நான் பதவிகளை நோக்கி ஓடுபவன் அல்ல என்பது வரலாறு முழுக்க நிரூபிக்கப்பட்ட உண்மை. அதுபற்றி புதிதாக விளக்கி நேரத்தை வீணடிக்க வேண்டியதில்லை. இந்த பாராளுமன்றம் இல்லாவிட்டால் என்ன..? இந்த ஆட்சி ஒரு இடைக்கால ஆட்சிதான். அடுத்த பொது தேர்தல் இன்னமும் சில மாதங்களிலேயே வரப்போகிறது. அதில் நான் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டு பெரும் வெற்றியுடன் நிச்சயம் பாராளுமன்றம் செல்வேன் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசனம் தெரிவித்துள்ளார்.

மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது:

mano
அமைச்சரவை பட்டியலில் நான் இல்லை என்று முகநூல் நண்பர்கள் உட்பட பெருந்தொகை உடன்பிறப்புகள் ஆதங்கத்துடன் கேள்வி எழுப்புகிறார்கள். என் மீது பாசமும், என் வரலாறு மீது நம்பிக்கையும் கொண்ட அனைவருக்கும் நன்றி.

அமைச்சரவையில் இடம்பெற நான் பாராளுமன்றத்தில் இருக்க வேண்டும். இன்று நான் அங்கு இல்லை. அங்கு ஒரு வெற்றிடம் தேசிய பட்டியலில் ஏற்பட்டால்தான் நான் அங்கு செல்லலாம். அதற்கு அங்கு உள்ள ஒருவர் பதவி விலக வேண்டும். அதற்கான முயற்சிகள் நடக்கத்தான் செய்கின்றன. அதற்குள் தேசிய பட்டியல் எம்பி பதவி யாராவது விலகி இடம் கொடுத்தால் சொல்லுங்கள். அமைச்சரவையில் சென்று அமர்கிறேன்.

உண்மையில் இந்த தேர்தலில் மகிந்தவை எதிர்த்து சிங்கள வாக்குகளை கொண்டுவர பாரிய பணி புரிந்த ஜெனரல் சரத் பொன்சேகா கூடத்தான் இன்று பாராளுமன்றத்தில் இல்லாததால் அமைச்சரவையில் இல்லை.

நான் பதவிகளை நோக்கி ஓடுபவன் அல்ல என்பது வரலாறு முழுக்க நிரூபிக்கப்பட்ட உண்மை. அதுபற்றி புதிதாக விளக்கி நேரத்தை வீணடிக்க வேண்டியதில்லை. இந்த பாராளுமன்றம் இல்லாவிட்டால் என்ன..? இந்த ஆட்சி ஒரு இடைக்கால ஆட்சிதான். அடுத்த பொது தேர்தல் இன்னமும் சில மாதங்களிலேயே வரப்போகிறது. அதில் நான் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டு பெரும் வெற்றியுடன் நிச்சயம் பாராளுமன்றம் செல்வேன். அப்போது பதவிகள் என்னை தேடி வரும். ஒரு அமைச்சன் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதை நான் அப்போது இந்த நாட்டுக்கு எடுத்து காட்டுவேன்.

இதை எங்கள் ஜனநாயக இளைஞர் இணைய தம்பிகள் உட்பட அனைத்து உடன்பிறப்புகளும் செவ்வனே புரிந்துகொள்ள வேண்டும்.
மக்களுக்கு அதிகாரத்துடன் பணியாற்ற பதவிகள் பெறுவது ஒரு தேவைதான். அதை குறைத்து மதிப்பிட முடியாது. ஆனால், அது ஒரு தேவைதானே தவிர, இலக்கு அல்ல. இந்த தேர்தலில் எனது முதல் இலக்கு மகிந்த ராஜபக்ச ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவதே தவிர நான் பதவி பெறுவது அல்ல. அது இரண்டாம் மூன்றாம் தேவைகளாக இருக்கலாம்.

மகிந்த ஆட்சிக்கு எதிரான எனது போராட்டம், இந்த தேர்தலுக்காக பலரை சேர்த்துக்கொண்டு நாம் அமைத்த எதிரணி கூட்டணியுடன் 2014ம் ஆண்டு டிசம்பரில் ஆரம்பமாகியது அல்ல. அது, என் நண்பன் ரவிராஜுடன் நான் 2006 செப்டம்பர் 19ம் திகதி ஆரம்பித்த மனித உரிமை போராட்டம். அதே ஆண்டு நவம்பர் 10ம் திகதி என் நண்பன் ரவி கொல்லப்பட்ட தினத்தில் மீண்டும் வைராக்கியம் அடைந்த போராட்டம். பல்லாண்டுகளாக மனந்தளராமல் மீண்டும், மீண்டும் முயற்சி செய்து, கொலைக்கார ஆட்சியை வீழ்த்த முதல் நபராக பல்வேறு கூட்டணிகளில் இடம்பெற்று உழைத்து, இன்று 2015ம் வருடம் ஜனவரி 8ம் திகதி வெற்றிக்கண்டுள்ள போராட்டம் என நம்புகின்றேன்.

