தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் பாதுகாப்பு அமைச்சு இணைய தளத்தில் அவதூறு செய்யப்பட்டதற்கும், கொழும்பில் நடைபெற்ற மனித உரிமை கூட்டத்தில் குழப்பம் நிகழ்ந்தமைக்கும் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவே பொறுப்பேற்க வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

mano-0
கொழும்பில் இன்று நடைபெற்ற, அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய மனோ கணேசன் மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

பாதுகாப்பு அமைச்சின் இணையதளத்தை தனியார் ஒரு ஊடக நிறுவனம் நடத்தவில்லை. பாதுகாப்பு அமைச்சு என்பது அதிகாரப்பூர்வ அரசாங்க நிறுவனம் ஆகும். ஆகவே முதல்வர் ஜெயலிதாவையும், பிரதமர் நரேந்திர மோடியையும் அரசாங்கத்தின் அதிகாரபூர்வ இணையத்தளம் அவதூறு செய்துள்ளது. அதுவும் மிகவும் ஆபாசமான முறையில் கேலிச்சித்திரமும் வரையப்பட்டு கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த இலட்சணத்தில்தான் இவர்கள் இந்த நாட்டு மக்களது உண்மை உணர்வுகளை எடுத்துக்கூறும் சமூக தளங்களையும், தனியார் இணைய ஊடக தளங்களையும் தடை போட்டு நிறுத்த முயல்கிறார்கள்.

பாதுகாப்பு அமைச்சு இன்று ஒரு அரசியல் கட்சியை போல் நடந்துகொள்கிறது. அதன் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஒரு அரசியல்வதியை போல் நடந்துகொள்கிறார். ஆனால் அவர் ஒரு திரைமறைவு அரசியல்வாதி. இதனால்தான் இவரை பகிரங்க அரசியலுக்கு வரும்படி நான் சில வாரங்களுக்கு முன்னர் அழைப்பு விடுத்தேன். திரைக்கு பின்னால் இருந்துகொண்டு இப்படியான குழப்பங்களை இவர் விளைவிக்கக்கூடாது. இந்த நாட்டின் நட்பு நாடு இந்தியா. எவர் என்ன சொன்னாலும் இந்திய மத்திய அரசும், தமிழக மாநில அரசும் இந்த நாட்டு தேசிய இனப்பிரச்சினை தீர்வுடன் பின்னிப்பிணைந்தவை. மத்திய அரசின் பிரதமரையும், மாநில அரசின் முதல்வரையும் ஆபாசமாக சித்தரித்த இந்த நடவடிக்கையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. பாதுகாப்பு செயலாளர் என்ற முறையில் கோட்டாபய ராஜபக்ஷ இதற்கு முழுப்பொறுப்பையும் ஏற்க வேண்டும்.

அடுத்து நேற்று முதல்நாள், தங்கள் சோகங்களை பகிர்ந்து கொள்ள நாட்டின் தலைநகரம் கொழும்புக்கு, வடக்கில் இருந்து வந்த தாய்மார்களையும், பிள்ளைகளையும் சிலர் பயமுறுத்தி திருப்பி அனுப்பியுள்ளார்கள். இது ஒரு தொடர்கதை. சில தேரர்கள் அடங்கிய தீவிரவாதிகள், சமீப காலமாக பல்வேறு பொது நிகழ்வுகளை குழப்பி வருகிறார்கள். ஊடக மாநாடுகள், பொதுக்கூட்டங்கள் ஆகியவற்றை உள்ளே நுழைந்து தடாலடியாக குழப்பும் இவர்கள், நாளை வீடுகளுக்குள் வந்து படுக்கையறை, குளியலறைகளுக்குள்ளும் நுழைவார்கள். சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு இவர்கள் மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கின்றார்கள். இந்த சட்ட விரோத செயல்களை தடுத்து நிறுத்தாத, பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ இவை அனைத்துக்கும் பொறுப்பு ஏற்க வேண்டும்.

காணாமல் போன தங்கள் உறவுகளை தேடி அப்பாவி மக்கள் நாடு முழுக்க போவார்கள். ஜனாதிபதியையும், அமைச்சர்களையும் கடந்த காலங்களில் சந்தித்தார்கள். இன்று சிவில் பிரதிநிதிகளையும், இந்த நாட்டில் சட்டப்படி தங்கி இருக்கும் வெளிநாட்டு பிரதிநிதிகளையும் அவர்கள் சந்தித்தார்கள். இதில் என்ன தவறு இருக்க முடியும்?

இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் சட்டத்தை மீறி இருந்தால் அவர்கள் மீது வழக்கு தொடருங்கள். அவர்கள் அதற்கு தயார். உண்மையில் தமது கூட்டத்தை குழப்பிய தேரர்கள் உள்ளடங்கிய தீவிரவாத நபர்கள் மீதும், அவர்களை கைது செய்யாமல் விட்ட பொலிசார் மீதும் அந்த மனித உரிமை கூட்ட ஏற்பாட்டாளர்கள் வழக்கு தொடர வேண்டும் என நான் எதிர்பார்க்கின்றேன்.