புதுக்குடியிருப்பு நிலங்களிலிருந்தும் இனஅழிப்பு அரசின் படைகள் வெளியேறுகின்றன. பரவிப்பாஞ்சான், பிலக்குடியிருப்பு நிலங்களையடுத்து தமிழர்கள் வசம் மீள வருகிறது புதுக்குடியிருப்பு நிலம்.

 

இதை ஒரு சாரார் மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்றும் மறுசாரார் சிங்களம் ஜெனிவாவில் தனது நன்மதிப்பை உயர்த்த செய்யும் சதி என்றும் வாதிடுவதை காணக்கூடியதாக இருக்கிறது.

 

அது எப்படியும் இருந்து விட்டுப்போகட்டும். எமக்கு தேவை நிலம். அதுவும் தொடரும் இனஅழிப்புக்கு எதிர்வினையாற்றுவதென்றால் எமது மக்களுக்கு அவர்களது சொந்த நிலம் வேண்டும்.

 

இந்த ‘விடுவிப்பை’ ஒரு நவீன போராட்ட யுக்தியை வகுத்து மக்கள் தமது நிலத்தை மீட்டிருப்பதாகவே நாம் கருத வேண்டும்.

 

இதை நில மீட்பிற்கான ஒரு ஒத்திகை போராட்டமாகவே கருத வேண்டியுள்ளது.

 

ஜெனிவாவில் இனஅழிப்பு அரசை காக்க எமது சிவில் சமூகத்தினர் மற்றும் தமிழ் அரசியல்வாதிகள் முண்டியடித்துக் கொண்டிருக்கும் ஒரு சூழலில் சிங்களத்திற்கு இந்த நிலத்தை விட்டுக் கொடுத்துத்தான் தன்னை நிறுவ வேண்டும் என்ற ஒரு நிலை இல்லை.

 

இந்த விடுவிப்பின் பின்னணியில், ஜெனிவாவை மையப்படுத்திய இன அழிப்பு அரசின் தந்திரங்கள் இல்லாமலில்லை. ஆனாலும் ‘கேப்பாபுலவு’ வடிவமைத்த நவீன நில மீட்பு வடிவம்தான் இந்த நில விடுவிப்புக்களின் பின்னணியில் இருந்த பிரதான கூறு.

 

எதிரியைத் தேடிப்போய் அவன் காலடிக்குள் ஒரு போரரங்கைத் திறந்து வைத்த ‘கேப்பாபுலவு’ மக்களின் பேராட்டம் எதிரியை நிறையவே சிந்திக்க வைத்ததன் விளைவுதான் இந்த விடுவிப்பு.

 

அங்கேயே உண்டு, உடுத்து, உறங்கி வாழ்வின் அத்தனை கூறுகளையும் எதிரியின் முன்னரங்க அரண்களுக்கும் அவனது துப்பாக்கிகளுக்கும் இடையிலேயே கட்டமைத்துவிட்டு மக்கள் பேராட்டத்தின் நவீன உத்தியை உலகிற்கு அறிமுகம் செய்து விட்டு நிமிர்ந்து நிற்கிறது கேப்பாபுலவு மண்.

 

‘தமது விடுதலைக்காக தாம்தான் போராடவேண்டும’; என்ற தெளிவுக்கு என்று வந்தார்களோ, அன்றே அவர்கள் வெற்றிக்கான சூத்திரத்தையும் வகுத்து விட்டார்கள். அதன் விளைவே எதிரியின் காலடிக்குள் திறந்திருக்கும் இந்த நவீன போரரங்கு.

 

கேப்பாபுலவு’ இது ஒரு நிலத்தின் பெயரல்ல..தமிழர் மீளெழுச்சியின் ஒட்டுமொத்த அடையாளம்.அடங்க மறுக்கும் ஒரு இனத்தின் குறியீட்டு பெயர். போராடும் இனங்களின் நவீன நம்பிக்கை சொல். ‘பிரபாகரனியத்தை’ உட்செரித்த ஒரு இனத்தின் உலகளாவிய போர்க்குரல்.

 

இதே போல் எதிரிகளால் ஆக்கிரமிக்கப்படடிருக்கும் ஒவ்வொரு ‘தமிழர் நிலமும்’ சமகாலத்தில் ஒன்றாக அணிதிரண்டு எதிரியைத் தேடிப்போய் அவன் காலடிக்குள் வாழ்வும் பேராட்டமும் கலந்த இந்த நவீன உத்தியை பிரயோகித்தால் எதிரிக்கு மண்டியிடுவது அல்லது தப்பியோடுவதைத்தவிர வேறு தெரிவுகள் இருக்கப் போவதில்லை.

