ஈழத்தமிழ் மக்கள் மீது சிறீலங்கா அரசு மேற்கொண்ட இன அழிப்பு தொடர்பில் தீர்மானம் ஒன்றை ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா மாநாகரசபை அண்மையில் தனது வருடாந்தக் கூட்டத்தொடரில் நிறைவேற்றியுள்ளது.

இந்த தீர்மானத்தை தமிழ் மக்கள் ஏகமனதாக வரவேற்பதுடன், அதனை நிறைவேற்றிய மாநகரசபைக்கும், அதற்காக உழைத்த தமிழர் இயக்கத்தின் செயற்பாட்டாளர்களுக்கும் தமிழ் இனம் தனது நன்றியைக் கூறக் கடமைப்பட்டுள்ளது.

 

தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகள் சிறீலங்கா அரசினால் மறுக்கப்படுகின்றது, அங்கு அனைத்துலக சட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தி சமாதானம் மீட்டெடுக்கப்பட வேண்டும்.

 

அரசியல் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்படுவதுடன், தமிழ் மக்களின் பகுதிகளில் இருந்து சிறீலங்கா படையினர் மீளப்பெறப்படவேண்டும். சிறிலங்காவில் பயங்கரவாதத் தடைச்சட்டம் முற்றாக நீக்கப்பட்டு தமிழ் மக்களினதும், சிங்கள மக்களினதும் பாதுகாப்புக்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்ற பரிந்துரைகளை உள்ளடக்கிய இந்த தீர்மானத்தில் சிறீலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திலும் பாரப்படுத்தும்படியும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

சிறீலங்காவில் உள்ள வடமாகாணசபை மற்றும் தமிழ் நாட்டு சட்டசபையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களைப்போன்ற இந்த தீர்மானம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.

 

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் கொண்டுவந்த தீர்மானத்தைத் தொடர்ந்து அமெரிக்காவின் முன்னாள் அரச தலைவர் வேட்பாளர் கிலாhரி கிளிங்டன் அவர்கள் உடனடியாக தமிழகத்திற்கு பயணம் மேற்கொண்டு முதல்வரைச் சந்தித்திருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

 

அதாவது இந்த தீர்மானங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததுடன், அவை சிறீலங்கா அரசுக்கு மிகப்பெரும் அழுத்தங்களை கொடுக்கவல்லன என்பதே அதன் கருத்தாகும்.

 

எனவே உலகம் எங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களும், அமைப்புக்களும் தங்கள் நாடுகளில் உள்ள நகரசபைகள், மாநகர சபைகள், கிராமசபைகள் என எல்லா அரசியல் மையங்களிலும் சிறீலங்கா அரசின் இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

 

அடிமட்ட அரசியல் தளத்தில் மேற்கொள்ளப்படும் இந்த அரசியல் அழுத்தம் அல்லது அரசியல் மாற்றம் என்பது காலப்போக்கில் அந்த நாடுகளின் உயர்மட்ட அரசியல் கட்டமைப்பில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தவல்லன.

 

இவ்வாறான தீர்மானமானது தாயகத்திலும், தமிழகத்திலும் உள்ள கிராம சபைகள், நகரசபைகள் மற்றும் மாநகரசபைகள் போன்றவற்றிலும் மேற்கொள்ளப்படவேண்டும். அதற்கான முயற்சிகளை தமிழ் இனம் ஒருங்கிணைந்து மேற்கொள்வதன் மூலம் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களுக்;கான நீதியை பெறுவதுடன், தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கும் இது வழியை ஏற்படுத்தும்.

 

இந்த அரசியல் மையங்களில் மேற்கொள்ளப்படும் தீர்மானங்களை ஐக்கிய நாடுகள் சபையிடம் கையளிப்பதன் மூலம் அவர்கள் மீதான அழுத்தங்களை அதிகரிக்கமுடியும். அதுமட்டுமல்லாது, ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளுடன் மடடும் நின்றுவிடாது, சீனா, ரஸ்யா உட்பட மிகப்பெரும் வல்லரசுகளுடனும், ஆசியாவிலும், தென்அமெரிக்காவிலும் உள்ள சிறிய நாடுகளுடனும் தமிழ் மக்கள் தமது ராஜதந்திர உறவுகளை வலுப்படுத்த வேண்டும்.

 

இதனைத்தான் ஐரோப்பிய நாடு ஒன்றைச் சேர்ந்த இராஜதந்திரி ஒருவர் அமைய சந்திப்பின் போது தெரிவித்திருந்தார். அதாவது தமிழ் மக்கள் ஏன் மீண்டும் மீண்டும் எங்களிடம் வருகின்றனர்? நாம் அவர்களுக்காக பேசுகின்றோம் எனவே அவர்கள் ஏனைய நாடுகளின் பிரதிநிதிகளை அணுகி அவர்களின் ஆதரவுகளையும் பெறுவதன் மூலம் தான் தமது கோரிக்கைகளை வலுப்படுத்த முடியும் என்பதே அவரின் ஆலோசனையாக இருந்தது.

 

எனவே நாம் ஒரு உலகளாவிய ரீதியிலான அரசியல் செயற்பாட்டு நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்க வேண்டிய தருணமிது.

 

நன்றி: இலக்கு