பர்தாவை கழற்றிவிட்டு உள்ளே வரவும்”

0
1611

ஒரு கடையின் முகப்பில், பர்தாவை கழற்றிவிட்டு உள்ளே வரவும் என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருக்கும் ஒரு புகைப்படத்தை நேற்றிரவு இணையத்தில் பார்க்க கிடைத்தது. இன்று ஒரு வலைத்தளத்தில், 22ம் திகதி ஜனாதிபதி தேசிய பாதுகாப்பு சபை மற்றும் அமைச்சரவைக் கூட்டங்களை நடாத்தியதாக தகவல்கள் கிடைக்கின்றன.

 

அந்தக் கூட்டங்களில் முஸ்லிம் பெண்களின் ஆடை விசயத்தில் கட்டுப்பாடுகளை கொண்டுவர இருப்பதாக முடிவு செய்யப்பட்டிருக்கின்றன. அந்நிகழ்வில், ஹகீம், ரிஷாட்,ஹலீம், பைசல் காசிம் உட்பட முஸ்லிம் அமைச்சர்கள் பிரசன்னமாகி இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

அதே நேரம், மேலும் ஒரு இணையச் செய்தி நிறுவனம், மதரசாக்களில் மதபோதனைதான் நடைபெறுகிறது என நினைத்திருந்தோம், ஆனால் அங்கு வெடிகுண்டுகள் தயாரிக்கப்பட்டிருக்கின்றன என்று மக்களில் பலர் கருத்துச் சொல்லியிருப்பதாகவும், இப்படியேதான் மக்கள் உணருவதாகவும் தகவலை வெளியிட்டிருக்கிறது. அதற்கும் ஒருபடி மேலே போய் அந்த வலைத்தளம், மறைந்திருக்கும் தீவிரவாதிகளை கண்டுபிடிக்க வேண்டுமெனில், மதரசாக்கள் மற்றும் மசூதிகளின் அருகிலிருக்கும் சிசிடிவி கமெராக்களை ஆய்வு செய்ய வேண்டும் என்று ஒரு முன்மொழிவை செய்திருக்கிறது.

 

இலங்கை முஸ்லிம்களை கையாள்வதற்கு அரசுக்கு எந்தத் தயக்கமுமற்ற அனுமதியை அண்மையில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகள் உருவாக்கிக் கொடுத்திருக்கின்றன. அதே நேரம், ஏற்கனவே இலங்கையில் உருவாகி நிறுவனமயப்பட்டிருக்கும் பவுத்த மற்றும் இந்து கடும்போக்காளர்களுக்கு – தமது இஸ்லாமிய வெறுப்பை தங்குதடையின்றி வெளிப்படுத்தவும், அதனுாடாக தமது மன வக்கிரங்களை தீர்த்துக்கொள்ளக்கூடிய எளிமையானதும், சௌகரியமானதுமான காரணங்கள் கிடைத்திருக்கின்றன.

 

இன்று இலங்கையில் ஏற்பட்டிருக்கும் இஸ்லாமியப் பீதி என்பதை இலகுவில் ஒழித்துக்கட்டிவிட முடியாது என்றே தோன்றுகிறது. அரசு, நிறுவனங்கள், கடும்போக்காளர்கள், மதச்சார்பானவர்கள் மற்றும் மதச்சார்பற்றவர்கள் என்ற அனைத்து தரப்பினருக்கும் மிகப்பெரிய தலையாய கடமை ஒன்று இருக்கிறது. அது தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களுக்கும், குறித்த சமூகத்திற்குமிடையிலான வேறுபாட்டை புரியவைப்பதும், அவைகளை நாட்டு மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதும்தான்.

 

இஸ்லாமிய வெறுப்பு என்பது உலகளவில் மிகப்பலமாக வேரூன்றி நிலைத்திருக்கும் ஒரு நிறுவனம். அது திடீரென 2001 ம் ஆண்டு உலகவர்த்தக மையத்தில் நடந்த குண்டுத்தாக்குதல்களின் பின்னர் திடீரென உருவான ஒன்றல்ல.

 

இருபதாம் நுாற்றாண்டின் பிற்பகுதியில் மேற்கத்திய நாடுகளில், குறிப்பிடத்தக்களவில் முஸ்லிம்கள் குடியேறியது, ஈரானியப் புரட்சி, கடத்தல்கள், பணயக்கைதுகள், 80 களிலும், 90 களிலும் நடந்த தீவிரவாதச் செயல்கள், ஐரோப்பாவில் நடந்தேறிய தீவிரவாதிகளின் தாக்குதல்கள் என்று நீண்டதும் , ஆழமானதுமான வரலாற்றுப் பின்னணியைக்கொண்டிருக்கிறது.

