இலங்கை பயங்கரவாத அரசு தமிழர்கள் மீது நடத்திய போரைப் போலவே தலிபான் தீவிரவாதிகள் நடத்தும் போரும் அறமற்றதாகவே உள்ளது.

இன்று பாகிஸ்தான் பெஷாவர் நகரில் உள்ள இராணுவ பள்ளியின் மீது தாலிபான் இயக்கத்தினர் நடத்திய தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த படுகொலையை உலக நாடுகள் கண்டித்துள்ளன. மனிதர்கள் எவரும் இத்தகைய கொடும் செயலை கண்டிக்காமல் இருக்க முடியாது.

pakistan
இந்த தாக்குதலுக்கு தாலிபான் இயக்கம் பொறுப்பேற்று உள்ளது . “எங்கள் குடும்பத்தை தொடர்ந்து பாகிஸ்தான் இராணுவம் தாக்குகிறது , அதனால் ராணுவத்தினர் எங்கள் வலியை உணரவேண்டும் என்பதற்கு தான் நாங்கள் ராணுவ பள்ளியை தாக்கினோம்” என்று கூறியுள்ளனர் தாலிபான்கள்.

2006 ஆம் ஆண்டு ஈழத்தில் உள்ள செஞ்சோலை பள்ளியை இலங்கை பயங்கரவாத அரசு வான்வழித் தாக்குதல் நடத்தியதில் 61 குழந்தைகள் அந்த இடத்திலேயே இறந்தனர் . அப்போதும் இந்திய அரசு இலங்கைக்கு ஆதரவாக செயல்பட்டது.

இந்திய அரசு கண்டித்ததாக தெரியவில்லை. இந்த தாக்குதலுக்கு பிறகு இலங்கை அமைச்சர் சொன்ன செய்தி தான் கொடூரமானது . கெஹகிலிய ரம்புக்வெல எனும் அமைச்சர் ” கொல்லப்பட்டது சிறுவயது போராளிகள். அரசுக்கெதிராக செயற்படும் எவராயினும் அதாவது வயது, பால் வேறுபாடின்றி கொல்வோம்” என்று கூறினார்.

இதே நியாயத்தை தாலிபான்களும் கூறலாம். வரும்கால தீவிரவாதிகளை ஒழிக்கவே குழந்தைகளை கொன்றோம் என்று இவர்கள் கூறலாம். உலகில் எந்த மூலையிலும் போரில் குழந்தைகள் கொல்லப்படக்கூடாது என்ற ஐ.நா மன்ற விதி உள்ளது. இருப்பினும் போராளிகளும், பயங்கரவாத அரசுகளும் குழந்தைகளை கொன்று வருவது ஒரு அறமற்ற செயலாகும்.

sencholai3
இந்திய அரசு தாலிபான்களை கண்டிக்குமே என்றால் 2009 ஆம் ஆண்டு பல்லாயிரம் தமிழ்க் குழந்தைகளை கொலை செய்த இலங்கை அதிபரையும் கண்டிக்க வேண்டும். ஆனால் இதுவரை ராஜபக்சே இந்திய அரசால் கண்டிக்கப்படவில்லை, தண்டிக்கப்படவில்லை. மாறாக இந்திய அரசு அவனுக்கு சிகப்புக் கம்பள வரவேற்பு கொடுக்கிறது. இது எப்படியான பயங்கரவாத ஆதரவு போக்கு என்பதை இந்திய மக்கள் சிந்திக்க வேண்டும்.

இன்று தலிபான் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட பிஞ்சுகளுக்கு நம் அஞ்சலியை உரித்தாகும் அதே நேரத்தில் உலகில் எங்கும் இது போன்ற பயங்கரவாத செயல்கள் இனி நடைபெறக் கூடாது என்பதை மக்களாகிய நாம் உறுதி செய்ய வேண்டும். பயங்கரவாதத்திற்கு இன்னொரு பயங்கரவாதமே தீர்வு என்ற எண்ணத்தை பயங்கரவாத அரசுகளும், பயங்கரவாத போராளிகளும் உடனடியாக கைவிடும் நிலை இவ்வுலகில் உருவாக வேண்டும்.

உலகில் முழு அமைதி நிலவ நம்மாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம். எல்லா உயிர்களும் சுதந்திரமாக இன்புற்று வாழ வகை செய்வோம்.

இராச்குமார் பழனிசாமி.