பிரபாகரன் என்ற பெயர் தமிழர்களின் உதடுகளில் உச்சரிக்கப்பட்டு, உள்ளங்களில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கிறது.

1954 நவம்பர் 26-ல் வல்வெட்டியில் வேலுப்பிள்ளை-பார்வதிக்கு மகனாக பிறந்த பிரபா கரனுக்கு இந்த ஆண்டில் 60-வது பிறந்தநாள்… அதாவது, மணிவிழா. ஈழத்திலும் தமிழகத்திலும் உலகெங்கும் தமிழர்கள் வாழும் பகுதிகளிலும் நவம்பர் 26-ல் பிறந்தநாள் விழாவும், மறுநாள் (நவ.27) மாவீரர் நாளும் கடைப்பிடிக்கப்பட்டன. புலம்பெயர் தமிழர்கள் வாழும் நோர்வேயில், லண்டனில், ஐரோப்பிய ஒன்றியங்களில் வீர விளையாட்டு, ஆடல், பாடல் என களைகட்டியது திருவிழா.

ஈழத்தைப் பொறுத்தவரை 2009 முள்ளிவாய்க்கால் கொடூரத்திற்குப் பிறகு இன்னும் முழுமையான அமைதி திரும்பவில்லை. உரிமைகளும் கிடைக்கவில்லை. பிரபாகரன் எங்கே இருக்கிறார், என்ன ஆனார் என்பதும் அந்த மக்களுக்குத் தெரியவில்லை. எனினும், பிறந்தநாள் கொண்டாட்டங்கள் உணர்வுப்பூர்வமாக உள்ளன. அவற்றை முறியடிப்பதில் முனைப்பாக இருந்தது ஈழத்தமிழர் மண்ணெங்கும் முகாமிட்டிருக்கும் இலங்கை ராணுவம். “யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் மாவீரர் நாள் விழாவைக் கடைப்பிடிக்கத் தயாராகி வருகிறார்கள்’ என்ற செய்தியால் அப்பகுதி முழுவதும் ராணுவம் குவிக்கப்பட்டது. பல்கலைக்கழகத்தை ஒட்டிய ராமநாதன் வீதியில் சைக்கிளில் போலீசார் ரோந்து வந்தபடியே இருந்தனர்.

lon-1
சில நாட்களுக்கு பல்கலைக்கழக வளாகத்தில் மாவீரர் தின சுவரொட்டி ஒட்டப்பட்டதாகவும், இதற்கு எதிராக, கலைப்பீடத்தின் ஆங்கிலக் கற்கைகள் துறைத் தலைவரும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவருமான அமிர்தலிங்கம் இராசகுமா ரன், கலைப்பீடத்தில் ஊடகத்துறையில் கல்வி பயிலும் 3ம் வருட மாணவர்களான துரைராசா தமிழ்ச்செல்வன், கணேசலிங்கம் நிவாஸ், தங்கராசா ஐங்கரன் மற்றும் புவியியல்துறையில் 3-ஆம் வருடத்தில் கல்வி பயிலும் பிலிப்பேரிஸ் பிறிட்டோ ஆகியோருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. மாணவர்களின் வருகை குறைவாக உள்ளது என்று கூறி டிசம்பர் 1-ஆம் தேதிவரை பல்கலைக்கு விடுமுறையும் விடப்பட்டுவிட்டது.

ஈழத்திலிருந்து வெளிவரும் தமிழ்ப் பத்திரிகை யான “உதயன்’ இதழில் பிரபாகரன் பிறந்தநாள் விளம் பரம் வெளியாகியிருந்தது. அதைக் கையில் வைத்திருந் தவர்களைக்கூட விசாரணை என்ற பெயரில் மிரட்டியிருக் கிறார்கள் ராணுவத்தினரும் போலீசாரும். இலங்கை ராணுவ செய்தித் தொடர்பாளர் ருவான் வானிகசூரியா வெளியிட்டுள்ள அறிக்கையில், “”இலங்கையில் நேரடி யாகவோ, மறைமுக மாகவோ, பத்திரிகை சுதந்திரம் என்ற பெய ரிலோ பிரிவினைவாதி களின் நோக்கத்தை ஊக்கப்படுத்துவதோ, பிரசாரம் செய்வதோ சட்டத்தை மீறுவ தாகும். அதன்படி குறிப்பிட்ட அமைப் பினர் விடுதலைப்புலிகளை பெருமைப் படுத்துவதோ, நினைவு விழா நடத்துவதோ சட்டப்படி குற்றம்”’என்று கூறியுள்ளார்.

