buddha9தோழியே இசைப்பிரியா

நீ செத்துவிட்டதாய் அறிந்தபோது
நம் தோழிகளில் ஆயிரக்கணக்கான ஒருத்தி
இறந்துவிட்டாள்
என்றிருந்தது

நீ படுகொலை செய்யப்பட்டாய் என்றறிந்தபோது
படையினரிடம் சரணடைந்தபின் கொல்லப்பட்ட
நூற்றுக்கணக்கான தோழிகளில்
நீயும் ஒருத்தியாகிவிட்டாய் என்று
வேதனையாய் இருந்தது.

ஆனால் இன்று…..
நீயேகூட நினைத்துப் பார்த்திருக்க முடியாத
அரசபடையின் கோரமுகத்தை
நேரில் கண்டவள் நீயாகி
உலக மனச்சாட்சிகளை உலுக்கும்
பேரொலியாகிவிட்டாய்.

உன் வெற்றுடம்பில்
சூடுகண்ட பிசாசுகளையும்
அதன் பின்னணியில் இருக்கும்
மனிதமுகம் போர்த்திய அரக்கர்களின்
முகமூடிகளையும் கிழ்த்தெறியும் சக்தி
உன் அம்மணத்திற்கும் இருக்கிறது.

கதிர்காம அழகி மன்னம்பெரியை
அவமானப்படுத்துவதாய் எண்ணிய சிங்களவர்கள்
தம்மீது அழிக்க முடியாத அசிங்கத்தைப்
பூசிக்கொண்டைப்போலவே
நீயும்
என்றென்றும் கழுவமுடியாத கறையாகவும்
ஒரு பெண்ணின் பிரளயமாய்
எப்போதும் புனிதமாகவும்
சிறிலங்காவின் வரலாற்றில்
நிலைத்திருப்பாய்.

சாதனைப் பெண்களின்
கதைகளால் மட்டுமல்ல
வேதனைப் பெண்களின்
வலியாலும்தான்
வரலாறு வாழ்கிறது என்பதை – உன்
பேரவலம் பொருந்திய மரணம் இடித்துரைக்கிறது.

நீ நெருப்பு.
உன்னை அறியாத அவர்கள்
உன்னைச் சீண்டி விளையாடியபோது
அறிந்திருக்கவில்லை
உன் பிறப்பைவிட இறப்பு
பலம்பொருந்தியதாய்
அவர்களைத் தாக்கும் என்று.

ஒருவனின் மனைவியாகிய உன்னை
குழந்தையொன்றின் தாயாகிய உன்னை
கற்பழித்த பாவத்திற்குள்ளான அரசை
உலகத்தமிழர்கள் மட்டுமல்ல
உலகமே வசைபாடினாலும் தகும்.

எனினும்
அழிக்க முடியாத வல்லரசாய் திமிறும் இனத்தின்
முகத்தில் அறையும் உனது மரணம்,
உலக முற்றத்தில்
தமிழரின் இயலாமையின் அடையாளமாய்
தமிழரின் பறிபோன உரிமைகளாய்
தமிழரின் நிர்க்கதி நிலையாய்
நிலைத்திருக்கும்.

இந்த
அடையாளத்தையும்
உரிமையையும்
நிலையையும்
மாற்றியமைக்க மீண்டும் ஒரு
அறிவுப் பிரவாகம் வேண்டும்.

இப்பிரவாகம் கழுவிப்படைத்த
புதிய தமிழ்த் தேசத்தில்
உன் சிலை
நிர்வாணமடைந்த
புத்தரின் சிலையைவிடப் பெரியதாய்
நிறுவப்படவும் வேண்டும்.

வெற்றிச்செல்வி
03.11.2013