prabahanismதேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் விடுதலைக் கோட்பாடுகள் குறித்து விரைவில் வெளியாக இருக்கும் “Velupillai Prabhakaran : Being and Nothingness – (May 18 :Before and After) ” என்ற ஆங்கில நூலின் ஆசிரியரும் நீண்ட கால தமிழீழ அரசியற் செய்பாட்டாளரும், போருக்கு பின்னான பெண்கள் – குழந்தைகள் மீதான வன்முறை மற்றும் இனஅழிப்பு குறித்து ஆய்வு செய்து வருபவருமான திரு பரணி கிருஸ்ணரஜனியிடம் தொடர்பு கொண்டு தேசியத் தலைவரின் அகவை 62 ஐ சிறப்பிககுமுகமாக அவரது நூல் குறித்து கேட்டறிந்தவற்றின் தொகுப்பை வாசகர்களுக்காக இங்கு தருகிறோம்.
அறிமுகம்

 

2009 இனஅழிப்பு நடந்து முடிந்த பிற்பாடு உள்ளும் வெளியுமாக தலைவர் குறித்தும் எமது விடுதலைப் போராட்டம் குறித்தும் எழுப்பப்பட்ட விமர்சனங்களுக்கும், அவதூறுகளுக்கும்; வதந்திகளுக்கும் பதில் சொல்ல வேண்டிய ஒரு நிலையில் நின்று அதை நண்பர்களின் உதவியுடன் எழுதினேன்.

 

எழுத எழுத அது ஒரு கோட்பாடாக முகிழ்ந்ததை ஒரு கட்டத்தில் நானும் நண்பர்களும் அவதானித்தோம். எழுதி முடித்த பிற்பாடுதான் அதன் முக்கியத்துவம் புரிந்ததது. இது தமிழர்களுக்கான விடுதலைக் கோட்பாடு இல்லை. உலகளாவிய ஒடுக்கப்பட்ட இனங்களின் ஒட்டுமொத்த விடுதலைக்கான சூத்திரத்தை தன்னகத்தே கொண்டுள்ளது என்பதை உணர்ந்து அதை இன்னும் விரிவாக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் தற்காலிகமாக அதை தொடர்ந்து எழுதுவதை நிறுத்தியிருந்தேன்.

 

தற்போது தேவை கருதி மிக அவசரமாக மீதியை எழுதி முடித்திருக்கிறேன்.

 

‘பிரபாகரனியம்’ குறித்த ஒரு தத்துவப் புரிதல்.

 

ஒரு தத்துவம் – கோட்பாடு – சிந்தனை என்பதன் அடிப்படையை நாம் கவனமாக உற்று நோக்கி உள்வாங்கினால் சில உண்மைகள் தெரியவரும். ஒரு புதிய தத்துவம் ஏற்கனவே உள்ள ஒரு வடிவத்தை பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ சிதைப்பதனூடாகவோ அல்லது அதை முற்று முழுதாக நிராகரிப்பதனூடாகவோதான் தோற்றம் பெறுகின்றது.

 

ஆகவே அந்தப் புதிய தத்துவத்தை முழுமையாக உள்வாங்குவதற்கு – கிரகிப்பதற்கு அந்தத் தத்துவத்தை மட்டும் கற்பதனூடாகவோ – உள்வாங்குவதனூடாகவோ நாம் ஒரு முழுமையை எய்த முடியாது. எனவே பரந்துபட்ட அறிவும் வாசிப்பும் கற்கையும் நமக்குத் தேவைப்படுகிறது. அதாவது நாம் தேடும் கோட்பாட்டின் – தத்துவத்தின் சிதைந்த மூலம் பற்றிய புரிதல் நமக்கு அவசியமாகிறது. நாம் அதைத் தேடும் போது அது வேறு ஒரு கோட்பாட்டின் – தத்துவத்தின் சிதைவாய் எமக்கு அறிமுகமாகிறது. அதிலிருந்து இன்னொன்று……..
ஒரு சங்கிலித் தொடராய்- ஒரு சிக்கலான வலைப்பின்னலாய் எமது தேடல் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது. என்றுமே நாம் ஒரு முடிவைக்கண்டடைய முடியாது என்ற பேருண்மை எமக்கு இறுதியில் தெரிய வரும். முடிவில் அது ஒரு பிரபஞ்ச உலகமாய் எமக்குக் காட்சியளிக்கிறது. அதுதான் தத்துவ உலகத்தின் சூக்குமமும்கூட.

