போரின் முடிவு என்பது அது தோற்றம் பெற்ற காரணத்தின் முடிவல்ல – வேல்ஸ் இல் இருந்து அருஷ்

0
707

ltte45சிறீலங்காவில் இடம்பெற்ற இனப்போரின் சமர் ஒன்று நிறைவடைந்துள்ளது ஆனால் போர் முடியவில்லை என்ற யதார்த்தம் தற்போது வெளிவர ஆரம்பித்துள்ளது. போரின் பின்னரும் தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ள சிறீலங்கா இராணுவத்தினரின் எண்ணிக்கை, தமிழ் மக்களின் காணிகளை அபகரிக்கும் நடைவடிக்கைகள், ஏற்கனவே இறந்துபோன மாகாணசபைகளின் அதிகாரங்களை குறைக்கும் நடவடிக்கைகள், திட்டமிட்ட முறையில் மேற்கொள்ளப்படும் சிறுபான்மை இன மக்களின் மதங்களின் மீதான தாக்குதல்கள், ஊடக அடக்குமுறை, தமிழ் மக்கள் மீதான படைப் பிரயோகம் என்பன போரை சிறீலங்கா அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருவதையே காட்டுகின்றது.

ழேலும் சிறீலங்காவில் போர் நிறைவடைந்துவிட்டதாக சிறீலங்கா அரசு தெரிவித்த பின்னர் சிறீலங்காவில் இருந்து கூட்டம் கூட்டமாக சிறுபான்மை மக்கள் உலகின் ஜனநாயக நாடுகள் என தம்மை கூறிக்கொள்ளும் நாடுகளின் கதவுகளைத் தட்ட ஆரம்பித்துள்ளது சிறீலங்காவில் தொடரும் போருக்கான சிறந்த சாட்சியமாகும்.

2009 ஆம் ஆண்டு போர் நிறைவடைந்துவிட்டதாக சிறீலங்கா அரசு தெரிவித்த பின்னர் கனடா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து உட்பட பல நாடுகளுக்கும் அகதிகளாக சென்ற தமிழ் மக்களின் எண்ணிக்கை போர் இடம்பெற்ற காலப்பகுதியை விட மிக மிக அதிகமாகும்.

உதாரணமாக கடந்த ஆண்டு (2012) மட்டும் 6,500 பேர் சிறீலங்காவில் இருந்து சென்று அவுஸ்திரேலியாவில் அடைக்கலத்தஞ்சம் கோரியுள்ளனர். சிறீலங்காவில் இருந்து செல்பவர்கள் பொருளாதார அகதிகள் என்றும், அவர்கள் அரசியல் ரீதியாக பாதிக்கப்படவில்லை என்றும் சிறீலங்கா அரசு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றபோதும், உண்மை நிலையானது மறுதலையானது என்பதை அவுஸ்திரேலிய ஊடகங்களே தற்போது உணர ஆரம்பித்துள்ளன.
கடந்த ஆண்டு சென்ற மக்களில் 20 சதவிகிதமானவர்களே சிங்கள மக்கள் எனவும், 80 சதவீதமானவர்கள் தமிழர்கள் எனவும் தெரிவிக்கும் அவுஸ்திரேலியத் தகவல்கள், அவர்கள் அரசியல் ரீதியான ஒடுக்குமுறைக்கும், பழிவாங்கல்களுக்கும் உள்ளானவர்கள் எனத் தெரிவித்துள்ளன.

இந்த தொகையானது 2011 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 30 சதவிகிதம் அதிகமானது. தனது எல்லைகளை பாதுகாப்பதற்காக ஆண்டுதோறும் 10 பில்லியன் டொலர்களை அவுஸ்திரேலியா அரசு செலவிட்டுவரும்போதும், மிகவும் ஆபத்தான கடல் பயணத்தை தாண்டி தமிழ் மக்கள் அவுஸ்த்திரேலியாவை சென்றடைவதை அவர்களால் தடுக்க முடியவில்லை.

