ஐ.நா விசாரணையானது சிறீலங்கா விடயத்தில் அனைத்துலகத்திற்கான ஒரு நுளைவுப் பதையை திறக்கும் என வொசிங்டன் ரைம்ஸ் தெரிவித்துள்ள நிலையில் 2011 ஆம் ஆண்டு மே மாதம் தாயகத்தில் இருந்து வெளிவரும் நம்தேசம் வாரஏட்டுக்கு அருஷ் அவர்கள் எழுதிய கட்டுரையை காலத்தின் தேவை கருதி ஈழம்ஈநியூஸ் மீள்பிரசுரம் செய்கின்றது.

பிராந்திய வல்லரசுகளிடம் இருந்து கைநழுவிப்போகும் சிறீலங்கா விவகாரம் – வேல்ஸ் இல் இருந்து அருஷ்

ஈழத்தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனையில் அனைத்துலக சமூகத்திற்கு உள்ள தொடர்புகள் மறைக்கவும், மறுக்கவும் முடியாத நிலையை எட்டிள்ளது. ஐக்கிய நாடுகள் சபை அமைத்துள்ள போர்க்குற்ற ஆலோசனைக்குழுவின் செயற்பாடுகளும், ஐரோப்பிய ஒன்றியத்தின் வரிச்சலுகையின் நிறுத்தமும், புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுடன் மேற்குலகம் காண்பித்துவரும் நெருக்கங்களும் அதனை தான் எடுத்துக்காட்டுகின்றன.

அதற்கான காரணம் என்ன என்றால் விடுதலைப்புலிகளின் இராணுவபலத்தை சிதைத்ததன் பின்னனியில் அனைத்தலக சமூகம், குறிப்பாக மேற்குலகமும், இந்தியாவும் முனைப்பாக செயற்பட்டதை குறிப்பிடலாம். அதனை விக்கிலீக்ஸ் இணையத்தளமும் உறுதிப்படுத்திவருகின்றது.

விடுதலைப்புலிகளின் படைபலத்தை பலவீனப்படுத்தி தமிழ் மக்களை தனக்கு ஆதரவாக மாற்றவே அமெரிக்கா முற்பட்டிருந்தது. இறுதிப்போரில் அவர்கள் முற்றாக அழிக்கப்படுவதை தவிர்ப்பதற்கும் அது முற்பட்டிருந்தது. பசுபிக் பிராந்தியத்தின் கட்டளை மையத்தின் கீழ் வரும் இந்துசமுத்திரப்பிராந்தியத்தின் உள்நுளைவுக்கு அமெரிக்கா தயாராகியபோதும், சிறீலங்கா அரசுக்கு இந்தியா வழங்கிய கவசம் அதனை தடுத்துவிட்டது.

1980 களில் சிறீலங்காவுக்கான முன்னாள் இந்திய தூதுவர் ஜே என் டிக்சிற் மேற்கொண்ட பணியை நாலாவது ஈழப்போரில் இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம் கே நாராயணன், முன்னாள் வெளிவிவகாரச் செயலாளர் சிவ்சங்கர் மேனன் ஆகியோர் ஆற்றியிருந்தனர்.

mahi-pak
பிரித்தானியாவின் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மில்லிபான்ட், பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் பேர்னாட் குச்சுனர், சிறீலங்கா விவகாரங்கள் தொடர்பில் அமெரிக்கா நியமித்த சிறப்பு பிரதிநிதி டெஸ் பிரவுணி ஆகியோரின் பயணங்களையும் இந்தியா முறியடித்திருந்தது.

மனிதர்களை கொல்லும் ஆயுதங்களை பாகிஸ்த்தான் மற்றும் சீனா ஆகிய நாடுகளிடம் இருந்து கொள்வனவு செய்யுமாறு சிறீலங்கா அரசுக்கு ஆலோசனைகளை வழங்கிய இந்திய அரசு, சிறீலங்கா அரசு மேற்கொண்ட போருக்கான தொழில்நுட்ப மற்றும் நேரடியற்ற உதவிகளை தானே முழுமையாக வழங்கியிருந்தது.

