மத்திய கிழக்கு நாடுகள், ஐரோப்பிய நாடுகள், சோவித்து ஒன்றியத்துடன் இருந்த நாடுகள், யூகோஸ்லாவாக்கியா என்ற கட்டமைப்பில் இருந்த நாடுகள், தென்அமெரிக்க நாடுகள் தென்சீனக் கடல் என விரிவடைந்து செல்லும் ஆதிக்கப்போர் மெல்ல மெல்ல நகர்ந்து தென்னாசியா பிராந்தியத்திற்குள் நுளைந்துள்ளது.

 

மேற்குலகத்தின் தந்திரத்தை அறியாத சிங்கள தேசமும் இந்திய தேசமும் தமிழ் இனத்தின் மீதான இனவெறியால் தற்போது ஒரு மீள முடியாத பொறிக்குள் மாட்டிக்கொண்டுள்ளன. சிறீலங்காவில் இடம்பெற்ற போரை ஊக்கிவித்து, இந்தியாவை அதில் பங்கெடுக்க வைத்து, இனவெறி கொண்ட சிங்களத் தலைவர்களை போர்க்குற்றவாளிகாக்கி, அதன் மூலம் ஐக்கிய நாடுகள் சபைக்குள் அவர்களை இழுத்து தற்போது சிங்களத்திற்குள் மோதல்களை உண்டுபண்ணியுள்ளது மேற்குலகம்.

 

இஸ்ரேல் மேற்கொள்ளும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஏற்படும் விவாதங்களில் இருந்து விலகியிருப்பதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பில் இணைந்து கொள்ளாது விலகியிருந்த அமெரிக்கா, சிறீலங்காவில் போர் உச்சம் கொண்ட வேளையில் 2008 ஆம் ஆண்டு தானாக முன்வந்து ஐ.நா மனித உரிமைகள் அமைப்பில் இணைந்தபோதே நாம் ஒன்றை கூறியிருந்தோம், போரை முடிக்கத்திட்டமிட்டுள்ள அமெரிக்கா அதன் மூலம் ஒரு தரப்பை அழிக்கவும், மறு தரப்பை மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் என்ற போர்வையில் மிரட்டிப் பணியவைத்து தனது ஆதிக்கத்தை செலுத்தப்போகின்றது என்று.

 

ஆனால் சிங்கள தேசமோ அல்லது இந்திய தேசமே அதனை அப்போது பொருட்படுத்தவில்லை, தமிழ் மக்கள் மீது இருந்த தீராத பகை அவர்களின் இராஜதந்திரக் கண்களை மறைத்துவிட்டது.

 

போரில் உதவினால் சிறீலங்கா தனக்கு விசுவாசமாக இருக்கும் என இந்தியா கனவு கண்டது, ஆனால் பௌத்த மதம் அதன் மதத்துடன் தான் சேரும் என்பதை உறுதிப்படுத்தும் விதமாக சிறீலங்கா சீனாவுடன் நெருக்கமாகியது, அம்பாந்தோட்டை துறைமுகத்தை நிர்மாணித்த சீனா தனது வழங்கல் பாதையையும், போர்க் கப்பல்களுக்கான எரிபொருள் நிரம்பும் தளத்தையும் உறுதி செய்தது.

 

சீனாவின் இந்த நடவடிக்கை அமெரிக்காவின் தென் ஆசியப் பிராந்தியம் மீதான கவனத்தை சிதறடித்திருந்தது. தென்சீனக்கடலில் ஒரு செயற்கைத் தீவை அமைத்து அதில் தனது ஏவுகணைகளைப் பொருத்திய சீனாவை மேலும் நம்ப மேற்குலகம் தயாராகவில்லை.

 

எனவே தான் சிறீலங்காவில் ஒரு ஆட்சி மாற்றத்தை கொண்டுவந்து சீனாவை வெளியேற்ற இந்தியாவுடன் இணைந்து செயற்பட அமெரிக்கா திட்டமிட்டது. ஆனால் இது தெரியாத மகிந்த ராஜபக்சா விடுதலைப்புலிகளை போரில் வீழ்த்தியாதால் தானே தென்னிலங்கையின் துட்டகெமுனு என நினைத்துக் கொண்டார்.

