ஐக்கிய நாடுகளின் மனித உரிமைக்கான ஆணையத்தின் (OHCHR) சிறிலங்காவின் மனித உரிமைக்கான விசாரணையில் (OISL) நீங்களும் துணை நிற்கும் வகையில் நமது நடுவம் உங்களுக்கு துணை செய்ய தயாராகவுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளாக இலங்கையில் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்ற மனிதவுரிமை மீறல்களை ஆவணப்படுத்தியும், இன்று இந்த சாட்சியங்களை உறுதிப்படுத்தி மனிதவுரிமை ஆணையத்தின் விசாரணைக்கு துணை செய்ய தயாராகியுள்ளோம்.

un-sanctions_si
இப்பொமுது நாம் வெளியிட்டுள்ள விசாரணை பற்றிய வினா விடைக்கொத்து உங்களனைவருக்கும் ஒரு தெளிவான விளக்கத்தை அளிக்கும் என நம்புகின்றோம்.

இலங்கை மீதான ஐ.நா விசாரணைக்கு உதவுங்கள் தகவல்கள், குற்றச்சாட்டுகள், ஆவணங்கள், சாட்சியங்களை அனுப்புங்கள்.

ஈழப்போரில் நிகழ்ந்தேறிய போர்க்குற்றங்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றச்செயல்கள், இனப்படுகொலை உள்ளிட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலகம் ஆரம்பித்துள்ளது. இந்த விசாரணைக்கு பொதுமக்கள், அமைப்புகள், அரசுகள் உதவலாம் என ஐக்கிய நாடுகள் அவை அறிவித்துள்ளது.

இலங்கையில் நடந்த கொடூரங்கள் குறித்த விவரங்களை அறிந்தவர்கள் இந்த விசாரணைக்கு உடனடியாக உதவ வேண்டும்.

இவ் விசாரணையின் பின்னணி என்ன?

இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய இன அழிப்பு இலங்கையில் நடந்தது. பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் படுகொலைசெய்யப்பட்டனர். கற்பழிப்பு, சித்தரவதைக் கொடூரங்கள் நடத்தப்பட்டன. பச்சிளம் குழந்தைகளும் கொல்லப்பட்டனர். மனிதாபிமான உதவிகள் தடுக்கப்பட்டன. சரணடைந்தவர்கள் சித்தரவதை செய்து கொடூரமாகக் கொல்லப்பட்டனர், ஏராளமானோர் காணடிக்கப்பட்டனர். இந்தக் கொடூரங்களை நிகழ்த்திய கொடுங்கோலர்கள் ஒருவரும் கண்டுபிடிக்கப்படவும் இல்லை, தண்டிக்கப்படவும் இல்லை.

ஆயுதப்போரின் இறுதிக் கட்டத்தில் மட்டும் 70,000 அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என ஐநா ஆய்வுக்குழு கூறியுள்ளது. 1,46,679 பேர் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது காணாமல் போயுள்ளனர் என மன்னார் கத்தோலிக்க ஆயர் இராயப்பு யோசப் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

2009 ஆம் ஆண்டில் நிகழ்த்தப்பட்ட பெரும் பேரழிவு ஒருபுறம் இருக்க, ‘இனியும் ஈழத்தமிழர்கள் ஒரு தனிப்பட்ட இனமாக இருக்கக் கூடாது, அவர்களது அடையாளத்தையும், இருப்பையும் தகர்த்துவிட வேண்டும்’ என்கிற கொடூரநோக்கத்துடன் இலங்கை இனவெறி அரசு ஈழத்தமிழர்கள் மீதான போரைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறது.

இலங்கைத் தீவில் ஈழத்தமிழர்களுக்கு நிகழ்த்தப்பட்ட கொடுமைகளுக்கு நீதிகிடைக்க வேண்டும். தொடரும் இன அழிப்பு உடனடியாகத் தடுக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை உலகெங்கும் எழுந்ததது. இதனைத் தொடர்ந்து, 27.03.2014 ஆம் நாள் ஐநா மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பாக ஒரு பன்னாட்டு விசாரணைத் தீர்மானம் நிரைவேற்றப்பட்டது.

