DESMOND-TUTUசிறீலங்காவில் இந்த மாதம் இடம்பெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் கூட்டத்தை அதில் அங்கம் வகிக்கும் நாடுகளின் தலைவர்கள் புறக்கணிக்க வேண்டும் அதன் மூலம் சிறீலங்காவில் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பில் கொழும்பு அரசாங்கத்தின் மீது ஒரு அழுத்தத்தை கொண்டுவரமுடியும் என தென்னாபிரிக்காவின் அமைதிக்கான செயற்பாட்டாளரும், நோபல் பரிசு பெற்றவருமான கிறிஸ்த்தவ மதகுரு டெஸ்மொன்ட் தற்டு ரொய்ட்டர் செய்தி நிறுவனத்திற்கு நேற்று (7) தெரிவித்துள்ளார்.

2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதிக்கட்ட மோதலில் சிறீலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சிறீலங்கா அரசு மீது அனைத்துலக அழுத்தங்கள் அதிகரித்து வருகின்றது.

விசாரணைகளை சிறீலங்கா அரசு நீதியாக மேற்கொள்ளவில்லை என்றால், அதன் மீது உலகநாடுகள் தமது அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும். அவர்கள் மாநாட்டை புறக்கணிப்பது அழுத்தங்களில் ஒரு வகை என புதுடில்லியில் ஊடகவியலாளர்களை சந்தித்த தற்டு தெரிவித்துள்ளார்.

சிறீலங்காவில் நடைபெறும் கூட்டத்தை புறக்கணிக்கப்போவதாக கனேடிய பிரதமர் ஸ்ரீபன் காப்பர் தெரிவித்துள்ளார்.
கூட்டத்தை புறக்கணிப்பது தொடர்பில் தமிழ் மக்கள் என்ன எண்ணுகின்றனர் எனவும் நாம் கருத்தில் எடுக்க வேண்டும். ஆனால் உலகத் தலைவர்கள் இந்த கூட்டத்தை புறக்கணிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

84 வயதான தற்டு ஆபிரிக்காவில் வெள்ளை இனத்தவர்களுக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்ததற்காக 1984 ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றவர். நெல்சன் மண்டேலா உட்பட பல மூத்த தலைவர்களை உறுப்பினர்களாகக் கொண்ட மூத்தவர்களின் குழுவின் தலைவராக தற்டு செயற்பட்டுவருகின்றார்.

சிறீலங்காவில் நடைபெறும் கூட்டத்தை அதன் 53 உறுப்பு நாடுகளின் தலைவர்களும் புறக்கணிக்க வேண்டும் என அமெரிக்காவை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம் மற்றும் பிரித்தானியவைத் தளமாகக் கொண்ட அனைத்துலக மன்னிப்புச் சபை ஆகியன கோரிக்கைகளை விடுத்துள்ளன.

சிறீலங்கா படையினர் மேற்கொண்ட இனப்படுகொலையில் உக்கிரத்தை காட்டும் வகையில் தமிழ் பெண் ஆகிய இசைப்பிரியா மீது சிறீலங்கா படையினர் மேற்கொண்ட காட்டுமிராண்டித்தனமான பாலியல் வன்புணர்வு மற்றும் திட்டமிட்ட படுகொலை என்பவற்றை பிரித்தானியாவின் சனல் போர் தொலைக்காட்சி நிறுவனம் ஆதாரத்துடன் உலகின் கவனத்திற்கு கடந்த வாரம் கொண்டுவந்திருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

செய்தித் தொகுப்பு: ஈழம்ஈநியூஸ்