தேசிய புல­னாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்­பா­ள­ரான மேஜர் ஜெனரல் கபில ஹெந்­த­வி­தா­ர­ணவை புதிய அர­சாங்கம் குறி­வைத்­தி­ருக்­கி­றது. அவ­ரது வங்கிக் கணக்குகள் மற்றும் நிதிக் கொடுக்கல் வாங்­கல்கள் குறித்த விசா­ர­ணையை முன்­னெ­டுப்­ப­தற்கு, பொலிஸ் நிதிக்­குற்ற விசா­ரணைப் பிரிவு, கொழும்பு நீதிவான் நீதி­மன்­றத்­திடம் கடந்த வாரம், அனு­ம­தியைப் பெற்­றி­ருக்­கி­றது.

 

kapila_hendawitharanaஇத­னுடன், யாழ்ப்­பா­ணத்­திலும், ஐரோப்­பா­விலும் இயங்கும் தொலைக்­காட்சி ஒன்றின் பணிப்­பா­ள­ரான தமிழர் ஒரு­வ­ரது வங்கிக் கணக்­குகள், கொடுக்கல் வாங்­கல்கள் குறித்தும் விசா­ரிக்க நீதி­மன்றம் அனு­மதி அளித்­தி­ருக்­கி­றது. மேலோட்­ட­மாகப் பார்த்தால், இது ஒரு முன்­னைய அர­சாங்­கத்தில் அங்கம் வகித்த முக்­கிய அதி­கா­ரி­களின் ஊழல் மோச­டி­களை வெளிக்கொண்டு வரும் ஒரு நட­வ­டிக்­கை­யாகத் தான் தெரியும்.

 

ஆனால், இந்த விசா­ரணை முறைப்­படி முன்­னெ­டுக்­கப்­பட்டால், பல அதிர்ச்­சி­க­ர­மான தக­வல்­களை வெளிக்­கொண்டு வரக் கூடிய ஒன்­றாக அமை­யலாம். மேஜர் ஜெனரல் கபில ஹெந்­த­வி­தா­ர­ணவின் வங்கிக் கணக்­கு­க­ளுடன், விசா­ரணை நடத்த அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ள­துடன், யாழ்ப்­பா­ணத்தில் இருந்தும் ஐரோப்­பாவில் இருந்தும் செயற்­படும் தொலைக்­காட்சி நிறு­வ­னத்தின் பணிப்­பா­ளரே, 2009ஆம் ஆண்­டுக்குப் பின்னர் கபில ஹெந்­த­வி­தா­ர­ண­வி­னதும் அவ­ருக்கு நெருக்­க­மா­ன­வர்­க­ளி­னதும், சார்பில் லக்­சம்­பேர்க்கில் நிதி நிறு­வ­னங்­களில் முத­லீடு செய்­துள்­ள­தாகக் கூறப்­ப­டு­கி­றது.

 

2009ஆம் ஆண்டு என்­பது விடு­தலைப் புலிகள் தோற்­க­டிக்­கப்­பட்ட ஆண்டு. அதற்குப் பின்­னரோ அல்­லது விடு­தலைப் புலிகள் அழிவின் விளிம்பில் இருந்த நிலை­யிலோ தான், மேஜர் ஜெனரல் கபில ஹெந்­த­வி­தா­ர­ண­வி­னாலும், அவ­ரது சகாக்­க­ளி­னாலும் லக்­சம்­பேர்க்கில் முத­லீ­டுகள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தாக கருத வேண்டும். அதற்­கான கரு­வி­யாக, புலம்­பெயர் தமி­ழர்கள் மத்­தியில் நடத்­தப்­பட்ட ஊடகம் ஒன்றின் பணிப்­பா­ளரே பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாகக் கூறப்­ப­டு­கி­றது.