இந்த வெற்றி எனது தனிப்பட்ட வெற்றி அல்ல. அதில் நானும் ஒரு அங்கம் அவ்வளவுதான். நான் இங்கே எப்போது அன்று முதல் இன்றுவரை இடம் மாறாமல், மனந்தளாராமல் இருந்துள்ளேன் என்பதுதான் இங்கு முக்கியம். மகிந்தவுக்கு எதிரான எம் இன்றைய வெற்றிக்கு பல்லாண்டுகளுக்கு முன்னர் தம் உயிரை கொடுத்து பிள்ளையார் சுழி போட்டவர்களில் நடராஜா ரவிராஜ், லசந்த விக்கிரமதுங்க ஆகியோர் முக்கியமானவர்கள் என்பது வரலாறு. இது மைத்திரியின் வெற்றி அல்ல, லசந்தவின், ரவியின் வெற்றி.
இந்த வெற்றியும் ஒரு முதல் கட்ட வெற்றியே. மகிந்தவை அகற்றிவிட்டு நாம் உருவாக்கியுள்ள நமது அரசாங்க தொடர்ந்து நிலைக்க வேண்டும். இது என் அடுத்த கட்ட இலக்கு. இந்த இலக்கை நாம் அடையாவிட்டால், மகிந்த அடுத்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பாராளுமன்றத்தில் பிரதமராக வந்து அமர்ந்து மீண்டும் ஆட்சி செய்ய தொடங்கி விடுவார். தமிழ், முஸ்லிம், மைத்திரிக்கு வாக்களித்த சிங்கள மக்களுக்கு இது ஒரு எச்சரிக்கை.

இந்த தேர்தலில், நாம் பெரும்பான்மை இன சிறுபான்மை வாக்குகளையும், சிறுபான்மை இன பெரும்பான்மை வாக்குகளையும் பெற்று வெற்றி கண்டுள்ளோம். மகிந்த பெரும்பான்மை இன பெரும்பான்மை வாக்குகளையும், சிறுபான்மை இன சிறுபான்மை வாக்குகளையும் பெற்று தோல்வி கண்டுள்ளார். இதுதான் உண்மை. எமது அரசு நிலைக்க வேண்டுமென்றால் பெரும்பான்மை இன பெரும்பான்மை வாக்குகளை நாம் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் பெற வேண்டும்.

இதற்கு இடையே சிறு சிறு முரண்பாடுகள் வரும். அவற்றை சொல்ல வேண்டிய இடத்தில் சொல்லி புரிய வைக்க வேண்டும். எனக்கு பதவி வரும். அல்லது வராது. அல்லது சற்று தாமதமாக வரும். ஆனால், இதை ஒரு காரணமாக கொண்டு நாம் இந்த அரசை வீழ்த்தி, மகிந்தவை மீண்டும் எழுந்து வர இடம் கொடுத்து விடக்கூடாது. அது முகத்தின் மீது கோபம் கொண்டு மூக்கை வெட்டிக்கொள்வதற்கு சமனாகும்.

என்னிடம் இதற்கான துணிச்சலும், தூரப்பார்வையும், பொறுமையும் இருக்கின்றன. ஆகவே ஆதங்கம் வேண்டாம். உண்மையில் நமது இனங்கள் நிம்மதியாக வாழும் சூழல் இந்த நாட்டில் எதிர்பாராத விரைவில் ஏற்பட்டுவிட்டால் நானும் அதே எதிர்பாரா விரைவில் பொது வாழ்வில் இருந்து விடை பெற்று விடுவேன்.

அண்ணா சொன்னது போல் பதவி ஒரு சால்வை. அதை அடுத்த தலைமுறையிடம் ஒப்படைத்துவிட்டு, பொது வாழ்வால், நான் என் தனிப்பட்ட வாழ்வில் இழந்துவிட்ட அமைதியையும், பசுமையையும் தேடி, சிவந்து கிடக்கும் அடிவானத்துக்கு அப்பால் காணாமல் போய் விடுவேன்.