இந்த வருடமும் அவுஸ்திரேலியாவை நோக்கிச் செல்லும் தமிழ் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த மே மாதத்தின் இறுதி மற்றும் ஜுன் மாதத்தின் முதல் வாரங்களில் ஏழு படகுகளில் 500 இற்கு மேற்பட்ட மக்கள் அவுஸ்திரேலியை சென்றடைய முயன்றுள்ளனர். இவர்களில் ஆப்கானிஸ்த்தான், ஈராக், ஈரான் மற்றும் சிறீலங்காவை சேர்ந்தவர்கள் உள்ளபோதும் தமிழ் மக்கள் கணிசமாவர்கள்.

இந்த படகுகளில் 55 தமிழ் மக்கள் சென்ற ஒரு படகானது கிறிஸ்மஸ் தீவுக்கு வடமேற்காக 120 கி.மீ தொலைவில் கடலில் மூழ்கியதால் அதில் சென்ற அனைவரும் இறந்திருக்கலாம் என நம்பப்படுகின்றது. இதுவரை 13 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டபோதும், தேடுதல் பணிகளை நிறுத்துவதாக அவுஸ்த்திரேலியப் பிரதமர் தெரிவித்துள்ளது பலத்த எதிர்ப்பை தோற்றுவித்துள்ளது.

இனப்போருக்கான காரணத்தை கண்டறிந்து அதனை தீர்ப்பதற்கான வழிகளைக் கண்டறியாது இன்பபோரின் ஒரு அங்கமான சமரின் முடிவை போரின் முடிவாக கருதியதன் பலனை தற்போது அனைத்துலக சமூகம் புரிந்துகொள்ள ஆரம்பித்துள்ளது.

ஆனால் அதனை தீர்ப்பதற்கான வழிகளை பலப்படுத்தும் நடவடிக்கைகளை அவர்கள் மேற்ககொள்ள முன்வரவில்லை. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சிறீலங்காவிற்கு எதிரான தீர்மானத்தை இரண்டு தடவகைள் அமெரிக்கா கொண்டுவந்த போதும், அதன் அழுத்தம் குறைவானது. சிறீலங்காவில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களை முன்நிறுத்தி ஐரோப்பிய ஒன்றியம் அதன் ஜி.எஸ்.பி வரிச்சலுகையை நிறுத்தியபோதும், ஒரு முழுமையான பொருளாதாரத் தடையை கொண்டுவர அது தவறிவிட்டது.

ஐக்கிய நாடுகள் சபையின் ஊடாக கொண்டுவரப்படும் பொருளாதாரத் தடைகள் கூட தகுந்த பலனை கொடுக்காததால் பல நாடுகள் மீது படை நடவடிக்கைகளை மேற்கொண்ட வரலாறு மேற்குலகத்திற்கு உண்டு.

எனவே சிறீலங்கா அரசு மீது அவர்கள் காண்பிக்கும் மென்போக்கானது சிறீலங்காவில் இடம்பெறும் இனப்பிரச்சனையை தீர்க்க உதவப்போவதில்லை என்பது ஒருபுறம் இருக்க தமிழ் மக்களை தொர்ந்தும் ஏமாற்றும் நடவடிக்கையாகவே கருதப்படவேண்டும்.

கடந்த 2011 ஆம் ஆண்டு அவுஸத்திரேலியாவின் பேர்த் நகரில் இடம்பெற்ற பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் கூட்டத்தில் சிறீலங்காஅதிபருக்கு செங்கம்பள வரவேற்று அளித்த அவுஸத்திரேலியப் பிரதமர், சிறீலங்காவில் இடம்பெறும் கூட்டத்தை புறக்கணிக்குமாறு தெரிவித்த கனடாவின் கோரிக்கையையும் நிராகரித்திருந்தார்.
அது மட்டுமல்லாது, அவுஸ்திரேலியாவின் குடிவரவுத்துறை அமைச்சர் கிறிஸ் பவீன் கூட சிறீலங்காவுக்கு பயணம் மேறகொண்டதுடன், சிறீலங்காவின் நடவடிக்கைகளை பராட்டியும் இருந்தாரே தவிர இனப்பிரச்சனை மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்த விடயங்களை அவர் கருத்தில் எடுக்கவில்லை.

