camoranதமிழர் உரிமைப் போராட்டத்தை முன்னகர்திக் கொண்டிருக்கும் தரப்புக்கள், தொடர்ச்சியாக சுட்டிக் காட்டி வருவது போலவே, பூகோள அரசியலில் தமிழ்த் தேசிய அரசியல் முக்கிய வாகிபாகத்தை கொண்டுள்ளது என்பதை நவம்பர் 15 தொடக்கம் 17வரை நடைபெற்று முடிந்த பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின்; கூட்டமும் (கொமன்வெல்த் மாநாடு) சுட்டிக்காட்டி நிறைவடைந்துள்ளது.

இதுவரை காலமும் சந்தித்திராத நெருக்கடிளை, சிறீலங்கா இனிவரும் காலத்தில் எதிர்கொள்ளவுள்ளதை கட்டியம் கூறியே இந்த கூட்டம் நிறைவடைந்தது. சிறீலங்கா அரசாங்கத்தைப் பொறுத்த வரை, பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் கூட்டத்தை தான் நடாத்துவதனுடாக, சர்வதேச ரீதியாக தன் மேல் படிந்துள்ள கறையை கழுவலாம் என்பது பெருத்த எதிர்பார்ப்பாகவிருந்தது. அத்துடன், சர்வதேச அளவில் தீவிரமடைந்து வரும் போர்க்குற்றம் மற்றும் மானுட குலத்திற்கு எதிரான குற்றச் சாட்டுக்களிலிருந்து தப்புவதற்குமான ஒரு கேடயமாக பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் கூட்டத்தை பயன்படுத்த திட்டமிட்டிருந்து.

ஆனால், 2011 ஒக்டோபர் மாதம் அவுஸ்ரேலியாவின் பேர்த் நகரில் பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் கூட்டம் இடம்பெற்ற போதே, சிறீலங்கா 2013 நவம்பர் 15 தொடக்கம் 17வரை நடாத்திய பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் கூட்டத்தை நடாத்த தகுதியற்றது என்பது போன்ற கண்டனங்களும், சிறீலங்காவில் பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் கூட்டம் நடைபெறக்கூடாதென்ற எதிர்ப்புக்களும் ஆரம்பித்துவிட்டன.

இத்தனை கண்டனங்களையும் எதிர்ப்புக்களையும் தாண்டி சிறீலங்காவும் பொதுநலவாய நாடுகளின் செயலகமும் இணைந்து பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் கூட்டத்தை சிறீலங்காவில் நடாத்தி முடித்துவிட்டன. பெரும் எதிர்பார்ப்புகளுடன், பெரும் பணச்செலவில், அமர்களமாக ஆரம்பித்த பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின்; கூட்டம் ஒரு சமர்க்கள நிலையை ஒத்த சூழலுடாக பயணித்து சோபையிழந்த நிலையில் முடிவுக்கு வந்துது.

இந்த நிலை எவ்வாறு உருவாகியது?

2001 டிசம்பர் மாதம் 5ம் திகதி இடம்பெற்ற பொதுத் தேர்தலோடு பிரதமரான ரணில் விக்கிரசிங்க, முன்னால் சனாதிபதி சந்திரிக்காவின் அங்கீகாரத்துடன் போர்நிறுத்த காலப்பகுதியில் முன்னகர்திய சர்வதேச பாதுகாப்பு வலை குறிப்பிட்ட காலத்தில் விடுதலைப் புலிகளை அழிக்கும் என்பதை விடுதலைப் புலிகள் நன்கு புரிந்திருந்தார்கள் என்பதை, விடுதலைப் புலிகள் அன்றைய காலப்பகுதியில் தெரிவித்த கருத்துக்கள் வெளிப்படுத்தியிருந்தன.

