“எல்லோரும் அடுத்த சந்திக்குப் போய்விட்டார்கள்.

புத்திஜீவிகள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், சோஷலிஸ்டுகள், ஜனநாயகவாதிகள், தீவிரவாதிகள், ஆண்கள் பெண்கள்.

வெற்றியின் கணத்தில் எழுகிற மமதையும் கவர்ச்சியும் ஒன்றுசேர, வீரியம் பெறுகிற காற்றில்

கொண்டாட்டத்தின் வெடியோசையும் மத்தாப்பூக்களும்.

கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க ஆர்வக் கிளர்ச்சியின் மென்சூட்டில் திளைக்கிறார்கள் சிங்களர்கள்.

prasanna
இந்தச் சந்தியில் நான் மட்டும் தனியே. கையில் எதிர்ப்புப் பதாகை தாங்கியபடி . . .”

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைகளை அடுத்து மகேஷ் முனசிங்ஹ என்ற சிங்கள கவிஞர் எழுதிய கவிதை இது..

மே 18 இற்கு பிறகு 99 விழுக்காடு சிங்களவர்களின் மனநிலையையும் பிரதிபலிப்பையும் மிகத்துல்லியமாக விபரிக்கும் கவிதை இது.

இருந்தபோதிலும் மேற்படி கவிஞர் உட்பட ஒரு விழுக்காடு சிங்களவர்கள் தமிழினப்படுகொலைக்காக வருந்தவே செய்கிறார்கள்.

இவர்களிலும் இரு பிரிவு இருக்கிறது.. முதல் தரப்பு ” நடந்தது மட்டுமல்ல தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருப்பதும் இனஅழிப்புத்தான், எனவே புனர்வாழ்வு, நல்லிணக்கம் என்ற மாயவலைகளுக்குள் சிக்குபடாமல் தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும், அதாவது பிரிந்து செல்லும் உரிமை அல்லது சுயநிர்ணய உரிமைதான் ஒரே தீர்வு” என்ற தெளிவான தரப்பு அது.. ஜூட் லால் பெர்ணாண்டோ, பாசன அபேவர்த்தன, விராஜ் மென்டிஸ் என்று அந்த பட்டியலை அடையாளப்படுத்தலாம்.

இரண்டாவது தரப்பு “மே 18 உடன் போர் முடிந்து விட்டது, தமிழர்கள் பேரழிவை சந்தித்து விட்டார்கள், எனவே தமிழர்களும் இலங்கைப் பிரஜைகள்தான் என்ற அடிப்படையில் அவர்களது உரிமைகளும் மதிக்கப்பட வேண்டும”என்ற தரப்பு.

தொடரும் இனஅழிப்பு குறித்தோ, நடந்த இனஅழிப்பு எத்தகைய அரசியல் பின்புலத்தில் நடந்தது என்ற தெளிவோ விமர்சனமோ இல்லாமல் வெறும் தட்டையாகவும் ஒற்றையாகவும் ஒரு கழிவிரக்கத்தின் பால்நின்று தமிழர்களை அணுகும் தரப்பு இது.

இந்த இரண்டாவது தரப்பிற்குள்தான் தற்போது சர்சைக்குரிய திரைப்படம் ஒன்றை எடுத்து விமர்சனத்திற்குள்ளாகியிருக்கும் பிரசன்ன விதானகே வருகிறார்.

எனவே அவரிடமிருந்து உருவாகும் படைப்பின் அழகியலை, அரசியலை நாம் இலகுவாகவே இதன் வழி அடையாளம் கண்டு கொள்ள முடியும்.இதற்கு உலக சினிமா அறிவு எதுவும் தேவையில்லை.

நடந்து முடிந்த _ தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிற இனஅழிப்பை மறைக்க இனஅழிப்பு அரசு போலி நல்லிணக்கம், போலி இன ஐக்கியம் குறித்து காய் நகர்த்திக்கொண்டிருக்கும் சமகால சூழலில் தொடரும் இனஅழிப்பு குறித்த தட்டையான பார்வையுள்ள தமிழர்கள் மீதான கழிவிரக்கத்தின் மீது நின்று படைப்பை உருவாக்கும் பிரசன்ன விதானகே போன்றவர்களின் படைப்புக்கள் இன அழிப்புக்கு வெள்ளையடிக்கும் வேலையை தம்மையறியாமலேயே செய்யத் தொடங்கும் அவலம் இங்கு நிகழ்கிறது.