 

முடிவை எய்தாத இந்த தேடல்தான் ஒரு மனிதனை முழுமையாக்குகிறது- மீண்டும் மீண்டும் அவனைப் புதுப்பித்துக்கொண்டேயிருக்கிறது. மனிதன் என்னும் பூகோளப் பிராணியின் பூவுலக இருப்பே இத் தேடலில்தான் மையங்கொண்டுள்ளது. தேடுவதற்கு ஒன்றும் இல்லாத போது நாம் சடங்களாகிவிடுகிறோம். வாழ்வின் அர்த்தத்தை இழந்தவர்களாகிவிடுகிறோம். மனித இருப்பையும் மனித வாழ்வையும் அர்த்தப்படுத்துவதே இத்தகைய தேடல்தான்.

 

மனித வாழ்வின் இந்தப் பேருண்மையை ஒரு மனிதன் உணரும்போது அவன் முழுமையடைகிறான். அந்த மனிதன் சார்ந்திருக்கும் இனக்குழுமத்தின் குறிப்பிட்ட விழுக்காடு சதவிகித மனிதர்கள் இந்தப் பேருண்மையை உணரும்போது அந்த இனமே முழுமையானதாக முற்போக்கானதாக மாறிவிடுகிறது.
உலக தத்துவமேதைகள், கோட்பாட்டாளர்கள், சிந்தனையாளர்கள் மனித இனம் குறித்துக் கண்ட கனவு இதுதான்.

 

இதன் வழி ஈழத்தமிழ்ச் சமுகம் குறித்து பிரபாகரன் என்ற மனிதர் கண்ட கனவின் வடிவம்தான் ‘பிரபாகரனியமாக ‘ நம்முன் கிடக்கிறது.

 

இசங்களை வெறுத்த, கோட்பாடுகளை குலைக்கும் ஒரு புதிர் நிறைந்த பாத்திரத்தை வகித்த ஒரு அதி மனிதன் நந்திக்கடலில் வைத்து ஒரு கோட்பாட்டை உலகிற்கு விட்டுச் சென்ற கதையின் தத்துவ பின்புலம் இதுதான்.

 

ஒரு புரட்சியாளனாக உலகிற்கு அறிமுகமான ஒரு அதி மனிதனை ‘நந்திக்கடல்’ ஒரு கோட்பாட்டாளனாக மறு அறிமுகம் செய்த கதையும் இதுதான்.

 

புரட்சியாளன் – கோட்பாட்டாளன்.

 

தலைவர் பிரபாகரன் தவிர்ந்து ஈழத்தில் ஆயுதப்போராட்டத்தை முன்னெடுத்த அனைத்து தலைவர்களும் தமது போராட்டத்தை எதோ ஒரு வகையில் உலகின் ஏதோ ஒரு போராட்டத்துடன் அடையாள்ப்படுத்தும் முனைப்பில் இருந்தார்கள். அந்தந்த போராட்ட தலைவர்களுடன் தம்மை அடையாளப்படுத்தவும் புகுந்தார்கள். ஒரு சில தலைவர்கள் இன்னும் ஒரு படி மேலே அந்தந்த தலைவர்கள் போல் புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தார்கள்.

 

parani2மக்களுக்கும் சீனப் புரட்சி, ரஸ்யப்புரட்சி, தொடக்கம் கியூபா போராட்டம், வியட்னாம் போராட்டம் வரை வகுப்பெடுத்தார்கள். கொம்மியூனிசம், மார்க்கிசம் தொடங்கி உலகின் அனைத்து தத்துவங்களும் கோட்பாடுகளும் அவர்கள் பேராட்டத்தை வழி நடத்துவதாக பறை சாற்றினார்கள்.

 

இது தவறல்ல. ஆனால் அவர்கள் தமக்கு என்று தனித்துவமான வழிமுறையை கடைப்பிடிக்காமல் இதற்குள்ளேயே தேங்கி நின்றதுதான் அவர்கள் செய்த வரலாற்று தவறு. அதுதான் பின்னாளில் தமது நோக்கத்தையே மறந்து அரசுகளின் கைப்பாவைகளாகி அழிந்தும் போனார்கள்.