 

ஆனால் மகிந்தவை அனுமதித்தால் சீனா அகற்றமுடியாத ஒரு இடத்தை சிறீலங்காவில் பிடித்துவிடும் என மேற்குலகம் அச்சமடைந்தது, சரத் பொன்சேக்கா என்ற மற்றும் ஒரு போர்க் குற்றவாளியை தனது துருப்புச் சீட்டாக பயன்படுத்தியது, தேர்தலுக்கு முன்னர் சரத் பொன்சேகாவின் மூலம் ஒரு இராணுவப்புரட்சிக்கு அமெரிக்கா திட்டமிட்டது ஆனால் அதனை அறிந்த இந்தியா, மகிந்தாவை காப்பாற்ற தனது இராணுவத்தை நள்ளிரவில் தயார்படுத்தியது. எனினும் பொன்சேகாவின் திட்டம் முன்னரே அறியப்பட்டதால் தென்னிலங்கையில் இடம்பெறவிருந்த கலவரம் தடுக்கப்பட்டது. சிங்களவர்களின் தலைகள் பல தப்பின.

 

இதனிடையே, 2010 ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் மகிந்தா பெரு வெற்றியீட்டியதுடன், நாடாளுமன்றத்திலும் பெரும்பான்மை பெற்றார்.
அதனைத் தொடர்ந்து 18 ஆவது திருத்தச்சட்டத்தை 2010 ஆம் ஆண்டு ஏப்பிரலில் கொண்டு வந்து எத்தனை தடவை வேண்டுமானாலும் தான் அரச தலைவராக இருக்கலாம் எனவும், சுதந்திரமாக செயற்பட்ட அரச நிறுவனங்களை தனது கட்டுப்பாட்டிலும் கொண்டு வந்தார்.

 
பொருளாதார ரீதியாகக் காப்பாற்ற சீனா தனக்கு பக்கபலமாக இருக்கும் என்பது அவரின் அசையாத நம்பிக்கை, ஆக மொத்தத்தில் தமிழ் மக்களை அழிப்பதற்கு என அடியாளாகக் கூட்டிவரப்பட்ட இந்தியா சிறீலங்காவில் இருந்து துரத்தப்பட்டது.

 
எனினும் விழுந்தவன் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற கணக்காக யாழ்ப்பாணத்தில் ஒரு தூதரகத்தை திறந்து தனது எடுபிடி வேலையை இந்தியா கவனித்து வந்தது.

 

இந்தநிலையில் 2010 ஆம் ஆண்டில் இருந்து 2015 ஆம் ஆண்டு வரையிலுமான காலத்தில் சிறீலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான புகைப்படங்கள், காணொளிகள் என பல தகவல்கள் வெளிவரத் தொடங்கின. ஐக்கிய நாடுகள் மனித உரிமை அமைப்பிலும் அதன் தாக்கம் எதிரொலித்தது.

 

புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளையும், அதனை வெளிக்கொண்டு வரும் நடவடிக்கைகளையும் மேற்குலக வல்லுனர்களும் ஊடகவியலாளர்களுமே மேற்கொண்டு வந்தனர்.

 
உதாரணத்திற்கு சனல் 4 தொலைக்கட்சி, பிற்றர் சார்க்ஸ், பிரித்தானியாவை தளமாகக் கொண்ட சன்டே ரைம்ஸ் பத்திரிகையில் பணியாற்றிய காலம் சென்ற அமெரிக்காவைச் சேர்ந்த ஊடகவியலாளர் மேரி கெல்வின் என நாம் இங்கு பலரைக் குறிப்பிடலாம்.

 
சிறீலங்கா அரச படைகளிடம் சரணடைந்த பின்னர் கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய பின்னர் கொடூரமாக தலையில் சுட்டுக் கொல்லப்பட்ட விடுதலைப்புலிகளின் ஊடகப்பிரிவு பணியாளர் இசைப்பிரியா தொடர்பான காணொளிப் போர்க்குற்ற ஆதாரங்களையும் சனல் 4 இன் ஆசிய பிரிவு ஊடகவியலாளர் ஜொனார்தன் மில்லரே 2013 ஆம் ஆண்டு உலகிற்கு அறியச் செய்தவர்.