 

உலகவர்த்தக மையத்தின் மீதான தாக்குதலின் பின்னர், இஸ்லாத்தின் மீதான வெறுப்பை உலகுதழுவிய பொதுக்கருத்தாக உருவாக்க -, இலாபமீட்டும் நோக்கையும், இஸ்லாமிய வெறுப்பையும் கொண்ட பெரும் பொருளாதார பக்கபலம்கொண்ட நுாற்றுக்கணக்கான நிறுவனங்கள், செய்தி ஊடகங்கள், வலைத்தளங்கள், செயற்பாட்டாளர்கள் என மிகப்பெரியதொரு புதிய அமைப்பாக்கம் உலகளவில் தோன்றின. அவை இன்றும் இயங்கிக்கொண்டிருக்கின்றன என்பதுதான் உண்மை.

 

இந்த இஸ்லாமிய வெறுப்பை ஒரு மாற்றமுடியாத பொதுக்கருத்தாகவும், இஸ்லாம் பற்றிய தெளிவான உண்மையாகவும் உலகெங்கும் உள்ள நாடுகளுக்கும், மக்களுக்கும் கொண்டு சேர்த்து – இஸ்லாத்தையும், இஸ்லாமியர்களையும் கொடிய இரக்கமற்ற கொலைகாரர்களாக உலகின் அனைத்து சமூகங்களையும் நம்பும் படியான பரப்புரைகளை இந்த நிறுவனங்களே செய்கின்றன. இதற்கு உலகின் பல நாடுகளும், பொருளாதார நிறுவனங்களும் துணையாக இருக்கின்றன என்பதுதான் உண்மை.

 

இந்த நிறுவனங்கள், இஸ்லாம் பற்றியும் அதைப் பின்பற்றுபவர்கள் பற்றியும் ஒரு ஒற்றைத் தன்மையான பொதுக்கருத்தை(கொடியவர்கள் என்பதாக) உருவாக்கியதுதான் இன்று மிகச் சிக்கலான ஒரு விசயம்.

 

உலகிலுள்ள அனைத்து இஸ்லாமியர்களும் தீவிரவாதத்தை ஆதரிப்பவர்களல்ல என்பதை மீண்டும் சொல்லி நிருபிக்க அவசியமில்லை. இஸ்லாத்தின் பெயரால் தீவிரவாத அமைப்புக்களும், தீவிரவாத நடடிக்கைகள் நடந்தேறுகின்றவே தவிர, அனைத்து இஸ்லாமியர்களின் மீதும் குறிப்பான ஒரு தீவிரவாத அடையாளத்தை சுமத்துவதும், அனைத்து இஸ்லாமியர்களையும் சந்தேகத்தோடு பார்ப்பதும் என்பது இஸ்லாமிய வெறுப்பின் அடியாக உருவாகியிருக்கும் ஒன்றுதான் இதை அனைவரும் மிகத் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும்.

 

உலகளவில் இஸ்லாமியர்கள் பற்றி உருவாக்கப்பட்டு பரப்பப்பட்ட ஒற்றையான கருத்தாக்கத்தினால் ஏற்கனவே பாதிக்கப்பட்ட பவுத்த மற்றும் தமிழ் கடும்போக்களார்கள் இருக்கிறார்கள். அவர்கள் செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் செயற்பாடுகளை திகன, அளுத்கம போன்ற சம்பவங்களின் மூலம் அறிந்துகொள்ளலாம். இஸ்லாமிய வெறுப்பை முன்வைத்து சுதந்திரமாக நாட்டில் செயல்பட்ட எந்த கடும்போக்கு அமைப்புக்களின் நடவடிக்கைகளையோ, அல்லது அதன் கருத்துச் செயற்பாட்டாளர்களையோ இலங்கை அரசு கட்டுப்படுத்த முறையான எந்த நடவடிக்கைகளையும் எடுத்திருக்கவில்லை.

 

வெறுமனே, மேலோட்டமான சமாதானப்படுத்தல்களையே மேற்கொண்டு வந்திருக்கின்றன. மஹிந்த தலைமையிலான ஆட்சிக்காலத்தில், இந்த இஸ்லாமிய வெறுப்புக் கடும்போக்குவாதிகள் வெளிப்படையாக இயங்கத் தொடங்கினர் என்பது முக்கியமான ஒரு விசயம்.

 

தற்போதைய அரசுகூட இதில் அதிக கவனத்தை எடுக்கவில்லை. இது இலங்கையின் முஸ்லிம் அல்லாத பெரும்பான்மை இனத்தவர்களின் மன உருவாக்கமும் அதனுாடாக நிறுவனப்பட்ட கருத்துருவாக்கத்தை பயில்வதற்கான வாய்ப்பையும், அதை முஸ்லிம்களை நோக்கி செயல்படுத்துவதற்கான மறைமுகமான அனுமதிகளையும் வழங்கியது எனில், முஸ்லிம்களின் சமூக வெளியில் ஏற்பட்ட மாற்றம் என்பதும் கவனத்திற்கொள்ள வேண்டிய ஒரு முக்கிய விசயமாகும்.