அத்துடன், அதனை முறியடிக்க முயற்சித்து மரணிப்பதா அல்லது முயற்சிக்காமலே மரணமா என்ற கேள்விக்கு அவர்கள் முன்னதையே தெரிவு செய்தார்கள் என்பதை முள்ளிவாய்க்கால் எடுத்து சொல்கிறது. அதேவேளை, தமது அழிவுக்கு மத்தியிலும் உருவாக்கக்கூடிய பெரிய தாக்கமாக, ஆசியாவை மையப்படுத்திய பூகோள அரசியிலில் தமிழ்த் தேசியப் போராட்டத்தின் வகிபாகத்தை முக்கியமாக்குவனூடாக, இலங்கை தீவு தொடர்பான சர்வதேச சமூகத்தின் நிலைப்பாட்டில் மாற்றத்தை உருவாக்குவது அவர்களுடைய சிந்தனையாக இருந்ததாக அறியமுடிகிறது.

இதனை, வன்னிப் போரின் போது மரணமடைந்த வன்னியை தளமாகக் கொண்ட ஊடகவியலாளரின் மொழியில் சொன்னால், ஆயுதம் ஏந்தவும் விடுதலைப் புலிகள் நிர்ப்பந்திக்கப்பட்டார்கள் அதேவேளை ஆயுதங்களை மௌனமாக்கவும் நிர்ப்பந்திக்கப்படுவார்கள். ஆனால், எதுவுமே தமிழ் மக்களின் நலனை நீண்டகால நோக்கில் கருத்தில் கொண்டுதான் என்பதை வரலாறு சொல்லும் என்றார்.

வன்னியின் நிலைப்பாட்டுக்கு வலுச்சேர்க்கும் ஒரு விடயம் என்னவென்றால், சிறீலங்கா சுதந்திரம் அடைந்த காலம் தொட்டு, கடந்த 2005 ஆம் ஆண்டு நவம்பர் 17ம் திகதி வரை ஆட்சியிலிருந்த அரசாங்கங்கள் அனைத்துமே, மேற்குலகு சார்பான போக்கை கொண்டவை. விடுதலைப் புலிகள் இராணுவ வலுச் சமநிலையை உருவாக்கியதால், தமிழர்களின் உரிமைப் போராட்டம் சர்வதேசமயப்படுத்தப்பட்டாலும், சிறீலங்கா அரசாங்கத்தை நோக்கி மென்போக்கு ராசதந்திரத்தை கடைப்பிடிக்கிற போக்கே நிலவியது. இந்த நிலை நீடிக்கும் வரை, சிறீலங்கா அரசாங்கத்துக்கு சாவாலாக விளங்கக்கூடிய கடும்போக்கு நிலை சர்வதேச மட்டத்தில் உருவாகுவது கடினம் என வன்னி கருதியது.

அதேவேளை, சிறீலங்காவுக்கு எதிரான கடும்போக்கு ராசதந்திரமே, தமிழர்கள் சந்தித்த இனஅழிப்புக்கு நீதியை அடைவதற்கு வழியமைப்பதோடு, தமிழர்களின் உரிமைப் போராட்டத்தில் ஒரு பாய்ச்சலுக்கு வழிகோலும் என்ற கருத்தும் முனைப்படைந்தது. இதனுடாக தம்மை அழிக்க முற்பட்ட சர்வதேச பாதுகாப்பு வலையை எதிர்கொண்டபடி, போராட்டத்தை தொடர்வது. இது, தாம் இல்லாவிட்டாலும், தமிழர்களின் போராட்டம் பூகோளமயப்படுவதனூடக நீட்சி பெற்று இறுதி இலக்கை அடைவதற்காக வாசல்கள் திறக்கும் என்பது அவர்களுடைய திட்டமாக இருந்தது என்பது அவர்களுக்கு நெருக்கமானவர்களின் வாதம். அத்துடன், அவர்களுடைய திட்டம், தம்மை அழிக்க நினைத்த ஐக்கிய தேசியக் கட்சியையும் இன்று வரை மீளமுடியாத நிலைக்கு சிதைத்து விட்டுள்ளது. அதேவேளை, சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் மகிந்த ராஜபக்ச 2005 நவம்பர் மாதம் 18ம் திகதி ஆட்சிபீடமேற்றப்பட்டார்.

