இலங்கைக்கு மூன்று நாட்கள் (2015 தை 13-14-15) பயணம் மேற்கொண்டுள்ள வணக்கத்துக்குரிய பாப்பரசர் பிரான்ஸிஸ் அவர்கள், 14 தை 2015) மடுத்திருத்தலத்துக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

இந்நிலையில் தமிழர் தாயகப்பகுதிகளான வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஆட்கடத்தல்கள், தடுத்து வைப்புகள், கைதுகள், படுகொலைகள், பாலியல் வன்கொடுமைகள், தாக்குதல்கள், ஆக்கிரமிப்புகள், சூறையாடல்கள், மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட அரச பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் மடுத்திருத்தலம் நோக்கி பயணமாகியுள்ளனர்.

missing6
13.01.2015 மாலை 4.00 மணியளவில் வவுனியாவிலிருந்து இரண்டு பேரூந்துகளில் மடுத்திருத்தலம் நோக்கி புறப்பட்டுள்ள, சிறீலங்கா அரசின் பல்வேறுபட்ட வன்முறைகளினால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள், அதற்கு முன்னதாக 3.30 மணியளவில் வவுனியா நகரசபை பொது மைதானத்தில் அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

“வருக வருக, அதிவணக்கத்துக்குரிய திருத்தந்தையே வருக” என திருத்தந்தையை வரவேற்று அழைப்பு விடுத்துள்ள அம்மக்கள், சிறீலங்கா அரசினால் தமக்கு இழைக்கப்பட்டுள்ள கொடுமைகள், அநீதிகள், குற்றங்கள், சமகாலத்தில் தாம் சந்தித்து கொண்டிருக்கும் பிரச்சினைகள், பாதிப்புகள் குறித்தும் பதாதைகள் மூலம் பாப்பரசர் பிரான்ஸிஸ் அவர்களின் கவனத்துக்கு வெளிப்படுத்தினர்.

பாதிக்கப்பட்டுள்ள தமக்கு ஆறுதல் தருமாறும், போர் மற்றும் வன்முறைகளினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை ஆசீர்வதிக்குமாறும், கட்டாயப்படுத்தப்பட்டு காணாமல் போகச்செய்யப்பட்டுள்ள தமது பிள்ளைகள் உறவுகளின் ஆயுள் நலம் வேண்டியும், அவர்கள் வெகுவிரைவாக திரும்பிவந்து தமது குடும்பத்துடன் சேர வேண்டியும், நீதிக்கு புறம்பாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது பிள்ளைகள், உறவுகளின் விடுதலை வேண்டியும் பிரார்த்திக்குமாறும் வேண்டுகோள் விடுத்தனர்.

திருத்தந்தையே! அடிமைப்படுத்தப்பட்டுள்ள தமிழ் மக்கள் மீது கருணை காட்டுங்கள். எங்கள் இனவிடுதலைக்கு ஆசீர்வதியுங்கள்.

missing-098
வணக்கத்துக்குரிய தந்தையே! உங்கள் வருகை எங்களுக்கு விடுதலையை பெற்றுத்தரட்டும். தமிழினத்தின் அடிமைச்சாசனத்தை திருத்தி எழுதித்தாருங்கள்.

அருள்தந்தையே! ஆக்கிரமிப்புகள், படுகொலைகள், ஆட்கடத்தல்களிலிருந்து எம்மைக்காப்பாற்றுங்கள்.

கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் பிள்ளைகள், உறவுகளை தேடியலைகிறோம். எங்களுக்கு ஆறுதல் தாருங்கள்.

இறுதிப்போரில் சரணடைந்த எங்கள் கணவர்கள், பிள்ளைகள் குறித்து கவனம் செலுத்துங்கள். கேள்வி எழுப்புங்கள்.

வணக்கத்துக்குரிய திருத்தந்தையே! தடுப்புக்காவலில் உள்ள எங்கள் பிள்ளைகளை மீட்டுத்தாருங்கள். இரந்து கேட்கின்றோம்.

அருள்தந்தையே! எங்கள் பிள்ளைகள், உறவினர்கள் கடத்தப்பட்டு காணாமல் போகச்செய்யப்பட்டுள்ளார்கள்.

எங்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலைகளுக்கு பரிகார நீதியை பெற்றுத்தாருங்கள்.

திருத்தந்தையே! அடிமைத்தமிழ் மக்களுக்கு சிங்கள ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து விடுதலை பெற்றுத்தாருங்கள்.

உங்கள் பாதம் பதிந்த ஈழமண் விடிவு காண வேண்டும். பொதுசன வாக்கெடுப்புக்கு பரிந்துரை செய்யுங்கள்.

திருத்தந்தையே! முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற சிறீலங்கா அரசின் பாலியல் வன்கொடுமைகளுக்கு நீதியை பெற்றுத்தாருங்கள்.

தந்தையே! உங்கள் பாதம் பதியும் இடம் புனிதமாக இருக்க வேண்டும். இங்கு இனப்படுகொலை, மனித உரிமை மீறல்கள் நடைபெற்றுள்ளன.

missing98
திருத்தந்தையே! உங்கள் பாதம் பதியும் மண் எங்கள் உறவுகளின் குருதியில் குளித்த மண். தமிழ் இனப்படுகொலை நடைபெற்ற மண்.

இவ்வாறு தமது வாழ்வுரிமை, சுதந்திரம், பாதுகாப்பு, நம்பிக்கை, கவலைகள், ஏக்கங்கள், எதிர்பார்ப்புகள், அரசியல் அபிலாசைகள் நிரம்பிய உளக்கிடைக்கையை வெளிப்படுத்தும் பதாதைகளை அவர்கள் தாங்கியிருந்தனர்.

தமிழர் குரலின் நன்றி: -கவரிமான்-