 

80 களின் நடுக்கூற்றில் தொழில் வாய்ப்பிற்காக மத்திய கிழக்கிற்கு செல்ல நேர்ந்த முஸ்லிம்கள் அங்கு இஸ்லாம் என்ன பெயரில் நடைமுறையிலிருக்கும் அனேகமான விசயங்களை இலங்கைக்குள் கொண்டுவரத் தொடங்கினர். இது பாரியளவிலான சமூகச் செயற்பாடாக இருக்கவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்த சில மாற்றங்களாக சிறியளவில்தான் இருந்தது.

 

கடந்த ஐம்பது ஆண்டுகளாகவேதான், இலங்கையில் இஸ்லாமிய தவ்வா இயக்கங்கள் தோன்றின. அவை மதச் சீர்திருத்தம் என்ற வகையில் தோற்றம் பெற்றவைதான். சவூதி அரேபியாவில் பெரும் செல்வாக்கோடு மதச் சீர்திருத்தம் என்ற பெயரில் பெரும் சமூக கலாச்சார மாற்றத்தை ஏற்படுத்திக்கொண்டிருந்த வஹ்ஹாபிய அமைப்புதான் இலங்கையில் முதன்முதலாக ஒரு நிறுவனமாக உருவானது. 1947 களிலேயே சமூக சீர்திருத்தம் என்ற பெயரில் மத்திய மாகாணத்தில் கபுர்ஸ்தானங்கள் இரண்டை சிதைத்த சம்பவமே இலங்கையில் பதிவான முதலாவது அதிரடியான சீர்திருத்த நடவடிக்கையாகும். ஆயினும், அந்த அமைப்பால் இலங்கை முழுவதுமுள்ள முஸ்லிம்களின் சமூகக் கலாச்சார நடவடிக்கைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது போயிற்று. அந்த அமைப்பு தோல்வியை சந்தித்துகொண்டது. அந்த அமைப்பின் இலங்கைப் பிரதிநிதிக்கு சவதியிலேயே குடியுரிமை வழங்கி அங்கே அவர் மரணித்தும் விட்டார்.

 

இந்தியா மற்றும் இலங்கை முஸ்லிம்கள் மத்திய கிழக்கிற்கு வேலைவாய்ப்புக்காக சென்று, அங்கிருந்து காவி வந்த பல கலாச்சார செயற்பாடுகள் மெல்ல இலங்கையில் பரவத்தொடங்கியது தொண்ணுாறுகளை ஒட்டித்தான் என்பது முக்கியமானது.

 

இந்த தொண்ணுாறுகளை ஒட்டி உருவான மதரீதியிலானதும், கலாச்சாரரீதியிலானதுமான மாற்றங்கள் சீர்திருத்தம் என்ற வகையில் வஹ்ஹாபிய கருத்தியல் தாக்கத்தில் உருவான நிறுவனமயப்பட்டதும், பொருளாதார உதவிகளை பெறக்கூடியதுமான அமைப்புக்கள் பெருகத் தொடங்கின. சிறிய சிறிய வேறுபாடுகளை மையப்படுத்தி வஹாப்பிய சித்தாந்த அடிப்படைகளைக் கொண்ட பலபிரிவுகள் உருவாகின.

 

அதே நேரம், இலங்கையில் அதற்கு முன்பிருந்து இயங்கிவந்த ஜமாதே இஸ்லாமி, தப்லீக் ஜமாத் போன்ற நிறுவனங்களும், புதிதாக உருவாகிய பல நிறுவனங்களும் தமது சமூகச் சீர்திருத்தம் என்ற லேபலைக்கொண்ட செயற்பாடுகளுக்கு நிதிகளைப் பெற்றுக்கொள்ள வாய்ப்புண்டு என்பதை அறிந்து மத்திய கிழக்கிலுள்ள நிதிவழங்கும் இஸ்லாமிய அமைப்புகளின் பினாமிகளாக இயங்கத்தொடங்கின. இது உண்மையில், இஸ்லாமிய சீர்திருத்தம் என்ற நல்லதொரு நிலைப்பாட்டை கவனத்திற்கொண்டு இயங்கும் மனநிலையை முஸ்லிம் மக்கள் மத்தியில் பரப்பின.