 

அதுதான் பரவிப்பாஞ்சான் மக்கள் இதே யுக்தி போராட்டத்தை கையிலெடுத்தவுடன் அடுத்த நாளே அதை விடுவிக்க இனஅழிப்பு அரசு முடிவு செய்தது. பல வருடங்களாகப் போராடிய பரவிப்பாஞ்சான் மக்களின் போராட்டத்திற்கு ‘கேப்பாபுலவிற்கு’ பிறகே சிங்களம் செவிசாய்த்ததை நாம் குறைந்தளவிலேனும் கணக்கிலெடுக்க வேண்டும்.

 

கேப்பாபுலவு மண்ணின் போராட்டத்தின் உக்கிரம் தாங்காமலேயே இன்று அதை விடுவிக்கிறது இனஅழிப்பு அரசு. அதுதான் உண்மை.

 

ஏனைய நிலங்கள் விடுவிக்கப்பட்டதைப் போல் புதுக்குடியிருப்பு நில விடுவிப்பையும் ‘ஜெனிவா’ வோடு மட்டும் முடிச்சுப் போட்டு பார்க்கும் பண்பு மக்கள் போராட்டங்களின் வீச்சையும் தொடரும் கட்டமைக்கப்பட்ட இனஅழிப்புக்கு எதிராக போராடும் தந்திரங்கள் குறித்தும் நாம் ஒரு தெளிவற்ற பார்வையை வகுத்ததன் விளைவாகவே கருத வேண்டியுள்ளது.

 

எத்தனை தடவைதான் எழுதுவது?

 

இந்த நிலங்களை விடுவிப்பதனூடாக மக்கள் போராட்டத்திற்கு ஒரு தற்காலிக முடிவுரையை இனஅழிப்பு அரசு எழுதியுள்ளது. ஏனென்றால் ‘கேப்பாபுலவு’ ஒரு மக்கள் புரடசிக்குரிய உக்கிரமான வடிவங்களுடன் தன்னை வெளிப்படுத்தியிருந்தது. அதை எதிரிகள் நன்குணர்ந்திருந்ததை எதிரியின் அரசியலோடு மட்டுமல்ல அவனது உளவியலோடும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

 

ஜெனிவாவில் கிடைக்கப்போகும் வெற்றியை விட மக்கள் போராட்டங்களை முடக்குவதனூடாகவே இனஅழிப்பு அரசு தனது வெற்றியை தக்க வைத்துக் கொள்ள முடியும்.

 

எனென்றால் சிங்களத்தை ஜெனிவாவில் காக்க பிராந்திய – பூகோள சக்திகளும் அவர்கள் வகுத்து வைத்த உலக ஒழுங்கும் தயாராகவே இருக்கிறது. ஆனால் போர்க்குணத்துடன் உக்கிரமாக வெடிக்கும் மக்கள் பேராட்டத்தை காக்க எந்த பொறிமுறையும் எதிரிகளிடம் இல்லை.

 

அதுவும் ‘பிரபாகரனியத்தை’ உடசெரித்த ஒரு இனம் ஒன்றுபட்டு தம்மோடு பொருதுவதை அவர்களுக்கு என்றுமே தடுக்கும் வல்லமை கிடையாது.

 

இந்த விடுவிப்பின் அரசியலை நாம் இப்படித்தான் கருத வேண்டும்.

 

ஆனால் மறுவளமாக நாம் இந்த வெற்றியை தக்க வைத்துக்கொண்டு நமது ஒவ்வொரு நிலமும் ‘கேப்பாபுலவு’ வகுத்து தந்த நவீன யுக்தியை ஒரு முன்னுதாரணமாகக் கொண்டு எதிரியின் காலடிக்குள் ஒரு போரரங்கைத் திறக்க வேண்டும்.

 

அப்போது எதிரிக்கு நிலங்களை விடுவிப்பதைத் தவிர வேறு வழி இருக்கப்போவதில்லை.

 

எதிரி மக்கள் போராட்டத்தின் உக்கிரத்தை கண்டு பின் வாங்க முடிவெடுத்தவுடன் அவன் அதை ஒரு அனைத்துலக மட்டத்தில் தனது ‘நல்லெண்ணத்தை’ காட்டும் ஒரு வெற்றியாக்கும் தந்திரமாக கையாளலாம் என்ற முடிவுக்கு வருகிறான். விளைவு வெளியேறுகிறான். ஆனால் அதையும் நாம் சரியாகக் கையாண்டால் தூர நோக்கில் எதிரிக்கு உடைவை ஏற்படுத்தலாம்.