விடுதலைப்புலிகளின் நகர்வுகள் அனைத்தையும் தனது செய்மதிகள் மூலம் படம்பிடித்து தகவல்களை வழங்கிய இந்தியா, பின்னர் களமுனைகளிலும் தமது தொழில்நுட்பவியலாளர்களை ஈடுபடுத்தியிருந்தது. வவுனியா வான்படைத்தளம் மீது விடுதலைப்புலிகள் மேற்கொண்ட வான் தாக்குதலில் அது அம்பலமாகியிருந்தது.

விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் இந்தியா, சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இணைந்து இயங்கியதை எம்மில் பலர் ஏற்றுக்கொள்ளவில்லை. பாகிஸ்தானுக்கும் – இந்தியாவுக்கும் இடையிலான பகை, சீனாவுக்கும் – இந்தியாவுக்கும் இடையிலான பகமை என்பனை அவர்களின் ஒன்றிணைவை நம்புவதற்கு எம்மை அனுமதிக்கவில்லை.

ஆனால் தற்போது நடைபெறும் லிபியா மீதான மேற்குலகத்தின் போருக்கு எதிராக இந்தியாவும், சீனாவும் இணைந்து மேற்கொண்டுள்ள வெளிநடப்பு, வன்னிப்போரின்போது என்ன நடைபெற்றிருக்கும் என்பதை உணரவைத்துள்ளது.

வன்னியில் நடைபெற்ற போரின் போது, ஜே.வை-11 ரக ராடார்களை சீனா வழங்க, இந்திரா-11 வரை ரடார்களை இந்தியா வழங்க, பக்தசிகான் வகை டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை பாகிஸ்தான் வழங்கியிருந்தது.

இவற்றின் நடுவில் மேற்குலகமும் தமிழ் மக்களை பலவீனப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தது. போருக்கான ஆரம்ப உதவிகளை வழங்கிய மேற்குலகத்தினால் அதனை நிறுத்த முடியவில்லை. தற்போது லிபியா மீது கொண்டுவரப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தை போன்றதொரு தீர்மானத்தை கொண்டுவர அவர்களால் முடியவில்லை. ஆனால் முயற்சித்தனர்.

அதன் மூலம் சில கிலோ மீற்றர் பரப்புக்குள் முடக்கப்பட்டிருந்த 300,000 இற்கு மேற்பட்ட தமிழ் மக்களை பாதுகாப்பதற்காக விமானங்கள் பறக்கமுடியாத வலையத்தை உருவாக்கவும் அவர்களால் முடியவில்லை.

அதற்கான காரணம் இந்தியா, சீனா என்ற இரு பெரும் பிராந்திய வல்லரசுகளின் ஆதிக்கம் தான். லிபியா விவகாரத்தில் வெளிநடப்பு செய்ததுபோல அவர்கள் வெளிநடப்பு செய்யும் நிலையில் அன்று இருக்கவில்லை. மேற்குலகத்தின் செயற்பாடுகளை வலுவாக எதிர்க்கும் நிலையில் தான் செயற்பட்டிருந்தனர்.

சீனாவை நம்புமளவிற்கு மேற்குலகத்தின் செயற்பாடுகளை நம்புவதற்கு இந்தியா தயாராகவும் இருக்கவில்லை. தற்போதும் இந்தியாவிடம் அவ்வாறானதொரு நிலை தான் காணப்படுகின்றது.

இன்று லிபியாவில் மேற்குலகத்தின் ஆதரவுடன் போரிட்டுவரும் எதிர்த்ரப்பினரை விட பல மடங்கு பலமும், பயிற்சியும், அனுபவமும் மிக்க வீரர்களை கொண்ட படையணியாகவே விடுதலைப்புலிகள் அமைப்பு அன்று விளங்கியிருந்தது.