 

இந்தச் சீர்திருத்தம் என்ற கருத்துருவம், உண்மையில் சீர்திருத்தம் என்ற நல்லெண்ணங்களும் கருத்து நிலைகளோடும் இணைத்து அடிப்படை வாதத்தையும், பிற சமூகங்கள்மீதான கசப்புக்களையும், புறமொதுக்கல்களையும் தன்னக்தே காவிக்கொண்டுதான் வந்தன. இந்த சீர்திருத்தம் மற்றும் அடிப்படைவாதம் போன்ற இரண்டு பிரதான அம்சங்களையும் இலங்கையிலுள்ள அனேகமான அமைப்புகள் அடையாளம் கண்டிருந்தன. அதன் காரணமாக பல அமைப்புகள் சீர்திருத்தத்தை மாத்திரம் உள்ளே எடுத்து செயல்பட்டன. அதுபோல, அடிப்படைவாதத்திற்கு முன்னுரிமை கொடுத்து அதுகூட இஸ்லாமிய சீர்திருத்தம்தான் என நம்பிக்கொண்டு சில அமைப்புக்கள் செயல்பட்டன. இந்த அமைப்புக்களை எங்களைப்போன்ற பலர் விமர்சிக்கவும், மக்கள் மத்தியில் அடையாளங்காட்டவும் தவறவில்லை.

 

இருந்தாலும், அதன் உச்சபட்ச நடவடிக்கை பெரும் குண்டுவெடிப்புக்களினுாடாக பல உயிர்களை காவுகொண்டிருக்கிறது. இன்று உலகமே கொந்தளித்து எழுமளவு ஒரு நிகழ்வாக மாறியிருக்கிறது. (உலகம் ஏன் கொந்தளிக்கிறது? என்பதை கீழே எழுதுவேன்)

 

மதஅடிப்படைவாதத்தினுாடாக உருவான தீவிரவாத நடவடிக்கையாக இலங்கைக்குண்டு வெடிப்புகள் பார்க்கப்படுகிறது. இலங்கையின் பெரும்பான்மையான சிங்கள மற்றும் தமிழ் மக்கள் மத்தியில் அனைத்து இஸ்லாமியர்களின் மீதும் சந்தேகமானதும், அச்சம் நிறைந்ததுமான கண்ணோட்டத்தை திணித்திருக்கிறது. இந்தக் கண்ணோட்டம் இந்தக் குண்டு வெடிப்பின் பின்னணியில் உடனடியாக உருவான ஒன்று இல்லை என்பதை கவனத்திற்கொள்வது மிக முக்கியமானது என்றே நினைக்கிறேன்.

 

சர்வதேச ரீதியில் ஒட்டு மொத்த இஸ்லாமியர்களின் மீதும் திட்டமிட்டு உருவாக்கப்பட்டிருக்கும் வெறுப்பு, சந்தேகம், அச்சம் என்பது இலங்கையின் பெரும்பான்மை சமூகங்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்த கடந்தகால மனநிலையின் நீட்சியே ஆகும்.

 

அதுபோல, இலங்கை முஸ்லிம்களின் மத்தியில் கடந்த முப்பது ஆண்டுகளில் உருவாக்கப்பட்டிருக்கும் சமூக மற்றும் இஸ்லாமிய சீர்திருத்தம் என்ற வகையில் பதிக்கப்பட்டிருக்கும் அடிப்படை வாத கருத்துருவாக்கத்திற்குமிடையாலான பிரச்சினைதான் இது. எனவே, குறித்த குண்டு வெடிப்பு சம்பவங்களை மாத்திரம் வைத்துக்கொண்டு இலங்கை முஸ்லிம்கள் அனைவரையும் சந்தேகத்தோடும், அச்சத்தோடும் புரிந்துகொள்ளும் கருத்தியல் பரப்புரைகளை வரையறுக்கும் நடவடிக்கைகளை அரசு மற்றும் புத்திஜீவிகள் கவனத்திற்கொள்ள வேண்டும்.

 

அதே நேரம் சர்வதேச அளவில் அனைத்து இஸ்லமியர்களின் மீதும் பொது அடையாளமாக சந்தேகத்தையும், அச்சத்தையும் திணிப்பதை பொதுமக்களுக்கு கொண்டு சேர்த்து தௌவிவுபடுத்த வேண்டும் அதுவே முக்கியமாக கவனத்திற்கொள்ள வேண்டிய விசயம் என கருதுகிறேன்.

 

இலங்கையிலுள்ள அனைத்து சமூகத்தை சேர்ந்தவர்களும் சக மனிதர்களாக பார்க்கப்படும் விதமாக கருத்துருவாக்கங்களும் செயற்பாடுகளும் உருவாக்கப்பட வேண்டும். வார்த்தைகளாலோ, சிறிய செயற்பாடுகளாலோ முஸ்லிம்களை தொந்தரவு செய்யும் நிலைப்பாட்டை தடுக்க வேண்டும். அதே நேரம் முஸ்லிம்கள் தங்களுக்குள்ளிருந்து அடிப்படைவாதத்தை ஊக்குவிக்கும் நபர்களையும் நிறுவனங்களையும் அடையாளம் கண்டு விலகி செயல்பட வேண்டும்.

