எதை வைத்து நீங்கள் தமிழர்கள் என்று சொல்கிறீர்கள்? முதலில் உனது மொழி உன்னிடம் இருக்கிறதா? கேவலம் ஒருநிமிடம் கூட உன்னால் உன் சொந்த மொழியைப் பேசக்கூடத்தெரியவில்லை. வெட்கமில்லாமல் வேறுமொழி கலந்து இன்னொரு தமிழனிடம், அரைவேக்காட்டு ஆங்கிலம் பேசும் சூப்பர் தமிழனாகிவிட்டாய். மொழிக்கலப்புடன் பேசுவதை அவமானமாகக் கருதாமல், பெருமை யோடுமிதப்பில் அலைகிறாய்.

thangar
எதைவைத்து உன்னை நீ தமிழன் எனச்சொல்கிறாய்? உன் போன்றவர்கள் மட்டுமே பெருகிவிட்ட இந்த மாநிலத்தை எதற்காக இன்னும், தமிழ்நாடு என நாக்குக் கூசாமல் அழைக்கி றாய். பேசாமல் மாநிலத்தின் பெயரை மாற்றிவிட்டால் குற்ற வுணர்ச்சியில்லாமல் மகிழ்ச்சியாக எதைப்பற்றியும் சிந்திக்காமல் வாழலாமே! தமிழா..

உன் பெயர் கூட உன் மொழியில் இல்லையே? திரைப்படங்களுக்கு தமிழில் தலைப்பு வைப்பது மட்டுமே நமது பெரும் சாதனையாக இருக்கிறது. உன் நிலம், உன் கல்வி, உன் உணவு, உன் மருத்துவம், உன் கலைகள், உன் போராட்ட குணம் எதுவுமே உன்னிடமில்லை. உன் பிள்ளைகள் பள்ளிக்கூடத்தில் தமிழில் பேசினால் தண்டனை தருகிறான். தமிழ்ப் பாடம் ஒன்றை யாவது படியென்று சொன்னால், அதுவும் முடியாது என்று நீதிமன்றத்துக்குப் போகிறார்கள். இப்படிப்பட்ட பள்ளிக்கூடங்களில்தான் உன் குழந்தைகளைச் சேர்க்க இரவு பகலாக நாய் போல் தெருவில் காத்துகிடக்கிறாய்.

நீயே அனைத்தையும் இழந்து, தமிழன் என்ற தகுதியை இழந்து, அகதியாகப் பல ஆண்டுகள் ஆகிவிட்டபிறகு நீ எப்படி ஈழத்தமிழ னுக்காக போராட முடியும்? ஈழத்தமிழனுக்கு நாடு மட்டும்தான் இல்லை. அதனால் அவன் அகதியாகி விட்டான். உனக்கு நாடு ஒன்று மட்டும்தான் இருக்கிறது. அவனிடமிருக்கும் மொழிப்பற்று, போராட்ட குணம், அரசியல் தெளிவு எதுவுமே உன்னிடம் இல்லை. ஒருநாள் ஈழத்தமிழனுக்கு இழந்த மண் கிடைக்கும். ஆனால் நீ இழந்த எதுவுமே உனக்கு கிடைக்கப்போவதில்லை.

இப்போது சொல் யார் அகதி?. நீயா? ஈழத்தமிழனா? நீ முதலில் தமிழனாக மாறு. உனக்கு எல்லாமே கிடைக்கும். ஒருநாளும் ஈழத்தைத் தமிழக அரசியல்வாதிகளால் பெற்றுத் தரமுடியாது. அதற்கு இந்திய அரசும் இடம் கொடுக்காது. தமிழகத்தில் உள்ள தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையோடு இருந்து உண்மையான தமிழனாக மாறுங்கள். அப்போது இந்திய அரசு உங்களை நோக்கி ஓடிவரும். ஈழம் என்ன, நீ கேட்கும் அத்தனையும் அப்போது உனக்குக் கிடைக்கும். அதுவரை உனக்கு எதுவுமே கிடைக்கப் போவதில்லை.

நன்றி – வெளிச்சம், August 3, 2014