வியட்hனம் போர், கம்போடியப் போர், பொஸ்னியாப் போர், தென் அமெரிக்க மற்றும் ஆபிரிக்க போர்களின் முடிவின் பின்னர் கூட அந்த நாடுகளை சேர்ந்த மக்கள் தமது நாடுகளில் இருந்து இடம்பெயர்ந்த பிறதேசங்களில் அடைக்கலம் கோரும் நடவடிக்கைகள் தொடர்ந்திருந்தன. அந்த நாடுகளில் நிலவிய அரசியல் பிரச்சனைகள் தீர்க்கப்பட்ட பின்னரே மக்களின் வெளியேற்றத்தை தடுக்க முடிந்தது.

எனவே சிறீலங்காவில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள், அரசியல் ஒடுக்குமுறைகள், நீதித்துறையின் மீதான அழுத்தம், ஊடக அடக்குமுறை, சிறுபான்மை மக்கள் மீதான ஒடுக்குமுறை போன்றவற்றை தடுக்கத் தவறியவாறு அடைக்கலத் தஞ்சம் கோரும் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்படும் அவுஸ்திரேலிய அரசின் நடவடிக்கைகள் எந்த பலனையும் கொடுக்கப்பேவதில்லை.

ஒரு போரின் முடிவானது, அது உருவாகக் காரணமான காரணிகளை தன்னிச்சையாக முடிவுக்கு கொண்டுவருவதில்லை. அதற்கான காரணிகளை கண்டறிந்து தீர்க்கும் வரையிலும் உள்நாட்டு போரானது எங்கும் முடிவுக்கு வந்ததாகவும் சரித்திரம் இல்லை.

போரில் ஈடுபட்ட இரு தரப்பினரினதும் தற்போதைய நிலை என்ன?

தமிழ் மக்கள் தமக்கான ஆதரவுகளை தேடி ஓடிக்கொண்டிருக்கின்றனர், தமிழகத்தின் துணையுடன் உலகத் தமிழ் மக்களின் ஆதரவுகளை ஒருங்கிணைத்து ஒரு வலுவான சக்தியா தம்மை நிலைநிறுத்த அவர்கள் முயற்சிக்கின்றனர்.
சிறீலங்கா அரசானது தனது நடவடிக்கைகளுக்கு ஆதரவு தரும் நாடுகளை நோக்கி அல்லது தனக்கு ஆதரவுகளை தேடும் வழிகளை நோக்கி ஒடிக்கொண்டிருக்கின்றது.

சிறிய சிறிய ஆபிரிக்க நாடுகளையும், லத்தீன் அமெரிக்க நாடுகளையும், ஆசியக்கண்டத்தில் உள்ள நாடுகளையும் நோக்கி ஓடுகின்றது சிறீலங்கா அரசு. பெலாரஸ் நாட்டடின் மனித உரிமை மீறல்களுக்கு எதிரான ஐ.நாவின் நடவடிக்கைகளுக்கு எதிராக போர்க் கொடி தூக்கியுள்ள சிறீலங்கா அரசு, தற்போது ஸ்லோவோனியாவை நோக்கியும் நகர்ந்துள்ளது.

அதாவது சிறீலங்காவில் இடம்பெறும் இனப்போரின் அடுத்த கட்டத்தை நோக்கிய தயாரிப்பில் இரு தரப்பும் தீவிரமாக செயற்பட்டுக்கொண்டிருக்கினர் என்பதே யதார்த்தமானது.

நம்தேசம் June, 2013