பிறப்பினால் மாத்திரமே முரளி தமிழன் : கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன

0
665

murali-mahiபிறப்பினால் மாத்திரமே தமிழன் என்ற நாமத்தைப்பெற்றுள்ள முத்தையா முரளிதரன் இவ்வாறு செயற்படுவது குறித்து நாம் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை.

அவர் தற்போது அரசுக்கு அதீத விசுவாசத்தைக்காட்ட ஆரம்பித்துள்ளார் என்று கூறியுள்ளார் நவசமசமாஜக் கட்சியின் பொதுச்செயலாளரான கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன.

பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன் வடக்குக்குப் பயணம் செய்தவேளை, அவரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தமிழர்கள் முன்னெடுத்த போராட்டத்தையும் அவர்களின் உணர்வுகளையும் கொச்சைப்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டுள்ள முத்தையா முரளிதரனுக்கு எதிராகக் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

அரசியல்வாதிகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், தமிழக அரசியல்வாதிகள், தமிழ் உணர்வாளர்கள் ஆகியோர் முன்னாள் கிரிக்கெட் வீரரான முரளியின் இந்தச் செயலை வன்மையாகக் கண்டித்துள்ளனர். அத்துடன், தமிழ் மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக்கோரி தனது கூற்றை முரளி வாபஸ்பெற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

இதுதொடர்பாக கருத்து வெளியிட்ட ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், “இருபது – முப்பது தாய்மார்கள் தங்களது பிள்ளைகளைக் காணவில்லை என அழுது புலம்பிப் போராட்டம் நடத்துவதால் மனித உரிமை குற்றச்சாட்டுகள் உண்மையாகவிடா” என பெற்ற பிள்ளைகளை இழந்து தவிக்கும் தாய்மார்களை கொச்சைப்படுத்தி, முரளிதரன் பேசியுள்ளதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது.

காணாமல்போன தங்கள் பிள்ளைக ளைத் தேடியலையும் தாய்மார்களைக் கொச்சைப்படுத்தி, முத்தையா முரளிதரன் மாற்று வரலாற்றில் இன்று இடம் பிடித்துவிட்டார். அவர் உடனடியாக பொது மன்னிப்புக்கோர வேண்டும். என்று கூறினார். அதேவேளை, 30 தாய்மார்கள் தான் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர் எனக்கூறும் முரளிக்கு, ஆயிரக்கணக்கான தாய்மார்களை போராட்டக்களத்துக்கு வரவிடாது வவுனியாவில் வழிமறித்து அரசு விரட்டியடித்த விடயம் தெரியாதா? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.