 

இந்தக் குற்­றச்­சாட்டு உறு­தி­யானால், நிரூ­பிக்­கப்­பட்டால், புலம்­பெயர் தமி­ழர்கள் மத்­தியில், இலங்­கையின் அரச புல­னாய்வு அமைப்­புகள் எந்­த­ள­வுக்கு ஊடு­ரு­வி­யி­ருந்­தன,- செல்­வாக்குச் செலுத்­தின என்­பது வெளிச்­ச­மாகும். குறிப்­பிட்ட ஊடக நிறு­வ­னத்தின் பணிப்­பாளர் ஆயுத மோதல்கள் முடி­வுக்கு வந்த பின்னர் யாழ்ப்­பா­ணத்தில் இருந்து நிகழ்ச்­சி­களை ஒளி­ப­ரப்பத் தொடங்­கினார்.

 

அந்த நிறு­வ­னத்தின் செய்திப் பிரி­வுக்குப் பொறுப்­பாக, விடு­தலைப் புலி­களின் ஊடகப் பிரிவில் இருந்­த­வரும், படை­யி­ன­ரிடம் சர­ண­டைந்து விடு­விக்­கப்­பட்­ட­வ­ரு­மான ஒரு­வரே பணி­யாற்றி வரு­கிறார். மேலும், குறிப்­பிட்ட ஊடகம், விடு­தலைப் புலி­க­ளையும், விடு­தலைப் புலி­க­ளுக்கு சார்­பா­ன­வர்­க­ளையும் கடு­மை­யாக விமர்­சிக்­கவும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பைக் கொச்­சைப்­ப­டுத்­து­வ­தற்கும் பயன்­ப­டுத்­தப்­பட்டு வந்­தி­ருக்­கி­றது.

 

கடந்த ஜனா­தி­பதி தேர்­தலில், வாக்­க­ளிப்பு நேரம் இரவு 7 மணி­வரை நீடிக்­கப்­பட்­டுள்­ள­தாக பொய்­யான செய்­தியை ஒளி­ப­ரப்பி, வாக்­கா­ளர்­களைக் குழப்ப முயன்­ற­தான ஒரு வழக்கும், இந்த தொலைக்­காட்­சிக்கு எதி­ராக யாழ்ப்­பாண நீதி­மன்­றத்தில் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது. முன்­னைய அர­சாங்­கத்­தி­னதும், அரச சார்­பா­ன­வர்­க­ளி­னதும் நலன்­க­ளுக்­காக செயற்­பட்ட குறிப்­பிட்ட தொலைக்­காட்­சியின் பணிப்­பா­ளரே, முன்­னைய அரச புல­னாய்வுப் பணிப்­பா­ள­ரினால், ஐரோப்­பாவில் பணத்தைப் பதுக்­கு­வ­தற்­கான கரு­வி­யாகப் பயன்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கிறார்.

 

இதி­லி­ருந்து, குறிப்­பிட்ட தொலைக்­காட்சி ஐரோப்­பாவில் இருந்து யாழ்ப்­பா­ணத்­துக்கு கொண்டு வரப்­பட்­டதன் பின்­ன­ணியில், அரச புல­னாய்வுப் பிரிவு இருக்­கி­றதா என்று சந்­தேகம் எழு­வது இயல்பு. விடு­தலைப் புலி­க­ளுக்கு எதி­ரான போரின் போதும், ஆயுத மோதல் முடி­வுக்கு வந்த பின்­னரும், அரச புல­னாய்வுப் பிரிவின் எல்லா நட­வ­டிக்­கை­க­ளுக்கும் பொறுப்­பாக இருந்­தவர் தான் மேஜர் ஜெனரல் கபில ஹெந்­த­வி­தா­ரண.