 

பிரபாகரன் ஏனைய தலைவர்களிடமிருந்து வேறுபடும் இடம் இதுதான். அவர் தனது போராட்ட வழிமுறைகளை உலக பேராட்டங்களிலிருந்தோ தத்துவங்களிலிருந்தோ தேடவில்லை.. மாறாக மக்கள் தொகுதிக்குள் அதை தேடினார். அப்போதே அவர் தனித்துவமான ஒரு கோட்பாட்டை உருவாக்கும் ஆளுமையாக உருவெடுத்துவிட்டார்.

 

இதன் வழி தனித்துவமான ஒரு புரட்சியாளனாக உலகிற்கு அறிமுகமான பிரபாகரன் நந்திக்கடலில் வைத்து ஒரு நவீன கோட்பாட்டாளனாகவும் தன்னை மறு அறிமுகம் செய்கிறார்.
முள்ளிவாய்க்கால் வரை புரட்சியாளனாக பயணித்த அவர் நந்திக்கடல் நோக்கி பயணித்தபோதே அந்த வடிவ மாற்றம் நிகழ்ந்து விடுகிறது.

 

முள்ளிவாய்க்கால் மற்றும் நந்திக்கடல் என்பது ஒரு கிட்டத்தட்ட ஒரு நிலப்பரப்பை குறிக்கும் இருவேறு பெயர்கள். ஒரு அங்குலம்தான் இந்த இரு நிலத்தையும் துண்டாடுகிறது. ஆனால் அரசியல்ரீதியாகவும் வரலாற்றுரீதியாகவும் முற்றிலும் வேறுபட்ட செய்தியை இந்த நிலங்கள் பதிவு செய்கின்றன.
பெயருக்கேற்றாற் போல் முள்ளி ‘வாய்க்கால்’ ஒரு தேங்கிய அரசியலையும் நந்திக்’கடல்’ எல்லைகளற்று பரந்து விரியும் அரசியலையும் முன்மொழிகின்றன.

 

இது புரியாமல் கடந்த ஏழு ஆண்டுகளாக நாம் முள்ளி’வாய்க்காலோடு’ தேங்கி நிற்கிறோம். ஆனால் நாம் விடுதலையை தேட வேண்டிய இடம் நந்தி ‘கடலில்’ தான் கிடக்கிறது. எமக்கு மட்டுமல்ல போராடும் இனங்கள் நவீன அரசுகளை எதிர்கொள்ளும் சூக்குமத்தை விழுங்கியபடி ‘நந்திக்கடல்’ அமைதியாகக் கிடக்கிறது.
ஒரு கோட்பாட்டாளன் உருவான கதையின் பின்புலம் இது. வரலாறு ”பிரபாகரனியம்’ என்று அதை பதிவு செய்து கொள்கிறது.

 

நினைவு அழிப்பு அரசியல் = புலி நீக்க அரசியல் = நீதி மறுப்பு அரசியல்.

 

எது ‘நினைவு அழிப்பு’ அரசியல்?

 

மிக எளிமையாக விளக்கினால் தமிழீழம் என்ற De facto state இன் மூன்று தசாப்த வாழ்வை மக்களின் மன அடுக்கிலிருந்து உருவுதல்.

 

அதன் அரசியல் ஒட்டு மொத்த உள்ளடக்கமாக இருப்பது ‘புலி நீக்க’ அரசியல்.

 

அதாவது “புலி நீக்கம் ” என்பதனூடாக தமிழத்தேச கருத்தியல்தான் அழிக்கப்படுகிறதோயொழிய “புலி” என்ற அமைப்பியல் அல்ல.

 

தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்ற எமது அரசியல் அவாவை வெல்வதன் பின்னணியில் அதன் அடிப்படையான இனம், மொழி, பண்பாடு, நிலம் என்ற அடையாளங்கள் இருக்கின்றன. மீண்டும் மீண்டும் பேசப்படுகிற ஒரு விடயமாக இது இருக்கிறது. இந்த அடையாள அழிப்பே முள்ளிவாய்க்காலின் பின்னணயில் இருந்தது.