இந்தக் கெடுபிடிகளால் ஈழத்தில் பிரபாகரனின் 60-வது பிறந்தநாள் வெளிப்படையாகக் கொண்டாடப் படவில்லையே தவிர, மாவீரர் நாளை ஒவ்வொரு தமிழ்க் குடும்பத்தினரும் அமைதியான முறையிலும் ஆன்மீக வழியிலும் கடைப்பிடித்தனர். காரணம், ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவராவது புலிப்படையில் இணைந்து விடுதலைக்காக உயிரைக் கொடுத்திருக்கிறார்கள். அவர்களின் நினைவுதினத்தை தங்கள் வீட்டிலும் கோயில்களிலும் வழிபாடுகள் மூலமாக பொதுமக்கள் கடைப்பிடித்துள்ளனர். வடக்கு மாகாணத்தில் முதலமைச் சர் விக்னேஸ்வரன் தலைமையிலான அரசு, விடுதலைப் புலிகளை வெளிப்படையாக ஆதரிப்பதில்லை.

அதே நேரத்தில் அந்த அமைப்புக்கு எதிராகப் பேசுவதுமில்லை. எனினும் ஆட்சிப் பொறுப்பில் இருப் பவர்களும் கோயில் வழிபாடுகளில் பங்கேற்று மாவீரர் நாளைக் கடைப்பிடித்து தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தினர். இலங் கையில் நிலவும் கெடுபிடிக்கு சற்றும் குறைவில்லாமல் தமிழகத்தில் அ.தி.மு.க. அரசு கெடுபிடி காட்டி, பிரபாகரன் பிறந்தநாளுக்கும் மாவீரர் நாளுக்கும் நெருக்கடி கொடுத் ததை தமிழுணர்வாளர்கள் வெளிப்படுத்த முடியாமல் தவிக்கிறார்கள். காரைக்குடி உள்பட பல இடங்களிலும் பிரபாகரனின் படங்கள் கொண்ட பேனர்கள் அகற்றப்பட் டன. புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலத்தில் பிரபாகரன் படம் போட்ட பதாகை வைக்கப்பட்ட சில மணி நேரத்தில் கீரமங்கலம் காக்கிகள் அதை அகற்றினார்கள். சென்னை அபிராமபுரத்தில் பிரபாகரன் படம் வைத்து திராவிடர் விடுதலைக் கழகத்தினர் கொண்டாட அங்கு வந்த எஸ்.ஐ. இளையராஜா, கலைச்செல்வி, “என்னடா தீவிரவாதிங்க படம் வச்சு பிறந்தநாள் கொண்டாடுறீங் களா?’’என பிரபாகரன் படத்தை கிழித்தனர். தடுத்த மக்களையும், கருஞ்சட்டையினரையும் கடுமையாக தாக்கியது இந்த காக்கி டீம். கடும் தாக்குதலுக்குள்ளான தோழர் உமாபதி நம்மிடம், “” “இவர் நம் இனத்தின் அடையாளம்’னு சொன்னேன். “யாருடா அடை யாளம்’னு சொல்லி லத்தியாலும், பூட்ஸ் காலாலும் அடி அடி என அடித்தனர். என்னை அடித்தாலும் எங்கள் உள்ளங்களில் உள்ள தமிழின பற்றை அழிக்க முடியாது”’ என்றார்.

ம.தி.மு.க சார்பில் ஆண்டுதோறும் நடைபெறும் மாவீரர் நாள் கூட்டத்திற்கு இம்முறை அனுமதி தரப்படாததால், கோர்ட்டுக்குச் சென்று நிபந்தனையுடன் கூடிய அனுமதியுடன் பொதுக்கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தினார் வைகோ. அவரது சொந்த ஊரான கலிங்கப் பட்டியில் வைகோவின் தாயார் மாரியம்மாள் மிக ஆர்வமாக பங்கேற்ற பிறந்தநாள் -மாவீரர் நாள் விழா நடைபெற்றது.

புதுக்கோட்டை தோப்புக்கொல்லையில் உள்ள இலங்கை அகதி முகாமில் கோயில் குடமுழுக்கிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், நவம்பர் 27-ல் “குடமுழுக்கு செய்யக்கூடாது ‘ என நள்ளிரவில் டி.எஸ்.பி. பாலகுரு தலைமையில் வந்த போலீஸ் படையினர் தடுத்து விட்டனர். இதனால் ஆத்திரமடைந்த ஈழத்தமிழர்களும் உள்ளூர் மக்களும் சாலை மறியலில் இறங்க, அவர்கள் மீது கண்மூடித்தன மான தடியடி நடத்தி கைது செய்தது காவல்துறை. போலீசின் கெடுபிடி அறிந்த சீமானின் நாம் தமிழர் கட்சியினர் முருகக்கடவுள் படத்தையும் ராவணன் படத்தையும் போட்டு, இவர்களின் பேரனுக்கு 60-வது பிறந்தநாள் என சாதுர்யமாக போஸ்டர் அடித்து ஒட்டினர்.

