முன்னொரு காலத்தில்… என்று தொடங்கும் அரச கதைகளில் வல்லமையொண்ட மன்னர்கள் வருவார்கள்… பகையை வெல்லும் ராஜகுமாரர்கள் வருவார்கள்… அந்தக் கதைகளைக் கேட்பதற்கு குழந்தைகள் ஒரு பாட்டியின் பக்கத்திலோ, அல்லது ஒரு தாத்தாவின் பக்கத்திலோ அமர்ந்திருந்து, ஆவலுடன் கதை கேட்பார்கள். அந்தக் கதைகள் அவர்களைக் கற்பனை உலகத்திற்குத் தூக்கிச்சென்றுவிடும். அதனுடன் அவர்கள் வாழ ஆரம்பித்துவிடுவார்கள்.

இன்று, தமிழுலகத்தின் குழந்தைகள் அனைத்தும் கதைகேட்க உட்கார்ந்துகொண்டால், அவர்கள் முன்னொரு காலத்தில்… என்ற கதைகளை முற்றாக நிரகரித்துவிட்டு, பிரபாகரன் மாமாவின் கதையைச் சொல்லுங்கள் என்று அடம்பிடிக்கிறார்கள். முன்னொரு காலத்தில்… என்று தொடங்கும் கதைகளின் கற்பனை பாத்திரங்களை அவர்கள் இப்போதெல்லாம் ரசிப்பதில்லை. இன்றைய காலத்தில்… பிரபாகரன் என்றொரு மாமனிதன்… என்ற நிஜம் அந்தக் குழந்தைகளை மட்டுமல்ல… அத்தனை தமிழர்களையும், அதையும் தாண்டி அத்தனை மனிதர்களையும் கட்டிவைத்துள்ளது.

praba32
இத்தனைக்கும், பிரபாகரன் என்ற அந்த மாமனிதன் நேற்றைய பொழுது வரைக்கும் ஈழத்தமிழர்களின் மீட்பராக மட்டுமே அடையாளப்பட்டிருந்தார். அவரது சொல்லும், செயலும், நேர்மையும், சத்தியமும், வீரமும் முள்ளிவாய்க்காலுடன் முடிந்துவிட்டது என்ற எதிரிகளின் கொக்கரிப்பை மீறி, சத்தியப் பெருவெள்ளமாக மாறிய அற்புதம் இப்போது உலகம் எங்கும் நிகழ்ந்துகொண்டுள்ளது. யுத்த களத்தில் தோற்கடிக்கப்பட்ட சத்தியம் இப்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.

ஒரு சின்னஞ்சிறிய தீவான இலங்கைத்தீவின் தமிழர்தாயகத்திலுள்ள தமிழ்மக்களின் தேசியத்தலைவனாக, நிகரற்ற வீரனாக, இலட்சியத்தின் உறுதியாக, தியாகத்தின் வடிவமாகப் போற்றப்பட்ட பிரபாகரன் என்ற பெரு மனிதன் இன்று உலகத்தமிழினத்தின் ஒற்றை அடையாளமாகப் பிரவாகித்துள்ளான். அதையும் தாண்டி, உலகத்தின் அத்தனை மனிதர்களும் அறிந்துகொள்ளத் துடிக்கும் அற்புத மனிதனாகவும் பிரபாகரன் உயர்ந்து நிற்கின்றார்.

ஒரு இனத்தின் தலைவன் எப்படி இருக்கவேண்டும் என்பதற்குப் பிரபாகரன் ஒரு ஒற்றை உதாரணம். அதனால்தான், இன்று தமிழகத்தின் எழுச்சிக்கும், தமிழின உணர்வுக்கும் பிரபாகரனே மூலமாக உள்ளார். தமிழகத்தில் போராடும் அத்தனை மாணவர்களும் ஒற்றை வழிகாட்டியாகப் பிரபாகரனே உள்ளார். அதனையே அரங்கங்களில் கருத்துக்களை வெளிப்படுத்தும் மாணவர்களது சொல்லிலும் வெளிப்படுகின்றது.