 

தற்போது எமக்கான நீதியை முற்றாக குழி தோண்டிப் புதைக்க ‘புலிகள’; என்ற கருத்தியலும் அவர்களின் சித்தாந்தமும் ‘நினைவு அழிப்பு’ அரசியலினூடாக தமிழ் பரப்பிலிருந்து நீக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இதைத்தான் நாம் ‘புலி நீக்க’ அரசியல் என்கிறோம்.

 

இந்த ‘புலி நீக்க’ அரசியலை நாம் ஏன் தொடர்ந்து எதிர்க்கிறோம் என்பதன் மிக எளிமையான விபரணம் இதுதான்.

 

“புலி” என்ற குறியீட்டு பதத்தை தமிழ் பரப்பில் நாம் தொடர்ந்து நிறுத்துவது ஆயுதப்போராட்டத்தை முன்னகர்த்த அல்ல. ( அது நீண்டகால நோக்கில் ஒரு உதிரிக் காரணமாக இருப்பதை நாம் மறுக்கவில்லை) இந்த ‘நினைவு அழிப்பு’ அரசியலுக்கு எதிர்வினையாக – எமது இனத்தின் அரசியல் உள்ளடக்கத்தை தொடர்ந்து பேண நாம் எடுத்துள்ள அரசியல் நடவடிக்கையின் ஒரு பகுதியாகும்.

 

தமிழின அழிப்பினூடாக புலிகளை அழித்த மேற்குலக – பிராந்திய சக்திகள் புலிகளை பயங்கரவாத பட்டியலில் தொடாந்து வைத்திருக்கும் பின்புலமும் இதுதான்.

 

‘பிரபாகரனியம்’ என்பது புலி என்ற அமைப்பு சார்ந்த தர்க்கம் அல்ல.. எமது நீதிக்கான கருவி அது.
30 வருட காலமாக நாம் வாழ்ந்த ‘நடைமுறை அரசு’ குறித்த தத்துவார்த்த பொருளடக்கம் அது. ஒரு தேசம் குறித்த உண்மை அது.

 

‘பிரபாகரனியம்’ இதை இன்னும் உரத்து பேசும். விடுதலைக்கான கோட்பாடுகளை கட்டவிழ்க்கும்..
தேசிய இனங்களின் வழிகாட்டி.

 

2009 தமிழின அழிப்பிற்கு பிற்பாடு புலிகளின் போராட்ட வழிமுறைகளும், அவர்கள் அனைத்துலக சதிகளினூடாக அழிக்கப்பட்ட பிராந்திய பூகோள அரசியலும், அரச பயங்கரவாதத்தை மையப்படுத்திய “சர்வதேச உறவுகளும்” தலைவர் பிரபாகரன் குறித்த வேறொரு அரசியல் பரிமாணத்தை உலகளவில் ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டம் சார்ந்து எழுதியிருக்கிறது.

 

அது “பிரபாகரனியம்” என்ற விடுதலைக் கோட்பாடாக கட்டவிழ்ந்து ஒடுக்கப்படும் இனங்களுக்கான ஒரு விடுதலைக் கோட்பாடாக முகிழ்ந்திருக்கிறது.

 

எனவே நாம் இனி அவரை தமிழர்களுக்கு மட்டும் பொதுவான தலைவராக குறுக்குவது அரசியல்ரீதியாகவும் கருத்தியல்ரீதியாகவும் தவறானது.

 

உலகெங்கும் ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் வழிகாட்டியாக வரலாறே அவரை உருவகித்திருக்கிறது.
வரலாறு என்பது அதன் போக்கில் எழுதப்படும் என்பது ஒரு இயங்கியல் விதி.

 

தனி மனித அரசியல்.

 

‘ தேசியத்தலைவர் பிரபாகரனின் இடத்தையும் அவர் வகிக்கும் வரலாற்றுப் பாத்திரத்தையும் நாம் என்றென்றைக்கும் புறம் தள்ள முடியாது. இனி வரும் ஈழத்தமிழர்களின் காலம் என்பது பிரபாகரன் என்ற பெயரோடு இரண்டறக்கலந்ததாகவே இருக்கும். பல்லாயிரம் நூற்றாண்டுகளுக்கு பின்னரும் கூட தமிழர்களின் சுதந்திரம், விடுதலை, இறைமை என்பதை தீர்மானிக்கும் ஒற்றைச் சொல் பிரபாகரன் என்பதாகவே இருக்கும்

