jaffna-uni-protestபல்கலைக்கழக சூழலில் படைகுவிப்பு மீண்டும் மாணவர்களது கற்றல் செயற்பாடுகளை பாதிப்பதாக யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கவலை வெளியிட்டுள்ளது. பல்கலைக்கழக பிரதான வாசலில் இராணுவத்தினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். மாவீரர் வாரம் நெருங்கும் வேளையில் யாழ்.பல்கலைக்கழகத்திற்கு முன்னால் இராணுவம் நிலைகொண்டுள்ளது. இதனை ஏற்றுக்கொள்ளமுடியாது. இது மாணவர்கள் மத்தியில் மட்டுமல்ல பல்கலைக்கழக சமூகத்திற்கும் பெரும் அச்சநிலையினை உருவாக்கி உள்ளது.

பல்கலைக்கழக சூழலிருந்து இராணுவம் வெளியேற்றப்படும்போதுதான் மாணவர்கள் சுதந்திரமாக கல்விகற்கும் வாய்ப்பு ஏற்படும். அண்மைக் காலங்களாக பல்கலைக்கழகத்தில் எந்தவிதமான குழப்பமான சூழ்நிலையும் நிலவவில்லை. அவ்வாறான ஒருநிலையில் பல்கலைக்கழக பகுதியில் இராணுவம் நிலை நிறுத்தப்பட்டமையானது பாரிய ஒரு சந்தேகத்தை ஏற்படுத்துயுள்ளது.

எனவே பல்கலைக்கழக சூழலில் நிலைநிறுத்தப்பட்டுள்ள இராணுவத்தினரை அங்கிருந்து அகற்ற உரியதரப்பினர் நடவடிக்கை எடுக்கவேண்டுமென பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதனிடையே பல்கலைக்கழக சூழலை அண்டிய நாச்சிமார் கோவிலடியினில் பல்கலைக்கழகத்தை கண்காணிக்க இலங்கை இராணுவப்புலனாய்வு பிரிவு பொதுமக்களது இரு வீடுகளை ஆக்கிரமித்து முகாமிட்டுள்ளதாக மாணவர்களிடையே தகவல்கள் உலாவருகின்றது.