இதுவே அவரது படைப்பை எதிர்க்க வேண்டும் அல்லது கேள்விக்குள்ளாக்க வேண்டும் என்ற உந்துதலை இனஅழிப்பு குறித்த ஆழ்ந்த புரிதலுள்ள தமிழ்த்தேசிய சக்திகளை பிடித்துக் கொள்கிறது.

இங்கு இன்னொரு விடயத்தை கட்டாயம் குறிப்பிட்டேயாக வேண்டும். பிரசன்னா விதானகவையோ அவரது திரைப்படத்தையோ எந்த தமிழ்த்தேசிய சக்தியும் எதிர்க்கவில்லை.. தமிழீழ திரைப்படங்கள் தமிழகத்தில் திரையிட முடியாத நிலையில் சிங்களப்படங்கள் திரையிடப்படும் சூழ்ச்சியையும் அவரது படத்தின் நுண்ணரசியலையும் கேள்விக்குட்படுத்தவே தமிழ்த்தேசிய சக்திகள் முனைந்தன. ஆனால் தமிழ்த்தேசியம் என்றாலே தீட்டு என்று கருதும் ஒரு கும்பல் திட்டமிட்டு ஒரு நயவஞ்சக நாடகத்தை அரகேற்றிய அவலம் இங்கு நடந்து முடிந்திருக்கிறது.

அடுத்து பிரசன்ன விதானகே ஒரு இனவாதி அல்ல.. சமாதான காலத்தில் வன்னிக்கு வருகை தந்து தமிழ்க்கலைஞர்களுக்கு திரைப்படப்பயிற்சி வழங்கும் அளவிற்கு தமிழர்களுடன் ஒரு நெருக்கத்தை பேணியவர் _ இன்னும் பேணுபவர்தான்..

ஆனால் இன அழிப்பைஇ “போர் முடிந்துவிட்டது இனித்தேவை நல்லிணக்கம்தான்” என்று குறுக்கிப்பார்க்கும் ஒரு தரப்பாக நின்று படைப்புக்களை முன்வைப்பதால் இனஅழிப்புக்கு வெள்ளையடிக்கும் வேலையை அவரது படைப்புக்கள் செய்யும் அவலம் இங்கு நடந்துவிடுகிறது.

இதுவே கலை, படைப்பு சுதந்திரம் என்ற அம்சங்களையும் தாண்டி அரசியல்ரீதியாக அவரது படைப்பை நாம் எதிர்கொள்ள வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு எம்மை தள்ளுகிறது.

இறுதியாக “நடந்த இனஅழிப்பை மறைத்து, நினைவு அழிப்பு அரசியலை தொடர்வதனூடாக தமிழர்களுக்கு நீதி வழங்க மறுக்கும் நோக்குடனேயே சிறீலங்கா அரசு நல்லிணக்கம், இன ஐக்கியம் போன்ற ஆயுதங்களை கையிலெடுத்துள்ளது” என்று சக சிங்கள அறிவுஜீவியான ஜூட்லால் பெர்ணாண்டோ கூறியிருப்பதை பிரசன்ன விதானகேயிற்கு இந்த இடத்தில் நாம் நினைவுட்ட விரும்புகிறோம்.

ஒரு தேர்ந்த படைப்பாளியாக இந்த கூற்றை நீங்கள் உள்வாங்கினாலே போதும்.. உங்கள் படைப்பு எவ்வளவு அபத்தம் என்று உங்களுக்கே புரியும்.. கூடவே உங்கள் படைப்பு சிங்கள இனஅழிப்பு அரசின் “பிராண்ட் அம்பாசிடராக” இருக்கும் அவலமும் புரியும்.

முடிந்தால், நடந்த இனஅழிப்புக்கு நீதி வழங்காமலும் தொடரும் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பை நிறுத்தாமலும் நல்லிணக்கம் என்பது சாத்தியமேயில்லை என்ற உண்மையை உலகிற்கு எடுத்தியம்பும் வண்ணம் ஒரு படைப்பை எடுங்கள்.. முடியாவிட்டால் பேசாமல் இருங்கள்..

ஏனென்றால் ஒரு “வெள்ளை வானில்” நீங்கள் காணாமல் போவதை நாமும் விரும்பவில்லை.

எனவே தயவு செய்து ஒரு நல்ல கலைஞனாக இனஅழிப்புக்கு தெரிந்தோ தெரியாமலோ வெள்ளையடிக்காதீர்கள்.

இதுவே நாம் உங்களிடம் முன்வைக்கும் தாழ்மையான விண்ணப்பம்..

ஈழம்ஈநியூஸ்.