 

ஏனெனில் ஒரு இனத்தின் விடுதலை, சுதந்திரம், இறைமை சார்ந்து உள்ளும் வெளியுமாக அவர் உருவாக்கியிருக்கும் கோட்டுருவாக்கச் சித்திரங்கள் அசாதாரணமானது. அது ஒரு தொடர் கூட்டு உளவியல் தொடர்பானது. அது ஒரு இனத்தை காலத்திற்கு காலம் இயக்கக்கூடியது மட்டுமல்ல என்றென்றைக்கும் சேர்ந்து பயணிக்கக்கூடியதும் கூட.

 

தனி மனித வழிபாடு – தனிமனித அரசியல் என்பவற்றிற்கும் அப்பால் பிரபாகரன் என்ற பெயர் தமிழ்ச் சமூகத்தில் ஏற்படுத்தியிருக்கும் அதிர்வுகளை எமது ஆய்வினூடாக துல்லியமான உளவியல் வரைபடமாக வரைந்தோம். பிரபாகரன் – தமிழச்சமூகத்திற்கிடையிலான உளவியல் வரைபடத்தை கிரமமாக உள்வாங்காத – இது குறித்த புரிதலில்லாத எத்தகைய அரசியல் நடவடிக்கைகளும் ஈழவிடுதலையை சாத்தியமாக்காது என்பதுடன் அவை மக்களின் மனநிலையிலிருந்து சிந்தித்துத் தோற்றம் பெற்றவையாகவும் இருக்க முடியாது என்பதே எமது ஆய்வின் மிக முக்கியமான முடிவு.

 

முப்பது வருடங்களுக்கும் மேலாக ஒரு இனம் படிப்படியாக வளர்த்த நம்பிக்கையும் அரசியல் அவாவும் புலிகளின் வளர்ச்சியோடு பின்னிப் பிணைந்தது. அதன் பெரும் பிம்பமாகப் தலைவர் பிரபாகரனை அந்த இனம் வரித்து நீண்ட காலங்களாகிவிட்டது. இதை உளவியல் மொழியில் கூறினால் ஒவ்வொரு தமிழனது உள்ளத்தில் அவர்களது அரசியல் அவா பிரபாகரன் என்ற உருவத்திலேயே ஆன்மாவாக உறைந்து கிடக்கிறது.

 

தேசம், தேசியம், தேசியத் தலைவர் என்று ஓர் இனம் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக ஒரு வாழ்வை வாழ்ந்துவிட்டது. அந்த வாழ்வியலினூடாகவே அந்த இனத்தின் உளவியல் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.
“பிரபாகரனியம்” என்ற நவீன விடுதலைக் கோட்பாடு ஒன்று அவரிலிருந்து வெளிக்கொணரப்பட்டுள்ளதன் பின்புலம் இதுதான்.
‘நந்திக் கடல் ‘

 

உலக பயங்கரவாத அரசுகள் அதை தாங்கும் பெரு முதலாளிகள், நிறுவனங்கள்; அமைப்புக்கள; வகுத்து வைத்திருந்த உலக ஒழுங்கை நிர்மூலம் செய்து உலகில் ஒடுக்கப்பட்டு அடக்கப்பட்டு அல்லலுறும் இனங்களுக்கான விடுதலைக்கோட்பாடு பிரசவிக்கப்பட்ட இந்த நூறறாண்டின் தாய்ச் சமர்ககளம்.
பற்றைகளும், புற்களும், சேறும், சகதியும் நிறைந்த ஒரு வறண்ட நிலப்பரப்பு ஒரு வரலாற்று நாயகனை ‘உள்வாங்கி’ ஒரு நவீன விடுதலைக் கோட்பாட்டை வெளித்தள்ளியது. போராடும் இனங்களுக்கான படிப்பினையும் பாடமும் மட்டுமல்ல வழிகாட்டியுமாக உலக ஒழுங்குக்கு சவாலாக அச்சமாக எல்லாமுமாக அது அந்த மண்ணிலிருந்து வெளித்ள்ளபப்ட்டது.

 

வரலாறு ”பிரபாகரனியம்’ என்று அதை பதிவு செய்து கொள்கிறது.