 
போரின் பின்னரான தேடுதல் மற்றும் துப்பரவு என்ற போர்வையில் சிறீலங்கா படையினர் பரிய அளவிலான படுகொலைகளை மேற்கொண்டதாகவும், அவ்வாறு கொல்லப்பட்டவர்களில் பலர் சரணடைந்தவர்களே எனவும் அனைத்துலக போர்க் குற்றவியல் வழக்கறிஞர் யூலியன் நோவல் தெரிவித்திருந்தார்.

 
இவர்களின் இந்த செயற்பாடுகளின் பின்னனியில் புலம்பெயர் சமூகத்தின் செயற்பாடுகள் அதிகம் என்பதுடன், தமிழகத்தின் சில அரசியல் கட்சிகளும், அமைப்புக்களும் உறுதுணைவழங்கியிருந்தன. ஆனால் இந்திய ஊடகங்களும், தமிழகத்தின் இரு பெரும் கட்சிகளும் அதனை மறைப்பதில் தான் ஆர்வம் காட்டின.

 
மேற்குலகத்தினதும், அதன் அமைப்புக்களினதும் அறிக்கைகளையும், செய்திகளையும் நாம் நம்பலாமா என்ற கேள்வி எழுவதற்கு வாய்ப்புக்கள் அதிகம் ஆனால் சிறீலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்களை அனைத்துலக மட்டத்திற்கு கொண்டுவந்தது அவர்கள் தான், அவர்கள் ஒளிபரப்பிய இசைப்பிரியாவின் காணொளியை நாம் நம்பித்தான் ஆகவேண்டும், சிறுவன் பாலச்சந்திரன் எவ்வாறு மிக அருகாமையில் வைத்து சுடப்பட்டார் என்பதை புகைப்பட ஆதாரத்தை வைத்து சுடுகலன் நிபுணர்களின் உதவியுடன் ஆராய்ந்து அவர்கள் வழங்கிய உறுதிமொழிகளை முதலில் நாம் நம்பித் தான் ஆகவேண்டும் அதன் பின்னர் தான் அதனை அனைத்துலக நீதிமன்றத்தில் சாட்சியாக ஒப்படைக்க முடியும்.

 
இந்த நடவடிக்கையின் பின்னனியில் அவர்களின் பூகோள அரசியல் இருக்காலம், ஆனால் ஒரு இறைமையுள்ள நாடாக தன்னை பறைசாற்றிக் கொள்ளும் சிங்கள தேசமும், இந்தியாவும் தமது இறைமைகளைத் துறந்து மேற்குலகம் மற்றும் சீனாவின் பூகோள அரசியல் வியூகத்தை உள்வாங்கி எம்மை நிர்மூலம் செய்யும் போது விடுதலைக்காக போரிடும் ஒரு சிறிய இனமாகிய நாம் ஏன் அதனை மேற்கொள்ளக்கூடாது என்பதற்கான பதில் எவரிடமும் இருக்கப்போவதில்லை.

 
மேலும் ஜி.எஸ்.பி வரிச்சலுகையை கூட போர் நிறைவடைந்தும் பல காலம் நீக்காது ஐரோப்பிய ஒன்றியம் நீடித்து சிறீலங்காவின் பொருளாதாரத்தை ஒரு தேக்க நிலையில் தான் வைத்திருந்தது.

 
போர் நிறைவடைந்து தமிழ் மக்கள் மீதான தமது பழியை தீர்த்துக் கொண்ட சிங்கள தேசத்து மக்கள் தமது துட்டகெமுனுவை மெல்ல மெல்ல மறக்கத் தொடங்கினர், அதாவது தமது அன்றாடப் பிழைப்பு துட்டகெமுனுவை விட தற்போது முக்கியமாகிவிட்டது அவர்களுக்கு.

 
2015 ஆம் ஆண்டு தேர்தலில் மகிந்தாவின் கட்சியை இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து உடைத்தன சிறீசேனா என்ற பகடைக்காய் உருவாக்கப்பட்டார், தேர்தலில் தமிழர் தரப்பு தனது வஞ்சத்தை தீர்த்துக் கொண்டது.