விடுதலைப் புலிகள் எடுத்த முடிவுவின் தாக்கம்

விடுதலைப் புலிகள் எடுத்த அந்த முடிவு சரி பிழை என்ற வாதங்களுக்கு அப்பால், அந்த முடிவு ஏற்படுத்திய தாக்கத்தின் சாட்சிகளாக நடந்தேறும் சம்பவங்கள் உள்ளன. அதில் முக்கியமானது தமிழர்களின் போராட்டம் பூகோள அரசியிலில் முக்கியமான விடயமாக மாறிவிட்டது. அதில் ஒரு அங்கமாகவே, பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் அவர்கள் இலங்கதை; தீவுக்கு சென்று, அங்கேயே வைத்து சிறீலங்காவுக்கு கடும்தொனியில் எச்சரிக்கை விடுத்தது மட்டுமன்றி காலக்கெடுவையும் விதித்துள்ளார். இந்த சம்பவம் சரியாக எட்டு வருடங்கள் ஆகிய நிலையில், அதே நவம்பர் மாத நடுப்பகுதியில் நடந்தேறியுள்ளது.

சிறீலங்காவின் ராசதந்திர உறவு எதிர்கொண்ட மிகப்பெரிய சவாலான ஒரு வரலாற்று சம்பவமாக இந்த சம்பவத்தை குறிப்பிடலாம். ஆயினும், இது ஒரு தனித்த சம்பவமல்ல. மாறாக, ஒரு பெரும் கோலத்தின் முக்கிய புள்ளி. கோலத்தின் ஒவ்வொரு கோடுகளையும், புள்ளிகளையும் மற்றும் கோலத்தின் முழுவடிவத்தையும் இனிவரும் காலம் வெளிப்படுத்தும்.

மேற்குலக ராசதந்திரம்

அமெரிக்காவின் நட்பு நாடுகளான பிரித்தானியாவும் கனடாவும் நடைபெற்று முடிந்த கொமன்வெல்த் மாநாட்டில் பங்குபற்றுவது தொடர்பாக மாறுபாடான நிலைப்பாடுகளை எடுத்திருந்தன. இதில் பிரித்தானியா, கொமன்வெல்த் மாநாட்டில் பங்குபற்றுவதனுடாக சிறீலங்காவுக்கான செய்தியை உரக்க உறுதிபடச் சொன்னது. கனடவோ, கொமன்வெல்த் மாநாட்டுக்கு செல்லாமல் நீண்டகாலமாக எச்சரித்தபடி, இறுக்கமான நிலைப்பாட்டை சிறீலாங்கவுக்கு தெரியப்படுத்தியது. இவற்றை தனித்தனி சம்பவங்களாக பார்க்க முடியாது. இரு நாடுகளின் அணுகுமுறைகளுக்கு மத்தியில் வேறுபாடுகள் இருந்தாலும், ஒரு தளத்தினாலேயே கூட்டிணைக்கப்பட்டு, பொதுக்கோடு வரையப்பட்டுள்ளது. இந்தக் பொதுக்கோடும் அதன் நோக்கமும், செயற்பாடும் தமிழ்த் தேசியப் போராட்டம் பூகோளமயப்படுத்தப்பட்டதன் விளைவு. இந்த விளைவின் உச்சக்கட்டங்கள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தோடு ஆரம்பமாகக் கூடிய சாத்தியப்பாடுகள் அதிகமாக தென்படுகிறது.

தமிழர்களின் ராசதந்திரம்

தமிழர் தேசத்தின் பொருத்தமான தலைமைத்துவம் அற்ற சமகால நிலையென்பது கரிசனைக்குரியதாக இருக்க, இலக்கால் இணைந்த கூட்டுதலைமைத்துவம் எதிர்பாராத வெற்றியொன்றுக்கு வழிகோலி ஒரு முன்னுதாரணத்தை தந்துள்ளது. இனி ராசதந்திரப் போர் என அறைகூவலிட்டோர் சந்தர்ப்பங்களை வீணடித்துக்கொண்டிருக்க, உலகத் தமிழர் மறுமலர்ச்சியின் ( Global Tamil Renaissance) அங்கமாக ஆசியா, ஆபிரிக்கா, வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளிலிருந்து மொரீசியஸ் நாட்டில் நவம்பர் 8 தொடக்கம் 10ம் திகதிவரை ஒன்றுகூடிய தமிழர்கள், சர்வதேசத்தின் கவனத்தையீர்ந்த ஒரு நிகழ்வின் முக்கிய பங்குதாரர்களாக மாறியுள்ளார்கள். பொறிகளுக்குள் சிக்காத தமிழர்களின் ராசதந்திர நகர்வுக்கு இது ஒரு முன்னுதாரணமும் உந்துசக்தியுமாகும். இந்த நகர்வு மொரிசீயஸ் நாட்டின் பிரதமர் கலாநிதி. நவின் ராம்கூலம் அவர்கள் சிறீலங்காவீல் நடைபெற்ற கொமன்வெல்த் மாநாட்டை புறக்கணிப்பதற்கான சூழலை உருவாக்கியது.

