congress-0naamthamillar01இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான திட்டமிட்ட இனப்படுகொலை புரிந்ததற்காக இராசபக்சே கும்பல் மீது விசாரணை நடத்த தற்சார்பு உள்ள பன்னாட்டுப் புலனாய்வு மன்றம் அமைக்க வேண்டும்.

இலங்கையிலும் இந்தியாவிலும் மற்றும் உலக நாடுகளிலும் பரவி வாழும் ஈழத் தமிழர்களுடன் தமிழீழம் குறித்த பொது வாக்கெடுப்பு நடத்தி அவர்கள் அளிக்கும் தீர்ப்புக்கு ஏற்ப ஐ.நா. பேரவை உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மேற்கண்ட இரு கோரிக்கைகளையும் உள்ளடக்கிய தீர்மானத்தை ஜெனீவாவில் விரைவில் கூட இருக்கும் மனித உரிமை ஆணையத்தின் கூட்டத்தில் இந்தியாவே முன்மொழிய வேண்டும் என தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் முன்மொழிந்து அனைத்துக்கட்சிகளாலும் ஆதரிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழக மாணவர்களும் இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி சாகும்வரை உண்ணாவிரதம், இரயில் மறியல், ஆர்ப்பாட்டம் போன்றவற்றில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு கட்சிகளும் இதே கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

ஆனால், இந்திய அரசு தமிழக சட்டமன்றத் தீர்மானத்தையோ, தமிழக மக்களின் ஒன்றுபட்ட உணர்வையோ ஒரு சிறிதும் மதிக்காமல் செயல்படுகிறது.

மத்திய அரசின் வெளியுறவுத் துறையின் அதிகாரபூர்வ செய்தித் தொடர்பாளர் சையத் அக்பரூதீன் ஐ.நா. மனித உரிமை குழுவின் கூட்டத்தில், “அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை இந்தியா ஆராய்ந்து வருகிறது’ என்று கூறியுள்ளார்.

அதாவது இந்தியா எத்தகைய தீர்மானத்தையும் கொண்டுவரப் போவதில்லை. அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை ஆதரிப்பதா இல்லையா என்பதை மட்டுமே இந்திய அரசு முடிவெடுக்கும் என்பதை சொல்லாமல் சொல்லி இருக்கிறார்.

வெந்த புண்ணில் வேலைச் செருகுவதைப் போல மற்றொரு முடிவையும் இந்திய அரசு எடுத்துள்ளது. மார்ச் 6ஆம் தேதியன்று இலங்கையின் பாதுகாப்புத்துறைச் செயலாளர் கோத்தபய இராசபக்சே டெல்லி வந்து தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர மேனனைச் சந்தித்தார். அந்தச் சந்திப்புக்குப் பிறகு, சிவசங்கர மேனன் “இலங்கை இராணுவ வீரர்களுக்கு இந்தியாவில் அளிக்கப்படும் பயிற்சிகள் தொடரும்” என்று அறிவித்துள்ளார்.

தமிழ் மக்களிடமிருந்து தொடர்ந்து காங்கிரஸ் கட்சியும் இந்திய அரசும் அந்நியப்பட்டுக் கொண்டே போவதைத்தான் மேற்கண்ட நிகழ்ச்சிகள் உறுதி செய்கின்றன.

இந்திய அரசுக்கு ஆதரவளித்த பல கட்சிகள் கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஒவ்வொன்றாக விலகி எதிர்க்கத் தொடங்கியுள்ளன. அமெரிக்காவுடன் இந்திய அரசு செய்துகொண்ட அணு உடன்படிக்கையை கண்டித்து இடதுசாரிகள் மத்திய அரசுக்கு அளித்த ஆதரவை திரும்பப் பெற்றனர். இடதுசாரிகளின் முடிவு கொள்கை வழியிலான ஒரு முடிவு ஆகும்.

ஆனால் காங்கிரúஸாடு கூட்டணி சேர்ந்து கடந்த காலத்தில் ஒட்டித் திரிந்த தி.மு.க. ஈழத் தமிழர் பிரச்னையில் காங்கிரஸ் துரோகம் செய்துவிட்டதாகக் கூறி தற்போது கூட்டணியிலிருந்து விலகி நிற்கிறது.

வரலாறு காணாத வகையில் ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட நிகழ்ச்சியில் காங்கிரஸýக்கு எவ்வளவு பங்கு உண்டோ அதற்கு சற்றும் குறையாத பங்கு தி.மு.க.விற்கும் உண்டு. கடந்த 10 ஆண்டு காலமாக காங்கிரஸ் செய்த அத்தனை தவறுகளிலும் சம பங்காளியாக இருந்த தி.மு.க. இப்போது காங்கிரûஸக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்திவிட்டு தான் மட்டும் பரிசுத்தவான் வேடம் போட்டுத் தப்ப முயலுகிறது.