US drone at Edwards air force base
இரண்டு டசின் தாக்குதல் விமானங்களை கொண்டுள்ள சிறீலங்கா அரசின் தாக்குதல் வலிமையை முறியடித்து, ஈழத்தமிழ் மக்கள் இழந்த அரசியல் உரிமைகளை இரு வருடங்களுக்கு முன்னரே பெற்றுக்கொடுத்திருக்க முடியும். அல்லது அதற்கான சந்தர்ப்பங்களை உருவாக்கியிருக்க முடியும். ஆனால் பிராந்திய வல்லரசுகளின் ஆதிக்கம் அதனை தடுத்துவிட்டது.

எனினும், உலகின் ஜனநாயக மலர்ச்சி மற்றும் மனித உரிமைகளின் நிலைநாட்டல் என்ற கோசத்துடன் தமது ஆளுமையை விரிவாக்கி வருகின்றது மேற்குலகம். சோவியத்தின் வீழ்ச்சியும் புதிய நாடுகளின் உருவாக்கமும், யூகோஸ்லாவாக்கியாவின் வீழ்ச்சியும் புதிய நாடுகளின் உருவாக்கமும், ஆப்கானிஸ்த்தான் போர், ஈராக் போர், துனீசியாவின் வீழ்ச்சி, எகிப்தின் வீழ்ச்சி, தென்சூடானின் உருவாக்கம், லிபியா போர் என்பன அதற்கான சிறந்த உதாரணங்கள்.

நட்புறவுவாடி வந்த நாடுகளையே சமயம் பார்த்து தகர்த்து வருகின்றது மேற்குலகம். உதாரணமாக மேற்குலகத்திடம் சில ஆண்டுகளுக்கு முன்னர் சரணடைந்த லிபியாவின் அதிபர் கேணல் கடாபி பல ஐரோப்பிய நாடுகளுக்கு பயணங்களை மேற்கொண்டிருந்தார்.

பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டொனி பிளேயர் கூட சில வருடங்களுக்கு முன்னர் லிபியாவுக்கு சென்று விருந்து உண்டு வந்திருந்தார். ஆனாலும் தமக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தபோது அவர்கள் லிபியாவை தாக்குவதை தவிர்த்துக்கொள்ளவில்லை.

எனவே இந்தியாவுக்கும் – மேற்குலகத்திற்கும், சீனாவுக்கும் – மேற்குலகத்திற்கும் இடையில் உள்ள உறவுகளும் அவ்வாறானதாகவே அந்த நாடுகளால் பார்க்கப்படுகின்றன. எனவே தான் லிபியா மீதான தாக்குதலை எதிர்ப்பதில், இந்தியா, ரஸ்யா, சீனா, பிரேசில், ஜேர்மனி ஆகிய நாடுகள் ஒன்றிணைந்திருந்தன.

ஜேர்மனியை பொறுத்தவரையில் இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் படைபலம், அதிகாரபலம் அற்ற நாடாக அது உள்ளதுடன், சம்பிரதாயபூர்வமாக போருக்கான ஆதரவுகளை அது வழங்குவதில்லை.

எனவே ஏனைய நாடுகளுக்கும் மேற்குலகத்திற்கும் இடையில் ஏற்பட்டுள்ள விரிசல்கள் தான் இங்கு முக்கியமானவை. இந்த விரிசல்களின் பின்னனியில் சிறீலங்கா விவகாரங்களும் உள்ளடங்கும்.

ஆனால் மேற்குலக நாடுகள் சுலபமாக இவ்வாறான தலையீடுகளை எவ்வாறு மேற்கொள்கின்றன என்பதே தற்போதைய பிரதான கேள்வி.