இலங்கையில் ஏற்கனவே நடைபெற்ற கொடும் குற்றங்கள், இப்போதும் தொடரும் மனித உரிமை மீறல்களுக்கு காரணமான குற்றவாளிகள் தண்டிக்கப்படவும், பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு நீதி கிடைக்கவும் இந்த விசாரணை சர்வதேச அளவிலான முதல் நடவடிக்கை ஆகும்.
இலங்கை மீதான இந்த ஐநா விசாரணைக்கு ஒவ்வொருவரும் உதவ முன்வர வேண்டும்.

பன்னாட்டு விசாரணைத் தீர்மானம் கூறுவது என்ன?

2014 மார்ச் மாதம் ஜெனீவாவில் உள்ள ஐநா மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், “இலங்கையில் நடைபெற்ற போரின் போது நிகழ்த்தப்பட்டதாகக் கூறப்படும் மிக மோசமான மனித உரிமை மீறல்கள் மற்றும் முறைகேடுகள், அவை தொடர்பான குற்றச்செயல்கள் குறித்து, ஒரு முழுமையான புலனாய்வை மேற்கொள்ளுமாறு” ஐநா மனித உரிமை ஆணையருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கூடவே “குற்றமிழைத்தவர்கள் தண்டனையிலிருந்து தப்புவதைத் தடுக்கும் நோக்கிலும் அரசாங்கத்தின் பொறுப்புடைமையை நிலைநாட்டும் நோக்கிலும், இத்தகைய விதி மீறல்கள் மற்றும் குற்றச்செயல்கள் நிகழ்த்தப்பட்ட சூழ்நிலைகளையும் உண்மையையும் வெளிக்கொண்டுவர வேண்டும்” என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த விசாரணைக் குறித்து 2014 செப்டம்பர் மாதம் ஐநா மனித உரிமைப் பேரவையில் ஒரு வாய்மூல இடைக்கால அறிக்கையும், 2015 மார்ச் மாதம் விசாரணையின் இறுதி அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

பன்னாட்டு விசாரணையின் இப்போதைய நிலை என்ன?

ஜெனீவாவில் உள்ள ஐநா மனித உரிமை ஆணையர் அலுவலகத்தை தலைமை இடமாகக் கொண்டு, ‘இலங்கை மீதான ஐநா மனித உரிமை ஆணையர் அலுவலக விசாரணை (OHCHR Investigation on Sri Lanka – OISL)’ தொடங்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த சான்ரா பெய்தாஸ் என்பவர் இதன் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். புகழ்பெற்ற சர்வதேச மனிதவுரிமை சார்ந்த சட்ட நிபுணர்கள் இக்குழுவிற்கு ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

பின்லாந்து நாட்டின் முன்னாள் அதிபரும் நோபல் பரிசு பெற்றவருமான மார்ட்டி அட்டிசாரி, கம்போடிய இனப்படுகொலை நீதிமன்ற நீதிபதியும் நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்தவருமான சில்வியா காட்ரைட், பாகிஸ்தான் நாட்டின் மனித உரிமை வல்லுநர் அஸ்மா ஜகாங்கிர் ஆகியோர் ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்

ஐநா மனித உரிமை ஆணையத்தின் சிறப்பு வல்லுநர்களும் இந்த விசாரணைக்கு உதவுவார்கள். சட்டத்துக்கு புறம்பான அரசப்படுகொலைகள் (Extrajudicial executions), காணாமல் போகச்செய்தல் (Disappearances), உள்நாட்டு அகதிகள் (Internally displaced persons), சட்டவிரோத காவல் (Arbitrary detentions), பெண்களுக்கு எதிரான வன்முறைகள் (Violence against women), சித்தரவதை (Torture) – ஆகியன குறித்த சிறப்பு ஐநா வல்லுநர்கள் இலங்கை மீதான விசாரணைக்கு உதவி செய்வார்கள்.

ஐநா வின் மனித உரிமை ஆணையக விசாரணையின் கால வரையறை என்ன?

இலங்கைப் போரின் போது நிகழ்ந்த கொடூரங்கள், சர்வதேச சட்ட மீறல்கள் குறித்த ஆதாரங்களையும், தகவல்களையும், ஆவணங்களையும் 01.08.2014 முதல் 30.10.2014 வரை சேகரிக்கின்றனர்.

2014 நவம்பர், டிசம்பர் மாதங்களில் இவற்றின் மீதான ஆய்வுகள் நடைபெறும். மார்ச் 2014 இல் முழுமையான விசாரணை அறிக்கை, ஐநா மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப்படும்.

