பிரான்ஸ் ஊடக இல்லத்தின் அதிகாரபூர்வ பதிப்பான ஈழமுரசு பத்திரிகையின் மூத்த ஊடகவியலாளர் மீதான படுகொலை முயற்சியின் சூத்திரதாரியான பாலமுரளி பாலசிங்கம் (புலிகளின் குரல் முரளி) என்பவருக்கு பிரெஞ்சு நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

 

பாரிசில் உள்ள ஈழமுரசு பத்திரிகையின் செயலகத்தில் இருந்து கடந்த 18.09.2014 அன்று வீடு திரும்பிக் கொண்டிருந்த ஊடக இல்லத்தின் மூத்த ஊடகவியலாளரை தொடருந்து நிலையத்திற்கு அருகில் வாகனமொன்றில் வழிமறித்த முகமூடியணிந்த ஆயுததாரி ஒருவர், அவரைப் படுகொலை செய்ய முற்பட்டார். எனினும் அவ்விடத்திலிருந்து சம்பந்தப்பட்ட மூத்த ஊடவியலாளரும், அவரது அயலில் வசிக்கும் அவரது நண்பரும் தப்பிச் சென்ற பொழுது, தொலைபேசி மூலம் அவர்களைத் தொடர்பு கொண்ட நபர் ஒருவர், ஈழமுரசு பத்திரிகையையும், ஊடக இல்லத்தால் நடாத்தப்பட்டு வந்த அனைத்து இணைய ஊடகங்களையும் ஒப்படைத்து விட்டு அனைத்து செயற்பாடுகளில் இருந்து விலகிக் கொள்ளுமாறும், அல்லாது போனால் உயிரைத் துறப்பதற்குத் தயாராகுமாறும் சம்பந்தப்பட்ட ஊடகவியலாளரைக் கடும் தொனியில் மிரட்டியிருந்தார்.

 

இதனைத் தொடர்ந்து இப்படுகொலை முயற்சியை உறுதிப்படுத்தும் வகையில் மறுநாள் ‘எல்லாளன் படை’ என்ற பெயரில் ஊடகங்களுக்கு மின்னஞ்சல்களும் அனுப்பி வைக்கப்பட்டன. இதன் பின்னர் ‘எல்லாளன் படை’ என்ற பெயரில் இணையத்தளம் ஒன்று திறக்கப்பட்டு, தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள் – ஊடகவியலாளர்களை சுட்டுப் படுகொலை செய்யப் போவதாக எச்சரிக்கை செய்யும் பாடல்களும், அறிவிப்புக்களும் அவ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டன.

 

 

படுகொலை முயற்சித் தாக்குதல் குறித்து சர்வதேச பிரபல ஊடகமான BBC ஊடகஇல்லத் தலைவரை தொடர்புகொண்டு நடந்த சம்பவத்தை செவ்வி கண்டபோது ‘சிறீலங்காவின் கைக்கூலிகளின் வேலை’ எனத் தனது செவ்வியில் குறிப்பிட்டதைத் தொடர்ந்து இரண்டாவது கொலை மிரட்டலும் மின்னஞ்சல் வழியாக வெளியிடப்பட்டன.

 

 

இதனால் ஈழமுரசு பத்திரிகையும், அதன் தாய் நிறுவனமான ஊடக இல்லமும் பணிகளை இடைநிறுத்திக் கொண்டதோடு, ஊடக இல்லத்தால் நடாத்தப்பட்டு வந்த சங்கதி-24, தமிழ்க்கதிர் ஆகிய இணையங்களும் தமது சேவைகளை இடைநிறுத்திக் கொள்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டன. இந்நிலையில் புலன் விசாரணைகளை முடுக்கி விட்ட பிரெஞ்சு காவல்துறையினர், தமக்குக் கிடைக்கப் பெற்ற ஆதாரங்களின் அடிப்படையில் கடந்த டிசம்பர் மாதம் 17ம் திகதி பாலமுரளி பாலசிங்கம் என்பவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர்.

 

பிரெஞ்சுக் காவல்துறையினர் மேற்கொண்ட புலன் விசாரணைகளின் படி,  தனது இரண்டாவது மனைவியின் கடன் அட்டையைப் பயன்படுத்தி ‘எல்லாளன் படை’ என்ற இணையத்தளத்தை இந்த நபர் விலைக்கு வாங்கி இயக்கி வந்ததோடு, தனது வீட்டிற்கு அருகில் உள்ள மக்டொனால்ட்ஸ் உணவகத்தின் இணைய சேவையைப் பயன்படுத்தித் தனது மடிக் கணினி ஊடாக ஈழமுரசு ஊடகவியலாளர் மீதான படுகொலை முயற்சிக்கு உரிமை கோரும் மின்னஞ்சல்களையும் ‘எல்லாளன் படை’யின் பெயரில் அனுப்பி வந்துள்ளார். அத்தோடு ஈழமுரசு பத்திரிகையின் மூத்த ஊடகவியலாளர் மீதான படுகொலை முயற்சிக்கு தனது முதலாவது மனைவியின் இரண்டாவது கணவரும், தனது சகோதரருமாகிய இன்னுமொரு நபரின் மகிழூர்த்தியையே இவர் பயன்படுத்தினார் என்பதும் பிரெஞ்சுக் காவல்துறையினரின் புலன் விசாரணைகளில் அம்பலமாகியது. (இவரது முதல் மனைவி இவரது சகோதரையே திருமணம் முடித்துள்ளார்).