 

என்னைப் பொறுத்தவரையில், 90 களுக்குப் பிறகு இலங்கையில் உருவான அனைத்து இஸ்லாமிய அமைப்புக்களையும் தடைசெய்ய வேண்டும் என்றுதான் கூறுவேன். அவைகளின் செயற்பாடுகளை முடக்க வேண்டும் என்றுதான் கூறுவேன். இதற்குள் அடிப்படைவாதத்தை துாக்கிப்பிடிக்காத அமைப்புக்களும் இருக்கலாம். இருந்தாலும், இலங்கையில் வாழவேண்டுமானால் முஸ்லிம்கள் பாரிய தியாகமொன்றை இனி செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. அதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

 

சற்று முன் இலங்கை அரசின் உத்தியோகபூர்வ செய்தியில், தேவாலயங்கள், கண்டி தலதாமாளிகை என்ற பவுத்த ஆலயம் மற்றும் ஏனைய மதத்தலங்களுக்கு பாதுகாப்பை பலப்படுத்தியிருப்பதாக அறிவித்தார்கள்.

 

இந்தச் செய்தியினுாடாக அரசு சொல்லவருவது என்ன என்பதை மிக இலகுவாக புரிந்துகொள்ள முடியும். அதாவது தீவிரவாதிகளின் இலக்கு என்பது மதத்தலங்கள் என்று பரப்புரை செய்கிறது. அல்லது குறித்த தீவிரவாதச் செயல் என்பது மதவெறுப்பின் அடையாளம் என்பதாக ஒரு கருத்தை உருவாக்க நினைக்கிறது என எடுத்துக்கொள்ளலாமா என புரியவில்லை.

 

இதைக் கொஞ்சம் விரிவாக யோசிப்போம். குறித்த குண்டு வெடிப்பு தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு சிங்களவர்கள் மற்றும் ஒரு தமிழரும் இருக்கிறார்கள் என்பதை அறிய முடிகிறது. அத்தோடு பாக்கிஸ்தானைச் சேர்ந்தவர்களும், இந்தியாவைச் சேர்ந்தவர்களும் இருக்கிறார்கள் என அறிய முடிகிறது. ஆயினும், பொதுவான பார்வையாக ஊடகங்களினுாடாக வெளிவருவது இஸ்லாமியர்களான ஒரு தீவிரவாத சிறு குழுவினர் என்பதுதான்.

 

எனினும், இலங்கை அரசு இதுவரை குறித்த தீவிரவாத நடவடிக்கைக்கான உண்மையான இலக்கு என்ன ? என்பதை வெளிப்படுத்தவில்லை. அதற்கான விசாரணைகள் நடந்துகொண்டிருக்கின்றன என்றும் சர்வதேச புலனாய்வுப் பிரிவும் களத்தில் இறங்கியிருக்கும் நிலையைப் பார்த்தால், கிறிஸ்தவ தேவாலயங்களை தாக்குவதோ, கிறிஸ்தவர்களைத் தாக்குவாதாகவோ இந்தக் குண்டு வெடிப்புக்கான இலக்காக இருக்க முடியாது என்பதை ஊகிக்க முடியும்.

 

கடந்த கால இலங்கை வரலாற்றில் இலங்கை முஸ்லிம்களுக்கும் இலங்கை கிறிஸ்தவர்களுக்குமிடையில் மதரீதிலானதும், கலாச்சாரரீதியிலானதுமான கசப்புகளோ – பெரும் பிரச்சினைகளோ முரண்பாடான சச்சரவுகளோ இருந்திருக்கவில்லை. இலங்கையைப் பொறுத்தவரை கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் சிறுபான்மையினரே.. இந்த இரண்டு சமூகங்களும் பெரும்பான்மை கடும்போக்குவாதிகளால் பெரிய அளவிலான தொந்தரவுகளுக்குக்கும் பிரச்சினைகளுக்குள்ளும் சிக்கியிருக்கிறார்கள். 2018 ம் ஆண்டு வரை கிறித்தவர்கள் 160 தொடக்கம் 200 சம்பவங்களை எதிர்கொண்டதாக பதிவு செய்திருக்கிறார்கள். இலங்கையின் கிறிஸ்தவ சபையொன்றே இந்தக் கணிப்பீட்டை பதிவு செய்திருக்கிறது. அதற்கான ஆதாரமும் என்னிடமுண்டு. அதுபோல முஸ்லிம்கள் 350 க்கு மேற்பட்ட பிரச்சினைகளையும் தொந்தரவுகளையும் எதிர்கொண்டிருப்பதாக பதிவு செய்யப்பட்டு்ள்ளது.