ஐநா வின் மனித உரிமை ஆணையக விசாரணையின் நோக்கம் என்ன?

ஈழப்போரில் நடந்தாகக் கூறப்படும் சர்வதேச சட்ட மீறல்களையும், கொடூரக் குற்றங்களையும் விசாரித்து உண்மையை நிலைநாட்டுவதே இந்த விசாரணையின் நோக்கமாகும்.

ஆதாவது, இலங்கையில் நடந்த கொடும் குற்றச்செயல்கள் அனைத்தும் இதுவரை அதிகாரப்பூர்வமாக மெய்ப்பிக்கப்படவில்லை. இப்போது முதல் முறையாக, ஐநா மனித உரிமைகள் ஆணையர் அலுவலகம் இதனை விசாரித்து உண்மையை அதிகாரப்பூர்வமாக சுட்டிக்காட்டவுள்ளது.

இலங்கை அரசின் பொறுப்புத்தவறுதலை முடிவுக்குக் கொண்டுவருவதும் (ensuring accountability), அங்கு கொடும் குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல் சுதந்திரமாக விடப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைப்பதும் (avoiding impunity) இந்த விசாரணையின் நோக்கமாகும்.

அந்த வகையில் இலங்கையில் நிகழ்ந்த கொடும் குற்றங்களின் உண்மை நிலை, குற்றச்சூழல், குற்றம் செய்தவர்கள் என எல்லாவற்றையும் இந்த விசாரணை வெளிக்கொண்டுவரும் வாய்ப்பு இருக்கிறது.

எப்போது நிகழ்ந்த குற்றங்கள் விசாரிக்கப்படவுள்ளன?

ஐநா வின் மனித உரிமை ஆணையக விசாரணையின் கீழ் 21.02.2002 முதல் 15.11.2011 வரை நிகழ்ந்த குற்றச்செயல்கள் விசாரிக்கப்படவுள்ளன. அதாவது, 2002 – 2011 ஆம் ஆண்டுகளுக்கு இடையேயான பத்தாண்டுகளில் இலங்கையில் நடந்த சர்வதேசக் குற்றச்செயல்கள் விசாரிக்கப்படவுள்ளன.

இந்த காலத்தில் நடந்த குற்றச்செயல்களுடன் தொடர்புடைய நிகழ்வுகள் அல்லது அதன் தொடர்ச்சி அதற்கு பின்னர் நடைபெற்றாலும் அதுகுறித்தும் புகார் தெரிவிக்கலாம்.

எனினும், 2008, 2009 ஆகிய ஆண்டுகளில் இறுதிக் கட்டப் போரின்போதும், அதன் முடிவுக்கு பின்னரும் நிகழ்ந்த கொடூரங்கள் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை.

விசாரணையின் சட்ட வரம்பு என்ன?

இந்த விசாரணையில் இலங்கை அரசு நிகழ்த்திய குற்றங்கள் பிரதானமாகக் கொள்ளப்படும். கூடவே, ஈழப்போராளிகள் ஏதேனும் சர்வதேச சட்ட மீறல்களை இழைத்திருந்தால் அதுவும் விசாரிக்கப்படும்.

வழக்கமான சர்வதேச சட்டம் (customary international law), உள்நாட்டு மோதல்கள் தொடர்பான சர்வதேச மனிதாபிமானச் சட்டம் (international humanitarian law) சர்வதேசக் குற்றவியல் சட்டம் (international criminal law) – ஆகிய சர்வதேச சட்டங்களின் கீழ் விசாரணை நடைபெறும்.

குறிப்பாக, போர்க்குற்றங்கள் (War Crimes), மனித குலத்துக்கு எதிரானக் குற்றங்கள் (Crimes against humanity), இனப்படுகொலை (Genocide) ஆகிய சர்வதேசக் குற்றங்கள் இந்த விசாரணையின் வரம்புக்குள் இடம்பெறுகின்றன.

ஐநா வின் மனித உரிமை ஆணையக விசாரணைக் குழுவின் வேலை என்ன?

இதுவரைக் கிடைத்துள்ள ஆவணங்கள், தகவல்கள், அறிக்கைகளை ஐநா விசாரணைக் குழுவினர் ஆய்வு செய்வார்கள்.

