பிராந்திய வல்லரசுகள் உடையும்போது பல இனங்கள் விடுதலை அடைகின்றன

0
1038

ஊடகவியலாளர் Aaron Berhane தனது மூன்று சொந்தச் சகோதரர்களை எரித்திரிய விடுதலைப் போரில் இழந்திருக்கின்றார். அவரது மனைவி நான்கு சகோதரர்களை இழந்திருக்கின்றார். Aaron Berhane கூட்டத்தில் உரைத்ததை முடிந்தளவு சொல்ல முனைகின்றேன்.

 

1890ஆம் ஆண்டுகளில் எரித்திரியாவை இத்தாலி கைப்பற்றிக் கொண்டது. 50 வருடங்கள் இத்தாலியின் எரித்திரியா மீதான காலனித்துவ ஆட்சி தொடர்கிறது. இரண்டாம் உலக யுத்தத்தின் முடிவில் இத்தாலி தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து பிரிட்டன் 12 ஆண்டு காலம் தனது பிடிக்குள் கொண்டு வருகிறது எரித்திரியாவை. 12 ஆண்டுகால முடிவில் பிரிட்டிஷ் ஏகாதியத்தியம் எரிதித்திரியாவை எதியோப்பியாவுடன் இணைந்த சமஷ்டி அரசாக பிரகடனப்படுத்திவிட்டுச் செல்கிறது.

 

அன்றைய நிலையில் எதியோப்பியாவின் மக்கள் தொகை 60 மில்லியன். எரித்திரிய குடிசனத்தொகை 4 மில்லியன். எரித்திரியாவில் 9 மொழிக் குடும்பங்கள். இதில் 50 வீதமானோர் கிறீஸ்தவர்கள். மீதி 50 வீதமானோர் முஸ்லீம்கள். ஆனாலும் அவர்கள் அனைவரும் மதப்பிறள்வில்லாமல் அமைதியாக வாழ்ந்து கொண்டிருந்தவர்கள். ஆயினும் எரித்திரிய சமஷ்டி அரசுக்குள் எதியோப்பியா தனது மேலாண்மையை நிலைநாட்டுதற்காய் மத முரண்பாடுகளைக் கூர்மையடைய வைத்தது பல வழிகளில்.

 

1961இல் எதியோப்பியா சமஷ்டி அரசியலமைப்புச்சட்டத்தை மீறித் தனது மேலாண்மையை நிறுவவதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிறது. அந்தச் சமயத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய எரித்திரியர்கள் சிலரால் ஆரம்பிக்கப்படுகிறது எரித்திரிய விடுதலைப் போராட்டம். ELF , EPLF என்ற போராளிக் குழுக்கள் தோற்றம் பெறுகின்றது.

 

இந்த இரு குழுக்களுக்குள்ளும் சண்டை மூண்டு எரித்திரியர்கள் தங்களுக்குள்ளே மோதிக்கொண்டு மடிகிறார்கள். இது எரித்திரிய வரலாற்றில் மிகவும் மோசமான காலகட்டம். இறுதி முடிவில் EPLF தனது ஏகப் பிரதிநிதித்துவத்தை நிலைநாட்டிக் கொள்கிறது.

 

EPLF 1978 இல் எரித்திரியாவின் 90வீத நிலப்பரப்பைத் தனது பிடிக்குள் வைத்திருக்கின்றது. அஸ்மாரோ, மசோலா என்ற கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் அதனுள் உள்ளடங்கும்.

 

இந்தப் போராட்ட காலகட்டங்களில் எரித்திரியாவுக்கு ஆதரவளித்து வந்திருக்கிறது சோவியத் யூனியன். ஆனால் இங்கு காட்சி மாறுகிறது. இப்பொழுது சோவியத் யூனியன் பக்கம் மாறி எதியோப்பியாவின் பக்கம் சாய்கிறது. இராணுவ உதவிகளைக் கொட்டிக் குவிக்கிறது எதியோப்பியாவுக்கு சோவியத் யூனியன். எதியோப்பியாவின் படையெடுப்புக்குத் தாக்குப் பிடிக்க முடியாத எரித்திரியா பின்வாங்குகிறது தோல்வியைத் தழுவிக்கொண்டு! EPLF இன் கட்டுப்பாட்டுப் பகுதி சுருங்குகிறது 10வீதத்தால்.

 

இந்தச் சந்தர்ப்பத்தில் EPLFஇன் முக்கியஸ்தர்கள் பலர் கட்சி மாறி இணைந்து கொள்கிறார்கள் எதியோப்பிய அரசோடு. இன்னும் பலர் விலகிச் சென்று விடுகின்றனர். ஆயினும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த மலைப்பிரதேசங்களில் நிலை கொண்ட போராளிகள் தொடர்ந்து போராடுகிறார்கள் எவ்வித விட்டுக்கொடுப்புமின்றி. அவர்களை முற்றாக அழித்துவிட முடிவதில்லை எதியோப்பிய அரசால்.

 

1989 இல் கொர்பச்சேவின் ஆட்சிக்காலத்தில் கிளாஸ்நோஸ்ற், பெரஸ்ரோறிக்கா என்று மாற்றங்கள் எற்பட்டு சோசலிச ஆட்சிக் கொள்கைகள் மாற்றம் பெற்று சோவியத் யூனியன் உடைகிறது .ரசியாவின் வெளிவிவகாரக் கொள்கைகளில் நிறைய மாற்றங்கள் ஏற்படுகிறது. அதன் காரணமாக எதியோப்பியாவுக்கு வழங்கப்பட்டு வந்த இராணுவ உதவிகள் ரசியாவால் நிறுத்தப்படுகின்றன. மீண்டும் எரித்திரிய EPLF மீண்டெழுந்து தனது நிலத்தைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொணருகிறது. 1991 இல் இது நிகழ்ந்தாலும் 1993 இல் எரித்திரியா உத்தியோககபூர்வமாகத் தனது சுதந்திரப் பிரகடனத்தைச் செய்து முடிக்கின்றது.

 

நன்றி: முரளி