மலேசிய நாட்டின் பினாங்கு மாநில சட்டமன்றம், பினாங்கு நகரில் அமைந்துள்ளது. இந்தச் சட்டமன்றத்திற்கு இன்று (நவம்பர் 10 அன்று) காலை 11மணி 45 நிமிடத்திற்கு மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் சென்றார்கள். சட்டமன்றம் நடைபெற்றுக் கொண்டு இருந்தது. சட்டமன்றத்திற்குள் வைகோ அவர்கள் நுழைந்து, பார்வையாளர்கள் வரிசையில் அமரச் சென்றபோது, சட்ட மன்ற அவைத் தலைவர் மாண்புமிகு லாசுங் கியாங் அவர்கள், “நமது சட்டமன்றத்திற்கு இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த முக்கியமான தலைவரான வைகோ வந்திருக்கிறார். நமது சட்டமன்றம் எப்படி நடைபெறுகிறது என்பதை அறிவதற்காக வந்துள்ளார். அவரை நானும் இந்தச் சட்டமன்றமும் வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்” என்று கூறினார். அதற்கு பிறகு வைகோ அவர்கள் அவைத் தலைவருக்கும், சபையினருக்கும் வணக்கம் தெரிவித்தார்.

துணை முதலமைச்சர் பேராசிரியர் இராமசாமி அவர்கள் “இன்று நம் சட்டமன்றத்திற்கு தமிழகத்திலிருந்து முக்கியமான தலைவரான வைகோ வந்திருக்கிறார். அவர் பல ஆண்டுகள் இந்திய நாடாளுமன்றத்தில் சிறப்பாகப் பணியாற்றியவர். கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற பினாங்கு அனைத்துலக தமிழ் மாநாட்டில் பங்கேற்று பாராட்டுக்குரிய சிறப்புரை ஆற்றினார். இன்று நமது மன்றத்திற்கு அவர் வந்ததற்கு மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன் ” என்று கூறினார்.

ஆளும் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரான திரு நேதாஜி ராயன் அவர்கள் வரவேற்றுப் பேசினார்.

அவை நண்பகல் இடைவேளைக்காக ஒத்தி வைக்கப்பட்டவுடன், அவைத் தலைவரின் அறைக்கு துணை முதல்வர் இராமசாமி அவர்கள் வைகோவை அழைத்துச் சென்றார். சட்டமன்ற அவைத் தலைவர் வைகோவை வரவேற்று நினைவுப் பரிசு வழங்கினார்.

தாயகம் தலைமைக் கழகம்
சென்னை – 8 மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
10.11.2014