இவ் விசாரணை அறிக்கை பிற்போடப்பட்டமையை நாம் நோக்குகின்றோம்.

 

இந்நிலையில் தற்போதைய புதிய அரசாங்கத்தினாலும் கூறப்படுகின்ற உள்ளக விசாரணையானது குற்றவாளிகளைக் காப்பாற்ற முற்படுவதோடு ஈழத்தமிழர்களாகிய எமது அடிப்படை மனிதவுரிமைப் பிரச்சினைகளை நீர்த்துப்போகச் செய்வதற்கான முன்னேற்பாடுகளேயன்றி வேறல்ல.

 

மோதகம் கொளுக்கட்டையென வடிவத்தால் வேறாக இருந்தாலும் உள்ளீட்டில் ஒரே நிலைப்பாட்டைக்கொண்ட இலங்கையின் எந்த அரசாங்கத்தினதும் உள்ளக விசாரணையில் அணுவளவு நம்பிக்கையும் எமக்கு இல்லை. இதனைக் கருத்திற்கொண்டு எமது வாழ்நிலைப் பிரச்சினைக்கு உரிய நீதி கிடைக்க இலங்கை அரசாங்கத்தாற்கு சர்வதேசம் போதியளவு அழுத்தங்களைப் பிரயோகிக்கவேண்டும்!

 

எனவே எதிர்வரும் 24-02-2015 அன்று தமிழ் மக்களின் உரிமைக்குரலாக விளங்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகத்தினராகிய நாம் எமது நீதிக்கான ஒருமித்த குரலை சர்வதேசத்திற்கு அமைதிவழியில் முரசறைய அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கெனவே எமது கைகளைப்
பலப்படுத்த ஒன்றிணையுமாறு உரிமையோடு கேட்டுக்கொள்கிறோம்!

 

பல்கலைக்கழக மாணவரொன்றியம்,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
21-02-2015.