நீதி மறுக்கப்பட்டால் சிறீலங்காவில் மீண்டும் ஆயுதப்போர் வெடிக்கும்: டெஸ்மன் டுட்டு

0
603

DESMOND-TUTUசிறீலங்கா அரசு மீது சுயாதீனமான அனைத்துலக விசாரணையை மேற்கொள்ளும் தீர்மானம் ஒன்று ஜெனீவாவில் இடம்பெறும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நிறைவேற்றப்பட வேண்டும் என மனித உரிமைகள் செயற்பாட்டாளரும், போராயருமான டெஸ்மன் டுட்டு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஐ.நாவுக்கு அவர் நேற்று (5) எழுதிய கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

சிறீலங்கா அரசு மீது சுயாதீனமான அனைத்துலக விசாரணையை மேற்கொள்ளும் தீர்மானம் ஒன்று கொண்டுவரப்பட வேண்டும் என்பதே எல்லா மனித உரிமைகள் அமைப்புக்களினதும், செயற்பாட்டாளர்களினதும் விருப்பமாகும். இதுவே நாட்டினை அமைதியானதும், நீதியானதுமான பாதையில் இட்டுச் செல்லும்.

நீண்டகாலப்போர் 2009 ஆம் ஆண்டு நிறைவடைந்துள்ளபோதும் சிறீலங்காவில் இன்றுவரை அமைதி திரும்பவில்லை. எனவே சிறீலங்காவில் வாழும் மக்களின் எதிர்காலம் தொடர்பில் நாம் கவலைகொண்டுள்ளோம்.

அச்சமும், நீதியற்ற தன்மையும் சிறுபான்மை மக்களிடமும், அரசியல் செயற்பாட்டாளர்களிடமும் மட்டுமல்லாது சாதாரண மக்களிடமும் ஏற்பட்டுள்ளது. மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் உட்பட பல பிரச்சனைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை.

இனநல்லிணக்கப்பாடு மற்றும் அரசியல் தீர்வு தொடர்பில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. தீர்க்கப்படாத இந்த பிரச்சனைகளால் மீண்டும் ஆயுதப்போர் உருவாகும் நிலை அங்கு ஏற்படலாம். போருக்கு பின்னரான நடவடிக்கைகள் காலதாமதமாகலாம் ஆனால் என்ன நடவடிக்கைகள் சரியான திசையில் செல்கின்றன என்பதே கேள்வி?

போர் நிறைவடைந்து ஐந்து வருடங்கள் ஆன பின்னரும் எந்த நடவடிக்கையிலும் முன்னேற்றம் ஏற்படவில்லை. மாறாக நிலமை மேலும் மோசமடைந்தே செல்கின்றது. சிறுபான்மை மக்களின் உரிமைகளை சிறீலங்கா அரசு மதிப்பது இல்லை என்பதே இங்கு முக்கிய பிரச்சனையாக உள்ளது.

இது காலம் காலமாக இருந்து வருகின்றது, சிறீலங்காவில் இடம்பெற்ற குற்றங்களுக்கு நீதி கிடைக்கில்லை என்றால் இந்த நிலமை மேலும் மோசமடையலாம். அனைத்துலக விசாரணை ஒன்றே சிறீலங்கா மக்களை அமைதி வழிக்கு இட்டுச்செல்லும். எனவே தான் சிறீலங்கா அரசு மீது சுயாதீனமான அனைத்துலக விசாரணையை மேற்கொள்ளும் தீர்மானம் ஒன்று கொண்டுவரப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் பல ஆண்டுகளாக முன்வைக்கப்படுகின்றன.

இதனை ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் நவநீதம் பிள்ளையும், ஐ;நாவின் நிபுணர் குழுவும் கூட முன்வைத்திருந்தனர். மனித உரிமை அமைப்புக்கள், மனித உரிமை ஆவலர்கள், பல ஆயிரம் அரசியல் தலைவர்கள் கூட இதனை வலியுறுத்தியிருந்தனர்.

பல நாடுகளினதும், மக்களினதும் பிரதிநிதிகளாக நாம் உள்ளோம். எனவே சிறீலங்கா அரசு மீது சுயாதீனமான அனைத்துலக விசாரணையை மேற்கொள்ளும் தீர்மானம் ஒன்று ஜெனீவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கின்றோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கடிதத்தில் டெஸ்மன்ட டுட்டு, தென்ஆபிரிக்கவின் மனித உரிமைகள் அமைப்பின் நிறுவுனர் ஜஸ்மின் சூக்கா மற்றும் மன்னார் போராயர் இராஜப்பு ஜோசப் உட்பட 35 இற்கு மேற்பட்ட பல தலைவர்கள் கையொப்பமிட்டுள்ளனர்.

தமிழாக்கம்: ஈழம் ஈ நியூஸ்.