இது எப்படி சாத்தியமானது?

மொரிசியஸ் தமிழ் கோவில்களின் கூட்டிணைப்பு ( Mauritius Tamil Temple Federation- MTTF) மொரீசியஸ் நாட்டில் ஒரு உறுதியான தளத்தை கட்டியெழுப்பியுள்ளது. இவர்கள் தம்மை சைவர்கள் அல்லது இந்துக்கள் என்று சொல்வதிலும் பார்க்க தமது அடையாளமாக தமிழையே கருதுகிறார்கள். இந்த அடிப்படையில்தான் சைவ கோவில்கள் என்று கூறாமல் தமிழ்க் கோவில்கள் என்று அழைக்கிறார்கள்.

இவர்கள் அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் கணிசமான செல்வாக்கை செலுத்துவதோடு, வாக்குப்பலத்திலும் பிரதானமான சக்திகளில் ஒன்றாக இருக்கிறார்கள். இவர்களுக்கு நாடு தழுவிய ரீதியல் மிக வலிமையான வலையமைப்பு உள்ளதுடன் அந்த நாட்டின் ஊடகங்களிலும் இவர்களுக்கு செல்வாக்கு உண்டு. ஆளும் கட்சியோடு உறவைப் பேணுகின்ற சம தருணத்தில், தமது இலக்குகளை அடைய ஆளும் கட்சி இசையாத பட்சத்தில், எதிர்க்கட்சியூடாக ஆளும் கட்சிக்கு அழுத்தத்தை கொடுத்து தமது நோக்கத்தை அடையக்கூடிய சக்தியும் இவர்களிடம் உண்டு. அதேவேளை, சலுகைகளுக்காக உரிமைகளை விட்டுக்கொடுப்பதற்கு அவர்கள் என்றுமே முன்வந்ததில்லை. தமது உரிமைகளை உறுதிப்படுத்துவதற்காக எத்தகைய சக்தியையும் எதிர்த்து போராடும் மனநிலை இவர்களிடம் உள்ளதை இவர்களுடனான உரையாடல்கள் வெளிப்படுத்தியது.

இத்தகைய பின்னணியை கொண்டவர்களாலே, அனைத்துலக ஈழத் தமிழர் மக்கள் அவையுடன் கூட்டிணைந்து, ‘அனைத்துலக புலம்பெயர்ந்த தமிழர் ஒருமைப்பாடு மாநாடொன்றினை’ நவம்பர் 8 தொடக்கம் 10ம் திகதிவரை மொரிசியஸ் நாட்டின் கிறான்ட் பே (Grand Bay) என்ற இடத்தில் நடாத்தினார்கள். இதில், அந்த நாட்டின் சனாதிபதி, எதிர்க்கட்சி தலைவர், உலகின் பல பாகங்களிலிருந்தும் கல்விமான்கள், ஊடகவியலாளர்கள், அரசியல்வாதிகள், அரசியல் செயற்பாட்டாளர்கள் பொதுமக்கள் என பலதரப்பட்டோரும் கலந்துகொண்டனர்.