 

தீவிரவாத நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ளும் மூளைச் சலவை செய்யப்பட்ட ஒருவருக்கு குண்டுகளை வெடிக்கச் செய்ய காரணங்கள் தேவையில்லைதான் ஆனால், இலக்கு அவசியமானது இல்லையா? ஆக கிறிஸ்தவ மதஸ்தலங்களை தாக்க அதை இலக்காக தீர்மானிக்க காரணங்கள் புலப்படவில்லை. அதே நேரம் கிறிஸ்தவ தேவாலயங்கள்தான் இலக்கு எனில், நட்சத்திர ஹோட்டல்களில் குண்டுகளை வெடிக்கச் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

 

நியூசிலாந்தில் மசூதிக்குள் நடந்த துப்பாக்கிச் சூட்டுக்கு பழிவாங்கும் முகமாக நடந்திருக்கலாம் என்ற காரணங்களும் ஏற்க கூடியதாக இல்லை. நேரடியாக அனுபவித்த திகன, மற்றும் அளுத்கம பிரச்சினைகளுக்கு எதிர்வினையாற்ற திராணியற்ற நிலையில், நியூசிலாந்தில் நடந்த சம்பவத்திற்காக எதிர்வினையாற்றினார்கள் என்பது சந்தேகத்துடன் கூடிய ஒரு கூற்றாகவே தோன்றுகிறது.

 

குண்டு வெடிப்புடன் கூடிய விசயங்களை நுணுகிப்பார்க்கும்போது நாம் சிந்திக்க அதிக இடந்தரும் தகவல்களே குவிந்திருக்கின்றன.

 

இலங்கை அரசு சொல்லுவதைப்போல மிகச் சிறதொரு குழுவின் இந்த நடவடிக்கை உலகையே கொந்தளிப்புக்குள்ளாக ஆக்கியிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. இலங்கையின் இறுதிப்போரில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட போதும் சர்வதேச நாடுகளை இந்தளவு கொந்தளிக்கச் செய்யவில்லை. ஈபிள் கோபுரத்தின் தீப ஒளி நிறுத்தப்பட்டு சர்வதேச கவனத்தை ஏற்படுத்தவில்லை. சர்வதேச நாடுகள் பெரும் பரபரப்பான விசயமாக கருதி பதட்டம் அடைவதாக இருந்தால், இந்த தாக்குதலின் உண்மையான இலக்கு சர்வதேச அளவில் முக்கியமான ஏதோ ஒரு அம்சத்தை பண்பைக்கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை.

 

இதை வேறு ஒரு கோணத்தில் புரிந்துகொள்ளலாம். குண்டு வெடிப்பு நடந்து சில மணித்தியாலயங்களுக்குள் ஒரு கடிதம் பரபரப்பாக இணையத்தில் வெளிவந்திருந்தன. சர்வதேச புலனாய்வு நிறுவனம் இலங்கையில் குண்டுவெடிப்பு ஒன்று நடைபெறப்போகிறது என்பதை புலனாய்வு நிறுவனங்கள் தகவலை பரிமாறும் மொழியில் இலங்கை அரசுக்கு அனுப்பியதாக தெரிவித்தது. முதலில் மறுத்தாலும், பின்னர் அதை ஏற்றக்கொண்டிருந்தது. ஜனாதிபதி தனக்கு இதுகுறித்து தெரியாது என்று அறிவித்திருந்தார். பிரதமரும் அதே கருத்தை வெளிப்படுத்தியிருந்தார். (அப்படியானால் நாட்டை ஆள்வது யார் என்ற கேள்வி இலங்கை குடிமகனாக ஒருவருக்கு எழுவது நியாயமானதுதானே?) ஆனால், அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் சிலர் இப்படி ஒரு கடிதம் வந்திருந்ததாக ஒப்புக்கொண்டிருந்தனர்.

 

நாட்டின் ஆட்சிக்குப் பொறுப்புக்கூற கடமைப்பட்டுள்ள ஜனாதிபதி அவர்களும் பிரதமர் அவர்களும் உண்மையில் நடந்த குண்டுவெடிப்பிற்கு பொறுப்புக் கூற வேண்டும் என்பதுதானே ஒரு குடிமகனாக எதிர்பார்க்க கூடிய விசயம்?