 

‘கேப்பாபுலவு’ தந்த ஆச்சர்யங்களில் இருந்து நானும் சக நண்பர்களும் இன்னும் விடுபடவில்லை. நாம் ‘நந்திக்கடல்’ கோட்பாடுகளை நாள்க் கணக்காக ஆய்வு செய்து ஒரு முடிவுக்கு வருகிறோம். அதன்வழி மக்கள் போராட்டம் எப்படி? எப்போது? வடிவமைக்கப்பட வேண்டும் என்று தியரிகளை உருவாக்கிவிட்டுக் காத்திருக்கிறோம்.

 

‘நந்திக்கடலின்’ ஒரு தியரிப்படி, எதிரிக்கு வழி விட்டு, அல்லது அவன் நாம் போராடும் இலக்கை வழங்க ஒரு வழியை திறக்கும் ஒரு புறச்சூழலில் நாம் போராட்டக் களத்தை திறக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறது.

 

‘கேப்பாபுலவு’ போராட்டம் ‘ஜெனிவா’ என்ற எதிரிக்கு சாதகமான ஒரு புறச்சூழல் உருவாகும் நேரத்தில் ஒரு நுட்பமான வடிவத்தை தெரிவு செய்து தமது போராட்ட களத்தை திறந்த ஆச்சர்யத்தை நாம் இன்னும் வியந்து பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

 

பிரபாகரனியத்தை உட்செரித்த ஒரு மக்கள் குழுமத்தின் அதி உச்ச நிகழ்வு இது. மக்களின் உளவியலும் எதிரியின் அரசியலும் மோதிய களம் இது. ‘பிரபாகரனியம்’ சிறியளவில் பரீட்சித்துப் பார்க்கப்பட்ட நவீன களம் இது.

 
எனவே இது தோல்வியல்ல.

 

பின்வாங்குவதில், தோல்விகளில் தாம் சார்ந்த மிகப்பெரிய அரசியலை மோதும் இருதரப்பும் எழுத முடியும். நிலங்களை கைவிட்டதனூடாக எதிரி ‘ஜெனிவா’வில் தனது வெற்றியை தக்க வைக்கவாவது முயல்கிறான். எதிரிக்கு அந்த வாய்ப்பை வழங்கிவிட்டு சொந்த நிலத்தில் நாம் எமது வெற்றியை தக்க வைத்திருக்கிறோம். சமகாலத்தில் களத்தில் யார் வெற்றியை தக்க வைக்கிறார்கள் என்பது பொறுத்தே அதன் அரசியல் வெற்றி இறுதிப்படுத்தப்படும்.

 
இப்போது சொல்லுங்கள் யாருக்கு வெற்றி?

 

ஒரு போராடும் இனமாக நாம் அடையும் சிறு சிறு வெற்றிகள் தொடர்ந்து தக்கவைக்கப் பட வேண்டியதும் அதை அரசியல் வெற்றியாக மாற்றுவதும் என்று அதற்கு பல பரிமாணங்கள் இருக்கின்றன. ஆனால் ஆக்கிரமிப்பாளர்களின் வெற்றிகள் மட்டுமல்ல தோல்விகள் கூட பலவீனமான அடித்தளத்திலிருந்து மேலெழுபவை.

 

இந்த அர்த்தத்தில் ஜெனிவாவிற்காக நிலங்களை விடுத்த எதிரியின் ஒரு பக்க அரசியலை நாம் நிலங்களை மீள கைப்பற்றியதனூடாக நிரந்தர தோல்வியாக எதிரிக்கு பரிசளிக்க முடியும்.

 

உதாரணத்திற்கு 1995 ம் ஆண்டு ஒரு தேசமாக நின்று நாம் போராடுவதென்றால் ஒரு மரபு வழி இராணுவமாக தம்மை வளர்த்தெடுக்க வேண்டும் என்ற புரிதலுடன் புலிகளும் மக்களும் ஒட்டுமொத்தமாக யாழ் குடாவை விட்டு வெளியேறினார்கள்.
அந்தப் பின்னடைவைக்கூட ஒரு வரலாற்று இடப்பெயர்வின்முலம் அரசியல் வெற்றியாக மாற்றினார்கள். சிங்களத்தின் வெற்றிச் செய்தியை விட புலிகளுடன் ஒட்டுமொத்த மக்களும் வெளியேறியது குறித்தான நிகழ்வு அன்று உலக அரங்கில் தமிழர் தாயகம் தொடர்பான ஒரு முக்கிய செய்தியை பதிவு செய்தது.

