புலம்பெயர்ந்தோரே புத்தி புகட்டுங்கள் -உபதவிசாளர் கிருஷ்ணமூர்த்தி

0
650

krishnamoorthyஅம்பாறை மாவட்ட MGR சமூக சேவை அமைப்பின் தலைவரும், கணேசா முதியோர் இல்ல ஸ்தாபகரும், முன்னை நாள் திருக்கோவில் பிரதேச சபை உப தவிசாளரும் ஆகிய MS  கிருஷ்ணமூர்த்தி தமிழரசுக்கட்சி தொண்டர்கள் ஆதரவாளர்கள் மத்தியில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் அம்பாறை மாவட்ட தமிழர்களின் ஓரங்கட்டப்பட்ட நிலையினைப் பற்றி கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது.

 

தமிழரசுக்கட்சி யாழ் மாகாணத்திற்கென அமைக்கப்பெற்ற மாகாணசபையில் தனியான அமைச்சுப்பதவிகளை முழுமையாக பெற்றுக் கொண்ட நிலையில் நடந்து முடிந்த பாராளுமன்ற பொதுத் தேர்தலிலும் யாழ் மாவட்டம் ஐந்து  பாராளுமன்ற உறுப்பினர் ஆசனங்களை பெற்றுள்ளது.

 

மேலும் வன்னி மாவட்டமும் தேசியப் பட்டியல் உள்ளடங்கலாக ஐந்து உறுப்பினர்களையும் கொண்டுள்ளதோடு கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மாவட்டத்தில்  மாகாணசபை உறுப்பினர்கள் கல்வி அமைச்சுப் பதவி பெற்றுள்ள நிலையிலும் மட்டக்களப்பு மாவட்டத்திலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களையும், மாகாண சபையில் ஒரு அமைச்சரையும் பல மாகாண சபை உறுப்பினர்களையும் கொண்டுள்ளது.

 

ஆனால் அம்பாறை மாவட்டத்தில் புதிதாக தெரிவு செய்யப்பட்ட ஒரு பாராளுமன்ற உறுப்பினரையும் இரு மாகாண சபை உறுப்பினர்களையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கொண்டிருக்கிறது.

 

ஒட்டு மொத்த வட கிழக்கில் மூவினங்களும் அதிகளவு பரந்து காணப்படும் மாவட்டங்களாக திருகோணமலையும் அம்பாறையும் காணப்படுகின்றன. திருகோணமலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பெரும் தலைவரும் பிரபல்ய சட்டத்தரணியுமாகிய கௌரவ இரா சம்பந்தன் அரசோச்சுகின்றார்.

 

ஆனால் மூவினம் கொண்ட அம்பாறை மாவட்டத்தில் இனங்களுக்கிடையே அடிக்கடி ஏற்படுகின்ற உட்பூசல்கள் தீர்க்கப்படாமல் இருக்கின்ற எல்லைப் பிரச்சினைகள், காணிப்பிரச்சினைகள் போன்றவற்றிற்கு நேரடியாகவும் ,இயல்தகவு விரைவில் களத்திற்குச் சென்று கருமம் ஆற்றுவதற்கு தற்போது பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் (Practicing ) சட்ட துறை சார்ந்த ஒரு மாகாண சபை உறுப்பினரோ அல்லது பாராளுமன்ற உறுப்பினரோ தெரிவு செய்யப்படாமை இந்த மாவட்ட தமிழ் மக்களின் துரதிஸ்டவசமே என்றால் அது மிகையாகாது.

 

எது எவ்வாறு இருப்பினும் ஏலவே இந்த மாவட்டத்தில் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக கடமையாற்றி – இம்முறை தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட கௌரவ சுமந்திரன் அவர்களோ, தேசிய தலைவர் கௌரவ இரா சம்பந்தன் சட்டத்தரணி அவர்களோ இங்கு இடம்பெற்ற வட்டமடு மேச்சல் தரைப்பிரச்சினை, பொத்துவில் பொது மயானத்திற்கு முன்னுள்ள இருபது ஏக்கரில் கௌதம புத்தரின் உருவச் சிலையுடன் கூடிய பிள்ளையார் சிலை தான்றோற்றித் தனமாக கொணரப்பட்ட போதும் உகந்த மலை ஆலயத்துக்குச் சொந்தமான இரண்டு ஏக்கர் காணியை பெரும்பாண்மை இனத்ததைச் சேர்ந்த மத குரு ஒருவரால் அபகரிக்க முற்பட்ட போதும் ,நீலாவனையில் அமைந்துள்ள எல்லைப் பிரச்சனை என்பவற்றில் மேற்கூறிய எமது தமிழரசுக் கட்சியின் இரண்டு சட்டத்தரணிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தலையிட்டதாக பதிவேடுகளும் வாய்ச்சொற்களும் இல்லாத நிலையே காணப்பட்டிருந்தது.