 

சரி அந்தக் கடிதத்தில் இலக்கு, மற்றும் நடைபெறக்கூடிய காலம், அதை யார் நடத்தப் போகிறார்கள் (குற்றவாளி) போன்ற தகவல்கள் இருப்பதாக இணையத்தளச் செய்திகள் சுட்டிக்காட்டுகின்றன. ஏன் ஹரீன் பெர்னாண்டோ என்ற அரச இயந்திரத்தின் உறுப்பினர்களில் ஒருவர் (அமைச்சர்) தனது ட்வீட்டர் தளத்தில் தனது தகப்பனாருக்கு ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் குறித்த கடிதத்தை கொடுத்ததாகவும், அதைப்படித்த தந்தை அவரை தேவாலயத்தில் நடைபெறும் வழிபாட்டிற்கு போவதை தடுத்ததாகவும் அதன் காரணமாக தான் செலி்லவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். ஆக கடிதம் கிடைத்த பிறகுகூட அரச உயர்தலைவர்களுக்கு இவர் அறியத்தரவில்லை என்பதை நாம் இங்கு தெரிந்துகொள்ளலாம்.

 

அதே நேரம் குறித்த கடிதத்தை கையாண்ட பொலிஸ் உயரதிகாரி கூட பெரிதாகப் பொருட்படுத்தவில்லை என்றே அறிய முடிகிறது. குறித்த கடிதத்தை கவனத்திற் எடுத்து நடவடிக்கையில் இறங்கியிருந்தால் இந்த பெரும் துயர நிகழ்வை சில வேளை தவிர்த்திருக்கலாம் என கதைகள் உலவுகின்றன. (சில வேளை தவிர்த்திருக்கலாம் என ஏன் குறிப்பிடுகிறேன் என்றால், தீவிரவாதிகள் எப்படியும் வெடிக்கச் செய்தே இருப்பார்கள். அவர்கள் முட்டாள்தனமான வகையில் மூளைச் சலவை செய்யப்பட்வர்கள்தானே இல்லையா?)

 

குறித்த கடிதத்தை பொருட்படுத்தாமைக்கு பிரதான காரணம், இந்த பயங்கரவாத நடவடிக்கையை செய்ய இருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கும் அமைப்புதான். இந்த அமைப்பு இலங்கையின் காத்தான்குடியில் 2016ம் ஆண்டுகளில் அல்லது 2017ம் ஆண்டுகளில் முஸ்லிம்களிடையே இருக்கும் மதப்பிரிவுகளிடையயே சிறிய சிறிய சண்டை சச்சரவுகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஒரு சிறிய நிறுவனம் என்பதாகக்கூட இருக்கலாம். 2017ம் ஆண்டில் இரண்டு இஸ்லாமிய மத அமைப்புக்களுக்கிடையில் ஏற்பட்ட ஒரு சண்டையில் பொலிசாரால் தேடப்பட்ட ஒரு மௌலவி அல்லாத ஒருவர்தான் ஸஹ்ரான். அவரே தலைமறைவானதும் காத்தான்குடியில் அந்த அமைப்பு இயங்காமல் போனதாக சில தகவல்கள் கிடைக்கின்றன.

 

இருந்தாலும், இவர் தனது முகநுால் பக்கத்தில் ஐஎஸ் அமைப்பின் தீவிரவாதச் செயற்பாடுகளையும், அதன் காணொளிகளையும் பகிர்ந்துகொண்டு இருந்ததாகவும், ஐஎஸ் அமைப்பின் கருத்துக்களை எழுதிக்கொண்டிருந்ததாகவும் Sri Lanka Forward With Jeeran என்ற அமைப்பின் நிறுவனரான Muheed Jeeran என்பவரால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட கட்டுரை கூறுகிறது. ஆக, தங்களால் தேடப்படும் ஒருவரின் செயற்பாடுகளை இலங்கை உளவுப்பிரிவு துப்பறியும் நடவடிக்கையில் தொடர்ச்சியாக செயல்பட்டிருக்குமானால், சர்வதேச புலனாய்வுத் துறை அரசுக்கு அனுப்பிய கடிதத்தின் அபாயம் தெரிந்திருக்கும் என நாம் ஊகிக்கலாம். எனவே, பயங்கரவாதத்தோடு தொடர்புபட்ட ஆனால், அரச உளவு மற்றும் புலனாய்வு நிறுவனங்களால் எந்தப் பதிவுகளுமற்ற ஒரு சிறு அமைப்பு என்பதை நாம் புரிந்துகொள்வது கடினமல்ல.

 

ஆனால், இப்படியான தொரு சிறிய அமைப்பு மிகத்திட்டமிட்ட பாரிய குண்டுவெடிப்புக்களை எப்படி நிகழ்த்த முடியும்? சி4 சி3 ரக குண்டுகளை எப்படி தயாரிக்க முடியும்? இந்தக் குண்டுகளைத் தயாரிக்க தேவையான வெடிபொருட்கள் எங்கிருந்து கொண்டுவரப்பட்டிருக்க முடியும்? போன்ற கேள்விகள் இதுவரை பதிலற்றவை. இன்டர்போல் சிலவேளை இவைகளை கண்டுபிடித்து வெளிப்படுத்தலாம்.

