தமிழறிஞரும் தமிழியக்கத் தலைவருமான பேராசிரியர் – முனைவர் இரா. இளவரசு அவர்கள், இன்று (22.01.2015), சென்னை மருத்துவமனை ஒன்றில் காலமான செய்தியறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

ilavarasu
1970 தொடக்கத்தில், தஞ்சாவூர் அரசினர் சரபோஜி கல்லூரியில் தமிழ்த்துறைப் பேராசிரியராக இளவரசு அவர்கள் பணியாற்றிய காலத்திலிருந்து, அவருடைய தமிழ் மொழி காக்கும் துடிப்பையும், தமிழின விடுதலைக்கான உறுதியையும் நான் அறிவேன்.

சிறந்த தமிழ்த் தேசிய அறிஞராக விளங்கிய பேராசிரியர் இளவரசு அவர்கள், தூயத்தமிழ், தமிழின விடுதலை ஆகிய இலட்சியங்களுக்காக அமைப்பு வழி செயல்பட்டவர். ஆதலால், அவருக்கு தமிழகம் முழுவதும் மட்டுமின்றி, தமிழகத்திற்கு வெளியேயும் அன்பர்களும், ஆதரவாளர்களும் நிறைந்துள்ளார்கள்.

புரட்சிப்பாவலர் பாரதிதாசன் அவர்கள் குறித்த ஆய்வில் எல்லை கண்டவர் இளவரசு அவர்கள். அதேபோல், பழந்தமிழ் இலக்கியங்களில், ஆழ்ந்த புலமையும், திறனாய்வும் உள்ளவர். மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆகியோர் தொடங்கிய, உலகத் தமிழ்க் கழகத்தின் வழியாக, தமது தமிழ் மொழி – தமிழினம் சார்ந்த செயற்களத்தை முதலில் அமைத்துக் கொண்டவர்.

கடந்த சில ஆண்டுகளாக, பார்க்கின்சன் என்ற உடல் நடுக்க நோய் அவரைத் தாக்கியதால், தமிழர்க்கும் – தமிழுக்கும் அவர் மூலம் மேலும் கிடைக்க வேண்டிய பல ஆய்வு நூல்களைத் தமிழகம் இழந்துள்ளது. இப்பொழுது, அவரையே தமிழகம் இழந்துள்ளள அவலம் நேர்ந்துள்ளது.

பேராசிரியர் இரா. இளவரசு அவர்களின் மறைவுக்கு, தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சார்பில், கனத்த நெஞ்சோடு இறுதி வணக்கத்தையும், அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்னணம்,

பெ.மணியரசன்
தலைவர், தமிழ்த் தேசியப் பேரியக்கம்
===========================
தலைமைச் செயலகம்,
தமிழ்த் தேசியப் பேரியக்கம்.
===========================
பேச: 7667077075 – 9047162164
===========================
ஊடகம்: www.kannotam.com
===========================
இணையம்: tamizhdesiyam.com
===========================