 

மேலும் அம்பாறை மாவட்டம் பல்லின மக்கள் வாழுகின்ற மாவட்டம். அவ்வப்போது இப்பகுதியிலேற்படுகின்ற சச்சரவுகள், சிறுபிணக்குகள், இன உட்பூசல்கள் ஏன் இனப்பிரச்சினைகள் சில வேளைகளில் ஏற்பட்டால் உடனடியாக பொலிஸ் நிலையத்திற்கோ, இராணுவ முகாமிற்கோ, பிணக்கின் ஸ்தலத்திற்கோ அல்லது சம்பந்தப்பட்ட மக்கள் மதிப்பளிக்கின்ற வணக்கத் ஸ்தலங்களோ சமாதான மையங்களுக்கோ கொழும்பிலிருந்தோ, யாழ்ப்பாணத்திலிருந்தோ, திருகோணமலையிலிருந்தோ கட்சியின் சட்டத்தரணிமார் வருவதென்றால் மிகவும் ஒரு கடினமான காரியம் அல்லது உடனடியாகவும் இலகுவாகவும் சாத்தியமளிக்கக் கூடிய விடயமல்ல.

 

எனவே தான்அம்பாறை மாவட்டத்தில் நிரந்தரமாக வதியும் இப்பிணக்குகளுக்கு உடனடியாக முகங்கொடுக்கக் கூடிய ஒருவரை தேசியப்பட்டியல் மூலமாக ஒரு பாராளுமன்ற உறுப்பினரை நியமித்து தருமாறு கோரி அம்பாறை மாவட்டத்தில் தமிழரசுக் கட்சியின் ஆணி வேராகவும் நார் வேராகவும் இருந்து கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபட்ட அங்கத்தவர்கள் – தொண்டர்கள் ஐந்து முறை திருகோணமலை நோக்கி தமிழ் தேசியத்தின் தலைவர்கள் ஒருமித்திருந்த வேளையில் மேற் கொள்ளப்பட்ட தார்மீக விண்ணப்பம் தலைமைகளால் தவிடு பொடியாக்கப்பட்டன.

 

எனவே தான் எங்கள் உயிரிலும் மேலான உறவுகளே, உலகெங்கும் புலம்பெயர்ந்துவாழ்  புண்ணிய சீலர்களே சர்வதேசத்திலிருந்து தேசத்தின் தலைமைகளுக்கு ஏன் நீங்கள் புத்தி புகட்டக்கூடாது? எங்கள் அம்பாறை மாவட்ட தமிழ் மக்களின் எதிர்காலப் பாதுகாப்பு உங்கள் கரங்களின் மீது தங்கி நிற்கின்றது.உங்களின் ஏகோபித்த குரலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைக்கு அன்புக் கட்டளையை இடுவீர்கள் என எதிர்பார்த்துக் காத்து நிற்கின்றேன்.

 

எமது தமிழ் சேதியக் கூட்டமைப்பின் தலைமைகள் சர்வதேசத்தின் அழுத்தத்திற்கு அடிபணியும் என்று நான் கூறவில்லை. எங்கள் அழுகைக் குரலை எடுத்தியம்பியும் , செவி சாய்க்கத் தவறிவிட்டனர் என்ற பரிதாபகரமான உண்மையையும் இவ்விடத்தில் குறிப்பிடுதல் பொருத்தமென்பதோடு
தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடந்த மாகாண சபைத் தேர்தலின் முன்னர் அம்பாறை மாவட்டத்திற்கு மாகாண சபையின் அமைச்சுப் பதவியொன்றை வழங்குவதாக கொள்ளையளவில் ஏற்றுக் கொண்டிருந்தனர் .

 

ஆனால் முஸ்லீம் காங்கிறஸ் உடன் இணைந்து மாகாண சபை ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர் அமைச்சுப் பதவிக்கான விண்ணப்பம் மேற் கொள்ளப்பட்ட போது தமிழ் தேசியத் தலைமை தெரிவு செய்யப்பட்ட இரு உறுப்பினர்கள் பக்கம் தங்களது பந்துகளை எறிந்து உறுப்பினர்களே நீங்கள் இப் பதவிக்குப் பொருத்தமானவர்களா? என்ற உரைகல்லில் தங்கி நின்று சாணக்கியமாக காய்களை நகர்த்தியது தமிழ் தேசியக் கூட்டமைப்பு .

 

அன்றும் இன்றும் என்றும் அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் தன்மானமற்ற தமிழர்கள் அல்ல என்பதனை தமிழ் தேசியம் இனிமேல் எம்மாவட்ட மக்களின் நலனில் அக்கறை கொள்வதிலிருந்து புரிந்து கொள்வார்கள் என்ற செய்தியையும் சேர்த்துச் சொல்லுமாறு கூறிமுடிக்கின்றோம்.