 

 

துட்டகெமுனு தோல்வியைத் சந்தித்தார், எனினும் தனது சகோதரர்களின் உதவியுடன் இராணுவப்புரட்சி ஒன்றிற்கு தயாரானார், அலரிமாளிகையை விட்டு வெளியேற மறுத்தார், ஆனாலும் அமெரிக்கா விடவில்லை, அப்போது அமெரிக்காவின் வெளிவிவகாரச் செயலாளராக இருந்து ஜோன் ஹெரியிடம் இருந்து வந்த தொலைபேசி மிரட்டலைத் தொடர்ந்து மகிந்தா அலரி மாளிகையை விட்டு வெளியேறினார்.

 

நல்லாட்சி என்ற போர்வையில் மைத்திரிபால சிறீசேனாவும், ரணிலும் கைகோர்த்தனர், மகிந்தாவின் 18 ஆம் திருத்தச்சட்டம் ஒழிக்கப்பட்டது, 19 ஆவது திருத்தச்சட்டம் 2015 ஆம் ஆண்டு செப்ரம்பர் மாதம் கொண்டுவரப்பட்டது.

 
அதன் மூலம் அரச தலைவரின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டு பிரதமரின் அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டன. ஒருவர் இரு தடவைகள் தான் அரச தலைவராக வர முடியும் என்ற சட்டமும் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் மகிந்தாவின் எதிர்காலக் கனவுக்கும் சாவுமணி அடிக்கப்பட்டது.

 
அதன் பின்ன நல்லாட்சி என்று கொண்டுவந்தவர்களின் முலம் முதலில் சீனாவை வெளியேற்றுவது பின்னர் தாம் பங்குபிரிப்பது என்பதே அமெரிக்க – இந்திய கூட்டு முன்னனியின் அன்றைய திட்டம். ஆனால் மகிந்தா சீனாவிடம் வாங்கிய கடனை அடைப்பதற்காக மேற்கொண்ட 99 ஆண்டு கால அம்பாந்தோட்டைத் துறைமுக ஒப்பந்தம், சீனாவிடம் வாங்கிய அபிவிருத்திக் கடன்கள் என்பன சீனாவை வெளியேற்ற முடியாது என்ற எண்ணத்தை அவர்களிடம் ஏற்படுத்தியது.

 

 

எனவே அம்பாந்தோட்டை துறைமுகத்தை படைத்துறை தேவைகளுக்கு சீனா பயன்படுத்த சிறீலங்கா அனுமதிக்க கூடாது என்ற கோரிக்கையை அமெரிக்கா முன்வைத்தது. அதற்கு சீனா ஆம் என்றே கூறியது. ஆனால் சீனா தனது உறுதிமொழிகளைக் காப்பாற்றப்போவதில்லை என்பதை அமெரிக்கா நன்கு அறியும்.

 

தென் சீனக் கடலில் உருவாக்கிய செயற்கைத் தீவையும் படைத்துறைத் தேவைகளுக்கு பயன்படுத்தப்போவதில்லை என சீனா அமெரிக்காவுக்கு உறுதி அளித்திருந்தது. ஆனால் பின்னர் அங்கு தனது ஏவுகணைகளை அது நிறுவியுள்ளது.

 
எனவே தான் அம்பாந்தோட்டடைத் துறைமுகம் தொடர்பில் சீனா செய்த சத்தியத்தை அமெரிக்கா நம்பவில்லை. அதற்கு இணையாக திருமலைத்துறைமுகத்தை ரணிலிடம் கோரியது. திருமலைத்துறைமுகத்தை வைத்து சில நன்மைகளை அடைய சிங்களம் திட்டமிட்டது, எனவே அது தமிழர் பிரதேசம் அல்ல சிங்களவர் பிரதேசம் என காண்பிப்பதற்கான வேலைத்திட்டங்களை அது முன்னனெடுத்தது.

 
அதன் விளைவுகள் தான் கண்ணியா பகுதியையும், அதன் நீரூற்று நிலைகளையும் சிங்களம் ஆக்கிரமித்துக் கொண்டது. ஆனால் இதனை மேப்பம் பிடித்த இந்திய விழித்துக் கொண்டது.

 
என்ன தான் அமெரிக்காவுடன் இந்தியா நட்பைப் பாராட்டினாலும், தனது கொலைப்புறத்தினுள் அமெரிக்கா நுளைவதை இந்தியா ஒருபோதும் விரும்பியதில்லை, 1980 களிலும் சிறீலங்காவில் வொஸ் ஒப் அமெரிக்காவின் விரிவாக்கத்தைத் தடுப்பதற்கே இந்தியப் படைகள் அவசரமாக களமிறங்கின.

