பிரான்சில் தொழிலாளர் தினம் மற்றும் தமிழினஅழிப்பு நாள் மே18 க்கு அழைப்பு!

0
627

அன்பார்ந்த பிரான்சு வாழ் தமிழீழ மக்களே வணக்கம்!

உலகத்தொழிலாளர் தினம் மே 1-ம் நாள்

18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர். இதற்கெதிரான குரல்களும் பல்வேறு நாடுகளில் எழத்தொடங்கியது.

பிரான்சு நாட்டில் சோசலிசத் தொழிலாளர்களின் ‘சர்வதேச தொழிலாளர் பராளுமன்றம்” கூடி 1890 மே 1-ம் நாள் எடுத்த தீர்மானத்தின் பிரகாரம் மே 1-ம் நாள் சர்வதேச அளவில் அடக்கியொடுக்கப்படும் தொழிலாளர்களுக்குக் குரல் கொடுக்கும் நாளாக பிரகடனப்படுத்தப்பட்டது.

புலம்பெயர்ந்து பிரான்சு மண்ணில் வாழ்ந்துவரும் ஈழத்தமிழ் மக்களாகிய நாங்கள் எமது தாயகத்தையும் நினைவில் கொள்வதோடு, எமது மொழி, கல்வி, கலை, கலாசாரம், விளையாட்டு என்பவற்றில் ஈடுபடுவதோடு மட்டுமன்றி, அதன் கட்டமைப்புகள் மூலமாகச் சரியான வழியில் அவற்றைப் பேணியும் பாதுகாத்தும் வருகின்றோம். எனினும் ஈழத்தமிழர்களின் வாழ்வியலையும், இருப்பையும் தீர்மானிக்கும் காரணிகளாக அரசியல், சனநாயக செயற்பாடுகளும் அமைந்திருக்கின்றன என்பதை நாம் கண்டிப்பாக உணர்ந்து இதன் மூலமாகத் தமிழீழ மண்ணில் சிங்களப் பேரினவாத அரசினால் தினம் தினம் தமிழர் நிலமும், வாழ்விடங்களும், தொழில்களும் பறிக்கப்பட்டுக் கொண்டிருப்பதையும் அதனைத் தட்டிக்கேட்பவர்களின் உயிர்கள் பறிக்கப்படுதலும், வாவிகளிலும், மரங்களிலும், கிணறுகளிலும் பிணங்களாகத் தமிழர் தாயகப்பகுதிகளில் உடல்கள் கண்டெடுக்கப்படும் மோசமான நிலை நாள்தோறும் நிகழ்ந்தேறிவருகின்றன. பிரான்சில் வாழும் ஈழத்தமிழ் மக்களாகிய நாம், எமது நிலைப்பாட்டையும், எமக்கிழைக்கப்பட்ட உயிர் பறிப்புகளையும், தொடர்ந்துகொண்டேயிருக்கும் சிறீலங்கா அரசின் வன்கொடுமைகளையும், தொடர்ந்து உரிய இடங்களுக்கு எடுத்துச்சொல்ல வேண்டியது அவசியம். இது ஈழத்தமிழர்களாகிய எங்கள் ஒவ்வொருவரது தலையாய கடமையுமாகும்.

தமிழின அழிப்பு நாள் மே 18

உலக இனமே வெட்கித் தலைகுனியும் நிலையைத் தந்த 2009 தமிழினப்படுகொலை நினைவு நாள் மே 18-ம் திகதியாகும். ஐ.நாவின் உள்ளக அறிக்கையின் பிரகாரம் அடிப்படையில் 70 ஆயிரம் தமிழர்களைப் படுகொலை செய்தும், 5 வருடங்கள் கடந்தும் மன்னார் பிசப் குறிப்பிட்ட 1,46,679 பேர் காணாமல் போயும், பல நூற்றுக்கணக்கான பெண்களைப் பாலியல் துன்புறுத்தலுக்கும் உள்ளாக்கி, வாழ்க்கைத் துணைவனையிழந்த பெண்களும், ஆண்களும், பெற்றோர்களையும், அவயவங்களை இழந்த பிள்ளைகளும், பெரியவர்களும் என கொடும்வதையை செய்த சிங்களப்பேரினவாத அரசு 5 வருடங்களாகிய நிலையிலும் தனது தமிழினவழிப்பில் இருந்து சிறிதேனும் பயமின்றித் தொடர்ந்தும் தமிழ் மக்கள் மீது தனது வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டுக்கொண்டே இருக்கின்றது.