பாதிக்கப்பட்ட மக்களிடமிருந்தும், போரில் உயிர்த்தப்பியவர்கள், சாட்சிகள், மற்றும் குற்றம் இழைத்த தரப்பிடமிருந்தும் ஆவணங்களைப் பெற்றும், சாட்சியங்களைப் பதிவுசெய்தும் விசாரணை மேற்கொள்வார்கள்.

செயற்கைக் கோள் படங்கள், காணொலிகள், புகைப்படங்கள் உள்ளிட்ட ஆவணங்களையும் ஆய்வு செய்வார்கள்.

இவை அனைத்தையும் முறையாக ஆய்வு செய்தும், அவற்றின் உண்மைத் தன்மைக் குறித்த அறிவியல் ஆய்வுகளை மேற்கொண்டும் – முழுமையான உண்மைகளை கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிப்பார்கள்.

புகார் அளிப்போருக்கு பாதுகாப்பு உண்டா?

நிச்சயம் பாதுகாப்பு உண்டு.

ஐநா விசாரணைக் குழுவிற்கு புகார் அனுப்புவோர் குறித்த எந்தத் தகவலும் வெளியில் கசியாது. அவை அனைத்தும் மிக ரகசியமாகக் காப்பாற்றப்படும். ஐநா விசாரணைக் குழுவின் அறிக்கையில் சாட்சியம் அளித்த எவரது பெயரும் இடம்பெறாது.

எந்த நேரத்திலும், எக்காரணத்தை முன்னிட்டும், தகவல் அளிப்பவர்களோ, சாட்சியம் அளிப்பவர்களோ யாரிடமும் காட்டிக் கொடுக்கப்பட மாட்டார்கள். மிகமிக ரகசியமாகக் ரகசியம் காப்பாற்றப்படும்.

இந்திய அரசோ, இலங்கை அரசோ சாட்சியம் அளிப்பவர்களை எந்த நிலையிலும் அனுகாது. அவர்கள் குறித்த எந்தத் தகவலும் எந்த அரசுக்கும் தெரியாது. சாட்சியம் அளிப்பவர்களும் தகவல் அளிப்பவர்களும் முழுமையாக பாதுகாக்கப்படுவார்கள் என உத்திரவாதம் அளிக்கிறது ஐநா மனித உரிமை ஆணையர் அலுவலகம்.

ஐநா விசாரணைக் குழுவைத் தொடர்புகொள்ளும் எந்த ஒரு நபரும் – அதற்காக, உலகின் எந்த ஒரு அரசாலும் எந்த ஒரு தொந்தரவுக்கும் ஆளாகாமல் காப்பாற்றப்படுவதை சர்வதேச சட்டமும் ஐநா அவையும் உறுதி செய்கிறது.

விசாரணையில் யார் பங்கேற்கலாம்?

அரசு அமைப்புகள், ஆர்வமுள்ள நிறுவனங்கள், அமைப்புகள், கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைப்புகள், அரசு சாரா அமைப்புகள், மனித உரிமை அமைப்புகள், மக்கள் அமைப்புகள் என யார் வேண்டுமானாலும் ஐநா விசாரனைக்கு உதவலாம். இத்தகைய அனைத்து அமைப்புகளின் ஒத்துழைப்பையும் ஐநா விசாரணைக் குழு நாடுகிறது.

தகவல்களை யார் எப்படி அளிப்பது?

தகவல்கள், ஆவணங்களை யார் வேண்டுமானாலும் அளிக்கலாம். தனிநபர்களும் அளிக்கலாம், அமைப்புகள் சார்பிலும் அளிக்கலாம். தனிநபர்களுக்கு துணை செய்ய போரால் பாதிக்கப்பட்டோருக்கும் மனித உரிமைக்குமான நடுவம் தயாராகவுள்ளது. (Email: info@chwvhr.org) Tel: 416 628 1408
அளிக்கப்படும் தகவல்கள் 10 பக்கங்களுக்குள் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் இருக்க வேண்டும். தட்டச்சு செய்தோ, கையால் எழுதியோ அனுப்பலாம்.

மின்னஞ்சல் மூலமும் (Email: OISL_submissions@ohchr.org) அனுப்பலாம். அஞ்சலிலும் அனுப்பலாம்.