இந்த மாநாடும், மாநாட்டில் ஆற்றப்பட்ட உரைகளும், அதில் கலந்துரையாடப்பட்ட விடயங்களும் மற்றும் மலேசியா நாட்டின் பினாங்கு மாநில துணை முதலமைச்சர் பேராசிரியர் பி.ராமசாமி மற்றும் தாயகத்திலிருந்து வருகைதந்திருந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் மொரிசீயஸ் நாட்டின் வெளிவிவகார அமைச்சுடன் இடம்பெற்ற முக்கிய சந்திப்பும், இலங்கைத் தீவு தொடர்பாக மொரீசியஸ் பிரதமர் தீர்க்கமான ஒரு முடிவை எடுப்பதற்கு வழியமைத்தது.

மொரிசீயஸ் நாட்டின் வெளிவிவகார அமைச்சுடன் சந்திப்பு இடம்பெற்ற அடுத்த சில மணித்தியாலங்களுக்குள் முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் போது மரணமடைந்த தமிழம் மக்களுக்காகவும், படுகொலை செய்யப்பட்டுள்ளதாக நம்பப்;படும் 146,679 தமிழர்களின் நினைவாகவும் மொரிசியஸ் நாட்டின் தலைநகரில் அமைக்கப்பட்ட நினைவுத் தூபி திறந்து வைக்கப்பட்டது.

இவ்வாறு உணர்வுபூர்வமாகவும் அறிவுபூர்வமாகவும் தமிழர் அரசியல் நகர்வுகள் செயற்பட, மனித உரிமை பெறுமானங்களை பேணுவதில் கவனம் செலுத்தும் மொரிசியஸ் அரசு, சிறீலங்கா அரசாங்கம் உட்பட யாருமே எதிர்பாராதவிதமாக, இலங்கைத் தீவின் மனித உரிமை நிலையினை கருத்தில் கொண்டு, சிறீலங்காவில் இடம்பெறும் பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின்; கூட்டத்தை (கொமன்வெல்த் மாநாடு) புறக்கணிப்பதென்ற உறுதியான முடிவை அறிவித்தது.

கற்றறிந்த பாடங்கள்

தமிழர்களின் உரிமைப் போராட்டம் சர்வதேச மயப்படுத்தப்பட்டுள்ளதோடு, ஆசியாவை மையப்படுத்திய பூகோள அரசியலில் முக்கியமான வகிபாகத்தை கொண்டுள்ளது. இது, சவால்களுக்கு மத்தியிலும் தமிழர்களுக்குள்ள சந்தர்ப்பங்களை எடுத்துக் காட்டுகிறது. ஆதலால், தனிப்பட்ட நலன்கள், கட்சிசார் நலன்கள், அமைப்புகளின் நலன்கள் என்ற விடயங்களைத் தாண்டி தமிழர் தேசத்தின் நலனை பிரதானப்படுத்தி, தமிழ்த் தேசிய சக்திகள் இலக்கு மற்றும் செயற்திட்டங்களை அடிப்படையாகக் கொண்டு கூட்டுத் தலைமைத்துவத்துடன் முன்னகர வேண்டிய தேவையை இடித்துரைக்கிறது.

தமிழர் தேசத்தின் நலனை முதன்மையாகக் அடிப்படையாகக் கொண்டு செயற்படாத ஒவ்வொரு சந்தர்ப்பமும், தமிழர் தேசத்தை இன அழிப்ப செய்யும் தரப்புகளுக்கான வாய்ப்புக்களை வழங்குவதோடு, தொடரும் கட்டமைப்பு சார் இன அழிப்புக்கும், அடக்குமுறைக்குள்ளாக்கப்பட்டுள்ள வாழ்வுக்கும் தமிழர்களே காரணமாக அமைகிறார்கள் என்ற வரலாற்று பழியை சுமக்க நேரிடும்.

ஆதலால், இன்றைய சூழலில் தமிழர்களுக்கு சாதகமாக உள்ள காரணிகளை சரிவர கைக்கொண்டு போராட்ட சக்கரத்தை, பொருத்தான பாதையில், சரியான திசையில் இலக்கை நோக்கி செலுத்த வேண்டி காலம் இட்டு;ள்ள கட்டளையை தமிழர்கள் அமுல்படுத்த வேண்டும்.

நிர்மானுசன் பாலசுந்தரம்

(நன்றி : தினக்குரல்)