her0-2014-2
அ.தி.மு.க அரசின் கெடுபிடி யையும் கடந்து பிரபாகரன் பிறந்த நாளும் மாவீரர் நாளும் தமிழகத்தில் உணர்ச்சியோடு கடைப்பிடிக்கப்பட்டது. ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கேக் வெட்டி பிரபாகரன் பிறந்தநாளைக் கொண்டாடினார். விடுதலை சிறுத்தை கள் கட்சித் தலைவர் திருமாவளவன் கனடாவில் நடந்த விழாவில் பங்கேற்கச் சென்றதால், வன்னியரசு முன்னிலையில் சாந்தோம் தென்னிந் திய திருச்சபை பள்ளியில் மாணவர் களோடு 60 கிலோ கேக் வெட்டி கொண்டாடினர் வி.சிக்கள். பல்வேறு அமைப்புகளும் இதேபோல கொண்டாடின. மாவீரர் தினமான நவம்பர் 27 இதேபோல உணர்வுப்பூர்வமாக அமைந்தது.

1982-ல் விடுதலைப்புலிகள் படையில் முதல் களப்பலியான சங்கரின் நினைவாக நவ-27 மாவீரர்கள் தினமாக கடைப்பிடிக்கப் படுகிறது. தமிழீழத்திற்காக மடிந்த அனைத்து வீரர்களின் நினைவையும் இந்நாளில் போற்றுவார்கள் விடுதலைப்புலிகள். இந்நாளில் உலகில் எங்கிருந்தாலும் மாலை 6:05 மணிக்கு வானொலியில் உரையாற்றுவார் பிரபாகரன். 2009-ஆம் ஆண்டு முதல் அவரின் உரை வெளிப்படவில்லை. ஆனாலும் அவரின் எண்ணங்களுடன் லட்சிய முழக்கங்களை தமிழுணர்வாளர்கள் முன் னெடுத்து வருகின்றனர். ஈழப்போரின் நினைவு சாட்சியமாக விளங்கும் தஞ்சையில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தில் மரக்கன்று நட்டு இரண்டு நாள் விழாவாக நெடுமாறன் அமைப்பினர் கொண்டாட, ஈழக்கவிஞர் காசி ஆனந்தனும் இணைந்துகொண்டார். அவர் நம்மிடம், “”ஈழத்தில் தற்போது 7500 சதுர கிலோமீட்டர் தமிழர் நிலங்களில் சிங்கள குடியேற்பு நிகழ்த்தி வருகிறது சிங்கள அரசு. மாவீரர்களின் கல்லறை நம் நெஞ்சில் இருக்கின்றன ஆனால் நம் மண்ணில் இல்லை. பிணங்களாக கூட எம்மண்ணில் இருக்க முடியவில்லை. எரிக்கப்படுகிறோம். புதைகுழியாகக் கூட வாழமுடியவில்லை. கல்லறையாக வாழ முடியவில்லை. ஆனாலும் தமிழீழ விடுதலைப் போராட்டம் தொடரும்”’என்றார் உறுதியான குரலில்.

pottu
சென்னை ராயபேட்டையில் விடுதலை ராஜேந்திரன் தலைமையில் தி.வி.க.வினர், பகுதி மக்களை திரட்டி கேக் வெட்டி கொண்டாட “மாமா உங்களுக்குத்தான பிறந்தநாள். இந்தாங்க கேக் சாப்பிடுங்க மாமா’’என இசை எனும் குட்டி பாப்பா பேனரில் இருந்த பிரபாகரனின் படத்திற்கு கேக் ஊட்ட இசையின் குறும்பில் லயித்தனர் அனைவரும்.

தமிழ் உணர்வாளர்கள் -இளைஞர்கள் -சிறுவர்கள் நெஞ்சில் பிரபா கரன் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா?என்ற கேள்விகள் இப்போதும் தொடர்ந்தாலும் கவிஞர் அறிவுமதியின்,

என்ன குறையோ என்ன நிறையோ
எதற்கும் நான் உண்டென்பான்…
நன்றும் வரலாம் தீதும் வரலாம்
நண்பன் போலே கண்ணன் வருவான்
வலியும் வரலாம் வாட்டம் வரலாம்
வருடும் விரலாய் கண்ணன் வருவான்
அவன் வருவான் கண்ணின் மழை துடைப்பான்
இருள் வழிகளிலே புது ஒளி விதைப்பான்
அழகு கண்ணன்’

எனும் பாடலையே பதிலாக தருகின்றனர் உணர்வாளர்கள்.

கண்ணன்,’ மணிவிழா கொண்டாடும் ‘தம்பிதான் என சொல்ல தேவையில்லை…

பிரபாகரன் வெறும் சொல்லல்ல- எழுச்சியின் குறியீடு….

அவ்வாறாகத்தான் புரிய வைக்கிறது சர்வதேசமெங்கும் தடைகளை உடைத்து உணர்ச்சிப்பூர்வமாகக் கொண்டாடப்பட்ட பிரபாகரனின் மணிவிழாவும், மாவீரர் நாளும்.

-சே.த.இளங்கோவன், பகத்சிங்

நன்றி: நக்கீரன்.