 

இந்நிலையில் இது தொடர்பான வழக்கு கடந்த 16.02.2015 திங்கட்கிழமையன்று பிரான்ஸ் பொபினி நீதிமன்றத்தில் நடைபெற்ற பொழுது தான் செய்த குற்றங்களை பாலமுரளி பாலசிங்கம் ஒப்புக் கொண்டார்.

 

எனினும் இந்தியாவில் இருந்து வருகை தந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் உளவுப் பிரிவைச் சேர்ந்தவர் என்று அடையாளப்படுத்திக் கொண்ட செந்தில் ஆனந்தன் என்பவர் கேட்டுக்கொண்டதற்கு இணங்கவே இவ்வாறு தான் நடந்து கொண்டதாகவும் தனது செய்கைகளுக்கு இவர் நியாயம் கற்பித்ததோடு, தமிழீழ விடுதலைப் புலிகளுக்குக் களங்கம் விளைவிக்கும் வகையிலும் நீதிமன்றத்தில் இவர் வாதிட்டார். எனினும் இவரது வாதங்களை நிராகரித்த நீதிபதி, இவருக்கு ஓராண்டுகால சிறைத்தண்டனை விதித்தும்இ பாதிக்கப்பட்ட ஊடக இல்லச் செயற்பாட்டாளருக்கு இழப்பீடு வழங்குவதற்கான உத்தரவும் பிறப்பித்துத் தீர்ப்பளித்துள்ளார்.

 

வழமையாக இவ்வாறான குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகளை வழங்குவது பிரெஞ்சு நீதித்துறையின் நடைமுறையாக இருந்தாலும், குற்றவாளிக்கு இரண்டு மனைவிமாரும் (ஒருவர் விவாகரத்துப் பெற்றுள்ள பொழுதும் இவரது கொடுப்பனவில் பிள்ளைகளைப் பராமரிப்பவர்), ஐந்து பிள்ளைகளும் இருப்பதாலும், இவர் நீரிழிவு நோய்க்கு சிகிச்சை பெறுவதோடு,  அரச உதவிச் சம்பளத்தில் வாழ்ந்து வருவதாலும் இவருக்கான தண்டனையை ஓராண்டு சிறைத்தண்டனையாகக் குறைத்து பிரெஞ்சு நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார்.

 

சட்டவிரோதமாக வாகனத்தை செலுத்தியமை, பாதசாரி ஒருவரை வாகனத்தால் இடித்துக் காயப்படுத்தியமை, கடன் அட்டை மோசடிகளில் ஈடுபட்டமை, திருட்டுக் கடன் அட்டைகளை விற்பனை செய்தமை, ஆயுதங்களுடன் வன்முறையில் பலருடன் ஈடுபட்டமை, கார் உடைத்தமை, கடைகள் உடைத்தமை, போலி ஆவணங்கள் வைத்திருந்தமை, ஆயுதமுனைக்கொள்ளை, இவரது வாகனத்தில் இருந்து ஆறாவது வகையான ஆயுதம் கைப்பற்றப்பட்டமை (பெரிய கத்தி), அரசாங்க ஆவணங்களை சட்டவிரோதமாக பாவித்தமை இவ்வாறு 13 வரையிலான குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்பட்டிருந்தார். இதற்காக அவருக்கு வழங்கப்பட்ட தண்டனைகள்,  தண்டப்பணம் பற்றியும் நீதிபதி தெரிவித்திருந்தார். மேலும் இவர் பிரான்சை விட்டு வெளியே செல்லமுடியாது என்றும் எவ்வித அமைப்புக்களுடனும் தொடர்புகளை பேணமுடியாது என்றும், இவர் இயக்கும் வானொலிகள் தடைசெய்யப்பட்டிருப்பதாக ஏற்கனவே தீர்ப்புள்ளமையும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

 

இதனிடையே இவருடன் கொலை முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் செந்தில் ஆனந்தன் என்ற மற்றைய நபர் இதுவரை கைது செய்யப்படவில்லை. ஈழமுரசு பத்திரிகையின் மூத்த ஊடவியலாளர் மீதான படுகொலை முயற்சியில் முகமூடி தரித்த ஆயுததாரி ஒருவரும், பிறிதொரு நபரும் ஈடுபட்டமை ஊடக இல்ல செயற்பாட்டாளர்களால் உறுதி செய்யப்பட்ட பொழுது, இதில் ஆயுததாரி யார், மற்றைய நபர் யார் என்பது இதுவரை உறுதிசெய்யப்படவில்லை.

 

எனினும் படுகொலை முயற்சியின் சூத்திரதாரியாக இனம்காணப்பட்டுள்ள பாலமுரளி பாலசிங்கம் என்பவரின் வீட்டில் இருந்து ஆயுதங்களும், முகமூடி ஒன்றும், கையுறையும், மடிக்கணினியும் பிரெஞ்சுக் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.