அதேநேரம் புலம்பெயர்ந்து வாழும் தமிழீழ மக்கள் சர்வதேச நீதியையும்,நியாயத்தையும் கோரி எடுத்த முன்னெடுப்புக்கள் சிங்களப் பேரினவாத அரசையும், அதற்குத் துணைபோன இராணுவத் தலைவர்களையும் கலக்கத்திற்குள்ளாக்கியுள்ளது. 2009 இல் வீதிகளில் அல்லும் பகலும் அயராது புலத்தில் எமது மக்கள் போராடியபோது அமைதிகாத்த சர்வதேசம், இன்று தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க உதவவேண்டுமென்று கனடா, அமெரிக்கா, பிரித்தானியா, ஐரோப்பிய நாடுகள் முன்வந்து சிங்களப் பேரினவாத அரசுக்கெதிரான தமது செயற்பாட்டிலும் வெளிப்படையாகவே ஈடுபட்டுவருகின்றன.

இதற்குக் காரணமாகவிருக்கும் அந்தந்த நாட்டின் சட்டதிட்டங்களுக்கமைய அவர்களின் அனுமதியோடு புலம்பெயர் மண்ணில் பதிவுசெய்யப்பட்டு சனநாயக நாடுகளில், சனநாயக உரிமை விழுமியங்களோடு பணியாற்றி வரும் அமைப்புக்கள் மீது பழி சுமத்துவதும், தடைசெய்வதுமான செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றது. இது ஒருவகையில் புலம்பெயர்ந்து தமிழீழ மக்கள் வாழும் நாடுகளைப் பகைத்துக்கொள்வதும், அவர்கள் மீது நம்பிக்கையற்றதொரு செயற்பாட்டை செய்வதென்பதும் சிங்கள அரசின் தமிழர் இனவெறிப்போக்கினையே வெளியுலகிற்குக் காட்டி நிற்கின்றது.

ஐந்து வருடங்கள் ஆன நிலையில் சர்வதேசம் இனி ஈழத்தமிழ் மக்களுக்கு விரைவாக என்ன செய்யவேண்டும் என்பதை வலியுறுத்திச் சொல்ல வேண்டியதொரு நாள் மே 18-ம் திகதியாகும்.

இந்த வகையில் மே மாதம் இரண்டு மாபெரும் பேரணிகளைத் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவும் அதன் உப கட்டமைப்புகளும் இணைந்து வழமைபோல் நடாத்தவுள்ளன. இப்பேரணியில் பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்து பேரணிகள் நடைபெறவுள்ளன.

அவையாவன: இன அழிப்புக்கான அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்துதல்,
தமிழீழத்திற்கான ஐ.நாவின் பொது வாக்கெடுப்பு நடாத்தக்கோரி சர்வதேசம் முழுவதும் ஒரேகோசமாகத் தமிழீழ மக்களால் எழுப்பப்படவுள்ளது.

பிரான்சில் மே 1ம் நாள் – சர்வதேச தொழிலாளர் தினம் (01.05.2014 வியாழன் ) நண்பகல் 1.00 மணிக்கு (Nation : Direction Nation

மே 18 ம் நாள் – தமிழினப் படுகொலை நினைவு நாள் (18.05.2014 ஞாயிற்றுக்கிழமை) நண்பகல் 1.00 மணிக்கு( முள்ளிவாய்க்கால் 5ம் ஆண்டு நினைவு ) இடம்: லாச்செப்பலில் La chapelle இருந்து République வரை நடைபெறவுள்ளது.

இப்பேரணிகள் சிறக்கவும், எத்தனை தடைகள்வரினும் உறுதியோடும், உண்மையோடும், உலகம் முழுவதும் நடைபெறவுள்ள ஈழத்தமிழ் மக்களின் சனநாயக, அரசியல் ரீதியிலான பேரணிகளோடு பாரிசில் நடைபெறவுள்ள இப்பேரணியில் அனைத்துத் தமிழ் மக்களையும் கலந்துகொள்ளுமாறும் அன்போடு கேட்டுக்கொள்கின்றோம்.

‘தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்”
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு
27.04.2014