 

இவர் இரா­ணுவப் புல­னாய்வுப் பிரி­வுக்குப் பொறுப்­பாக இருந்த காலத்தில், இரா­ணு­வத்தின் ஆழ ஊடு­ருவும் அணிகள் வலுப்­ப­டுத்­தப்­பட்டு, புலி­க­ளுக்கு எதி­ரான நிழல் யுத்தம் நடத்­தப்­பட்­டது. போர்க்­கா­லத்தில், விடு­தலைப் புலி­களின் பிர­தே­சத்­துக்குள் படை­யி­னரை இர­க­சி­ய­மாக நகர்த்தி அவர்­களின் பல­வீ­னங்­களை அறிந்து அதற்­கேற்ப போரை வெற்றி கொள்ள கார­ண­மாக இருந்­தவர் இவர்.

 

போரில் அர­ச­ப­டைகள் வெற்றி பெற்ற பின்னர், புலம்­பெயர் நாடு­களில் விடு­தலைப் புலி­களின் நட­வ­டிக்­கை­களை முறி­டி­ய­டிக்க இவரே மூளை­யாகச் செயற்­பட்டார். விடு­தலைப் புலிகள் இயக்­கத்­துக்கு மீள உயிர் கொடுக்க முயன்­ற­தாகக் கூறப்­படும் கே.பியை மலே­சி­யாவில் பிடித்துக் கொண்டு வந்­தது உள்­ளிட்ட பல இர­க­சிய நட­வ­டிக்­கை­களின் சூத்­தி­ர­தா­ரி­யா­கவும் இவரே இயங்­கி­யி­ருந்தார்.

 

பல்­வேறு நாடு­களின் அரச புல­னாய்வு அமைப்­பு­க­ளுடன், அதி­கா­ர­பூர்­வ­மா­கவும் அதி­கா­ர­பூர்­வ­மற்ற வகை­யிலும் தொடர்­பு­களை ஏற்­ப­டுத்­தி­ய­துடன், புலம்­பெயர் தமி­ழர்­களை குழப்பி, அவர்­க­ளுக்குள் மோதலை ஏற்­ப­டுத்­து­வ­திலும் இவர் முக்­கிய பங்­காற்­றி­யவர். முன்னாள் பாது­காப்புச் செயலர் கோத்­தா­பய ராஜ­பக்ஷவின் மிக நெருங்­கிய நண்­ப­ரான இவர், ஆயுத மோதல் முடி­வுக்கு வந்த பின்னர் அவ­ரது இர­க­சிய நட­வ­டிக்­கை­க­­ளுக்கும் உத­வி­யாகச் செயற்­பட்­டவர்.

 

இவர் ஐரோப்­பாவில் தமிழ் ஊடகப் பணிப்­பாளர் மூலம் நிதியை முத­லீடு செய்தார் என்­பது உறு­தி­யானால், அந்த நிதி எவ்­வாறு கிடைத்­தது என்ற கேள்­விகள் எழும். போரின் முடிவில் கைப்­பற்­றப்­பட்ட பெரு­ம­ளவு தங்கம் உள்­ளிட்ட பெறு­ம­தி­யான பொருட்கள் எங்கே, என்­ன­வா­யிற்று என்ற சரி­யான பதில்கள் யாரி­டமும் இல்லை. அவ்­வாறு கைப்­பற்­றப்­பட்ட பொருட்கள் பங்­கி­டப்­பட்டு வெளி­நா­டு­களில் பதுக்­கப்­பட்­டனவா என்ற சந்­தே­கங்­களும் உள்­ளன.

 

அதை­விட, வெளி­நா­டு­களில் சிக்­கிய விடு­தலைப் புலி­களைச் சார்ந்த சில­ரி­ட­மி­ருந்து பறி­முதல் செய்­யப்­பட்ட சொத்­துக்கள் தொடர்­பான விப­ரங்­களும் இல்லை. அதே­வேளை, அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு ஆட்­களைக் கடத்தும் நட­வ­டிக்­கையில் முக்­கிய நப­ராகச் செயற்­பட்­டவர் இவர் என்று இந்த ஆண்டின் ஆரம்­பத்தில் சில ஊட­கங்­களில் செய்­திகள் வெளி­யா­கி­யி­ருந்­தன. முக்­கிய அர­சியல், இரா­ஜ­தந்­திர நோக்­கத்­துக்­காக முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருக்­கலாம் என்று கரு­தப்­பட்ட அந்த ஆட்­க­டத்­தல்­களின் மூலமும் பெரு­ம­ளவு பணம் திரட்­டப்­பட்­டி­ருக்க வாய்ப்­புகள் உள்­ளன.

