பிரித்தானிய தமிழர் பேரவையின் உள்ளூர் கட்டமைப்புகளுக்கான தேர்தல் – 2014

0
640

2009ல் இருந்து தமிழ் மக்களின் ஜனநாயக ரீதியான பிரதிநிதித்துவத்துக்கூடாக ஒவ்வொரு வருடமும் பிரித்தானிய தமிழர் பேரவைச் செயல்ப்பாட்டளர்கள் தெரிவு செய்யப்பட்டு வருகின்றனர். பிரித்தானிய தமிழர் பேரவையின் முக்கியமான கொள்கை முடிவுகளை மேற்கொள்ளும் உச்சமட்ட மன்றமான நாடு தழுவிய “தேசிய அவைக்கு” 2014 க்கான பிரதிநிதிகள் தெரிவு செய்யும் தேர்தல் நடைமுறை ஆரம்பித்துள்ளது.

ஐக்கிய ராச்சியம் எங்கும் உள்ள 21 உள்ளூர் தமிழர் பேரவைகளுக்கான நிர்வாகக் குழு உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் தேர்தல் ஆரம்பித்துள்ளது. பரந்துபட்ட மக்களின் ஜனநாயகரீதியான ஆணையைப் பெற்று இக்கட்டமைப்புக்கள் செயல்ப்பட்டு வருகின்றன. மக்களால் தெரிவு செய்யப்பட்ட உள்ளூர் தமிழர் பேரவைகள் ஒவ்வொன்றும் “தேசிய அவைக்கு” தமது பிரதிநிதிகளை அனுப்புவார்கள். முடிவெடுப்பதில் பங்கெடுக்கும் பங்கேற்பு ஜனநாயக (Participatory democracy) முறையில் பிரித்தாணிய தமிழர் பேரவை செயல்பட்டு வருகின்றது.

ஜனநாயகம், வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் என்ற விழுமியங்களை ஆரம்பத்தில் இருந்தே முன்வைத்து மிகப்பெரிய புலம்பெயர் தமிழர் அமைப்பாக செயல்ப்படுகின்ற பிரித்தானிய தமிழர் பேரவை, வருடாந்தம் நடைபெறும் பிரதிநிதிகள் தேர்தலுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வருகின்றது. உள்ளூர் தமிழர் பேரவைகளுக்கான தேர்வுகள் நடைபெறும் விபர அட்டவணை கீழே இணைக்கப்பட்டுள்ளதுடன் கடந்த காலங்களைப் போல இந்த வருடமும் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்திற்கு முன்னர் இவ்வாறான உள்ளூர் தமிழர் பேரவைகளை புதுப்பிக்கவும் விஸ்தரிக்கவும் விடுதலை மூச்சை வீச்சாக மக்களுக்குக் கொண்டு செல்லவும் இந்தச் செயல்ப்பாடு மிக முக்கியமானதாகும்.

புலம்பெயர் தமிழர்கள் ஆகிய நாம் பாதிக்கப்பட்ட தமிழர்களாகிய எமது பக்கம் சர்வதேச சமூகம் திரும்பிப் பார்க்கும் இந்தவேளையில் பிரித்தானிய தமிழர் பேரவையின் பங்கு மிகமுக்கியமானது. இக்காலகட்டத்தில் எமது ஜனநாயக ரீதியான செயற்பாடுகளை நிறுத்தி எமது விடுதலைக்கான சர்வதேச அங்கீகாரத்தை தடுத்து நிறுத்த சிறீலங்கா அரசு எம்மீது பயங்கரவாத முத்திரை குத்த முயல்கின்றது. இதைப்புரிந்து கொண்டு பிரித்தானியா வாழ் தமிழர்கள் பல்லாயிரக்கணக்கில் பிரித்தானிய தமிழர் பேரவையுடன் இணைவதன் மூலம் எல்லைதாண்டிய சிறீலங்கா அரசின் சதியை ஜனநாயக ரீதியில் நாம் முறியடிப்போமாக! மக்கள் எம்முடன் இணையும் போது எமது ஜனநாயகரீதியான போராட்டம் வலுவான தமிழ் மக்களின் பலம்வாய்ந்த போராட்டமாக அமையும். எம் மக்களின் விடுதலைக்கான பாதையைத் திறக்கும்.btf-elec