மக்கள் கூடினால் புனிதம் கெடும் என சொல்லும் கூடாரங்களை இனி மக்கள் புறக்கணிக்க ஆரம்பிக்க வேண்டும்.

 

மக்களை காக்கவே போராட்டங்கள்.

 

மக்கள் கொட்டி கொட்டி கொடுக்கும் பணம் வேண்டும். மக்கள் கூடி போராட கூடாதாம்…

 

தமிழர் பணத்தில் உழைத்து கொண்டு தமிழர்களை தள்ளி வைக்கும் வியாபாரிகளே இவர்கள் போன்ற கோவில் வர்த்தகர்கள்.

 

மக்கள் விழிப்படையாவிட்டால் மக்கள் பணம் தொடர்ந்தும் உறிஞ்சப்படும்.

 

மக்களை காக்க முடியாத, மக்கள் குறை தீர்க்க முடியாத, மக்களுக்கு பயன் தராத கடவுளோ கோவிலோ தேவையில்லை.

 

மக்களை காக்க உணவு துறப்பில் ஈடுபட்ட மக்கள் நடமாடும் கடவுளர்க்கு சமம்.

அரசுக்கு ஆதரவாக விடுக்கப்பட்ட அறிவித்தல் இது.

 

கண்ணீர் விடும் மக்களுக்காக கூடுவது புனிதம் கெடும் என சொல்லுமளவு இழிந்து போனதா தமிழினம்?

 

இனியும் இவர்களிடம் ஏமாந்து கோடி கோடியாக கொட்டி கொடுப்பீர்களா உறவுகளே?

 

மக்களுக்கு இடம் இல்லாத எந்த முன்றலும் எமக்கு தேவை இல்லை என புறக்கணிக்க வேண்டும்.

 

இவர்களுக்கு கொட்டி கொடுப்பதை எங்கள் மக்களின் வாழ்வு தலை நிமிர கொட்டி கொடுத்து ஏழை மாணவர்கள் கல்விக்கு கொடுத்தாலும் வாழும் கடவுளர்களுக்கு கொடுத்ததும் சமமாகும்.

 

மக்கள் கூடும் இடமாக கோவில்கள் கட்டப்பட்டன முன்பு.

 

மக்கள் அடைக்கலம் புகும் இடங்களாகவும் கோவில்கள் இருந்தன யுத்த காலத்தில்.

 

மக்கள் சேவையே மகேசன் சேவை என்றார்கள்.

 

இன்று மக்களுக்கு ஒரு வலி என்று கோவில் நாடி கூடினால் விரட்டுகிறார்கள் என்றால் அவை கோவில்களா இல்லை அரசுக்கு எதுவாக இயங்கும் வியாபார தாபனங்களா?

 

மக்கள் வலி போக்க போராடும் அன்னையர்களுக்கு ஆதரவாக அணி திரளும் மக்களை கூட விடாமல் விரட்டுகிறார்கள் என்றால் மக்கள் வலி குறித்து சாமிக்கும் அக்கறை இல்லை. ஆசாமிக்கும் அக்கறை இல்லை.

 

தம் பிள்ளைகளை எப்படியாவது மீட்டு தா என கடவுளிடம் கையேந்தி உண்ணாவிரதம் இருக்கும் தாயாவர்களை காக்க புறப்படும் இளைய “கந்த கடவுள்கள்” போல் இளையவர்கள்.

 

கல்லாய் இருக்கும் கடவுள் தமிழரை விரட்டுகிறார் நடமாடும் இளைஞர்கள் மக்களை காக்க துடிக்கிறார்கள். இதில் யார் மக்களை காக்கும் அக்கறை கொண்டவர்கள்?

 

சாமியின் பெயரால் அரசுக்கு ஆதரவான ஆசாமிகள் வியாபாரம் செய்ய கோவில் என்ற கூடாரம் தமிழர் மண்ணில் வேண்டுமா?

 

தமிழன் இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான் என்பார்கள். தமிழரை விரட்டும் இடங்களில் குமரன் இல்லை என்பதை இனியேனும் மக்கள் புரிந்து கொள்ளட்டும்.

 

சப்பாத்து காலோடு இராணுவம் வந்த பொழுது கும்பிடு போட்டவர்கள் இந்த ஆசாமிகள் அவர்களுக்கு. இன்று மக்களுக்காக மக்கள் கூட விரட்டி இருக்கிறார்கள்.

 

இதற்கு மேல் கடவுள் வந்து தமிழர்களை காப்பாற்ற மாட்டார் என்பது புரிகிறது. எனவே அநீதியை அழித்து மக்களை காக்க போராடும் கடவுளராக ஒவ்வொரு தமிழரும் மாற வேண்டும்.

செந்தமிழினி பிரபாகரன்