 

இவை தவிர, புல­னாய்வுப் பிரி­வினால் கடத்­தல்கள் மேற்­கொள்­ளப்­பட்டு, கப்­பங்கள் பெறப்­பட்­ட­தா­கவும் கூட தக­வல்கள் இருக்­கின்­றன. இவ்­வாறு திரட்­டப்­பட்ட பணமே ஐரோப்­பாவில் முத­லி­டப்­பட்­டுள்­ளது என்­பது உறு­தி­யானால், அது இன்னும் பல இர­க­சி­யங்கள் வெளி­வ­ரு­வ­தற்கும் கார­ண­மா­கலாம். அதா­வது, புலம்­பெயர் தமி­ழர்கள் மத்­தி யில் அரச புல­னாய்வுப் பிரிவு எந்­த­ள­வுக்கு ஊடு­ரு­வி­யுள்­ளது என்­பதும் அதில் அடக்கம்.

 

ஏனென்றால், ஆயுத மோதல்கள் முடிந்த பின்னர், புலம்­பெயர் தமி­ழர்­களைக் குறி­வைத்து மஹிந்த ராஜபக்ஷ அர­சாங்கம் ஒரு தீவிர நிழல் யுத்­தத்தை நடத்­தி­யி­ருந் தது. அதில் முக்­கி­ய­மா­னது, ஊட­கங்­களை கைப்­பற்­றுதல். ஒரு கட்­டத்தில் ஏரா­ள­மான இணைய ஊட­கங்கள் மஹிந்த ராஜபக்ஷ அரசின் கைக்குள் அடங்கிப் போன­தா­கவும் தக­வல்கள் வெளி­யா­கின.

 

பணம் அல்­லது வேறு பல­வீ­னங்­களை வைத்து, புலம்­பெயர் நாடு­களில் இயங்­கிய ஊட­கங்கள்கள் முன்னைய அரசினால் விலைக்கு வாங்கப்பட்டு தமிழரின் போராட்டத்துக்கு எதிராக – நாசூக்கான முறையில் திசை திருப்பி விடப்பட்டன. அதற்கும் மேஜர் ஜெனரல் கபில ஹெந்­த­வி­தா­ர­ணவே மூளை­யாகச் செயற்­பட்­டி­ருந்­தாரா என்ற கேள்­விகள் இருக்­கின்­றன.

 

நிதிக்­குற்ற விசா­ரணைப் பிரிவு முன்­னெ­டுக்கும் விசா­ர­ணைகள் நீதி­யா­கவும் நியா­ய­மா­கவும் நடத்­தப்­பட்டால் அது, மேஜர் ஜெனரல் கபில ஹெந்­த­வி­தா­ர­ண­வி­னது இர­க­சி­யங்கள் மட்­டு­மன்றி, அரச புல­னாய்வு அமைப்பின் பல இர­க­சிய திட்­டங்கள் நட­வ­டிக்­கை­களும் வெளிச்சத்துக்கு வரும். ஆனால், தேசிய பாதுகாப்பு இரகசியம் என்ற போர்வையில் இதனை மறைக்கும் முயற்சிகளும் முன்னெடுக்கப்படலாம்.

 

எவ்வாறாயினும், இப்போது தொடங்கப்பட்டுள்ள விசாரணைகள், அரச புலனாய்வுச் சேவையின் வலிமையை ஓரளவுக்கேனும் எடுத்துக் காட்டியிருக்கிறது என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்.

 

வீரகேசரி 14 யூன் 2015 –