 

இந்தக் கட்டுரையில் ஆரம்பத்தில் சுட்டிக்காட்டிய சில விசயங்களை இங்கு நினைவூட்ட விரும்புகிறேன். இலங்கையின் புலனாய்வுப் பிரிவே பொருட்படுத்தாத ஒரு சிறய அமைப்பு. குண்டை வெடிக்கச் செய்திருக்கிறது. ஆனால், உலகு தழுவிய அளவில் பரபரப்பான விசயமாக அது மாறியிருக்கிறது. இலங்கையில் கிறிஸ்தவ மதத்திற்கெதிரான மதவிரோத வெறுப்பு நடவடிக்கை என்றவகையில் இந்தக் குண்டு வெடிப்பின் இலக்கு இப்போதைக்கு பரிந்துரைக்கப்படுகிறது.

 

ஆனால், இதற்கு அப்பால்தான் உண்மையான இலக்கு இருந்திருக்கலாம் என்பதை ஓரளவு ஊகிக்கலாம். இன்டர்போல் களத்தில் இறங்கியிருப்பதே இதை உறுதிப்படுத்துகிறது.

 

இலங்கை ஊடகங்களில் கவனத்தை ஈர்க்காத, முக்கியத்துவமழிக்காத ஆனால், சர்வதேச அளவில் கவனத்தைக் குவித்திருக்கும் ஒரு செய்தி இதற்குள் இருக்கிறது. டென்மார்க்கை சேர்ந்த உலகப் பெரும் பணக்காரர் ஒருவரின் மூன்று குழந்தைகள், நடந்த குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டிருக்கின்றனர். Anders Holch Povlsen என்ற உலக கோடீஸ்வரரின் குழந்தைகளே அவை. ஆனால், ஐஎஸ் அமைப்பு வெளிப்படையாக அல்லாமல் மறைமுகமாக இலங்கைக் குண்டு வெடிப்பு சம்பவத்தை உரிமைகோரியிருப்பதாகவும், அதில் பங்கேற்ற மூன்று தீவிரவாதிகளின் புகைப்படத்தையும் வெளியிட்டிருப்பதாக டென்மார்க் இணைய ஊடகம் தகவலை வெளியிட்டிருக்கிறது.

 

ஐஎஸ் என்ற தீவிரவாத அமைப்பு தான் இலக்காக கருதும் அதே நேரம் அது சர்வதேச அளவில் பாதிப்பைச் செலுத்தக்கூடிய ஒரு ஒரு ”இலக்கை” (டார்கட்டை) கொல்லுவதற்காக – இலங்கையில் அடிப்படை வாதத்தால் பாதிப்புற்ற சிலரை மூளைச் சலவை செய்து பணமும் வழங்கி குறித்து குண்டுவெடிப்பிற்கு பயன்படுத்தியிருக்கலாம். உண்மையில் இப்படியாக இருக்கவே வாய்ப்புகள் உண்டு. ஆனால், இலங்கையில் இருக்கின்ற பிற சமூகத்தவர்களையும் பிற மதங்களையும் கொன்று குவிக்க வேண்டும் என்ற இலக்கோடு இங்கு இஸ்லாமிய இயக்கங்கள் அடிப்படைவாத அமைப்புகள் கூட செயல்பாடுகளை முன்னெடுத்ததாக இதுவரை எந்த விசயங்களும் நடந்திருக்கவில்லை.

 

இலங்கையில் இதுவரை நடந்ததெல்லாம், சர்வதேச அமைப்புகளால் பரப்பப்படும் இஸ்லாமிய வெறுப்புகளால் பாதிக்கப்பட்ட பெரும்பான்மை மக்களுக்கும், இஸ்லாமிய மதச் சீர்திருத்தம் என்ற பெயரால் பரப்பப்படும் வஹாபிய கருத்துக்களால் பாதிக்கப்பட்ட சிறியளவிலான இஸ்லாமியர்களுக்குமிடையிலான சண்டைகளும் சச்சரவுவுகளுமே தவிர தீவிரவாத செயற்பாடுகளுக்கான முன்னெடுப்புகளல்ல. எனவே, இஸ்லமிய வெறுப்பு மதஅடிப்படைவாதம், மற்றும் மதச் சீர்திருத்தம் என்ற வகையில் பரப்பப்படும் கருத்துக்கள் செயற்பாடுகள் போன்ற அனைத்தையும் நெறிப்படுத்தி ஒழுங்குபடுத்தும் ஒரு பொறிமுறையே அவசியமானது. இவை இலங்கையிலுள்ள அனைத்து சமூகங்கள் மத்தியிலும் கொண்டு சேர்க்க வேண்டிய விசயம்தான். அதற்கு அரசு உட்பட அனைத்து சமூகங்களும் களத்தில் இறங்க வேண்டும்.