தலைவனாக வருவதற்காகப் பலரும் போராடுகின்றார்கள். தங்களது வெற்றிக்காக அத்தனை போராட்டங்களையும் முதலீடாக மாற்றிக்கொள்கின்றார்கள். பதவி கிடைக்கும்வரை அவர்கள் மிகச் சிறந்த போராளிகளாகவே தம்மை முன் நிறுத்திக் கொள்வார்கள். அதன் பின்னர் அவர்களுக்கு எல்லாமே அறுவடை காலங்கள்தான். இதற்கு, வாழும் உதாரணமாக மு. கருணாநிதி அவர்களைச் சொல்லலாம்.

hero-2014
வெற்று மனிதராக, தமிழக அரசியல் போர்க் களத்தில் நின்ற கருணாநிதியின் வாழ்நிலையையும், இன்றைய டாக்டர், கலைஞர் மு. கருணாநிதி அவர்களையும் சிறிது ஒப்பிட்டுப் பொருத்திப் பார்த்தால் புரியும் அவரது அறுவடை காலம் எத்தகைய சிறப்பாக இருந்தது என்று. அண்மையில், அவரது பெண் அரசியல் வாரிசான கனிமொழி அவர்களும் தன் தந்தையார் 14 வயதில் அரசியல் போர்க் களத்திற்கு வந்ததாகப் பெருமையுடன் தெரிவித்திருந்தார். அப்போது, அவர் கொண்டு வந்தது என்ன…? இப்போது அவர்வசம் உள்ள சொத்துக்களின் பெறுமதி என்ன…? அவரை நம்பிய தமிழகம் வளர்ந்ததோ இல்லையோ, அவரது வளர்ச்சி மட்டும் ஆகாயத்தைத் தாண்டுகின்றது. அவரது பெயரை உச்சரிப்பதற்கே தமிழகத்து இளஞர்கள் பெருவிருப்புக் கொள்ளுகின்றார்கள்.

தனக்கேயான ஒரு தமிழகத்தை… தனக்குப் பின்னரும் அந்தத் தமிழகத்தை ஆள்வதற்கான வாரிசுகளை… அதனால் குவியும் செல்வத்தை அனுபவிக்க சொந்தங்கள்… என்ற கருணாநிதியின் கனவுலகத்தைக் கலைத்தவர் பிரபாகரன் என்ற பெருந் தலைவன். இதனால்தான் என்னவோ, கருணாநிதி அவர்களுக்கு பிரபாகரனை என்றுமே பிடித்ததில்லை.

தனது தேசத்தைத் தனக்கேயானதாகத் தப்ப வைப்பதற்காகவே, பிரபாகரன் என்ற பேரொளி வீழ்த்தப்பட வேண்டும் என்று கருணாநிதி நம்பினார். அதனாலேயே, ஈழத்தமிழினத்தின் பேரழிவிற்கும் இந்திய ஆட்சியாளர்களுடன் சேர்ந்தே துணை நின்றார். அதன் பின்னரும், தனது இருப்பை உறுதிப்படுத்துவதற்காகவே, தள்ளாத வயதிலும் பிணி தீர்க்கும் தாய் மடியாக எண்ணித் தமிழகம் வந்த தமிழ்த் தேசியத்தின் அன்னை பார்வதி அம்மாவையும் அந்த நிலத்தில் கால் பதிக்க மறுத்துத் திருப்பி அனுப்பினார்.

ஆனாலும், கருணாநிதி அவர்களது கனவு தகர்ந்தே போய்விட்டது. தமிழகம் இப்போது பிரபாகரன் தேசமாக மாறிவிட்டது. கருணாநிதி என்ற மனிதனை மறப்பதனையே தமிழகத்து மாணவர்கள் விரும்புகின்றார்கள். அவர்களது நெஞ்சிலும், நினைவிலும் பிரபாகரனே நிறைந்து நிற்கின்றார். பிரபாகரனே அவர்களை வழிநடாத்துவதாக அவர்கள் நம்புகின்றார்கள். பிரபாகரனை முன்னிறுத்தியே அவர்கள் போராட்டங்களை நடாத்துகின்றாhகள். அவர்கள் பிரபாகரன் வருவார் என்று நம்புகின்றார்கள். அந்த நம்பிக்கையுடனேயே போராடுகின்றார்கள். தமிழகத்தை ஆள்வதற்கு அவர்கள் இன்னொரு பிரபாகரனைத் தேட ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களது நம்பிக்கை வீண் போகாது.

-கதிரவன்
(சுவிஸ்)