 
இங்கு நாம் சில விடயங்களைக் கவனித்துப் பார்த்தால் புரியும் தனது நவீனா ஆயுதங்களை பாகிஸ்தானுக்கு விற்பனை செய்யும் அமெரிக்கா, இந்தியாவுக்கு விற்பனை செய்வதில்லை. இந்தியாவும் ரஸ்யாவின் ஆயுதங்களைத் தான் நாடுவதுண்டு.

 
அமெரிக்காவின் திருமலைத்துறைமுகக் திட்டத்தை தவிர்ப்பதற்கு மகிந்தாவை பயன்படுத்த திட்டமிட்டது இந்தியா, சுப்பிரமணியன் சுவாமி மூலம் மகிந்தா இந்தியாவுக்கு அழைக்கப்பட்டார். திட்டமும் நிறைவேற்றப்பட்டது.

 
ஆனால் இந்தியாவின் திட்டத்தில் பல தவறுகள் உள்ளன, அதாவது 19 ஆவது திருத்தச்சட்டத்தின் மூலம் அரச தலைவரின் அதிகாரம் குறைக்கப்பட்டுள்ளதை இந்தியா மறந்துவிட்டது. அமைச்சரவையின் அல்லது நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி அரச தலைவர் பிரதமரை நீக்க முடியாது.

 
எனவே நானே பிரதமர் என திரும்ப திரும்ப ரணில் கூறுவது சட்ட ரீதியாக சாரியானது. மேலும் நாடாளுமன்றத்தில் புதிய பிரதமர் தனது பெரும்பான்மையை உறுதிப்படுத்த வேண்டும், அதாவது இரட்டை அதிகார நிலையை தான் 19 ஆவது திருத்தம் கொண்டுவந்திருந்தது (அதனையும் அமெரிக்கா தான் எழுதியதோ தெரியாது).

 
எனவே முன்னர் தென்னிலங்கையின் சிங்கமாக கருதப்பட்ட துட்டகெமுனு என்ற மகிந்த இரவோடு இரவாக பின்கதவால் நுளைந்ததும் சட்டவிரோதமானது என்பது ரணிலுக்கு சாதகமோ இல்லையோ அமெரிக்காவுக்கு சாதகமானது.

 
நாடாளுமன்றத்தில் மகிந்தா பெரும்பான்மையை உறுதிப்படுத்தினாலும், மேற்குலகம் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் சிறீலங்காவின் நிலை அவ்வளவு தான்.

 
அடுத்து என்ன நிகழும்?

 
தமிழ் மக்களின் உதவியுடன் சேகரிக்கப்பட்ட போர்க்குற்ற ஆதாரங்களுடனும், சிறீலங்கா அரசு தனது ஜனநாயக விழுமியங்களை மதிக்கவில்லை என்ற கோசத்துடனும் மேற்குலகம் களம் இறங்கும். சிறீலங்காவை அடிபணிய வைப்பதற்கோ அல்லது தண்டிப்பதற்கோ அவர்களிடம் ஏராளமான காரணங்கள் உள்ளன.

 
அனைத்துலக மன்னிப்புச்சபை, அனைத்துலக மனித உரிமைகள் கண்காணிப்பகம், அனைத்துலக நெருக்கடிகளுக்கான அமைப்பு, அனைத்துலக எல்டேர்ஸ் அமைப்பு, ஐக்கிய நாடுகள் சபை, ஐ.நா மனித உரிமைகள் அமைப்பு என பெருமளவான அமைப்புகள் மேற்குலகம் சார்பானவை. அவர்களை புறம்தள்ள சிறீலங்காவால் முடியாது.

