நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு வைகோ கலந்துகொள்ளும் முதல் கூட்டம் என்பதால் ஏகத்துக்கும் எதிர்பார்ப்பு இருந்தது. முள்ளிவாய்க்கால் படுகொலையில் உயிர் ஈந்தவர்களுக்கு நினைவு அஞ்சலி பொதுக்கூட்டமாக தண்டையார்பேட்டையில் கடந்த 17-ம் தேதி நடந்தது அந்த நிகழ்வு.

vaiko-4
யார் எவ்வளவு நேரம் பேச வேண்டும் என்று மேடையில் அமர்ந்தபடியே தொகுப்பாளருக்கு இன்ஸ்ட்ரக்ஷன் கொடுத்துக்கொண்டே இருந்தார் வைகோ.

இறுதியாகப் பேசிய வைகோ, ‘அந்தச் சின்னஞ்சிறு பாலகன் இந்த மண்ணில் பிறந்ததைத் தவிர வேறு எந்த பாவமும் செய்யவில்லை. பதுங்குக் குழியிலே பிறந்தவன், பதுங்குக் குழியிலேயே கொல்லப்படுகிறான். 2009-ம் ஆண்டு மே மாதம் 17, 18 தேதிகளில் சிங்கள அரசால் இந்திய அரசின் துரோகத்தின் துணையுடன் படுகொலை செய்யப்பட்ட லட்சக்கணக்கான தமிழர்களுக்கு, நம் தொப்புள் கொடி உறவுகளுக்கு வீர வணக்கம் செலுத்தும் இதே வேளையில், ஒன்றை நாம் சிந்திக்க வேண்டும்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டபோது அதைக் கண்டும் காணாமலும் இருந்தது காங்கிரஸ் அரசு. அவர்கள் இன்று குப்பைத்தொட்டியில் தூக்கி வீசப்பட்டுள்ளனர். நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து இவ்வளவு கேவலமான, அவமானகரமான தோல்வியை காங்கிரஸ் சந்தித்ததே இல்லை.

‘நீ என்ன ஜெயித்துவிட்டாயா? நீயும் தோற்றவன்தானே?’ என்று நீங்கள் கேட்கலாம். நான் போராட்டக்காரன். எனக்குத் தோல்வி என்பதே கிடையாது. என் வாழ்வில் தோல்வி என்று நான் எதையுமே கருதியது இல்லை. எனக்குத் தோல்வி வருகிறபோதுதான் முன்பைவிட 100 மடங்கு உற்சாகத்தோடு உழைக்கப் புறப்படுவேன்.

எது நடக்க வேண்டுமோ, அது நடந்துவிட்டது. இனி அடுத்தகட்டத்தை நாங்கள் திட்டமிட்டு நிறைவேற்றுவோம். நான் பெரியாரின் சுயமரியாதை உணர்வு கொண்டவன். அண்ணாவின் பட்டறையில் வளர்ந்தவன். நம்முடைய இலக்குகளை அடைய எது சரியான உபாயங்களோ அந்த உபாயங்களைக் கையாள்வோம். இந்தியாவில் எந்த இயக்கங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்றாலும், இரண்டு ஆண்டுகள்தான் தடைவிதிப்பார்கள். ஆனால், தாங்கள் தோற்றுப்போவோம் என்று தெரிந்து, அவசர அவசரமாக விடுதலைப்புலிகளுக்கு ஐந்து வருடங்கள் காங்கிரஸ் அரசு தடைவிதித்திருக்கிறது.

நாங்களே விடுதலைப்புலிகள்தான். இனி என்ன செய்யப்போகிறீர்கள்? காங்கிரஸ் முடிந்துவிட்டது. நாம் வெற்றி பெற்று விட்டோம். போராட்டக்காரனுக்கு ஓய்வும் இல்லை. தோல்வியும் இல்லை’ என்றார்.

கூட்டத்தில் கைதட்டல் அடங்க வெகுநேரம் ஆனது!

ஜுனியர் விகடனிலிருந்து…