OISL

UNOG-OHCHR

8-14 Rue de la Paix

CH-1211 Geneva 10

Switzerland

ஆனால், வீடியோ, புகைப்படம் போன்றவற்றை மின்னஞ்சல் மூலம் அனுப்பக் கூடாது. இவற்றை அனுப்ப விரும்புகிறவர்கள் – இதுகுறித்து மின்னஞ்சல் மூலம் விசாரணைக் குழுவினருக்கு தெரிவிக்க வேண்டும். இந்த ஆவணங்களை எவ்வாறு பெற்றுக்கொள்வது என அவர்களே வழிகாட்டுவார்கள்.

எதைக் குறித்து தகவல் அளிக்க வேண்டும்?

21.02.2002 முதல் 15.11.2011 வரையிலான பத்தாண்டு காலத்தில் இலங்கையில் நிகழ்ந்த குற்றச்செயல்கள் குறித்த தகவல்களை அல்லது ஆவணங்களை அளிக்க வேண்டும். ஒரு குற்ற நிகழ்வு குறித்தோ, ஒன்றுக்கும் மேற்பட்ட குற்ற சம்பவங்கள் குறித்தோ தகவல்களை அளிக்கலாம்.
குறிப்பாக, இலங்கை அரசாங்கம் மற்றும் அதன் சார்பானவர்கள் செய்த குற்றச்செயல்கள் குறித்து தெரிவிக்க வேண்டும்.

போர்க்குற்றங்கள், மனித குலத்துக்கு எதிரானக் குற்றங்கள், இனப்படுகொலை ஆகிய சர்வதேசக் குற்றங்கள் தொடர்பான அல்லது இதுபோன்ற குற்றங்கள் எதனைக் குறித்தும் தெரிவிக்கலாம்.

எனினும், எந்தக் குற்றம் எந்த சட்டத்தின் கீழ் வருகிறது என்கிற ஆராய்ச்சிகள் தேவையில்லை. குற்றம் எதுவாக இருந்தாலும், அதனை சாதாரண முறையில், உள்ளது உள்ளபடி தெரிவிக்கலாம்.

எப்போது புகார் அனுப்ப வேண்டும்?

உடனடியாக அனுப்புவது விரும்பத்தக்கது. எனினும், புகார் அனுப்ப வேண்டிய கடைசி நாள்: 30.10.2014. (அக்டோபர் மாதம் 30 ஆம் நாளுக்கு முன்னதாக புகார்களை அனுப்ப வேண்டும்)

புகார் அனுப்பும் போது கவனிக்க வேண்டியது என்ன?

தகவல்கள் அல்லது ஆவணங்களைத் தொகுப்பதற்கான விரிவான வழிகாட்டுதலை ஐநா விசாரணைக் குழு அளிக்கவில்லை. தகவல் அளிப்பவரை தொடர்புகொள்ள ஏதுவாக தொடர்பு முகவரி, மின்னஞ்சல், தொலைபேசி எண் போன்றவற்றை அளிக்க வேண்டும். தகவலை எழுத்துப்பூர்வமாக அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

எனவே, தகவல்களை அளிப்பவர்கள் தான் கூறவிரும்பும் தகவலை விருப்பம் போல அளிக்கலாம். எனினும், பின்வரும் குறைந்தபட்ச வழிமுறையை பின்பற்றுவது நல்லது:

1. தகவல் அளிப்பவர் தன்னைப் பற்றிய முழு விவரங்களை அளிக்க வேண்டும்:

தற்போதைய முகவரி, செல்பேசி எண், அடையாள அட்டை எண், இலங்கையில் முகவரி, அரசு ஆவண எண் உள்ளிட்டவற்றைக் குறிப்பிடலாம்.

2. உண்மையை மட்டுமே கூற வேண்டும். மிகைப்படுத்தியோ, நடக்காதவற்றையோ கூறக்கூடாது.

இது மிக முக்கியமானதாகும். ஏனெனில், ஒரே வரலாற்று குற்ற நிகழ்வைக் குறித்து பலரும் சாட்சியம் அளிக்கக் கூடும். அப்போது ஆளுக்கு ஒருவர் வெவ்வேறு விதமாகக் கூறும் நிலை ஏற்படக் கூடாது. எனவே, நடந்ததை, நடந்தவாறு கூற வேண்டும்.

3. தானே நேரில் பார்த்த சம்பவமா அல்லது மற்றவர்கள் தன்னிடம் கூறிய நிகழ்வா என வேறுபடுத்திக் கூற வேண்டும்.

4. குற்றம் நடந்த இடம், நேரம், நாள் ஆகியவற்றை கூடுமானவரை சரியாகக் குறிப்பிட வேண்டும்.