 
எனவே ஐக்கிய நாடுகளின் அமைதிப்படையை அனுப்பவோ அல்லது சிறீலஙகா மீதான பொருளாதாரத் தடையை ஏற்படுத்தவோ அல்லது மைத்திரிபால சிறீசேன உட்பட போர்க்குற்றவாளிகளாக இனங்காணப்பட்டவர்கள் மீது பயணத்தடை விதிக்கவோ அவர்களால் முடியும். இந்தியாவிடம் விட்டோ அதிகாரம் கிடையாது ஆனால் சீனா அல்லது ரஸ்யா அதனைத் தமது வீட்டோ அதிகாரம் மூலம் தடுக்கலாம் எனினும் அவர்கள் அவ்வாறு செய்வார்களா என்பது சந்தேகமே ஏனெனில் முன்னால் யூகோஸ்லாவாக்கிய அதிபரின் விடயத்தில் அவர்கள் அதனை பயன்படுத்தவில்லை.

 
அதற்கான காரணம் போர்க்குற்றம், ஜனநாயக விழுமியங்களை மீறும் செயற்பாடுகள என வைக்கப்படும் சான்றுகளின் மீது பிரயோகிக்கப்படும் வீட்டோ அதிகாரம் அந்த நாடுகளின் அனைத்துலக நன்மதிப்பை குறைத்துவிடும்.

 
சரி அவ்வாறு அவர்கள் பயன்படுத்திக் கொண்டு சிறீங்காவைக் காப்பாற்றினலும் அது அமெரிக்காவை மேலும் சீற்றம் கொள்ளவே செய்யும். எமக்கான கதவுகள் மேலும் அகலமாக திறக்கும். அதனைப் பயன்படுத்திக் கொள்ள நாம் தயாராக வேண்டும். அனைத்துலக தொடர்பாடலைப் பேணுவதற்கு எம்மிடம் ஒரு திடமான வெளியுடவுக் கட்டமைப்பு அவசியம்.

 
2009 ஆம் ஆண்டு சிறீலங்காவின் அசைக்கமுடியாத சிங்களத் தலைவனாக கருதப்பட்ட மகிந்தா ராஜபக்சாவின் ஆட்டத்தை கலைத்து தற்போது ஒரு திருடனைப்போல பின்கதவால் வந்து பதவியேற்று, அதனைத் தக்கவைப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் ஆதரவுப் பிச்சை கேட்கும் நிலைக்கு மகிந்தாவை மாற்றியது சிறீலங்கா மீது அனைத்துலக சமூகத்தின் குறிப்பாக மேற்குலகத்தின் பூகோள நலன் சார்ந்த நகர்வும், தமிழ் மக்களின் வாக்குப் பலமும் தான்.

 
தற்போது இரு தரப்பும் தமது பலத்தை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மகிந்த இந்த போட்டியில் வெற்றி பெற்றாலும், அல்லது நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பின்னர் தேர்தலில் வெற்றியீட்டினாலும், சிறீலங்காவைச் சூழந்த ஆபத்து விலகப்பேவதில்லை. எனெனில் போர்க்குற்றம் என்ற சொல்லை பயன்படுத்தாத மேற்குலக அமைப்புக்களும், அமெரிக்கப்பிரதிநிதிகளும் தற்போது போர்க்குற்றவாளி என்ற சொல்லை அடிக்கடி பயன்படுத்துகின்றனர்.

 

 

இந்த சொற்தொடர் இனஅழிப்பு என்ற சொல்லாகவும் மாற்றம் பெற அதிக காலம் எடுக்கப்போவதில்லை. ஆனால் மகிந்தா தரப்பு மீதான போர்க்குற்றத்தில் தமிழ் மக்களை படுகொலை செய்த துணை இராணுவ ஒட்டுக்குழுக்களையும் உள்ளடக்கவேண்டியது தமிழ் மக்களின் கடமையாகும். ஆதற்கான ஆதாரங்களை நாம் சேகரிக்கவேண்டும்.

 

எனவே வரும் வாரங்கள் சிறீலங்காவில் மேலும் பல மாற்றங்களை நாம் எதிர்பார்க்கலாம். ஆனால் எதுவுமே இனிமேல் சிங்கள அரசுக்கும் இந்தியாவுக்கும் சாதகமாக இருக்கப்போவதில்லை. ஏனெனில் தமிழ் மக்கள் போரில் தோற்கடிக்கப்பட்டபோதே இந்தியாவும் தனது சமரை இழந்துவிட்டது.

 

ஈழம் ஈ நியூஸ்ற்காக வேல்ஸ் இல் இருந்து அருஷ்