2ஜி ஊழல் பிரச்னையை காட்டி தி.மு.க.வை காங்கிரஸ் மிரட்டி தன்னோடு இருக்க வைத்தது. ஆனால் அந்தப் பிரச்னையில் காங்கிரஸ் தனக்கு உதவவில்லை என்ற கோபம் தி.மு.க. தலைமைக்கு உண்டு. பிரச்னை மத்திய அரசின் கையில் இல்லை என்பதையும் உச்சநீதிமன்றத்தின் கைக்குச் சென்றுவிட்டது என்பதையும் காங்கிரஸ் எடுத்துக்காட்டிய பிறகும் தி.மு.க. தலைமை சமாதானம் அடையவில்லை. மூழ்கும் கப்பலில் இருந்து தப்புவதற்காக வெளியே பாய்ந்து ஓடும் எலியைப் போல காங்கிரஸ் கூட்டணியிலிருந்து தி.மு.க. வெளியேறிவிட்டது.

காங்கிரஸ் ஆட்சி செய்த தவறுகளால் உலகெங்கிலும் இந்தியா தனிமைப்பட்டு நிற்கிறது. இந்தோனேசியா, வியத்நாம் போன்ற நாடுகளின் விடுதலைப் போராட்டங்களுக்கு பேராதரவு, சூயஸ் கால்வாய் பிரச்னையில் எகிப்திற்கு உறுதியான ஆதரவு, பாலஸ்தீன பிரச்னையில் அராபியருக்கு ஆதரவு, தென்னாப்பிரிக்க வெள்ளை அரசின் நிறவெறியை எதிர்த்து கருப்பின மக்களுக்குத் துணை நின்றது போன்ற பல்வேறு நடவடிக்கைகளின் விளைவாக ஆசிய-ஆப்பிரிக்க நாடுகளின் இணையற்ற தலைவராக அன்று நேரு உயர்ந்தார்.

ஆனால், இப்போது சோனியாவின் வழிகாட்டலில் செயல்படும் மன்மோகன் சிங் அரசின் காலத்தில், உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு அதலபாளத்திற்குச் சரிந்துவிட்டது. நேருவும் இந்திராவும் தேடித் தந்த நட்பு நாடுகள் இப்போது பகை நாடுகளாகிவிட்டன. இந்தியாவிற்கு அண்மையில் உள்ள மியான்மர், வங்க தேசம், நேபாளம், மாலத்தீவு, இந்தோனேசியா, மலேசியா போன்ற நாடுகள் சீனாவின் நட்பு நாடுகளாக மாறி விட்டன.

இந்துமாக் கடல் பகுதியில் வல்லரசாக திகழ்ந்த இந்தியா தனது தவறான கொள்கைகளின் காரணமாக அந்த தகுதியை சீனாவிடம் இழந்து தவிக்கிறது. இலங்கையை சீனாவின் பிடியிலிருந்து மீட்பதற்காக ஈழத் தமிழர்களை பலிகொடுக்க துணிந்த இந்தியாவின் கொள்கை, இந்துமாக் கடலின் ஆதிக்கத்தை சீனாவிடம் சரணடையச் செய்துவிட்டது. கொக்கு தலையில் வெண்ணெய் வைத்துப் பிடிக்க முயன்ற மூடனின் செயலைப் போல இந்தியாவின் செயலும் அமைந்துவிட்டது.