 

இதுதான் ஒரு விடுதலைப் போராட்ட அமைப்பின் தோல்வியில் கூட அந்த அமைப்பு சார்ந்தும் அதன் நோக்கம் சார்ந்தும் எழுதப்படும் பன்முக அரசியல் பரிமாணம்.
இந்த வகையான பின்வாங்குதல்கள் குறித்து ‘பிரபாகரனியம்’ நிறைய பேசுகிறது. ‘நந்திக்கடல் கோட்பாடுகள்’ இதன் அடுத்த பரிமாணத்தை உலகிற்கு அறிமுகம் செய்கிறது.

 

பிரபாகரனியம் ‘தோல்வி’ என்ற சொல்லாடலை நிராகரிக்கிறது. போராடும் இனங்களின் ‘தோல்வி’ குறித்து அதன் உள்ளார்ந்த அர்த்தத்தில் அது தோல்வியல்ல என்கிறது. அதை ‘பின்னடைவு’ என்றே வர்ணிக்கிறது. அதையும் ஒரு கட்டத்தில் நிராகரித்து ‘பின்நகர்வு’ என்று ஒரு கோட்பாட்டு வரையறைக்குள் கொண்டு வருகிறது.
ஒரு விடுதலைப் போராட்ட அமைப்பின் – ஒரு போராடும் இனத்தின் அகராதியில் ‘தோல்வி’ என்ற சொல்லாடல் ஒருபோதும் இருக்கமுடியாது என்று ‘நந்திக்கடல்’ அடித்து கூறுகிறது.

 

எனவே ‘பிரபாகரனியத்தை’ உட் செரித்த ஒரு இனமாக இராஜதந்திர அரசியலை அதன் உள்ளார்ந்த அர்த்தத்தில் விளங்க முற்படுவோம்.

 

நிலங்களை விடுவித்ததற்கு எதிரிக்கு எந்த நோக்கமும் இருக்கலாம். ஆனால் நிலங்களை நாம் மீள கைப்பற்றிவிட்டோம் என்ற தளத்தில் நின்று யோசித்து அதை ஒரு அரசியல் வெற்றியாக மாற்றுவதே சாணக்கியம்.

 

குறிப்பாக பரவிப்பாஞ்சான், பிலக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு நிலங்களை நாம் மீளக் கைப்பற்றியதனூடாக பல நூறு குடும்பங்களின் வாழ்வாதராம் மீட்கப்பட்டிருக்கிறது. இதன்வழி தொடரும் கட்டமைக்கப்பட்ட இனஅழிப்புக்கு மிகப் பெரிய எதிர்வினையை நாம் நிகழ்த்த முடியும்.

 

இது சாதாரணமான வெற்றியல்ல. மே 18 இற்கு பிறகு தாயகத்தில் நமது மக்கள் சந்திக்கும் முதன்மை பிரச்சினை அவர்கள் வாழ்வாதாரச் சிக்கல்தான் – அதாவது அவர்களது பொருண்மியச் சிக்கல்.

 

தொடரும் கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பின்; மையமே நில ஆக்கிரமிப்புத்தான். நமது மக்களின் வாழ்வும் பொருளாதாரமும் அவர்கள் வாழும் நிலத்தோடு பின்னிப் பிணைந்தது.

 

இனஅழிப்பில் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டு தொழில் முயற்சிகளை கொண்டு நடத்த முடியாதவர்களும் – குறிப்பாக பெண் தலைமைத்துவ குடும்பங்கள்தான் பெரும்பாலும் தமது நிலத்தை இனஅழிப்பு அரசிடம் பறிகொடுத்துவிட்டு அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள்.

 

எனவே அவர்கள் தமது வாழ்வை ஒரளவிற்காவது சரி செய்வதென்றால் அவர்களுக்கு அவர்கள் நிலம் வேண்டும். ஏனென்றால் நிலத்தில்தான் அவர்கள் உழைப்பு இருக்கிறது – அதாவது அவர்கள் பொருளாதாரம்.