பிராந்திய வல்லரசுகள் என தெரிவித்துவரும் நாடுகள் தமது பிராந்தியத்தில் ஏற்பட்டுவரும் நெருக்கடிகளை தீர்ப்பதில் தோல்வி கண்டுவருகின்றன. உதாரணமாக ஆபிரிக்க கண்டத்தில் உள்ள நாடுகளில் காணப்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் ஆபிரிக்க நாடுகளின் கூட்டமைப்போ அல்லது, அரபு நாடுகளில் ஏற்பட்டுவரும் நெருக்கடிகளை தீர்ப்பதில் அரபு நாடுகளின் கூட்டமைப்போ தவறிவருகின்றன.

அதேபோலவே, இந்துசமுத்திர பிராந்தியத்தின் நெருக்கடிகளை அதன் பிராந்திய வல்லரசுகளால் தீர்க்கமுடியவில்லை. சிறீலங்காவில் இடம்பெற்ற இனப்போருக்கான நியாயமான தீர்வைக்கூட பெற்றுக்கொடுக்க அந்த நாடுகளால் முடியவில்லை.

தமது பிராந்தியத்தில் காணப்படும் பிரச்சனைகளை தீர்ப்பதில் பிராந்திய வல்லரசுகள் கண்டுவரும் இந்த தோல்விகள் தான் மேற்குலகத்திற்கு சாதகமான காரணிகளை தோற்றுவித்துவருகின்றன.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் உள்நுளைந்துகொண்ட அமெரிக்காவும், சிறீலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை அமைத்தள்ள போர்க்குற்ற ஆலோசனைக்குழுவும் இந்துசமுத்திர பிராந்தியத்திற்கான மேற்குலகத்தின் உள்நுளைவாகவே பிராந்திய வல்லரசுகள் பார்க்கப்படுகின்றன.

எனவே தான், சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும், பேர்க்குற்றங்கள் தொடர்பில் அனைத்துலக மனித உரிமை அமைப்புக்களும், மனிதாபிமான அமைப்புக்களும் குரல்கொடுத்துவரும்போதும் தன்னை உலகின் மிகப்பெரும் ஜனநாயக நாடாக தெரிவித்துவரும் இந்தியா மௌனம் காத்துவருகின்றது.

ஆனால் இந்த மௌனம், மேற்குலகத்தின் நகர்வுகளையோ அல்லது, புலம்பெயர் தமிழ் மக்களின் எழுச்சிகளையோ தடுத்தும் நிறுத்தும் பலம் கொண்டதல்ல. பிராந்திய வல்லரசுகளின் அழுத்தங்களையும் மீறி சில நடவடிக்கைகள் நடைபெறப்போகின்றன என்பதை ஏப்ரல் மாதத்தின் நடுப்பகுதியில் வெளியிடப்படும் ஐக்கிய நாடுகள் சபை ஆலோசனைக்குழுவின் அறிக்கை கட்டியம் கூறலாம்.

ஆனால் மேற்குலகத்தின் உள்நுளைவுக்கு முன்னர் ஈழத்தமிழ் மக்களின் பிரச்சனைக்கு இந்தியா ஒரு நியாயமான தீர்வை கொண்டுவருமா என்பதில் தான் இந்துசமுத்திர பிராந்தியத்தின் எதிர்காலம் தங்கியுள்ளது.

சிறீலங்காவில் ஈழத்தமிழ் மக்களுக்கு அரசியல் பிரச்சனைகள் இல்லை என்றோ அல்லது அரைகுறை தீர்வுகளை வழங்கிவிட்டு தீர்வு காணப்பட்டுவிட்டதாகவோ இந்தியா மற்றும் சிறீலங்கா அரசுகளால் உலகத்தை ஏமாற்றமுடியாது. ஏனெனில் தாயகத்தில் தமிழ் மக்களின் குரல்வளைகளை நசுக்கியது போல புலம்பெயர் தமிழ் சமூகத்தின் குரல்வளைகளை அவர்களால் நசுக்க முடியாது என்பதே பிராந்திய வல்லரசுகளால் ஜீரணிக்கமுடியாத கசப்பான உண்மை.