1970களில் இலங்கை திரிகோணமலையில் அமெரிக்கக் கடற்படை தளத்தை கொண்டு வருவதற்கான ரகசிய முயற்சிகளில் – இலங்கையின் ஒத்துழைப்போடு – அமெரிக்கா ஈடுபட்டபோது, அன்றைய இந்தியப் பிரதமராக இருந்த இந்திரா காந்தி அதை தனது இராசதந்திரத்தின் மூலம் முறியடித்தார். 1970ஆம் ஆண்டு செப்டம்பரில் அணிசாரா நாடுகளின் மகாநாடு நடைபெற்றபோது, இந்துமாக் கடல் பகுதியை அமைதிப் பிராந்தியமாக அறிவிக்க முன்வருமாறு ஐ.நா.வை வலியுறுத்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்திரா எடுத்துக்கொண்ட முயற்சிகளே இதற்கு காரணமாகும். இதைத் தொடர்ந்து 1971ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதியன்று ஐ.நா. பேரவையில் இந்துமாக் கடல் பகுதியும் அதனுடைய வானவெளியும் என்றென்றும் அமைதிப் பிராந்தியங்களாக இருக்கும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தொலை நோக்கோடும், இராசதந்திர அறிவோடும் இந்திரா காந்தி இவ்வாறு செயல்பட்டதன் விளைவாக, இந்துமாக் கடல் பகுதியில் கடந்த 40 ஆண்டு காலத்திற்கும் மேலாக எந்த வல்லரசும் இராணுவ தளம் அமைக்க முன்வரவில்லை. ஆனால், இப்போது இந்துமாக் கடல் பகுதியில், குறிப்பாக, இந்தியாவைச் சுற்றியுள்ள இந்தோனேசியா, மலேசியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, மாலத்தீவு போன்ற நாடுகளில் சீனாவின் கடற்படைத் தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சில நாள்களிலோ அல்லது சில மாதங்களிலோ அல்லது சில ஆண்டுகளிலோ இந்த கடற்படைத் தளங்களை சீனா அமைத்திருக்க முடியாது. பல ஆண்டு காலமாக தொடர்ந்து அந்த நாடுகளுடன் நட்புறவு பூண்டு அதற்குப் பிறகுதான் இந்தத் தளங்கள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். இத்தனை காலமாக இந்திய அரசு இதைத் தடுக்க எந்த முயற்சியும் மேற்கொள்ளாதது ஏன்?

இலங்கையில் ஈழத் தமிழர்களை ஒடுக்குவதற்கு இலங்கை இராணுவத்திற்கு பயிற்சியும் ஆயுதங்களும் அளித்து இந்தியா உதவாவிட்டால் அந்நாடு சீனாவிடம் உதவி கேட்க முற்படும் என தமிழ்நாட்டு காங்கிரஸ் தலைவர்களும் வாதம் புரிகிறார்கள். அவர்கள் வாதப்படியே வைத்துக்கொள்வதனாலும் இலங்கைக்கு இந்தியா இவ்வளவு உதவி செய்த பிறகும் சீனாவின் கடற்படைத் தளம் ஹம்பந்தோட்டாவில் அமைந்தது எப்படி? ஈழத் தமிழர்களை பலி கொடுத்த பிறகும் சீனாவை இலங்கையிலிருந்து வெளியேற்ற முடியவில்லையே, அது ஏன்?

இலங்கை சார்க் நாடுகளில் ஒன்று. ஆகவே, அந்நாட்டிற்கு இராணுவப் பயிற்சியும் ஆயுதங்களும் கொடுக்க வேண்டியது இந்தியாவின் கடமை என வாதமிடும் காங்கிரஸ் தலைவர்கள், சார்க் நாடுகளில் ஒன்றான பாகிஸ்தானின் இராணுவத்திற்கு பயிற்சியும் ஆயுதங்களும் அளிக்க முன்வர மறுப்பது ஏன்?

பாகிஸ்தானுக்கு அவற்றை அளித்தால் அது இந்தியாவிற்கு எதிராகத்தான் பயன்படுத்தும் என்பது தெரிந்ததால் அவற்றைக் கொடுக்கவில்லை. ஆனால், இலங்கைக்கு அதைச் செய்வது அங்குள்ள தமிழர்களைக் கொன்று குவிக்க என்று தெரிந்த பிறகும் அதைச் செய்வது என்பது மன்னிக்க முடியாத மாபெரும் தவறாகும். இதன் விளைவாகத்தான் இன்றைக்கு தமிழ்நாட்டில் எந்தக் கட்சியும் காங்கிரúஸாடு கைகோக்க விரும்பவில்லை.

சபை நடுவே பாஞ்சாலியை துகில் உரிந்து துச்சாதனன் அவமானப்படுத்தியபோது, துரியோதனன் தம்பியைப் பாராட்டி மகிழ்ந்தான். அதன் விளைவாகத்தான் பாரதப்போரில் தனது தம்பிகளையும் துணையாக நின்ற பீஷ்மர், துரோணர், கிருபர், கர்ணன் போன்றவர்களையும் இழந்து தன்னந்தனியனாக பீமனை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு ஆளாகி இறுதியில் உயிரிழந்தான்.

அதைப்போல ஈழத் தமிழர்களை இராசபக்சே கொன்று குவித்தபோது பார்த்து மகிழ்ந்த காங்கிரஸ் கட்சி இன்று தேர்தல் களத்தில் தனித்து விடப்பட்டு தவிக்கிறது. துரியோதனனுக்கு ஏற்பட்ட கதிதான் காங்கிரஸýக்கும் ஏற்பட இருக்கிறது. பாரதப் போரில் துரியன்; தேர்தல் களத்தில் காங்கிரஸ்!