 

எமது ஈழத்து பெண்களுக்கு ஒரு சிறப்பு உண்டு. மே 18 ற்கு முன்பும் அதற்கு முந்திய போருக்கு முற்பட்ட காலங்களிலும் சரி வீட்டு செலவுக்கு கணவர்மாரின் கைகளை பெரும்பாலும் நம்பியிருந்தவர்கள் இல்லை.

 

வெளியில் ஒரு தொழிலை புரிந்தவர்கள்கூட வீட்டில் தமது நிலத்தில் குடிசைத்தொழில் என்று கூறப்படும் சுயதொழில் முயற்சிகளை மேற்கொண்டவர்களே..

 

ஆடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு, பாற்பண்ணை, சிறு விவசாயம், புகையிலை உற்பத்தி, மீன் பதனிடுதல், கருவாடு தயாரித்தல், பனைவள உற்பத்தி என்று அதன் பட்டியல் நீளம்..

 

எனவே அவர்கள் நிலம் அவர்களிடம் இருந்தால் அவர்கள் பிழைத்துக் கொள்வார்கள்.
ஆனால் இந்த புரிதலுடன்தான் இன அழிப்பு அரசு நிலத்தை ஆக்கிரமித்திருக்கிறது.

 

இது உண்மையான நல்லிணக்கத்தை பேணாத இனஅழிப்பு நோக்கிலான அரச எந்திரத்தின் செயற்பாடு என்பதை நாம் பல தடவை வலியுறுத்திவிட்டோம். இதைத்தான் கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பு என்றும் வரையறுக்கிறோம்..

 

எனவே நில ஆக்கிரமிப்பு என்பதன் இனஅழிப்பு அரசியல் சாதாரணமானதல்ல. நாம் தடடையாக அதை புரிந்து வைத்திருப்பதை இனஅழிப்பு அரசு தனக்கு சாதகமாக்கிக் கொள்கிறது.

 

சொந்த நிலம் என்று சொன்னால், அந்த நிலத்தில் தமக்கு தெரிந்த சிறு தொழில்களை – பரம்பரையாக செய்து வரும் தொழில் முயற்சிகளை செய்து தம்மை பாதுகாத்து கொள்வார்கள். ஆயதம் தூக்கி போராடியவர்களுக்கு தொழில் செய்யத் தெரியாதா என்ன?

 

அவர்களுக்கு சொந்த நிலத்திற்கு பதிலாக வேறு நிலம் கொடுப்பதென்பது இன அழிப்பு உள்ளடக்கங்களைக் கொண்டது.

 

கடலில் இருந்த மீனை பிடித்து எல்லாம் தண்ணீர்தானே என்று குளத்தில் விட்டால் என்ன நடக்கும்? எமது மக்களுக்கும் நடப்பது அதுதான்..

 

அவர்கள் தமது பரம்பரை தொழிலை இழந்து ஊர் என்ற அடிப்படையில் ஒன்றுபடும் தோழமையை இழந்து குடும்ப நட்புகளில் இருந்து துண்டாகி வேறாக்கப்பட்டு வாழ்வை மட்டுமல்ல அதற்கான உறுதியையும் உளவியலையும் இழந்து நிற்கிறார்கள்..

 

இது திட்டமிட்டு அரங்கேற்றப்படும் இனப்படுகொலை அரசின் நுண்மையான இன அழிப்பு உத்தி.

 

இந்த அடிப்படையில் பார்த்தால் கேப்பாபுலவில், பரவிப்பாஞ்சானில், புதுக்குடியிருப்பில் மீட்கப்பட்டது நிலங்கள் அல்ல. ஒரு இனத்தின் வாழ்வாதாரம். இனஅழிப்பு உள்ளடக்கங்களைத் தாண்டி எமது மக்கள் சுயாதீனமாக வாழும் ஒரு வாழ்வு.

 

இன அழிப்பிற்கு நாம் அதன் உண்மையான அர்த்தத்தில் எதிர்வினை புரிவதென்றால், நாம் எமக்கான வாழ்வை எமது மண்ணில் கட்டியெழுப்புவதுதான். அதற்கு நிலம் வேண்டும்.

 

சொந்த நிலத்தில் நாம் உறுதியாக நின்றால் என்றாவது ஒரு நாள் ‘ஜெனிவா’ களத்தையும் எமக்குச் சாதகமாக்க முடியும்.

 

எனவே நில மீட்பு போராட்டங்களை வடிவமைத்து தொடர்ந்து போராடுவோம்.

 

பரணி கிருஸ்ணரஜனி